பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கணவனுக்குத் தரும் பாதிப்பைப்போல், ஆண்கள் ஜாதகத்தில் அவனைத் திருமணம் புரியும் பெண்ணுக்கு பாதிப்புகளைத் தருவது சுக்கிர தோஷமாகும்.
ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் அவனது மனைவியைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் தோஷமடைந்திருந்தால் சுக்கிர தோஷமுள்ளவர். இந்த தோஷமுள்ள ஆண்களைத் திருமணம் புரிந்துகொள்ளும் பெண்கள் திருமணத்திற்குப்பின்பு அமையும் குடும்ப வாழ்வில் பல துன்பங்களை அடைவார்கள்.
தமிழ் ஜோதிடமுறையில், ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிர தோஷம் உள்ள கிரக அமைப்பையும், அந்த தோஷத் தால் மனைவிக்கு உண்டாகும் பாதிப்புகளையும் அறிவோம்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிப்பிடும் உதாரண கிரகம் குரு ஆகும். மனைவியைக் குறிப்பிடும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரனுக்கு பாவ- சாப கிரகங்களான ராகுவும் கேதுவும் 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் இருந் தால் மனைவிக்கு பாதிப்பினைத் தரும்.
ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், மனைவியை மதிக்கமாட்டார். தரக்குறைவாகப் பேசுவார். மனைவிக்கு நோய் பாதிப்பு உண்டாகும். மனைவிக்கு கண்டம், கஷ்டங்கள் உண்டாகும். கணவன்- மனைவி பிரிவு ஏற்படலாம்.
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருந்து, பரிவர்த்தனை பெற்ற ரிஷபம், துலா ராசிகளுக்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், கணவனைவிட்டு மனைவி பிரிந்து செல்லக்கூடும்.
சுக்கிரன் வக்ரம் பெற்றிருந்து, அந்த சுக்கிரனுக்கு 4, 8, 12-ஆவது ராசிகளில் ராகு இருந்தால், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரச்சினைகள், அதனால் பிரிவுகூட உண்டாகக்கூடும்.
ஆண்களுடைய ஜாதகத்தில் குரு (கணவன்) இருக்கும் ராசிக்கு, 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் சந்திரன், புதன் இருந்தால், அவன் மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வான். இதனால் குடும்பத்தில் நிம்மதி, பொருளாதாரக் குறைவு ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும்.
ஆண் ஜாதகத்தில், சுக்கிரன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் கேது இருந்தால், ஜாதகருக்குத் திருமணம் தடை, தாமதமாகும். மனைவி விரக்தி மனப்பான்மையுடன் இருப்பாள். அடிக்கடி நோய்வாய்ப்படுவாள். பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, வழக்கு, விவாகரத்து, பிரச்சினை, பிரிவு ஏற்படலாம். மகிழ்ச்சி இல்லா மணவாழ்வுதான்.
ஜாதகத்தில் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருந்து, அந்த சுக்கிரன் இருக்கும் ராசிகளான ரிஷபம் அல்லது துலாமிற்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில் கேது இருந்தாலும் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரச்சினை, பிரிவு ஏற்படலாம்.
மேற்சொன்ன ராசிகளுக்கு 1, 5, 9, 2, 7-ஆவது ராசிகளில், சூரியன், செவ்வாய், புதன், ராகு கிரகங்கள் இருந்தால், மனைவி கணவனைவிட்டுப் பிரிந்து சென்றுவிடக்கூடும்.
ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வக்ரம் பெற்றிருந்து, அந்த சுக்கிரனுக்கு 4, 8, 12-ஆவது ராசிகளில் கேது இருந்தால், கணவன்- மனைவியிடையே பிரிவு உண்டாகும்.
ஆண் ஜாதகத்தில் ராகு- கேதுக்களுக்கு ஒருபுறம் குரு (கணவன்) கிரகமும், எதிர்புறத் தில் சுக்கிரனும் இருந்தால், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிவுகள் உண்டாகும்.
சுக்கிரன் (மனைவி) வக்ரம் பெற்றிருந்து, அந்த சுக்கிரனுக்கு 4, 8, 12-ஆவது ராசிகளில் சூரியன், செவ்வாய், புதன், சனி, ராகு இருந்தால் கணவன்- மனைவியிடையே பிரிவைத் தரலாம்.
ஆண்கள் ஜாதகத்திலுள்ள சுக்கிர தோஷமும், பெண்களுக்குள்ள செவ்வாய் தோஷமும் ஒன்பது கிரகங்களால் உருவானதல்ல. அவரவர் முன்பிறவிகளில், வம்ச முன்னோர்கள் காலத்தில் தங்கள் குடும்ப உறவுகளுக்குச் செய்த பாவச் செயல்களால் இந்தப் பிறவியில், அதற்குரிய தண்டனையாக அனுபவிக்கச் செய்கிறது என்பதே சித்தர்கள் வாக்கு.
ஆணின் சுக்கிர தோஷமும், பெண்களின் செவ்வாய் தோஷமும் தரும் சிரமங்கள் பூஜை, ஹோமம், வழிபாடு சாந்திப் பரிகாரங்களால்- பணம் செலவு செய்து செய்யும் நம்பிக்கை சார்ந்த செயல்களால் விலகாது.
இந்த தோஷங்கள் முற்பிறவியில் எந்தவிதமான பாவச் செயல்களால் உருவானது என்பதை அறிந்து, அதற்குரிய நிவர்த்தி முறைகளைக் கடைப்பிடித்து, வாழ்ந்தால், இந்த தோஷங்கள் தரும் பாதிப்புகளைத் தடுத்துக் கொள்ளலாம்.
இராமாயண கதையில் இராமனும், சீதையும் விருப்பப்பட்டுத் திருமணம் செய்துகொண்டார்கள். இராமனுக்கு இருந்த சுக்கிர தோஷம்தான், திருமணத்திற்குப்பின்பு சீதை அவ்வளவு கஷ்டப்படக் காரணம். வசிஷ்டர், விசுவாமித்திரர் போன்ற பல ரிஷிகளாலும்கூட தோஷ பாதிப்புகளிலிருந்து சீதையையும் இராமனையும் காப்பாற்ற முடியவில்லை என்பதே கதை கூறும் உண்மைக் கருத்து.
ஒரு பெண்ணின் திருமண சமயத்தில் ஆணுக்கு சுக்கிர தோஷமுள்ளதா என்பதை நன்கு கவனமாக ஆராய்ந்து பார்த்து பெண் வீட்டார் திருமணம் செய்துவைக்கவேண்டும். ஆணுக்கு செவ்வாய் தோஷமுள்ளதா எனப் பார்க்கக்கூடாது.
ஒரு ஆணின் திருமணம் செய்யும் சமயத்தில், பெண்ணிற்கு செவ்வாய் தோஷமுள்ளதா என்பதை கவனமாகப் பார்த்து, மாப்பிள்ளை வீட்டார் பெண் தேர்வுசெய்து திருமணம் செய்துவைத்தால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் இருக்கும்.
அயோத்தி மன்னனின் மகனாகப் பிறந்த இராமன், தன் வாழ்க்கையில் பட்டமிழந்து, தந்தை, மனைவி, சகோதரன் என குடும்ப உறவு களைப் பிரிந்து, மரவுரி தரித்து, வாழ்வில் பல சிரமங்களை அடைய காரணமான அவரின் முற்பிறவிகளில் உண்டான கர்மவினைப் பதிவுகளைப் பற்றி. தமிழ் சோதிட முறையில் ஆய்வுசெய்து அடுத்த இதழில் அறிவோம்.
செல்: 99441 13267