"எந்தப் பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?'
-இது பலருடைய ஆதங்கம்.
அதற்கு என்ன காரணம்?
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை எனப்படும். ஒருவர் அறிந்தோ அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினைதான் தோஷம். இந்த தோஷம் கோபம், சாபம் என்னும் இரண்டு காரணங்களால் உருவாகிறது.
கோபம் என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு; இயலாமை; பலவீனத்தின் உச்சம். இதையே வேறுவிதமாகச் சொன்னால், கோபம் என்பது ஏமாந்தவர் ஏமாற்றியவர்மீது வெளிப்படுத்தும் உணர்வு.
சாபம் என்பது கோபத்தின் உச்சக்கட்டம். அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால், பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் சபிப்பதுதான் சாபம்.
மருத்துவரீதியாக, கோபம் உண்டானால் இதயத்துடிப்பு அதிகமாகிறது. ரத்தக்கொதிப்பு ஏற்படும். அதீத கோபத்தால் சிந்தனை செயலிழக்கும். உடலுறுப்பு பாதிக்கும்.
"தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம்.'
சினம் காக்கப்படாவிட்டால் அது தன்னையே அழித்துவிடும் என்பது வள்ளுவரின் எச்சரிக்கை.
கோபத்தை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
"குணமென்னும் குன்றேறி நின்றார்
வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.'
குணக்குன்றாக விளங்கும் முதல்தர மக்களிடையே கோபம் ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறையும்.
இரண்டாம்தரக் கோபம் இரண்டு நாழிகை- அதாவது 48 நிமிடம் நீடிக்கும்.
மூன்றாம்தரக் கோபம் ஒரு நாள் நீடிக்கும்.
நான்காம்தரக் கோபம் வாழ்நாள் முழுவதும் நீடித்து, பகையை வளர்த்து தினமும் சாபமிடும்.
கோபத்திலிருந்து எட்டு தீய குணங்கள் தோன்றுகின்றன.
அவை: அவதூறு, வன்செயல், தீயஎண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல்.
கோபத்தின் உச்சக்கட்டமான சாபமே தாக்குதல்.
ஜோதிட சாஸ்திரத்தில் கோபத்தின் வெளிப்பாடாக நாம் கூறும் கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி.
1-ல் சூரியன்- சுட்டெரிக்கும் கோபம் நியாயமான செயலுக்கு மட்டுமே வரும். நம் ஆத்மகாரகன் சூரிய பகவானே.
1-ல் செவ்வாய்- அடக்க முடியாத ஆணவம் நிறைந்த கோபம். நம் உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர் செவ்வாய்தானே.
1-ல் சனி- நியாயத்தை நிலைநாட்டும் கோபம். நம் கர்மகாரகன் சனி பகவான் தானே. அதனால்தான் துலாத்தில் உச்சமடைகிறார்.
சனி, செவ்வாய், ராகு- கேது, மாந்தியுடன் ஏற்படும் இணைவு சாபத்தை ஏற்படுத்துகிறது.
திரிகோணாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும் சாபமும் ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
மறைவு ஸ்தானாதிபதிகளுடன் தொடர்புபெறும் கோபமும் சாபமும் ஜாதகரால் மீளமுடியாத தாக்கத்தை உருவாக்கும். கோபமோ சாபமோ, நியாயமானதாகவோ நியாயமற்றதாகவோ இருக்கும்.
"எத்தகைய தோஷமானாலும் விமோசனம் உண்டா? இல்லையா' என்பதே கேள்வி. நியாயமான சாபம் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு மீளமுடியாத விளைவைத் தருகிறது. "ஆறுவது சினம்' என்ற அவ்வைப்பாட்டியின் கூற்றிற்கு ஏற்ப, கோபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு வடிகால் உண்டு.
சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு விமோசனம் கிடைப்பது எளிதல்ல. பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் மட்டுமே விமோசனம் கிடைக்கும். தவறு செய்தவரும் பாதிக்கப்பட்டவரும் ஒருவரையொருவர் சந்தித்தால் மட்டுமே இது சாத்தியம். தவறு செய்தவருக்கு, தான் செய்த தவறு என்னவென்று தெரியவேண்டும்.
சில தோஷங்கள் வம்சாவளியாகத் தொடரும்போது எங்கேபோய் மன்னிப்பு கேட்பது? எப்படிக்கேட்பது என்ற கேள்விக்கு பிரசன்னம் தெளிவான- தீர்க்கமான பதிலைத் தரும்.
நியாயமற்ற கோபமும் சாபமும் எய்தவரைப் பதம்பார்க்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
கண்ணுக்குத் தெரிந்த- தெரியாத பல்வேறு தோஷங்கள் இருந்தாலும், பிரதானமாக ஜாதகத்திலும் பிரசன்னத்திலும் கண்டறியப்படும் 21 தோஷங்களை இங்கு விவரித்திருக்கிறேன்.
1. பாலாரிஷ்டம்
முன்ஜென்ம கர்மாவினால் நோயுடன் பிறக்கும் குழந்தைகள், உடல் ஊனம், மனவளர்ச்சிக் குறைவு, ஆயுள்குறைவான குழந்தை பிறப்பது. இது குழந்தையின் 12 வயதுவரை பாதிக்கும்.
2. குடும்ப தோஷம்
குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, மன உளைச்சல், தூக்கமின்மை ஏற்படுத்தும்.
3. வாக்கு தோஷம்
கொடுத்த வாக்குறுதியை, செய்த சத்தியத்தைக் காப்பாற்றாதவர்கள். வாக்கு என்பது, யாரையும் மையப்படுத்தாமல் வாக்குறுதி தருவது. சத்தியம் என்பது, தனது வாக்கிற்குக் கடவுளையோ, உறவுகளையோ சாட்சி வைத்துக் கொடுக்கும் வாக்குறுதி. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
4. பிரபலாரிஷ்ட தோஷம்
புகழுக்கு பங்கம், தனக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை பிறருக்குக் கிடைப்பது, வதந்திகளால் அவமானம்.
5. தெய்வ தோஷம்
தனது பூர்வீகம் தெரியாதவர்கள், பூர்வீகத்தில் வசிக்கமுடியாதவர்கள், பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாதவர்கள், குலதெய்வம் தெரியாதவர்கள், குல, குடும்ப, இஷ்ட, காவல், எல்லை தெய்வ வழிபாடு, வேண்டுதலை நிறைவேற்றாதவர்கள்.
6. சர்ப்ப தோஷம்
சர்ப்பத்தைக் கொன்றவர்கள், புற்றை அழித்தவர்களுக்கு குழந்தைகளால் ஏற்படும் மனக்கவலை, புத்திர தோஷம், புத்திர சோகம், திருமணத்தடை போன்றவையாகும்.
7. ஜீவன தோஷம்
செய்த வேலைக்கு வியர்வை காயும்முன் கூலிகொடுக்காதவர், கூலி ஏய்ப்பு செய்பவர், கூலிப்பிடித்தம் செய்பவர்களுக்கு ஜீவன பங்கம், வேலையாட்கள் பிரச்சினை, தொழிலில் திடீர் நட்டம் ஏற்படும்.
8. கால தோஷம்
ஒரு ஜீவாத்மா அனுபவிக்கவேண்டிய பலன்கள் குறித்த காலத்தில் நடைபெறாமல் காலம் தாழ்த்தியே நடைபெறுதல் அல்லது நடைபெறாமலே போதல் போன்றவையாகும்.
9. பிதுர்தோஷம்
முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்காதவர், வீட்டில் வயது முதிர்ந்த தாய், தந்தை, தாத்தா- பாட்டி போன்றோரை மதிக்காமையால் தலைமுறையாகத் தொடரும் ஏழ்மை, தந்தைவழி முன்னோர்களால் தவறாக வந்த காசு, காமம், சொத்து மூலம் தந்தை- மகன் கருத்து வேறுபாடு, பணம் இருந்தால் அனுபவிக்க முடியாமை ஏற்படும்.
10. மாதுர் தோஷம்
தாய்வழி முன்னோர்களால் ஏற்படக்கூடிய தோஷமாகும். தாய்க்கு நடந்த பிரச்சினை அப்படியே மகளுக்கு வழிவழியாகத் தொடரும்.
11. குரு சாபம்
குடும்ப வாரிசுகள் தவறான வழிக்குச் செல்லுதல், கல்வி, வித்தை, ஞானம் பெற முடியாமை, வாரிசு தோன்றாமல் போவது, சிறுவயதில் சிறைக்குச் செல்லுதல், வேலைக்குச் செல்லுதல், தவறான காதலில் வாழ்க்கையைத் தொலைத்தல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
12. பிராமண தோஷம்
உறவுகளால் மனநிம்மதி இல்லாமை, பொருட்கள் தங்காத நிலை, வீட்டில் காலைநேரத்தில் சண்டை, சுபநிகழ்வுகள் நடத்தமுடியாமல் போவது, தெய்வ வேண்டுதல்கள் நிறைவேற்ற முடியாமை, தினமும் மருந்து சாப்பிட வேண்டிய நோய் உண்டாகும்.
13. செய்வினை தோஷம்
பொதுவாக செய்வினை நம் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் மூலம் வீட்டிற்குள் வரும். செய்வினை வைத்தவரிடம் இணக்கமாக இருப்பது, மருத்துவரால் கண்டறிய முடியாத வியாதி, மன உளைச்சல், பயம், சுயமுடிவு எடுக்க முடியாத நிலை உண்டாகும்.
14. சத்ரு தோஷம்
சத்ரு என்றால் எதிரி. நல்லதே செய்தால் கூட கெட்ட பெயர் உருவாகுதல், பெரிய வியாதி, வியாதிக்கான மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளாத நிலை, காரியத்தடை ஆகியவை ஏற்படும்.
15. மித்ரு தோஷம்
மித்ரு என்றால் நண்பன். அதிக நம்பிக்கை துரோகம், உறவினர், நண்பர்கள் மூலம் துரோகம், மனக்கவலை, கலகம், குழப்பம் ஆகியவை ஏற்படும்.
16. திருஷ்டி தோஷம்
காரியத் தடை, வரவுக்கு மிஞ்சிய செலவு, பார்ப்பவருக்கு நல்ல வாழ்க்கை போலத் தோன்றும்- ஆனால் ஜாதகர் மீளமுடியாத கஷ்டத்தைச் சொல்வார். யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, ஆழ்ந்த தூக்கமின்மை, பய உணர்வு, தூக்கத்தில் அலறுதல் போன்ற உணர்வு ஏற்படும்.
17. இட தோஷம்
வாங்கிய நிலத்தில் வீடுகட்ட முடியாமல் போதல், கட்டிய வீட்டில் குடிபுக முடியாமை, நிலத்தகராறு, கோர்ட் பிரச்சினை, சொத்தை விற்க முடியாத நிலை ஆகியன இருக்கும்.
18. பிரேத சாபம்
இறந்தவர்களின் உடலை வைத்துக்கொண்டு அவரைப் பற்றி தவறாகப் பேசுவது, உடலை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அடக்கம் செய்யாமை, பிரேதத்திற்குச் செய்யவேண்டிய இறுதிச்சடங்கு செய்யாமை போன்ற காரணங் களால் அதிக பசி, தாகம், விபத்து, தொடர் மரணம், ஆயுள் குறைவு, இறந்தவர் கனவில் வருவது போன்றவை ஏற்படும்.
19. கன்னிப்பெண் சாபம்
கட்டிய மனைவியைக் கைவிடுவது, மருமகளைத் துன்பப்படுத்துவது, பெண்களை ஏமாற்றுவது, உடன்பிறந்த சகோதரியை ஆதரிக்காமல் இருப்பது போன்றவற்றால் பெண் குழந்தைகளே பிறக்காமல் போவது, பிறந்த பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெறாமல் போவது, திருமணத்திற்குப்பின் பிரச்சினை ஆகியன ஏற்படும்.
20. களத்திர தோஷம்
கணவன்- மனைவி கருத்து வேறுபாடு, மணமுறிவு, திருமணத்தடை ஏற்படும்.
21. இயற்கை விடும் சாபம்
காற்றை மாசுபடுத்துதல், சுத்தமான காற்றைத் தரும் விருட்சங்களை அழித்தல், மழைநீர் பூமியில் புகமுடியாமல் பிளாஸ்டிக், கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி பூமியை மாசுபடுத்துவது, நீர்நிலைகளை அழித்து குடியிருப்புப் பகுதியாக்குவது போன்ற இயற்கை பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு இயற்கை நிச்சயம் பதிலடி கொடுக்கும்.
புனித யாத்திரை செல்லும் பயணிகள் புண்ணிய புனித தீர்த்தங்களில் தங்கள் உடைகளைவிடுவது, சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி வீட்டு பாத்ரூம் ஆக்குபவர்களுக்கு நிச்சயம் கர்மா கூடும். வினைப்பயனைக் குறைக்க தவறான வழிமுறையைப் பயன்படுத்தி கூடுதல் வினையைச் சேர்த்த பலன் கிடைக்கும்.
பசுவதை செய்பவர்களுக்கு கோ சாபம் ஏற்படும். பறவைகளைக் கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு பட்சி சாபம் ஏற்படும்.
சக மனிதனின் கோப சாபத்தைவிட இயற்கைவிடும் சாபத்திற்கும், ஐந்தறிவு ஜீவன் விடும் சாபத்திற்கும் வலிமை அதிகம்.
ஒரு உயிர் தாயின் கருவறையில் உருவாகி இடுகாடு செல்வதுவரை அனைத்து நிகழ்வுகளும் பிரபஞ்சத்தின் விருப்பப்படியே நடக்கின்றன என்பது உலகறிந்த உண்மை.
இந்த நவநாகரிக உலகம் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தப்படுவதால்தான் இறந்தவருக்கு உயிர்கொடுக்க முடியவில்லை.
சக மனிதருக்குள் உருவாகும் கோபமும் சாபமுமே மறுபிறவி. கோபமும் சாபமும் இல்லையென்றால் மறுபிறவி என்ற ஒன்றும் கிடையாது. கோபத்தையும் சாபத்தையும் உருவாக்கியவனும் உருவாகச் செய்தவனும் பிறவி எடுத்து தங்கள் கோபத்தையும் சாபத்தையும் தீர்த்துக்கொள்ளும்போதே தோஷம் நிவர்த்தியாகிறது.
உலகத்தில் மிகவும் சுலபான வேலை அறிவுரை சொல்வது என்பதை நானும் உணர்கிறேன்.
எந்த நிகழ்வாகினும் பிரபஞ்சத்திடம் சரணடைந்தால் முக்தி கிடைக்கும். எவ்வளவு பூஜை செய்தாலும், வரம் பெற்றாலும், மாந்த்ரீகம் செய்தாலும் ஒரு நல்லவரை அழிக்கமுடியாது.
ஆனால் ஆற்றமுடியா அழுகையால் பதறி, ஆழ்மனதிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும்போது எப்பேர்ப்பட்ட வலிமையான மனிதனையும் உருத்தெரியாமல் அழித்துவிடும்.
"என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்தகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே'
என்கிறார் சிவ வாக்கியர்.
தன்னை அறியும் ஞானம் வந்துவிட்டால் வினைகள் விடுதலை பெறும்.
செல்: 98652 20406