வாழ்க்கை வளமாக- நலமாக அமையவே அனைவரும் விரும்கிறோம்.
அதற்கான செயல்கள் மற்றும் எண்ணங்களே நாம் உயர வழிவகுக்கும்.
அதேசமயத்தில் வாஸ்து விதிகளையும் பின்பற்றுகிறபோது, நமக்கு ஒளி- வழி கிடைக்கும்.
வீட்டின் வடகிழக்கையொட்டி வழிபடும் அறை அமைவது சிறப்பைத் தரும். அங்கு சுவாமி படங்கள் நேர் கிழக்கு திசையைப் பார்த்தபடி இருப்பது உத்தமம். தெற்கு மற்றும் மேற்குதிசை பார்த்தபடி படங்களை மாட்டாதீர்கள்.
இறந்தவர்களின் படங்களையும், உயிருள்ள எவர் படமாயினும் பூஜையறையில் வைத்து வழிபடவேண்டாம்.
சிலர், "நான் சித்தபுருஷன்' என்று சொல்லி சில அற்புதங்கள் நிகழ்த்துவர். இவர்களின் படத்தை இல்லத்தில் வைப்பதும், பூஜை, பஜனை செய்வதும் பயனற்றது. சைவ, வைணவ அடியார்களின் தமிழ்மறைகளைப் பாடி இல்லத்திலுள்ள பூஜையறையில் தீப ஒளி ஏற்றுங்கள்.
குபேர பாகம், ஈசான பாகம், இந்திரன் பாகம், நைதிருதி என்னும் கன்னி பாகம் ஆகிய இடங்களில் பூஜையறை அமைத்து பூஜைசெய்வது நற்பலனைத் தரும்.
பூஜையறையில் எந்த விக்ரகங் களையும்- அதாவது சிலைகளையும் வைத்து வழிபடுவது சிறப்பன்று. அப்படி வழிபட விரும்பினால் மூன்று அங்குல உயரமுள்ள சிலைகளைப் பூஜையறையில் வைத்து வழிபடலாம். அதற்குமேல் அளவுள்ள சிலைகள் என்றால் அதற்கான சடங்குகள், சம்பிரதாயங்கள் அதிகமுண்டு. அதன்படி செய்தால்தான் நன்மை கிட்டும். இல்லையென்றால் எதிர்மறை விளைவு ஏற்பட்டுவிடும்.
உங்களின் செல்லப் பிராணிகள் பூஜையறையில் பிரவேசிக்க அனுமதிக் காதீர்கள். அதுபோல் வீட்டிற்கு வரும் நபர்களையும் காரணமின்றி அனுமதிக்காதீர்கள். அங்கு கூடுமானவரை இயற்கைக் காற்றோட்டம் வருமாறு ஜன்னல்கள் அமைப்பது வாஸ்து ஆற்றலைப் பெருகச்செய்யும்.
குத்துவிளக்கு, சுவாமி படங்களில் சாற்றிய பூச்சரங்கள், மாலைகள் எதுவாயினும் அவை வாடிவிட்டால் உடனே அகற்றிவிடவேண்டும். கோவிலில் பிரசாதமாகக் கொடுத்த பூமாலைகளை இல்லத்திற்குக் கொண்டுவந்து பூஜையறையிலுள்ள சுவாமி படங்களுக்கு சாற்றுவர். இதுவும் தவறென்பது வாஸ்து சாஸ்திரப் பண்டிதர்களின் கருத்தாகும்.
இல்லத்தின் தலைவாயில் கதவுகள், இரும்பு கேட்டுகளில் சுவாமி உருவங் களைப் பதிப்பது தவறு. தலைவாயில் நிலைப்படியின்மேல் கஜலட்சுமி உருவம் பதிக்கலாம். சுவாமி படங்களுள்ள டைல்ஸ் வாங்கி வீட்டின் சுவரில் பதிப்பதும் தவறாகும்.
பூஜையறையினுள் மரத்தினாலான சிறிய பணப்பெட்டி வைக்கலாம். அது தவிர வேறெந்தப் பொருளையும் பூஜையறையினுள் குப்பையாகப் போடக் கூடாது.
பூஜையறையில் கூடுமானவரை தரை, குத்துவிளக்கு மற்றும் பூஜைப் பொருட் களை சுத்தம்செய்து, காலை- மாலை தீப- தூபம் ஏற்றி வழிபடுவது ஐஸ்வரியத்தை வரவழைக்கும்.
தலைவாயில்மேல் அல்லது தலை வாயில் நேரெதிரே, இறந்த முன்னோர் களின் படங்களை மாட்டாதீர்கள். அதே போல் அங்கு மான்கொம்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தலைகளை சுவரில் மாட்டாதீர்கள். காட்சிப் பொருளாகவும் வைக்காதீர்கள்.
தலைவாயிலின்மேல் சுவாமி படங்களையும், எந்திரங்களையும் மாட்டாதீர்கள். படக் கடையில் சுவாமி படங்களை அலங்கரிப் பதுபோல் பூஜையறை இருக்கவேண்டாம். பொதுவாக தெய்வச்சிலை எதுவாயினும் இல்லத்தில் வைத்து வழிபடவேண்டாம்.
பூஜையறையில், ஹாலில் மகாபாரதப் போர்க்களக் காட்சிகள், அசோகவன சீதையின் படங்கள், சிலுவையிலுள்ள ஏசு பிரான்- அதுவும் ரத்தம் சொட்டச்சொட்ட இருக்கும் படங்கள், உருவ பொம்மைகளை வைக்கக்கூடாது. அப்படி இருந்தால் அகற்றி விடுங்கள்.
வாஸ்து புருஷனின் படம், எந்திரத்தை பூஜை யறையில் வைத்து வழிபடவேண்டாம். வாஸ்து புருஷன் சயனம் நீங்கி கண்விழிக்கும் நேரத்தில்தான் அவரை வழிபடவேண்டும். வணிக நிறுவனம் போன்ற இடங்களிலும் வாஸ்துப் படம், வாஸ்து எந்திரங்களை வைக்காதீர்கள்.
சில இடங்களில் மாடிப்படியின்கீழ் பூஜையறை அமைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரும் தவறு. பூஜையறை கீழ்த் தளத்தில் இருந்து, அதற்கு நேரே மேல்தளத்தில் கழிவறை, குளியலறை ஆகியவை கண்டிப்பாக இருக்கக்கூடாது. ஈட்டி, வேல், அரிவாள் போன்றவற்றை கண்ணெதிரே படாமல் வைப்பது உத்தமம்.
பூஜையறையை வாஸ்து விதிப்படி அமைத்து, முன்னோர் சொன்ன ஆகம சாஸ்திரப்படி வழிபடுங்கள். வளமான வாழ்வும் நலமான செல்வமும் பெறலாம்; எல்லாம் வல்ல பேரருள் நமக்குத் துணைநிற்கும்.
செல்: 94431 46912