பிரபஞ்சம் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் சேர்க்கை. பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கக்கூடிய ஆகாயம் என்ற வெற்றிடத்திலிருந்து காற்று தோன்றியது; காற்றிலிருந்து நெருப்பு தோன்றியது; நெருப்பிலிருந்து நீர் தோன்றியது; நீரிலிருந்து மண் தோன்றியது என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

பிரபஞ்ச சக்தியென்பது அதிசயமான- ஆச்சரியமான சக்தி. நம் கண்ணில் காணும் அனைத்தும் பிரபஞ்ச சக்தியிலிருந்து உருவானவைதான். அனைத்துப் படைப்புகளும், உயிரினங்களும் பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன. பிரபஞ்ச சக்தியானது தான் இயங்கும் இடத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப உருவமும், செயலும், சக்தியும் அமையப் பெற்றிருக்கும். அதனால் பிரபஞ்ச சக்தியென்பது நமக்குத் தொடர்பில்லாத ஒரு ஆற்றலல்ல.

நிமித்தம் என்பது தானாக உருவாகும் பிரபஞ்சத்தின் அறிவிப்பு. உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் பிரபஞ்சத்தின் எண்ணம். பிரபஞ்சம் விருப்பப்படும் நிகழ்வுகள் மட்டுமே உலகில் நடைபெறும். பிரபஞ்சத்திற்கு விருப்பமில்லாத எந்த நிகழ்வும் உலகில் நடைபெற வாய்ப்பே இல்லை.

மனிதர்களின் அனைத்து கண்டு பிடிப்பிலும் பஞ்சபூதங்கள் அடங்கி யுள்ளன. பஞ்சபூதங்களைப் பயன்படுத்தி அரிய பல்வேறு புதுமைகளைக் கண்டு பிடித்த மனிதர்களால் ஏன் இறந்தவர்களைப் பிழைக்கவைக்க முடியவில்லை? மனிதர்களுக்குத் தனது அனைத்து சக்திகளையும் வழங்கிய பிரபஞ்சம் ஏன் பிறப்பையயும் இறப்பையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது? ஆக, பிரபஞ்ச சக்திதான் உலக இயக்கத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

Advertisment

மனிதர்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நிமித்தத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இயற்கை எதையெல்லாம் உணர்த்து கிறதோ அதுவே பிரபஞ்ச நிமித்தம். பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம். இயற்கை எதை உணர்த்து கிறதோ அதை மனித மனம் வடிவமைக்கிறது.

மனிதர்களைச் சுற்றியிருக்கும் பிரபஞ்ச சக்தி எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நன்மை- தீமைகளை சில நிமித்தங்கள்மூலம் முன்கூட்டியே உணர்த்திவிடும். மனிதர்கள் செய்ய நினைக்கும் செயலுக்கான முடிவுகளுக்கும், இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் ஒருவித தொடர்புண்டு.

இந்த கட்டுரையில் பிரபஞ்ச சக்திக்கும் நிமித்தத்திற்கும் எவ்வளவு நெருங்கிய சம்பந்தமுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

மிக எளிமையான உதாரணமாக, திருமணம் தொடர்பான விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போது யாரவது திருமணத்திற்குப் பத்திரிகை கொண்டுவந்தால், திருமணம் சுபமாக நடக்கப்போகிறது என்பதற்கு பிரபஞ்சம் கொடுத்த நிமித்தம்.

nn

முக்கியமான தொழில் ஒப்பந்தம் பற்றிய சிந்தனையில் இருக்கும்போது நமக்கு திருட்டு, கொள்ளை பற்றிய தகவல் கிடைத்தால் ஒப்பந்தத்தின்மூலம் ஏமாற்றம் நடக்கப்போகிறது என்பதை நிமித்தம் மூலமாகப் பிரபஞ்சம் உணர்த்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பற்றியும் பிரபஞ்சம் நமக்கு 2011-ஆம் ஆண்டிலேயே உணர்த்திவிட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் "கன்டேஜியன்.'

உலகில் ஆன்லைனில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தப் படம், வைரஸ்மூலம் பரவும் ஒரு நோயை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படமாகும்.

அந்தப் படத்தில் ஹாங்காங்கிலிருந்து (சைனா) ஒரு வைரஸ் பரவி உலகம் முழுவதும் 26 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள். தும்மல், இருமல்மூலம் அந்த வைரஸ் அடுத்தவர்களுக்குப் பரவுவதுபோன்று காட்டியிருப்பார்கள். படத்தில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்குள் பல உயிர்கள் போய்விட்டன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதிலுள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றியும் மிகத் தெளிவாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

அந்தப் படத்தில், சீனாவில் 'மக்காவ்' என்னும் இடத்திலிருக்கும் சமையல் காரர் ஒருவர், கிருமித் தொற்றால் பாதிக்கப் பட்டிருக்கும் பன்றி மாமிசத்தைக் கையில் எடுத்துவிட்டு, தனது கையைக் கழுவாமல் 'க்வைனத் பால்ட்ரோ' என்னும் கதாபாத்திரத்துக்குக் கைகொடுப்பார். பால்ட்ரோ, அமெரிக்காவுக்குத் திரும்பு கையில் அவருக்குக் கிருமித் தொற்று பாதிக்கப்பட்டிருக்கும்.

aa

அடுத்த சில நாட்களில் அவர் இறக்க, அவரது தொற்று மற்றவர்களுக்கும் பெரிய அளவில் பரவ ஆரம்பித்து நாடே ஸ்தம்பிக்கும். இந்தக் கிருமித் தொற்று பன்றி, வவ்வாலி-ருந்துதான் ஆரம்பித்துள்ளது என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

படத்தில் வருவதைப்போலவே கொரோனாவும் சீனாவிலிருந்து துவங்கி உலகம் முழுவதும் பரவிவிட்டது. படத்திலும் வைரஸ் பாதிப்பு சூழலை "பான்டமிக்' என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுகி றார்கள்.

இப்போது பல நாடுகளில் இருந்ததைப்போலவே காலியான நிலங்கள், காலியான விமான நிலையங்கள், நகரங்களில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுக்கும் காட்சிகள் "கன்டேஜியன்' படத்திலும் காட்டப்பட்டிருந்தது. அந்த நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் முயற்சிப்பதையும், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்துவதைப் பற்றியும், கொள்ளை நோயால் சமூகக் கட்டமைப் பானது எவ்வாறு சீரழிகிறது என்பதைப் பற்றியும் கூறப்பட்டிருந்தது.

திரைப்படம் வெளிவந்த ஆண்டு 2011. இதன் கூட்டு எண் 2+1+1=4. தற்போதைய கொரோனா பாதிப்பு வெளிப்பட்டு மிகுதியாகத் தொடங்கிய 2020-ஆம் ஆண்டின் கூட்டு எண் 2+2=4. அசுபத்தை மிகைப்படுத்தக்கூடிய ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண் 4.

"கன்டேஜியன்' படத்திற்குத் திரைக்கதை எழுதிய "ஸ்காட்பர்ன்ஸ்' என்பவருக்கு பிரபஞ்ச சக்தி வழங்கிய நிமித்த ஞானத்தை யாராலும் மறுக்கமுடியாது. ஜனனகால ஜாதகத்தில் ஆழ்மனதைக் குறிக்கக்கூடிய ஐந்தாமிடம் வலிமை பெற்றவர்களாலும், பிரபஞ்சத்துடன் ஒன்றுபவர்களுக்கும் மட்டுமே இதுபோன்ற பிரபஞ்ச நிமித்தம் கிடைக்கும். சிறிய மாற்றம்கூட இல்லாத இந்த பிரபஞ்ச நிமித்தம் மனித குலத்திற்கு வரமா, சாபமா?

"பஞ்ச பூதங்களைத் தவறா கப் பயன்படுத்தினால் இதுபோன்ற கொள்ளை நோய்களை சந்திக்கநேரும்' என்ற பிரபஞ்ச அறிவிப்பை உதாசீனப்படுத்தியால் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் சீற்றம் இதுவென்று கொள்ளலாம்.

இந்த படத்தில் இடம்பெற்ற பல தகவல்கள் சரியாக இருக்கின்றன. உலகில் 26 மில்லியன் பேர் இறப்பதாக அதில் சொல்லப்பட்டிருந்தது. 26 மில்லியன் என்பது உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகிதமாகும்.

தமிழில் வெளியான "ஏழாம் அறிவு', "காப்பான்' போன்ற படங்களையும் பிரபஞ்ச நிமித்தத்திற்கு உதாரணமாகக் கூறலாம்.

உளவியல்ரீதியாக உலக இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பிரபஞ்ச நிமித்தம் சாதகமா, பாதகமா என்று ஆய்வு செய்தால், அசுப விளைவுகளை பிரம்மாண்டப்படுத் தாமல் இருப்பதே உலக மக்களுக்கு மிகவும் நல்லது. அத்துடன் நல்ல விஷயங்களை பிரம்மாண்டப்படுத்தினால் உலகம் செழிக்கும்.

பிரபஞ்சமும் மனித மனமும்

மனித உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கப்பட்டது. மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம். இயற்கை எதை உணர்த்துகிறதோ அது மனதால் வடிவமைக்கப்படுகிறது.

மனிதன்தான் இயற்கையால் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட சக்தி' மனமே உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கங்களையும், செயல்பாடுகளையும் தீர்மானிக்கிறது. எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் நன்மை அல்லது தீமைதான் எதிர்விளைவு. மனதை அமைதிப் படுத்தி உடலையும் பக்குவப்படுத்தி அமைதி நிலையை அடைந்துவிட்டால் பல சாதனைகளைச் செய்யலாம். பயம், கவலை, எதிர்மறையான எண்ணம், தன்னைத் தானே நொந்துகொள்ளுதல் போன்ற தேவையில்லாத சிந்தனைகளை அகற்றி, எண்ணங்களை சுத்தப்படுத்திக்கொள்ளும் பயிற்சிகள் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அதாவது பிரபஞ்ச சக்தியைப் பயன் படுத்தி மனிதன் வாழ்க்கையில் முன்னேறவேண்டுமானால் முதலில் மனதை நெறிப்படுத்தவேண்டியது அவசியம். மனமென்பது ஒரு சூட்சுமப் பொருள் என்பதால், மனதை இயக்குவதற்கு சூட்சும சக்தியான ஆகாய சக்தி தேவைப்படுகிறது. எப்போது மனதில் எண்ண ஓட்டங்கள் அடங்குகிறதோ அப்போது உடலின் ஆகாய சக்தியின் சேமிப்பு அதிகரிக்கிறது. ஆகாய சக்தி சரியான அளவில் இருக்கும் போதுதான் பிரபஞ்சத்தின் அறிவிப்புகளை கிரகிக்க முடிகிறது. பிரபஞ்சத்தை சாந்தப் படுத்தக்கூடிய நல்ல தகவல்களைப் பதிய வைத்தால் சுபப் பலன்களை மிகுதியாகவும், அசுபத்தைக் குறைவாகவும் அனுபவிக்க நேரும்.

பிரபஞ்சம் நான்கு விதிகளின்படியே மனிதர்களுக்கு சுப- அசுபங்களைத் தருகிறது. அதன்படி-

1. கர்மா

முதல் விதியான கர்மா மனிதர்களின் பழைய சுதந்திரமான செயல்களால் வந்தது என்பதால், அதைத் தவிர்க்கும் ஆற்றல் மனிதர்களாகிய நமக்கில்லை. அதை அனுபவித்துத் தீர்த்துக்கொள்ளுதலே ஒரே வழி.

2 . ஆழ்மன நம்பிக்கை

ஆழ்மனதிலுள்ள தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக்கொள்வது சிறிது கடினம் என்றாலும், அது முடியாததல்ல. நமக்கு நல்லதே நடக்குமென்ற ஆழ்மன நம்பிக்கை மிக முக்கியம். நோய்க்கிருமிகளின் சக்தியின்மீது பலமான நம்பிக்கை வைத்திருப்பவர்களை நோய் எளிதில் தாக்கும். தன் உடலின் எதிர்ப்பு சக்திமீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை எளிதில் நோய் தாக்காது. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் போய்விடும்.

3. ஆர்வம்

ஆர்வத்தின் தரத்தைப் பொருத்தே நன்மையின் தரமும் அமையும். உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும்போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். தாழ்ந்த விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவர்களின் தரமும் தாழ்ந்தே இருக்கும்.

4. சகிப்புத்தன்மை

எந்த பிரச்சினைக்கும் தீர்வு நம் கையில்தான் இருக்கிறது. ஒருவருடைய உணர்வைப் புரிந்துகொள்ளாமை, சிறிய பிரச்சினையைப் பெரிதுபடுத்துவது, சகிப்புத்தன்மை இன்மை போன்றவை கருத்து வேறுபாட்டிற்கு பிரதானமான காரணமாகத் திகழ்கின்றன. நமது ஆழ்மனதில் நிலவும் மனக்குறையே பல பிரச்சினைகளுக்கு மூலகாரணமாகத் திகழ்கிறது. உதாரணமாக, யாராவது நம்மைப் பார்த்து, "சௌக்கியமா?' என்று கேட்டால் நம்மில் பலர் என்ன பதில் சொல்கிறோம்? "ஏதோ இருக்கேன்,' 'என்னமோ வண்டி ஓடுது,' 'என்னத்த சொல்ல... எல்லாம் என் தலையெழுத்து,' 'ஏண்டா அவருக்கு பிள்ளையா பிறந்தோம்னு இருக்கு; எனக்கு மட்டும் நல்ல அப்பாவைத் தராம கடவுள் வஞ்சனை பண்ணிட்டாரு...' -இதுபோன்ற விரக்தியான பதிலைத்தான் பலர் சொல்கிறார்கள்.

இது அவர்களுடைய ஆழ்மனதிலிருந்து வரும் வார்த்தைகள். இந்த வார்த்தைகள்தான் வாழ்க்கையத் தீர்மானம் செய்கின்றன. ஒரு வார்த்தையைப் பத்துமுறை சொல்லும்போது அந்த வார்த்தைக்கு சக்தி கிடைத்து உடனே வேலைசெய்ய ஆரம்பித்துவிடும்.

"நாங்க சந்தோஷமா இருக்கோம்,' "கடவுள் எங்களை நல்லபடியா வச்சிருக்காரு...' இதுபோன்ற வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல உண்மையிலயே நமது வாழ்க்கை மாறி, நாம் சொன்னதுபோலவே மாற்றம் வரும்.

மேலும், பிரபஞ்ச நியதிப்படி நாம் சொல்லும் சொல்லுக்கு ஒருவகை வலிமையுண்டு. அதை எந்த கோணத்தில் செயலாக்கம் செய்கிறோமோ அவ்வாறே அந்தக் காரியம் இனிமையான காரிய மாகவோ அல்லது துன்பம்தரும் காரிய மாகவோ அமைந்துவிடுகிறது. இந்த மனநிலைகளை அறிந்து, புரிந்து வாழ்ந்தால் மனித வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த நான்கு விதிகளைக் கடைப்பிடித்து புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால், மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக்கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும்படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கற்பனைகூட செய்யமுடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

பரிகாரம்

மனித வாழ்வை, இரவு உறங்குவதற்கு முன்பிருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் தீர்மானிக்கின்றன. உறங்கும் முன்பு நாம் எதைப்பற்றி சிந்திந்துக்கொண்டே உறங்கு கிறோமோ, அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும். உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்துக்கொண்டே உறங்குங்கள்.

அது பிடித்த உறவு, பொருளாதாரச் சூழல், ஆரோக்கியம்... இப்படி எதுவாகவும் இருக்கலாம். அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக்கொண்டே உறங்கும்போது மறுநாள் காலை எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே மனம் இருக்கும். இதை எல்லாராலும் வளர்த்துக்கொள்ள முடியும். ஆழ்ந்த தியானத்தால் அடைய முடியாத வெற்றியே கிடையாது. இவ்வாறு உறங்கும்முன்பு ஆழ்மன சக்தியைப் பயன் படுத்தும்போது அனைத்து வாய்ப்புகளும் சாதகமாகும். நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்தியானது நமக்கு அறிவிக்கும் அனைத்து நிமித்தங்களையும் முன்கூட்டியே உணரும் ஆற்றல் உண்டாகும்.

மனிதர்களாகிய நாம் அனைவரும் தினமும் காலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரபஞ்சத்திடம் மானசீகமாக மன்னிப்பு கேட்க, பிரபஞ்ச உக்கிரம் குறையும்; வெகுவிரைவில் இயல்புநிலை திரும்புமென எதிர்பார்க்கலாம்.

செல்: 98652 20406