அயன சயனம், போகம், விரயச்செலவு, வெளிநாட்டு வாழ்க்கை, அடுத்தபிறவி, புண்ணியம், தியாகம், தாய்மாமனால் உண்டாகும் பலன், தந்தையால் ஏற்படும் தொல்லை, இடக்கண், வள்ளல்தன்மை, பாவம், வறுமை பற்றிய பலன்களை பன்னிரண்டாமிடத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.
பன்னிரண்டாமிடத்தில் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய சுப கிரகங்கள் இருந்தால் சுப விரயமும், சூரியன், செவ்வாய், தேய்பிறைச் சந்திரன், சனி, ராகு- கேது ஆகிய பாவகிரகங்கள் இருந்தால் அசுப விரயமும் ஏற்படும். சயனசுகம் கெடும். இங்கிருக்கும் கிரகங்கள் ஆட்சி, உச்சம் போன்ற வலுப்பெற்றால் அதிக விரயத்தையும், நீசம், பகை போன்ற வலுக்குறைந்த நிலையில் இருந்தால் விரயம் குறைவாகவும் இருக்கும். நோய், எதிரி, கடனால் உண்டாகும் நஷ்டம் அசுபப் பலனாகும். பன்னிரண்டிலுள்ள சுபகிரகங்கள் தர்மம்செய்ய வைக்கும். சயனசுகம் ஏற்படுத்தும். ஆட்சி, உச்சபலம் பெற்றால் மெத்தையில் நிம்மதியாகத் தூங்குவர். ஆடம்பர சுகபோகம் உண்டு. பன்னிரண்டில் நிற்கும் கிரகத்தின் காரக நஷ்டத்தை கட்டாயம் தரும். மேலும் கிரகங்கள் கெட்டிருந்து பாவமடைந்தால் சயன சுகமின்றி நித்திரை சுகம் கெடும்.இனி, பன்னிரண்டில் நிற்கும் கிரகங்களின் பலன்களைக் காணலாம்.
சூரியன்
தந்தை கிரகமான சூரியன் பன்னிரண்டில் இருந்தால் தந்தைக்கு பாதிப்பு, தந்தையால் பாதிப்பு ஏற்படும். தந்தை- மகனுக்குமான உறவு பாதிக்கப்படும். தந்தை வசதியாக இருந்தால்தான் சிறுவயதில் சந்தோஷங்கள் கிடைக்கும். தந்தைவழி உறவுகளால் நன்மை குறைவு. சுய உழைப்பால் வசதியான வாழ்க்கைக்குச் செல்வர். சொந்த ஊரைவிட்டு வெளிநாட்டு வாழ்க்கை ஏற்படும். கண் பாதிப்புண்டு. சூரியன் சயனசுகம் என்கிற படுக்கை ஸ்தானத்தில் இருந்தால் நிம்மதியான தூக்கத்தைத் தராது. வருமானத்தைவிட விரயம் அதிகமாகும். பாவகிரகங்கள் பன்னிரண்டில் இருந்தால் அசுப விரயம் அதிகம் ஏற்படும். நரகம்தான் கிடைக்கும் என்பார்கள். தாய்மாமனால் நன்மையில்லை. கஞ்சத்தனத்தால், கிடைக்கவேண்டியது கிடைக்காது. துலா லக்னத்திற்கு பாதகாதிபதி, கடக லக்னத்திற்கு மாரகாதிபதி, மீன லக்னத்திற்கு ஆறாமதிபதி, மகர லக்னத்திற்கு எட்டாமதிபதி, கன்னி லக்னத்திற்கு பன்னிரண்டாமதிபதியாக சூரியன் வந்து நன்மைசெய்ய இயலாதவராக இருப்பார். ஆனாலும்சூரியன் மறைவது, நீசம் பெறுவது, சூரியன் வீடான சிம்மத்திற்கு கேந்திர, திரிகோணத்தில் சூரியன் இருப்பது, சுபகிரகத் தொடர்புகள்- அதாவது சுபகிரகப் பார்வை, சேர்க்கை, சுபகிரக ஸ்தானாதிபதிகள் இணைவு ஏற்பட்டால், சூரியன் சுபபலத்தைப் பெற்று அதியோகங்களைச் செய்வார். நல்ல தசாபுக்திகள் நடந்தால் பன்னிரண்டில் இருக்கும் சூரியனால் கெடுபலன்கள் நடக்காது.
சந்திரன்
தாய்க்காரக கிரகமான சந்திரன் மறைவிடமான பன்னிரண்டில் இருந்தால் தாயார் விரயம் அல்லது தாயாரால் விரயம் ஏற்படும். மேலும் மனநிலை காரகரான சந்திரன் மறைவது நல்லதல்ல. குழப்பமான மனநிலையைத் தந்து எதிலும் சந்தேகம், முடிவெடுக்க முடியாத தயக்கத்தைத் தரும். எதிர்மறை எண்ணங்கள் வளரும். மனம் ஒன்றைச் சொல்லும்; மனசாட்சி ஒன்றைச் சொல்லும். அதனால் முடிவுகள் எடுப்பதில் தாமதமாகி நிறைய நல்ல வாய்ப்புகளை இழக்கவேண்டியதாய் இருக்கும். சுபகிரகமான குரு, சந்திரன் இணைவு- தனக்காக கொஞ்சம் செலவழித்து பலருக்குப் பயன்பட செலவு செய்வர். அதாவது வள்ளல் தன்மையைத் தரும். சூரியன், வளர்பிறைச் சந்திரன் சேர்க்கை இருந்தால் இருப்பதைத் தொலைத்து விடுவர்.
விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதி, கும்ப லக்னத்திற்கு ஆறாமதிபதி, தனுசு லக்னத்திற்கு அஷ்டமாதிபதி, சிம்ம லக்னத் திற்கு விரயாதிபதியாக சந்திரன் வருவதால் நன்மைகள் குறைவு. அதேநேரம் சந்திரன் நீசம், சுபகிரகத் தொடர்பு தீமைகள் குறையச்செய்யும். சந்திரனின் கடக வீட்டிலிருந்து 6, 8, 12-ஆம் இடங்களில் சந்திரன் மறையாமலிருத்தல் சுபப் பலனைத் தரும். தசாநாதன், புக்திநாதன் நன்றாக இருந்து தசை நடந்தால், சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் இல்லாமல் போகும். ரிஷபம், மிதுனம், கன்னி, மகரத்திற்கு மாரகாதிபதியாக சந்திரன் வருவதால், தன் தசாபுக்திகளில் உடல் மற்றும் மனதிற்கு சிரமங்களைத் தருவார். ஏழரைச்சனி, அர்த்தாஷ் டமச்சனி, கண்டச்சனி, அஷ்டமச்சனி, கர்மச்சனி நடக்கும்போது சந்திர தசையோ, சந்திர புக்தியோ பலமின்றி பாவ வலுப் பெற்றிருந்தால் ஜாதக ருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ கண்டத்தைத் தரும். அல்லது யாரிடமாவது நம்பி ஏமாறும் சூழல் ஏற்பட்டு அவமானம், பொருள் இழப்பு, சிறைவாசம், நோய் மற்றும் கடனால் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கடுமையாக சந்திக்கநேரும். பொதுவாக ஜாதகத்தில் சந்திரன் கெடுவது நன்மை தராது.
செவ்வாய்
பன்னிரண்டில் செவ்வாய் இருந் தாலோ, செவ்வாய் பன்னிரண்டைப் பார்த்தாலோ சம்பாதித்ததை பெரும் பாலும்இழந்துவிடுவார். சகோதர கிரகமான செவ்வாய் மறைவது சகோதர நஷ்டம் அல்லது உடன்பிறப்புகளால் நஷ்டத்தைத் தந்துவிடும். உடன்பிறந்தவர்கள் உடனிருந்தே கெடுப்பர். நன்றி கெட்டவர்களாக இருப்பர். எதிரியோடு மறைமுகமாக சேர்ந்து முதுகில் குத்துவர். சகோதர்களுக்காக கால, நேர, சொத்து விரயத்தை சந்திப்பார். குடும்பத் தொல்லையால் சுகமான வாழ்க்கை அமையாது. மனைவியின் பாசமற்ற செயலாலோ, பகையாலோ உடல்நலம் பாதிக்கும். அதேபோல் பெண்களுக்கு கணவர் கிரகமான செவ்வாய் மறைந் தாலோ, கெட்டாலோ குடும்ப வாழ்க்கை கெட்டுவிடும். பிடிக்காத கணவன், கொடுமைப்படுத்தும் கணவன் கிடைத்து, வாழ்க்கையை வெறுக்கவைத்து விடுவார். இல்லறம் இல்லா அறமாகிவிடும். செவ்வாய் நிலத்திற்கு சொந்தக்காரர். செவ்வாய் கெட்டால் சொத்து சுகம் சரியாக அமையாது. சொத்தில் வில்லங்கம், விவகாரம் ஏற்படும். நில விஷயமாக சகோதரர், பங்காளி, நண்பர்களால் ஏமாற்றப்படுவார். பொதுவாக பெண்களுக்கு செவ்வாய் சுப பலம் பெறவேண்டும். செவ்வாய்க்கு சுபகிரகப் பார்வை, சேர்க்கை, தொடர்பிருந்தால்தான் நிம்மதி கிடைக்கும். செவ்வாய் பாவகிரக சம்பந்தம் பெற்றால் பலவித அவமானங் களைப் பெறவேண்டி இருக்கும். பன்னிரண்டி லுள்ள செவ்வாய்,செவ்வாய் தோஷமாகி தொல்லையே தருவார். செவ்வாய், சனி குணக்கேட்டைத் தந்துவிடும். சூரியன், செவ்வாய் சேர்க்கை மாங்கல்யத்தை பாதிக்கும். புதன், செவ்வாய் அறிவை மழுங்கடிக்கும். சுக்கிரன், செவ்வாய் எல்லாருக்கும் நன்மை தராது. பாவகிரகங்கள் தொடர்பு அதிகரித்தால் காமத்தால் வேதனை தருவார். செவ்வாய், ராகு- கேது தொடர்பு நல்வாழ்க்கையைக் கெடுக்கும். இங்கு செவ்வாய் மறைந்து பாவகிரகங்களுடன் தொடர்புகொண்டாலே முறையற்ற வழிகளிலேயே சிந்தனை, செயல் போகும். சிம்மம், மகரத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி. மிதுனம், துலாம், கும்பம், மீன லக்னத்திற்கு செவ்வாய் மாரகாதிபதி. மிதுனம், விருச்சிக லக்னத்திற்கு ஆறாமதிபதி. மேஷம், கன்னி லக்னத்திற்கு அஷ்டமாதிபதி. ரிஷபம், தனுசுக்கு பன்னிரண்டாமதிபதி. செவ்வாய் பலம்பெற்றால் அதிக கஷ்டம், நஷ்டம், தொல்லையையே தரும். சுபகிரகத் தொடர்பொன்றே செவ்வாயின் தீமையைக் கட்டுப்படுத்தும். வளர்பிறைச் சந்திரன், செவ்வாய் சேர்க்கை சந்திரமங்கள யோகம் தரும். குரு, செவ்வாய் சேர்க்கை குருமங்கள ராஜயோகத்தைத் தரும். சுப பலம் பெற்ற செவ்வாய், பணம், புகழ் அந்தஸ்து தந்து வாழ்வாங்கு வாழவைப்பார். செவ்வாய் பாவகிரகம். கெட்டவன் கெட்டால் கிட்டிடும் ராஜயோகம். கஷ்டங்கள் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் நன்மைகளை செவ்வாய் செய்வார். தசுபுக்திகள் சாதகமாக இருந்தால் சுப பலம் பெற்ற செவ்வாயால் தீமைகளின்றி நன்மைகளே நடக்கும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 96003 53748