மரங்கள் மனிதர்களுக்கு மனதை மகிழ்விக்கும் மலர்களையும், உண்ணுவதற்கு காய், கனிகளையும் தருவதுடன் நிழல், குளிர்ச்சி, மழையையும் தருகின்றன. காற்றையும் தூய்மைப்படுத்துகின்றன. சுவாசத்தின்மூலம் நாம் வெளியிடும் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு, நமக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுகின்றன. கரியமில வாயுவை கிரகித்துக்கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவைக் குறைக்கின்றன.
உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஆக, மரங்கள்தான் மனித இனத்தை வாழவைக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதனால்தான் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். விருட்சங்களின் பயன்கள் அளவற்றவை. எதிர்விளைவுகளை ஏற்படுத்தாதவை.
பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நல்ல சக்திகளையும் ஈர்த்து தன்னுள் சேமித்துவைக்கும் ஆற்றல் விருட்சங்களுக்கு உண்டு.
மரங்களை வழிபடுபவர்களுக்கு, அவை தங்களுக்குள் நிரம்பியுள்ள நற்சக்திகளால் விரும்பிய அனைத்து நற்பலன்களையும் தந்து, எதிர்மறை சக்தியை விலக்கிவிடும் அல்லது தங்கவிடாது. அதனால்தான் நமது முன்னோர்கள் தெய்வீக சக்தி நிறைந்த மரங்களை வளர்த்து வழிபட்டுவந்தார்கள்.
விருட்ச சாஸ்திரத்தில் 27 நட்சத்திரத்தினர் வழிபடவேண்டிய விருட்சங்களையும், அதனால் ஏற்படும் நற்பலன்களையும் குறிபிட்டுள்ளனர். இங்கே அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறோம். வாய்ப்பிருப்பவர்கள் அவரவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கான விருட்சத்தை நட்டு விரும்பிய பயனை அடையலாம். பராமரிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திரநாளில், விருட்சங்களைப் பராமரிக்கும் தலங்களுக்குச் சென்று வழிபட, கர்ம தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.
நட்சத்திரம்- விருட்சம்
அஸ்வினி- எட்டி மரம்
பரணி- நெல்லி மரம்
கிருத்திகை- அத்தி மரம்
ரோகிணி- நாவல் மரம்
மிருகசீரிடம்- கருங்காலி மரம்
திருவாதிரை- செங்கருங்காலி மரம்
புனர்பூசம்- மூங்கில் மரம்
பூசம்- அரச மரம்
ஆயில்யம்- புன்னை மரம்
மகம்- ஆலமரம்
பூரம்- பலா மரம்
உத்திரம்- அலரி மரம்
அஸ்தம்- அத்தி மரம்
சித்திரை- வில்வ மரம்
சுவாதி- மருத மரம்
விசாகம்- விளா மரம்
அனுஷம்- மகிழ மரம்
கேட்டை- பராய் மரம்
மூலம்- மரா மரம்
பூராடம்- வஞ்சி மரம்
உத்திராடம்- பலா மரம்
திருவோணம்- எருக்க மரம்
அவிட்டம்- வன்னி மரம்
சதயம்- கடம்ப மரம்
பூரட்டாதி- தேமா மரம்
உத்திரட்டாதி- வேப்ப மரம்
ரேவதி- இலுப்பை மரம்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட விருட்சம் இருந்தாலும், அனைத்து ராசிக்காரர்களுக்கும், அனைத்து நட்சத்திரக்காரர்களுக்கும் உகந்த விருட்சங்களில் ஒன்றுதான் கருங்காலி மரம். சென்ற மாதம் வெளிவந்த "சல்லிய தோஷம்' என்ற கட்டுரையில், பூமி தோஷம் நீங்க கருங்காலிக்கோல் வைத்து வழிபடவேண்டுமென்று பரிகாரம் குறிப்பிட்டிருந்தேன். பலர் இதற்கான விளக்கம் கேட்டிருந்தனர். கருங்காலி குறித்த தகவல்களை இந்த கட்டுரையில் பகிர்கிறேன்.
கருங்காலி
மிருகசீரிடம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தின் விருட்சம் கருங்காலி. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தது. விருட்சங்களிலேயே மிகவும் அற்புதமானது. மனிதர்களின் ஏற்படும் அனைத்துவிதமான சங்கடங்களுக்கும் தீர்வு கிடைக்க சித்தர்கள் கொடுத்த அற்புதக் கொடை கருங்காலி. இயல்பிலேயே இறைத்தன்மை நிறைந்த- இறைவனுக்கு மிக நெருக்கமான விருட்சம். அதனால்தான் பல சிறப்பு பெற்ற தலங்களில் கருங்காலி தல விருட்சமாக இருப்பதைக் காணமுடிகிறது. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் மிகுதியாக இருக்கின்றன. அளவற்ற மருத்துவ குணம், ஆரோக்கியத்தைத் தரக்கூடிய தன்மை எந்த விருட்சங்களுக்கு மிகுதியாக உள்ளதோ அதற்குள் அளவிடமுடியாத தெய்வத்தன்மை நிரம்பியிருக்கும். அதிக அளவில் பிரபஞ்ச சக்தியையும் (மின் கதிர்வீச்சுகளையும்) நேர்மறை ஆற்றலையும் தன்னுள் சேமிக்கும் தன்மைகொண்ட கருங்காலி, மனித உடலில் ஜீவகாந்த சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. எதிர்வினைகள் சிறிதுமில்லாததால் இதன் நிழலில் நின்றால் கூட நோய் நீங்கும். ஆன்மா வலுவடையும். எனவே அனைத்து ராசியினரும், மதத்தினரும் பயன்படுத்தலாம்.
பொதுவாக கருங்காலி மரம் இலங்கை மற்றும் இந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது. இதனை செங்கருங்காலி, முள்ளுக்கருங்காலி என இரண்டாக வகைப்படுத்தலாம்.
கருங்காலியில் உலக்கை, மாலை, சிலைகள் செய்து ஆன்மிக வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால் அளவிடமுடியாத நற்பலன்களை அடையமுடியும்.
உறுதியான, வலுவான அனைத்துப் பொருட்களுக்கும் காரகர் செவ்வாய் பகவான்தான். செவ்வாயானது சொத்து, சகோதரம், ரத்தம், வீரம், தைரியம், வீரியம், கடன், இனம்புரியாத நோய் போன்றவற்றைக் குறிக்கும். செவ்வாய் பெண் ஜாதகத்தில் கணவரையும், ஆண் ஜாதகத்தில் சகோதரத்தைப் பற்றியும் கூறும் கிரகமாகும். செவ்வாயின் காரகத்துவத்தால் ஏற்படக்கூடிய அனைத்து இன்னல்களுக்கும் தீர்வு தரக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட விருட்சமே கருங்காலி.
மருத்துவ குணங்கள்
இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது.
செவ்வாய் என்றால் ரத்தம். இதனைப் பயன்படுத்த, ரத்தம் தொடர்பான அனைத்து ஆரோக்கியக் கேடும் நீங்கும். சர்க்கரையின் அளவு குறையும். இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு முற்றிலும் அகலும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலிலுள்ள தேவையற்ற விஷநீரை வெளியேற்றும். சுவாச, காச நோய்கள் தீரும். குடிப்பழக்கம் சரியாகும். பல், ஈறுகளில் ரத்தக்கசிவு சீராகும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றிலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.
பெண்களுக்குக் கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய்க் கோளாறை சீராகிக்கி குழந்தை பாக்கியம் தரும். வெள்ளைப்படுதல், ரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். ஆண்களுக்கு உடல் பலமடையும். ஆண்மை பெருகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.
பொதுவான பயன்கள்
சித்தர்கள், முனிவர்கள் பயன்படுத்தும் தண்டம், குறி சொல்பவர்கள் பயன்படுத்தும் குச்சி, வீடுகளில் முன்னோர்கள் பயன்படுத்திய உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் அனைத்தும் கருங்காலியால் செய்யப்பட்டவையே.
எல்லா கோவில்களிலும் கும்பாபிஷேகத் தின்போது கருங்காலிக் கட்டைகளையே கலசத்தினுள் போடுவார்கள். அதனால் இடி, மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோவிலைச் சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை அதிகளவில் கிரகித்து வெளியேற்றுகிறது.
நன்கு விளைந்த கருங்காலியை உடன் வைத்திருக்கும்போது எதிரிகளின் தொல்லை, போட்டி, பொறாமை, எதிரிகளின் தீய- எதிர்மறை எண்ணங்களின்மூலம் உண்டாகும் காரியத்தடை, திருஷ்டி, பில்லி, ஏவல், சூனியம், வசியம், செய்வினைப் பிரச்சினை, நோய் மற்றும் மனநோய், தூக்கமின்மை, மரணபயம், ஆயுள் குற்றம் நீங்கும். காரிய சித்தியும் தொழில் வளர்ச்சியும் அடையும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.
குலதெய்வ வழிபாட்டுத் தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு கிட்டும்.
கருங்காலிக் கோலை பூஜையறையில் வைத்து வழிபடும்போது சொத்துப் பிரச்சினை, சகோரதர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும். வாஸ்துக் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பு குறையும். தொழிற்கூடத்தில் வைத்து வழிபட, தொழில் விருத்தியடையும்; லாபம் பெருகும். செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். வாகனங்களில், கைப்பையில் வைத்தால் விபத்து ஏற்படாது. மாலையாக அணிந்துகொண்டு தியானம், மந்திரஜெபம் செய்தால் காரியசித்தி கிடைத்து வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். அன்னை வாராகி மற்றும் லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய் சுப வலிமை பெற்றவர்களுக்கு, செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நன்மையைத் தருகின்றன.
செவ்வாய் வலிமை குன்றியவர்களுக்கு நோய், விபத்து, கடன், சொத்துப் பிரச்சினை, திருமணத்தடை, மணவாழ்வில் நிம்மதியின்மை போன்ற அசௌகரியங்கள் இருந்துகொண்டே இருக்கும். கருங்காலியில் செவ்வாய் கிரகத்தின் சுப கதிர்வீச்சுகள் அதிகமாக இருப்பதால், இதனைப் பயன்படுத்த செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து இன்னல்களும் தீரும்; பாதிப்புகள் அகலும்.
கருங்காலி மேஷ ராசி, விருச்சிக ராசி மற்றும் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்த வர்களுக்கும்; கௌலவம் கரணத்தில் பிறந்த வர்களுக்கும்; செவ்வாய்க்கிழமை, 9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மிகவும் உகந்தது. இவர்கள் கருங்காலி மரம் வளர்ப்பது, கையில், உடலில் கருங்காலி மரப் பொருட்களை வைத்திருப்பது சிறப்பான பலன் தரும்.
பயன்படுத்தும் முறை
கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட மாலை, கோல் போன்ற எந்தப் பொருளாக இருந்தாலும் தூய்மையான பசும்பால் மற்றும் நீரில் கழுவி, சந்தனம், குங்குமமிட்டு, தெரிந்த இஷ்ட மற்றும் குலதெய்வ மந்திரத்தை உருவேற்றி, பூஜையறையில் வைக்கலாம். அல்லது சுத்தமான ஓரிடத்தில் வீட்டில் எங்குவேண்டுமானாலும் வைக்கலாம். பூஜைமுறைகள் தெரியவில்லையென்றால், முழுமனதோடு குலதெய்வத்தையோ இஷ்ட தெய்வத்தையோ, நவகோள்களையோ வேண்டி, 108 முறை அவர்களின் நாமத்தைக்கூறி வழிபாடு செய்யலாம்.
ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தலவிருட்சமாக வைத்து வணங்கிப் பயன்பெறுவோம்.
செல்: 98652 20406