-சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
"ஆனியில் நடாத கரும்பும்
அறுநான்கில் பெறாத பிள்ளையும்'
என்றொரு பழமையான தமிழ்ப் பாடலில், ஆனி மாதத்தில் கரும்பு நடவேண்டும்; ஒரு ஆண் அல்லது பெண் 24 வயதிற்குள் திருமணம் செய்து ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், 24 வயதிற்குள் ஒரு மகன் பிறந்தால், தந்தைக்கு 50 வயதாகும்போது, உடல் நல்ல நிலையில் இருக்கும்போதே மகனுக்குத் திருமணம் செய்துவைத்து, வம்சம் வளரப் பிறந்த பேரக்குழந்தையையும் பார்த்து மனநிறைவுடன் வாழ்வான். மேலும், தந்தைக்கு 50 வயதாகும்போது, மகன் 26 வயது வாலிபனாக உழைத்து சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற் றும் சக்தியும் பொறுப்பும் உடையவ னாக இருப்பான்.
இன்றைய நாளில் 42 வயதிற்கு மேலாகியும் நிறைய ஆண்களும் பெண்களும் திருமணமாகாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தான் விரும்புவதுபோல் மாப்பிள்ளை- பெண் அமையவேண்டு மென்றும், இன்னும் சிலர் வரதட்ச ணையை எதிர்பார்த்தும், உத்தியோகத் தில் உள்ளவர்தான் வேண்டுமென்றும், சிலர் சம்பாதித்து நிறை பணம், சொத்து சேர்த்தபின்புதான் திருமணம் செய்வேன் என்றும் பலவிதமாகக் கூறிக் கொண்டு, தனது திருமணத்தைத் தானே தடைசெய்துகொள்கிறார்கள்.
மேலும் ஜாதக தோஷமென்று கூறி, பணத்தை செலவழித்து பரிகாரங் களைத் தேடித்தேடி செய்கிறார்கள். இவற்றைச் செய்வதால் யாருக்கு லாபம் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
ஜோதிடத்தில் கூறப்படும் சூரியன்முதல் கேது வரையுள்ள ஒன்பது கிரகங்களும் இந்த பூமி யிலுள்ள அனைத்துப் பொருட்களையும், ஒரு குடும்பத்திலுள்ள அனைத்து மனித உறவுகளையும் குறிப்பிடுவதற்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளதே தவிர, எந்தவொரு கிரகமும் தானே செயல்பட்டு, மனிதர்கள் வாழ்வில் நன்மை- தீமைகளைத் தருவதில்லை. எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனையும் அவன் வாழ்வில் உயர்த்தவும் முடியாது; வீழ்த்தவும் முடியாதென்பதே சித்தர்கள் வாக்காகும்.
உதாரணமாக, சூரியன் என்ற ஒரு கிரகத்தின் இயற்கையான தன்மை வெப்பம், வெளிச்சத்தைத் தருவதுதான். இந்த சூரியன் தரும் வெப்பம் 100 டிகிரி என்றால், இதன் தாக்கமுள்ள பகுதியில் வசிக்கும் மனிதன், விலங்கு, பறவை, தாவரம் என அனைத்தும் சூரியன் தரும் 100 டிகிரி வெப்பத்தை பாகு பாடின்றி அனுபவிக்கும்.
சூரியன் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், பகை, நீசம் பெற்றுள்ளவர் களுக்கென தனித்தனியே தன் வெப்பம், வெளிச்சத்தைக் கூட்டியோ, குறைத்தோ தராது என்பதே உண்மை.
திருமணத்தடைக்கு பல தோஷங்களைக் காரணமாகக் கூறினாலும், செவ்வாய் தோஷம் பற்றி மட்டும் இந்தக் கட்டுரையில் அறிவோம். வேத ஜோதிட முறையில், ஒருவருக்கு திருமண சமயத்தில் பொருத்தம் பார்க்கும்போதுதான் செவ்வாய் தோஷம் உள்ளதா என்று பார்க்கிறார்கள்.
தமிழ் ஜோதிட முறையில் ஆண்- பெண் இருவருக்கும் பொதுவாக செவ்வாய் தோஷம் கூறப்படவில்லை. பெண்களுக்கு மட்டுமே செவ்வாய் தோஷம்.
ஒரு ஆணின் குடும்ப உறவுகளில் அவரது சகோதரர்களையும், மனைவியின் சகோதரர்களான மைத்துனர்களையும் குறிப்பிடும் உதாரண கிரகமாக செவ்வாய் கூறப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு ஆணின் ஜாதகத்திலுள்ள செவ்வாய் அவரது சகோதரர்களுக்குதான் உறவு, பகை என நன்மை- தீமையான பலன்களைத் தரும். ஆண் ஜாதகத்தில் செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும், மனைவிக்கு எந்த பாதிப்புகளையும் தராது. எனவே திருமண சமயத்தில் ஆண்களுக்கு செவ்வாய் தோஷம் பார்க்க அவசியமில்லை என்பது சித்தர்கள் வாக்காகும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் அவளது குடும்ப உறவுகளில், திருமணம் முடியும்வரை சகோதரனையும், திருமணத்திற்குப்பிறகு கணவனையும் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமான நிலையிலிருந்தால், திருமணத்திற்குப்பிறகு கணவனுக்கு பாதிப்புகளைத் தந்துவிடும். இதனால்தான் பெண்களுக்கு மட்டும் செவ்வாய் தோஷம் உள்ளதா என்று பார்க்கவேண்டும்.
தமிழ் ஜோதிடமுறையில், ஒரு பெண் ணிற்கு செவ்வாய் (கணவன்) தோஷம் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள, அவள் ஜாதகத்தில் லக்னம், ராசி, நட்சத்திரம், 7, 8-ஆமிடங்களிலுள்ள கிரகங்கள், பாவம், பாவாதிபதி என எதனையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
பெண்கள் ஜாதகத்தில் தோஷம் உள்ளதை அறியச்செய்வது சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்கள்தான். செவ்வாய் கிரகத்தால் தோஷம் உருவாக்கப்படுவதில்லை. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ இருந்தால், அந்தப் பெண் செவ்வாய் (கணவன்) தோஷமுள்ள பெண் என்று அறிந்துகொள்ளலாம்.
ராகு கிரகம் அவளின் முற்பிறவி, வம்ச முன்னோர்கள் காலத்தில் செய்த பாவங்களைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும்.
கேது அவளின் முற்பிறவி, முன்னோர்கள் காலத்தில் கிடைத்த சாபங்களை அறியச் செய்யும் உதாரண கிரகமாகும்.
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசிக்கு, 1, 5, 9; 2, 7-ஆவது ராசி களில் ராகு- கேது இருந்தால், அந்தப் பெண் 100 சதவிகிதம் செவ்வாய் தோஷம் உள்ளவள் ஆவாள். மேற்சொன்ன ராசி களில் சனி இருந்தால் 75 சதவிகிதம் தோஷமாகும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண் வாழ்க்கையில் உண்டாகும் பொதுவான பலன்களை முதலில் அறிவோம்.
கணவனை இழந்து விதவையாதல், கணவனால் கைவிடப்படுதல் அல்லது கணவனைக் கைவிட்டு விலகுதல், கணவன் ஒரு ஊரிலும், மனைவி ஒரு ஊரிலும் பிரிந்து வாழ்தல், கணவனுக்குத் தீராத வியாதி உண்டாகுதல், கணவனுக்கு ஆண்மைக் குறைவு, விவாகரத்து போன்ற பலன்கள் உண்டாகும்.
அடுத்து, செவ்வாய்- சனி, ராகு, கேது கிரகங்களுடன் தனித்தனியே இணைந்து தரும் தோஷப் பலன்களை அறிவோம்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 99441 13267