"கார்ப்பரேட்' என்னும் வார்த்தையை இன்றைய நாளில் ஏதோவொரு வகையில் நாம் கேட்டிருப் போம். அது IPO-வாக இருக்கலாம் அல்லது NFO-வாக இருக்கலாம் அல்லது சாதாரண செய்தி களாகக்கூட இருக்கலாம். அது என்ன கார்ப்பரேட்? இதற்கு சட்டரீதியான அல்லது வணிகவியல் ரீதியான விளக்கத்தை இங்கு சொல்லப்போவதில்லை. கிடைக்கக்கூடிய சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுதல் என்றவகையில் புரிந்துகொள்வோம்.

"அப்படின்னா நானும் கார்ப்பரேட் ஆகவேண்டுமா' என்று கேட்பது புரிகிறது. உங்களுக்குதான் இந்த செய்தி. எல்லாருக்கும் ஏதாவதொரு தொழில் செய்யவேண்டுமென்ற ஆவல் இருக்கும். சிலர் வேலை யில் இருந்துகொண்டே வேறொரு தொழில்போல செய்வார்கள். வீட்டிலுள்ள இல்லத்தரசிகள்கூட ஏதாவது சிறுதொழில்போல செய்வார்கள். சீட்டுபிடிப்பது கூட தொழில்தானே...

ff

Advertisment

இப்படி "ஸ்டார்ட் அப்' எனத் தொடங்கி பல லட்சங் களைத் தொட்டு சில கோடி களை எட்டியவர்களும் உண்டு.

ஒரு தொழில் தொடங்க தொழில் பற்றிய அறிவு, தொழிலுக்கான சூழல், சந்தைக்கான வாய்ப்பு, முதலீடு செய்ய பணம்- என இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் முக்கிய மாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை மூன்று இருக்கின்றன. அதை சொல்லத்தான் இத்தனையும்.

முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நமது நிறுவனத்தின் பெயர். இரண்டாவது, அந்த நிறுவனத்திற்கு நாம் தேர்வு செய்துகொள்ளும் சின்னம். (logo). மூன்றாவதாக, அதற்கேற்ற நிறம். இவ்வளவுதான். பிறந்த குழந்தைக்கு ஜாதகப்படிதான் நாமகரணம் செய்வார்கள். அதன்பிறகு தங்கள் பெயரை அவர்கள் விருப்பத்திற்கு ஒரு அஃபிடவிட் (Affidavit) கொடுத்து மாற்றிக்கொள்வார்கள். அது போல நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்வதில் தான் முக்கியத்துவம் இருக்கிறது.

சிலர் எண்கணித முறைப்படி வைத்துக்கொள்வர். ஆனால் ஜாதகரீதியாக பெயரைத் தேர்வு செய்யும்போது நிறமும் "லோகோ'வும் இணைந்து அமைந்துவிட்டால் அந்த தொழில் "ஓஹோ'தான்!' "அப்படின்னா... இதில் இருக்குதா இவ்வளவு விஷயம்?' என்று கேட்கிறீர்கள். ஆம்; கான்ட்ராக்ட்டில் கையெழுத்து போடுவது, வங்கிக் கடனுக்கு அணுகுவது, பொதுத்துறை நிறுவனமாக இருந்தால், எந்த தேதியில் IPO/NFO வெளியிடுவது என்பதுபோல தேர்வுசெய்துவிட்டால் அப்புறமென்ன? வெற்றி நமக்குதானே!

இதேபோல, நிறுவனத்தில் வேலைக்கு ஆளெடுக்கும்போது இன்டர்வியூ வைப்பார்கள். அந்த வேலைக்கு இவர் தகுதியானவரா என்பதை ஜாதகக் குறிப்புகொண்டு சொல்லிவிட முடியும். இதைத்தான் கார்ப்பரேட் ஜோதிடம் என்கிறோம். இந்த முறையில் தேர்வு செய்துதரும் எதுவும் தோற்றுப் போகாது.

உதாரணமாக, சில நிறுவங்களைப் பெயர் குறிப்பிடாமல் சொல்கிறேன். நீங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

நீலநிறத்தில் தங்கள் கம்பெனி பெயரைக் கொண்டுள்ள நிறுவனங்கள் விரிந்து பரந்து உயர்ந்து நிற்கும். பச்சை நிறத்தில் லோகோ இருந்தால், உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது என்றாலும், இறக்கம் எப்போதும் இருக்காது. இதே போல பெயரில் என்று எடுத்துக் கொண்டால், "அ' என்ற ஒலியில், "இ', "ஐ' "ஓ' என்னும் ஒலிகளில் முடியும் எழுத்துகளை (எந்த மொழியாக இருந் தாலும் இதுதான்) அதற்கேற்ற நிறத்தைத் தேர்வுசெய்து இணைத்துவிட்டால், தொழில் வளர்ச்சி வரைபடம் மேல் நோக்கிதான் இருக்கும். லோகோ டிசைன், வண்ணம் சேர்த்தல், பெயர் அமைத்தல் என் ஒருங்கிணைந்த ஜோதிட ஆலோசனை தருவதைதான் கார்ப்பரேட் ஜோதிடம் என்று சொல்கிறோம்.

ஆனால் பாருங்கள். தொழில் தொடங்குபவர்கள் ஏதாவது ஒரு பெயர் அல்லது வீட்டிலுள்ள அன்புள்ளவர்களின் பெயரை வைத்துக்கொண்டு, தொடங்கும் நாளில் பூஜை போட முகூர்த்தம் கேட்டுதான் ஜோதிடரிடம் வருகிறார்கள்.

இயல்பாகவே அவர்களுக்கு அமைத்த பெயரும் நிறமும் லோகோவும் சாதகமாக அமைந்தால் அது வெற்றியைத் தரும். "இதிலெல்லாம் நம்பிக்கையில்லை சார்' என்று எதையாவது ஒன்றை வைத்துக்கொண்டு வெற்றிபெறுபவர்களுக்கும், இதுபோல இயல்பாகவே சாதகமாக அமைவதுண்டு.

அரசாங்கத்தில் ஒரு நிறுவனத்தைப் பல்வேறு சூழலில் பதிவுசெய்யும்போது, இந்த பெயர் முக்கியம். அதுவும் லெட்டர்பேடில்தான் எழுதித் தரச் சொல்லுவார்கள். அதில் நிறம், லோகோ, பெயர் என நம்மை அடையாளம் காட்டும். அரசுத்துறை நிறுவனங்களுக் குக்கூட அந்தத் துறையை ஒட்டி ஒரு லோகோ மற்றும் நிறமிருக்கும். இதுவரை நீங்கள் யோசித்துப் பார்க்கவில்லை என்றால், இந்த செய்தியை வைத்து சிந்தித்துப் பாருங்கள். இது மூட நம்பிக்கை இல்லை. அப்படி நினைப் பவர்கள் இதை "Colour of Attraction' என்று வேறு மொழியில் சொல்லிக் கொள்ளலாம்.

இனி தொழில் தொடங்கும்போது, உங்கள் நம்பிக்கைக்குரிய "கார்ப்பரேட் ஜோதிட'ரை சந்தித்து, தொழிலின் பெயர், அதில் அமைக்கவேண்டிய வண்ணம் மற்றும் லோகோவுக்கான படம் முதலியன தேர்வுசெய்து கொள்ளுங்கள். அனுபவம் மிக்க அவர்கள் ஜோதிட அடிப்படையில், நீங்கள் செய்யும் தொழிலுக்கேற்ப இதனை செய்துதருவார்கள்.

"ஏற்கெனவே தொழில் செய்கிறோம். ஆனால் அதில் முன்னேற்றமில்லை' என சொல்பவர்களும் தேவையான மாற்றங் களைச் செய்துகொண்டு வெற்றிபெறலாம்.

அதன்பிறகு எந்தநாளில் தொடங்கவேண்டும் என்பதை முடிவுசெய்யுங்கள். நல்லதே நடக்கும்; நலமுடன் வாழ்க!

செல்: 94443 27172