நமக்கு வாழ்நாளில் திரண்ட செல்வமும், ஆயுள்பலமும் கூடியிருந்தால்தான் இந்த கர்ம பூமியில் ஆனந்தமயமான காலச்சக்கரத்தைச் சுழலவைக்க முடியும். அதற்கு இரண்டுவகை கர தரிசனங்களைச் செய்தல் வேண்டும்.
தாய்- தந்தையர் அறியாமல் செய்த பாவங்களையும் சேர்த்து நம்முடைய பாவச்செயல்களும் அகல காசிக்குச் சென்று கங்கை நதியில் புனித நீராடல் செய்து வருகிறோம். அதேபோன்று வாழ்நாளில் அதிக நிதிக்குவியல்களோடும் ஐஸ்வர்யங்களோடும் ஆனந்தம் பெற்றிட, தொண்டை மண்டலத்தின் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள மூன்று சக்கரங்களையும் தரிசிப்பது நல்லது.
விதி வலியது என்பார்கள். குலதெய்வக் கோவிலுக்குப்போய் பொங்கல் வைக்க தானியங்கள், பொருட்களைச் சேர்த்து பையில் கட்டித் தயாராக வைத்திருப்பார்கள். ஆனால் தரிசிக்க வாய்ப்பில்லாமல் மூட்டை கட்டிப் போட்டபடியே இருக்கும்.
அருகிலுள்ள ஆலயத்திற்குச் செல்லவும் புனிதத் தலங்களை தரிசிக்கவும் நமக்குப் பிறவிப்பயன் வேண்டும் என்றார் ஆதிசங்கர பகவத் பாதர்.
"ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத
மக்குத புண்ய: ப்ரபவதி
ஹி மோஹாய மஹதாம்'
என்ற சௌந்தர்ய லஹரி துதியில் அவர் அருளியதை நினைவுகூர வேண்டும்.
திருநாவுக்கரசர் தனது திருவங்க மாலைப் பதிகத்தில்-
"கைகாள் கூப்பித் தொழீர்
கடிமாமலர் தூவி நின்று
கால்களால் பயன் என்
கறைக் கண்டான் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம்
சூழாக் கால்களால் பயன் என்'
என்று பாடினார். ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை தரிசிக்காத கால்கள் இருந்து என்ன பயன் என்று கேட்கிறார்.
நாமோ தரிசிக்க வேண்டிய சக்திமிக்க கோவில்களைவிட்டு, இன்பச்சுற்றுலாக்களை அமைத்து எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
காசியைக் காணு காஞ்சியை எண்ணு!
வாழ்நாளில் காசியைக் கண்களால் தரிசிக்க வேண்டும். காஞ்சியை மனதில் நினைத்து, அங்குள்ள சக்தி வாய்ந்த தலங்களைத் தரிசித்தால் சௌபாக்கியங்கள் கிட்டும் என்றனர் சான்றோர்கள். இதற்கு உதாரணமாக-
அஸ்வத்த நாராயணர் விருட்ச பூஜை என்னும் அரசமர வழிபாட்டுக் கதையில், சாருமதி என்ற தெய்வப் பெண் குணவதி என்ற பெண்ணின் கணவனை உயிர்ப்பிக்க "காஞ்சி மாநகருக்குச் செல்வாயாக' என்று சொல்லி, காஞ்சியில் உள்ள ஒரு தீர்த்தக்கரையில் தனது புண்ணியங்கள் அனைத்தையும் தாரை வார்த்துக் கொடுக்கிறாள். அங்கே கணவனின் உயிரை மீட்டுச்சென்றாள் அப்பெண். இதனால்தான் "நகரேஷு காஞ்சி' என்று புராணங்களால் காஞ்சி மாவட்டப் பகுதியே புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. உண்மையாகவே காஞ்சி மாநகர எல்லைக்குள் சில ஆன்மிக அற்புதங்கள் மகான்களால் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆதிசங்கரர் ஸ்ரீசக்கர மகாமேருவை பிரதிட்டை செய்த காமாட்சியின் திருத்தலமும்; திருமங்கை ஆழ்வாரும் பொய்கை ஆழ்வாரும் பேயாழ்வாரும் கண்குளிரக் கண்டு வணங்கிய விளக்கொளிப் பெருமாள் தலமும் அருளாட்சி செய்துவருவதையும் காண்கிறோம். இதன்காரணமாகவே காசியைக் காணவேண்டும்; காஞ்சியில் உள்ள தலங்களை மனதில் எண்ணவேண்டும் என்றார்கள்.
ஒரு மனிதனது வாழ்க்கையில் பூர்வ புண்ணியமும், இப்பிறவியில் செய்கின்ற புண்ணியங்களும் சேர்ந்துகொண்டால் தான், அனுபவிக்க வேண்டிய செல்வங்கள் தங்கும். பாவங்கள் இருக்கின்ற இடத்தில் செல்வங்கள் நிலைக்காமல் விலகி ஓடும் என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
ஜாதக சௌபாக்கியம்
இந்தக் கலியுகத்திலும் சரி; எல்லா யுகங்களிலும் சரி- பிறக்கின்ற குழந்தைக்கு ஜாதகத்தைக் கணிதம் செய்கின்றபோது-
"ஜனனீ ஜன்ம சௌக்யானாம்
வர்த்தனீ குலஸம்பதாம்
பதவீ பூர்வ புண்யானாம்'
என்று முதன்முதலில் எழுதுகிறார்களே... இதற்குக் காரணம் என்ன?
இந்த ஜென்மத்தில் சௌபாக்கியங்கள் வளர்வதும், குலம் விருத்தியாவதும் முற்பிறப்பில் செய்த புண்ணியச் செயல்களாலேயே அமைகின்றன என்று சொல்லப்பட்டது. இடையிலே "பதவீ' என்றொரு வார்த்தை இருக்கிறதே- இதை மந்திரிப்பதவி, அரசாங்கப் பதவி, ஆட்சிப் பதவி, குடும்பத் தலைவர் பதவி என்று பலரும் எண்ணிக்கொள்கிறார்கள். இந்தச் சொல்லின் உண்மையான தத்துவம் என்னவென்றால்-
ப- பகவானைப் பணிதல் வேண்டும்; த-தர்மத்தோடு நடந்து அறங்களைச் செய்ய வேண்டும்; வி- விலகாமல் இறைவனைப் பற்றி எல்லாரிடத்திலும் அன்புசெய்ய வேண்டும். இதையே வாரியார் சுவாமிகளும் பணிவு- தயை- விருப்பம் என்ற முதற்சொல்லில் விளக்கியிருக்கிறார்.
ஜாதகத்தில் சௌபாக்கியம் வரவேண்டும் என்றால் அதில் அமைகின்ற கிரகங்களின் அமைப்பு நன்றாக இருக்கவேண்டும்.
ஆற்றுநீர் கரைபுரண்டு ஓடினாலும் கால் இல்லாதவன் அந்த நீரை அள்ளிக் குடிக்க முடியுமா? அந்தக் கால்களைக் கோள்நிலை சரியாக உள்ளவர்களே பெற்றிருக்க இயலும். ஆகவே நவகிரக நாயகியாக விளங்குகிற தேவியை நன்றாகத் துதிப்பவர்களுக்கே கோள்களால் பல எண்ணங்கள் நிறைவேறப் பெறும்.
ஒருவரது ஜனன ஜாதகத்தில் முறைப்படியான கிரக அமைப்புகள் இருந்தால் ஷட்சம்பத் என்னும் ஆறு சௌபாக்கியங்கள் வந்துசேரும். அவையே சமம்- மன அமைதி; தமம்- புலன்களின் கட்டுப்பாடு; உபாதி- புலன் நுகர்வுக்கான பொருள்மீதான பற்று விலக்கல்; திதிஷா- எத்தகைய சூழ்நிலையிலும் பாதிக்கப்படாத தன்மையை அடைதல்; சிரத்தை- குரு வாக்கியத்திலும் சாஸ்திர வாக்கியத்திலும் உறுதியான நம்பிக்கை; சமாதானம்- தனது இஷ்ட தெய்வத்தின்மீது மனதை ஒருமுகப்படுத்துதல். இவற்றைக் கைவரப் பழக்கிக்கொண்டால் நம்மிடம் சௌபாக்கிய யோகங்கள் இப்பிறவியிலேயே கிடைத்துவிடும்.
ஜோதிட சித்தாந்தத்தில் ஒன்பதாம் இடத்தைக்கொண்டு பக்தி தரும் யோக மார்க்கத்தை நமது மகரிஷிகள் கூறியுள்ளனர். தெய்வ காரியங்களில் ஈடுபடுகிற தன்மை, பக்தி யோகம், ஞானம், தர்மம், பூர்வீக மூலத்தின் தன்மை, ஜீவகாருண்யம், தந்தை நிலை, நிலைத்த செல்வ யோகம், சந்தோஷமான வாழ்க்கை, தபஸ், புகழ், தொண்டு, தியானம், வள்ளல்தன்மை ஆகியவற்றை அறியலாம்.
ஒன்பதாம் இடத்தின் அதிபதி சுபராகி, 9-ஆம் இடத்திலும் சுபர் இருந்து, குரு 9-ஆம் இடத்திலோ அல்லது வேறு சுபருடன்கூடி நின்றால் ஒரு ஜாதகருக்கு தந்தையால் யோகங்களும் பாக்கியங்களும் உண்டு.
ஒன்பதாம் இடம் பலம்பெற்று, அதன் அதிபதி இரண்டு சுபகிரகங்களுக்கு நடுவிலிருக்க, தந்தையால் மேன்மையும் பொருள் வளமும் ஏற்படும்.
9-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று 1, 5, 9-ஆம் இடங்களிலிருக்க, ஜாதகர் கொடையாளராக- யோகமும் பெருமையும் வாய்ந்த குடும்பத்தில் பொருள் வளத்துடன் திகழ்வார்.
லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் நான்காம் இடத்தில் அமர்ந்து, நான்காம் இடத்து அதிபதி லாபஸ்தான வீட்டில் அமர்ந்தால் லட்சக்கணக்கில் தனம் சேரும் சௌபாக்கிய நிலை உருவாகும்.
10-க்குரியவரும் லாபஸ்தானாதிபதியும் 9-க்குரியவருடன் 9-ல் இருந்தால் எதிர்பாராத சௌபாக்கிய யோகம் வரும் என்பது விதி.
சனி பகவான் ஜென்ம லக்னத்தில் இருக்க, லக்னத்திற்கு நான்கில் சந்திரனும், 7-ல் செவ்வாயும், 10-ல் சூரியன், புதன், குரு, சுக்கிரனும் கூடியிருந்தால் பெரும் செல்வம் பெறும் யோகநிலையை அடைவார்.
சந்திரன் நின்ற ராசிக்கு பூர்வபுண்ணிய வீடு (5) மேஷம், கடகம், துலாம், மகரம் என்னும் சர ராசியாக இருந்தால், அந்த ஜாதகர் சகல ஐஸ்வர்யங்களையும் தல யாத்திரைகள் செல்வதால் அடைவார்.
சதிகளை வெல்லும் சதுர்க்கரம்
வாரணாசிக்கு வாழ்க்கையில் ஒருமுறையேனும் சென்று வந்துவிட வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் போகமுடியாமல் தடைப்பட்டுவிடும். அதற்கும் ஒரு பரிகாரத் துதியை காசிக் காண்டம் சொல்லி வைத்துள்ளது. இதை தினமும் ஜெபம் செய்து வந்தால் விரைவாகக் காசி மண்ணை மிதித்து விஸ்வநாதரை தரிசிக்கிற வாய்ப்பு கிடைத்துவிடும்.
"விச்வேசம் மாதவம் டுண்டும்
தண்டபாணிஞ்ச பைரவம்
வந்தே காசீம் குஹாம் கங்காம்
பவானீம் மணிகர்ணிகாம்.'
காசித் தலத்தில் உள்ள விஸ்நாதரையும், தலப்பெருமையைக் கூறும் டுண்டி கணேசரையும், காலபைரவரையும் நினைத்தால் கங்கையில் முழுகி மணிகர்ணிகையை தரிசித்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்கிற பேறு கிடைத்துவிடும் என்று பொருள்.
காசிக்குப் பயணமாவதையும் அத்தல யாத்திரை நிறைவு செய்தலையும் இந்திய தேசத்து இந்துக்கள் ஒரு உயர்வான பிறவிக்கடனாகவே நினைக்கிறார்கள். இதற்குச் சதுர்க்கர தரிசனம் என்று பெயர். இதை சாஸ்திரப்படி நிறைவு செய்துவிட்டால் தங்களுக்கு மறுபிறவி இல்லையென்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். ஆம்; ஒருவர் சதுர்க்கர தரிசனம் செய்துவிட்டால் கலியுகத்தில் சதிகளை வென்று புனிதத்துவம் பெற்று தூய ஆன்மாவாகத் திகழலாம். "சதுர்க்கரம்' என்பது பத்ரிநாத், துவாரகை, வாரணாசி, ராமேஸ்வரம் ஆகிய நான்கு எல்லைத் தலங்களைக் குறிக்கும்.
ராமேஸ்வரத்திற்குச் சென்று ராமநாத சுவாமியை தரிசித்து அக்னி தீர்த்த மண்ணை எடுத்துக்கொண்டு, காசியிலுள்ள கங்கை நதியில் கரைத்து விஸ்வநாதரை வணங்கி, கங்கை மண்ணை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் சென்று கடலில் சேர்த்து, கங்கை நீரை ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதே புண்ணியம் தரும் சதுர்க்கர தரிசனம்.
காசியில் சதுர்க்கரம் நிறைவு செய்தால் புண்ணியம் சேரும். காஞ்சி மாவட்டத்தில் திரிசக்கரம் தரிசித்தால் நிதிகள் சேர்கின்றன என்பது அகத்தியர் நாடியின் ரகசியம்.
நிதிகளை அள்ளும் திரிசக்கரம்
நமது உடலில் ஆறு ஆதாரச் சக்கரங்கள் முறையாக வேலை செய்தால்தான் நிம்மதியான செல்வ சுகபோகங்களோடு வாழ்ந்திட முடியும். அவற்றை தினமும் சக்தியோடு விளங்கச் செய்வது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற மூன்று சக்திகள். இவர்கள் ஒரே வரிசையில் நிற்கும் அபூர்வத்தை தொண்டை மண்டலம் என்ற தொன்மை வாய்ந்த காஞ்சியம்பதியின் பாகத்தில் காணலாம்.
ஆதிசக்தியாம் கருமாரி
பிரம்மாண்டம், பவிஷ்ய புராணம், சிவபுராணங்களைப் படித்திருப்பீர்கள். ஆனால் மாரியன்னை ஆமை ஓட்டிலிருந்து நாராயணன், சிவன், பிரம்மனைத் தோற்றுவிக்கும்போது இந்த உலகத்தைப் படைத்திட்டாள் என்ற ஆதிபுராணத்தை பலரும் அறிந்திலர். என்ன ஒரு அதிசயம்! அந்த ஆதிசக்திதான் கருமாரியாகத் திருவேற்காட்டில் கோவில் கொண்டு அருள்கிறாள்.
படைத்த அன்னையை- இந்தப் பார் போற்றும் மந்திரத்தை உச்சரித்தாலே புரியும்.
"ஸ்ரீதலேத்வம் ஜகன்மாதா
சீதலேத்வம் ஜகத்பிதா
சீதலேத்வம் ஜகத்தாத்ரீம்
சீதலாயை நமோ நம:'
தாயாய், தந்தையாய், ஜகன் மாதாவாய் விளங்குபவளுக்கு சரணம் என்று முதலில் இந்த கருமாரி அம்பிகையை வணங்குவது, திரிசக்கரத்தின் முதல் சக்கர தரிசனமாகிறது.
கண்திறக்கிற காமாட்சி
ஆதிசங்கரரின் அருள்படர்ந்த காஞ்சியின் கிழக்காய், அவரது மகாமேரு பதித்த புனித மண்ணாகிய மாங்காட்டில் ஒரு இறைவழிபாட்டுக் கருத்தை உணர்த்துகிறாள். அது என்ன? நீ தவமிருந்து வணங்கினால்தான் உனக்கு அருளும் பொருளும் கைகூடும் என்று, தவமிருந்து காட்டுகிறாள் காமாட்சி அம்பிகை. இந்த சக்தியின் பீடமாக அமைந்திருக்கிற சக்கரத்தை வழிபடும் விதமாக தலதரிசனம் செய்தல் வேண்டும். இரண்டாம் சக்கர தரிசனம் இங்கே செய்யும்போது தேவி கண் திறந்து நம்மை ஆசிர்வதிக்கிறாள்.
காத்து நிற்பாள் காத்யாயனி
தெய்வச் சேக்கிழார் பெருமானின் பெரியபுராணம் வெளிவந்த புனித பூமியில், அவரது இல்லத்திற்கு எதிரில், திருஊரகப் பெருமாள் அருகே பிரியும் திருநீர்மலைச் சாலையில், அடர்காட்டில் பக்தர்களுக்கு அருள காத்துக்கொண்டிருக்கிறாள் காத்யாயனி. இந்த சக்தி தேவியைக் காணும் கன்னியர்கள் கூட்டம் அதிகம் உண்டு. முற்றிலும் சந்திர காந்தக்கல்லால் ஆக்கப்பட்ட இந்த சக்தியை வணங்கினால் வாழ்க்கைத் தொடக்கமான கல்யாணம் சாத்தியமாவதோடு, அவள் பாதத்திலுள்ள மூன்றாம் சக்கரத்தை வணங்கிட நிதிச் செல்வம் சேரும் என்பது நிதர்சனம். ஒரே நாளில் மூன்று சக்கரங்களைக் காண்போருக்கு சுபவாழ்க்கை தேடிவரும்.
செல்: 91765 39026