திம்ப சக்கரம் என்பது, ஒருவருடைய ஜாதகத்தை ஆராயும்பொழுது, சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து வரிசையாக கிரகங்களை அடுக்கி, கிரகங்கள் நின்ற உறுப்புகளின்படி பலன்களை உரைப்பதாகும். "திம்பம்' என்ற வடமொழிச்சொல் இளங்குழந்தையைக் குறிப்பதாகும். அதாவது குழந்தையின் தலைபாகத்திலிருந்து ஆரம்பித்து நெற்றி, முகம், தோள், மார்பு, நாபி (வயிறு), புஜங்கள் (வலது, இடது) மர்ம உறுப்பு, கைகள், வலது தொடை, இடது தொடை, பாதம் என பன்னிரண்டு பாகங்களாகப் பிரித்து, பிறந்த ஜாதகத்திலுள்ள கிரகங்களை சூரியன் நின்ற நட்சத்திரத்தின் அடிப்படையில் இந்த திம்ப சக்கரத்தில் அமைப்பர். அப்பொழுது எந்த உறுப்பில் எந்த கிரகங்கள் அமர்கின்றதோ அதற்குத் தகுந்தவாறு பலன்களும் உரைக்கப்படும்.

Advertisment

இங்கு கிரகங்கள் இயற்கை சுபர்கள், இயற்கை பாவர்கள் என்று பிரிக்கப்பட்டு, அந்தந்த ஜாதகங்களில் பாவாதிபதிகளின் சுப, அசுபத் தன்மைகளுக்கேற்ப ஜாதகத்தில் அமர்ந்தபடி பலன்களைக் கொடுக்கின்றன. உதாரணத்திற்கு, பாவிகளான ராகு- கேது, சனி, செவ்வாய் தங்களுடைய கெடுபலன்களைக் கொடுக்கத் தவறுவதில்லை. சனி தன்னுடைய சுய ஆதிபத்திய முறைப்படி, கர்ம லாபாதிபதியாகவும், செவ்வாய் காலச்சக்கரத்தின்படி அஷ்டமாதிபதியாகவும் செயல்படுவதில் குறை வைப்பதில்லை. ராகு முழுவீச்சில் தங்களுடைய அமர்ந்த பாவத்தின் தன்மைக்கேற்பவும், பாவகிரகத்தின் தன்மைக்கேற்பவும் செயல்படுகின்றது.

krishnar

கேது, ராகுவைப்போல அடாவடியாக இல்லாமல், தந்திரமாகவும் மறைமுகமாகவும் தன்னுடைய பலன்களைக் கொடுப்பதில் குறை வைக்கவில்லை. மற்றபடி சூரியன், தன்னுடைய பாவ ஆதிபத்தியத்ற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு மிகுந்த கவனமுடன் செயல்படுகிறது. சந்திரன் தான் இருக்கும் இடத்திற்கு தன்னுடைய வளர்பிறை, தேய்பிறைத் தன்மைக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறது. ஏனைய சுக்கிரன், குரு, புதன் போன்ற கிரகங்கள் சுபத்தன்மையை பொதுவாக தக்கவைத்துக்கொள்வதுடன், ஆதிபத்திய விளைவுகளையும் கொடுக்கின்றன. ஆக, இந்த சுப, அசுப கிரகங்களில் சனி, ராகு- கேது போன்ற கிரகங்கள் அமர்ந்த இடங்கள் அதிக பாதிப்புகளைக் கொடுக்கின்றன.

Advertisment

உதாரணத்திற்கு திம்பசக்கர ஜாதகத்தில் உடம்பின் கால்பாதத்தில் (12-ஆம் இடத்தில்) சனி இருக்குமானால், அவர்களுக்கு ஓயாத அலைச்சல் இருக்கும். வீண் செலவு, மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக மாதக் கணக்கில் தங்க வேண்டியிருக்கும். அயன, சயன, சுக ஸ்தானமாகிய 12-ஆம் இடத்தில் இருக்கும் சனியால், "நிம்மதியாகத் தூங்கி பல மாதங்கள் இருக்கும்' என்று புலம்புவார்கள். வேலையாட்கள் எந்தவித பலன்களையும் பெறமாட்டார்கள். செய்யும் முதலீடுகளால் பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. இவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரம், பாதத்தில் குரு அமர்ந்த நபர்களை குருவாக ஏற்று வழிபடுவதும், கால்நடையாகவே சென்று திருப்பதி வேங்கடாசலபதியை தரிசனம் செய்தும், பழனி அல்லது திருச்செந்தூரிலிருக்கும் முருகனை கால்நடையாகச் சென்று வழிபட்டு வருவதுமாகும். இதனால் சனி கிரகத்தின் தாக்கம் குறைந்து நலம் பெறுவர்.

ஆதிசங்கரர் ஜாதகத்தில் யோகாதிபதிகளான 5 மற்றும் 9-ஆம் இட அதிபதிகள் குருவும் செவ்வாயும் இணைந்து, கால்பகுதியில் அமர்ந்து, முழுப்பலன்களையும் பாதங்களில் வைத்திருந்ததால், ஆதிசங்கரரின் பாதங்களைப் பூஜித்த பலர் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்றார்கள். அவர் பிறந்த ஊர் "காலடி' என்னும் இடமாகும். என்னே சிறப்பு! பாதங்களில் பாவகிரகங்களான சனி, ராகு- கேது இருக்கப் பெற்றவர்கள் ஆதிசங்கரரை முறைப்படி பூஜை செய்துவர, வாழ்வில் உயர்வான நிலைக்குச் செல்வார்கள் என்பது திண்ணம்.

பொதுவாக பாவ கிரகங்கள் எந்த உறுப்பில் வீற்றிருக்கின்றனவோ அந்த உறுப்புகளின் தாக்குதல்களுக்குத் தகுந்தவாறும், அந்த உறுப்புகள் அமைந்த பாவத்திற்கு உண்டான குணங்களுக்குத் தகுந்தவாறும் பலன்கள் உண்டாகின்றன.

Advertisment

parigaram

திம்ப சக்கர ஜாதகத்தின்மூலம் ஒருவர் முற்பிறவியில் என்ன வகையான பாவங்களைச் செய்திருக்கின்றார் எத்தகைய புண்ணியங்களையும் செய்திருக்கின்றார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவர் பலவகையிலும் துன்பப்படுகிறார் என்றால் அவருடைய திம்ப சக்கர ஜாதகத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் அவருடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் கெட்டுப் போயிருக்கும். குரு சாபனை, ஸ்திரீ சாபனை, தெய்வ சாபனை என மூன்றுவகையான சாபனைகள் உண்டு. இந்த மூன்று சாபனைகளில் எந்த சாபனையைப் பெற்று மேற்கண்ட இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்று திம்ப சக்கர ஜாதகத்தின்மூலம் ஆராய்ந்து, அதற்குரிய பரிகாரங்களையும் முறையாகச் செய்து, அவர்களுடைய ஜாதகத்தில் உள்ள பாவகிரகங்களின் தாக்கங்கள் குறையப்பெற்று வளமுடன்வாழ வழிவகைகள் கிடைக்கும்.

ஒரு உதாரண ஜாதகத்தைக் காணலாம்.

கொடுக்கப்பட்ட திம்ப சக்கர ஜாதகத்தில் 3-ஆம் இடத்தில் உள்ள ராகு தோள் என்ற உடற்பகுதியில் அமைந்துள்ளது. ராகு இயற்கை பாவ கிரகம். இந்த அமைப்பினால் ஜாதகர் தன்னுடைய அறுபத்தாறு வயதிலும் உத்தியோகம் செய்துகொண்டு, குடும்பத்திற்குண்டான அனைத்து சுமைகளையும் சுமந்துகொண்டு அலைச்சலுடன் அல்லாடுகிறார்.

இதேவயதில் மற்றவர்கள் சொகுசாக ஓய்வெடுத்துக்கொண்டு உல்லாசமாக வாழ்கின்றனர். ஆனால் அந்த கொடுப்பினை இந்த ஜாதகருக்கு இல்லை.

சனி மற்றும் கேது இடது தொடையில் அமர்ந்து 11-ஆம் இடமாகிய லாபஸ்தானத்தையும் பலப்படுத்தவில்லை. அம்பிகைத் தாயார் லட்சுமி கடாட்சத்துடன் சிவபெருமானின் இடது தொடையில் அமர்ந்திருப்பதை சுவாமி படத்தில் பார்த்திருப்பீர்கள். இடது தொடை லட்சுமி கடாட்சம் உள்ள உறுப்பு. இதில் சுபகிரகங்கள் நின்றால் அவருடைய வாழ்க்கையில் வறுமை என்றால் என்ன என்பதே தெரியாமல் செல்வச்செழிப்பில், அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் நிலையில் வாழ்வாங்கு வாழும் தன்மையுடையவர்கள். அவர்கள் வாழ்த்திக் கொடுத்த ஒரு ரூபாய் நாணயமும் ஒரு கோடிக்குச் சமமாகும்.

இதேபோன்று இடது தொடையில் சுபகிரகங்கள் இருக்கும்பட்சத்தில், அவருடைய லாபாதிபதியின் குணங்கள் பன்மடங்கு உயர்ந்திருக்கும். இந்த ஜாதகரின் கர்மலாபாதிபதி ஆதிபத்தியம் வாங்கிய சனிகிரகமானது லாபஸ்தானத்தில் இருப்பது ஒருவகையில் நன்மையையே கொடுக்கிறது என்றால் மிகையில்லை.

செல்: 91767 71533