தினம் தினம் பூமியில் நடக்கும் மனிதர்களின் இறப்பைப் பற்றிக் கேட்டாலும் பார்த்தாலும் நமக்குள் எவ்விதப் பாதிப்பும், சலனமும் வராது. ஆனால், நமக்கு நெருக்கமானவர்களின் மரணம் மட்டுமே நம்மை அதிகமாக பாதிக்கும். நேற்றுவரை நன்றாக நம்மோடு இருந்தவர் இன்று இல்லை என்கிற நிஜத்தை மனம் எளிதாக ஏற்றுக்கொள்ளாது.
நம்முடைய மரணம் நமக்கும், நம்மை நம்பியிருக்கும் குடும்பத்துக்கும் எத்தகைய வலியைத் தருமென்பதை அறிந்தால்தான், இருக்கும்வரை குடும்பத்திற்குள் ஏற்படும் சின்னச் சின்ன மனக்கசப்புகளுக்கு பெரிய வெறுப்பைக் காட்டாமல், சகித்து சந்தோஷமாக வாழ்வோம். நாளைய பிணங்கள் நாம் என்பது எப்போது புரிகிறதோ அப்போதுதான் நம்மிடம் இருக்கும் "தான்" என்கிற எண்ணம் நம்மைவிட்டு விலகிப்போகும்.
மரணம் பற்றிய விழிப்புணர்வு பெறவே, உறவினர்களின் நல்ல காரியத்திற்கு வரவில்லையென்றா லும் இறப்புக் காரியத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்றனர். இதன்மூலம் இறந்தவர் குடும்பத்திற்கு "உங்களுக்கு சொந்தங்களாகிய நாங்கள் இருக்கிறோம்' என்கிற நம்பிக்கை தர, வருடத்திற்குத் தேவையான உணவு, உடை, பொருளாதார உதவிக்கு செய்முறை மொய், பிறந்த வீட்டு- புகுந்த வீட்டு சீர் என பலவித முறைகள் செய்வர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரிடையாக ஆறுதல், மறைமுக உதவிகள் தந்து மன அழுத்தத் தைத் தவிர்க்க இதனை காலங்காலமாக நம் முன்னோர்கள் செய்துவருகின்றனர்.
உறவுகள் நிலைக்கவும், இறந்தவரின் ஆத்மா சாந்திபெறவும், இறந்ததும் பின்பற்றவேண்டிய பல்வேறு சடங்கு சம்பிரதாய முறைகளையும் உருவாக்கி வைத்தனர். இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் முறைகள் ஊருக்கு ஊர், ஜாதிக்கு ஜாதி வித்தியாசப்படும். ஆனால், இறந்த நாள், நட்சத்திரம், திதி பார்த்து சில முக்கியப் பரிகாரங்களைச் செய்துகொண்டால்தான் இறந்த வரின் ஆத்மா சாந்தியடையும்.
இறந்தவர் வீட்டுக் குடும்ப உறுப்பினர்களுக்கும் முன்னேற்றம் ஏற்படும்.
மரணம்
மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் மரணம் என்கிற நிகழ்வு ஒருநாள் நடந்தே தீரும். அவரவர் செய்த பாவ- புண்ணியங்களைப் பொருத்து இயற்கை மரணமாகவோ, துர்மரணமாகவோ அமையும். மரணத்திற்குப்பின்பு உடலைப் பிரிந்த ஆத்மாவை எமதூதர்கள் மேலோகத்துக்கு அழைத்துச் சென்று சித்திரகுப்தன்முன் நிறுத்துவர். அவர் பாவ புண்ணியக் கணக்குகளைப் பார்த்து ஆத்மாவுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவார். பின்னர் மீண்டும் எமதூதர்கள் சவம் இருந்த இடத்திற்கு- பூலோகத்திற்கு அந்த ஆன்மாவைக் கொண்டுவருவர். அங்கு 18 நாட்கள் இருந்து, குடும்பத்தினர் செலுத்தும் சடங்குகளைப் பார்த்துக்கொண்டு, அன்புடன் தரும் அனைத்தையும் ஏற்று, மீண்டும் எமதூதர்களால் கவரப்பட்டு மேலோகத்தில் எமன் முன் நிறுத்தி தீர்ப்பு பெற்று மறுபிறவி அடைவர் என முக்காலம் உணர்ந்த நம் முன்னோர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தனிஷ்டா பஞ்சமி
ஒருவர் இறந்தவுடன் திதியைப் பார்ப்பதுபோல், இறந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
27 நட்சத்திரத்தில் 14 நட்சத்திரங் களில் இறப்பவர்களுக்கு எந்த தோஷமுமின்றி நேரடியாக மேலோகம் உடனே சென்று விடுவர். சில குறிப்பிட்ட நட்சத்திரங்களில் இறந்தால் மட்டும் "அடைப்பு' ஏற்படும். அதாவது, மீதமிருக்கும் 13 ஆகாத தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் இறத்தால் எமலோகம் செல்ல குறிப்பிட்ட காலம் ஆகும்.
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள், அடைப்பு மாதங்கள் மிருகசீரிஷம், சித்திரை, புனர் பூசம், விசாகம், உத்திராடம்- இரண்டு மாதங்கள்; கார்த்திகை, உத்திரம்- மூன்று மாதங்கள்; ரோகிணி- நான்கு மாதங்கள்; அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி- ஆறு மாதங்கள்.
மேலோகம்
தனிஷ்டா பஞ்சமியில் இறந்த வரின் ஆத்மா மேலோகம் செல்வதற்கென முதலில் ஸ்துல சரீரம் ஒன்று அளிக்கப்படும். எமகிங்கரர்கள் அந்த ஆத்மாவை கற்களும், முட்களும், காடுகளும் நிறைந்த இன்னல்மிக்க பாதை வழியாக மேலோகத்திற்கு இருட்டில் அழைத்துச் செல்வர். மிகுந்த பயத்துடன் அலறியபடி சென்றாலும், செல்லும் வழியில் தண்ணீர், உணவுகூட தராமல் கூட்டிச் செல்வர். எமகிங்கரர்கள் நாம் செய்த பாவங்களை வரிசைப்படுத்தி சொல்லி அடித்து, பல மைல் தூரம் இழுத்துச் செல்வர். அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்தபின்பே மேலோகத்தை ஆத்மா அடையமுடியும். அந்த காலம் என்பது இறந்த தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரத்தைப் பொருத்து மேலே குறிப்பிட்ட மாதங்கள்வரை ஆகும்.
"நானும் என்னுடைய வீட்டில் உள்ளவர்களும் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவர்கள். எங்கள் குடும்பத்தினர் அடைப்பு என்கிற ஆகாத நட்சத்திரத்தில் இறக்க வாய்ப்பில்லை' என நமக்கு நாமே சொல்லிக்கொண்டாலும், உண்மையில் நமக்குத் தெரிந்து செய்த தவறுகள் இருப்பதுபோல், தெரியாமல் செய்த தவறுகளும் இருக்கும். தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரத்தில் இறப்பது- இறந்தவர் செய்த கர்மவினை, ஏழேழு ஜென்மம் செய்த பாவம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த பாவத்தாலும் ஏற்படலாம். நம் முன்னோர்களின் சொத்து களுக்குப் பங்கு இருப்பது போல், அவர்கள் செய்த பாவங்களிலும் நமக்குப் பங்குண்டு.
நம்மைக் கொடுமைப் படுத்தியவருக்கு தண்டனை வழங்குதுபோல், நாம் கொடுமைப்படுத்தியதற்கும் ஆகாத நட்சத்திரத்தில் இறந்து தண்டனை கிடைக்கும். மேற்கண்ட குறிப்பிட்ட காலத்திற்கு துர்தேவதையான தனிஷ்டா பஞ்சமிக்கு முறையான பரிகாரம் செய்யாவிட்டால், இறந்தவர் ஆத்மா மேலோகம் செல்லும்வரை பலவகையில் அதிக துன்பம் அடையும். மேலும், இறந்தவர் வீட்டிலும் துர்தேவதை தங்கி, அங்கிருப் போருக்கு கனவுவில் ஆவி, பிரம்ம ராட்சஸன் உருவம் பூண்டு பயமுறுத்தி பல இன்னல் களைத் தரும். சிலநேரங்களில் வீட்டில் இருப்போரின் உயிரையும் பறித்துவிடும். இனிவரும் தலைமுறையினர் தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் இறக்காமலிருக்க தகுந்த பரிகாரம் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.
பரிகாரம்
ஒருவர் இறந்தவுடன் அன்றைய நட்சத்திரத்தைப் பார்த்து தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரத்தில் இறந்திருந்தால், வீட்டை அடைத்து, வீட்டுச் சுவரை இடித்து உடலை வெளிய எடுத்துவர வேண்டும். நடைமுறைக்கு இது சாத்தியமற்றது. ஆதலால், கிடுகு- அதாவது தென்னை ஓலையில் கதவுபோல் செய்து வீட்டு வாசலைமூடி, அதனைப் பிரித்துக்கொண்டு உடலை வெளியே எடுத்துவர வேண்டும். வீட்டுக்கு வெளியே வைத்திருந்தால் உடலை மயானத்திற்குத் தூக்குவதற்கு முன்பு கிடுகு மறப்பை முன்வைத்து, அதனைப் பிரித்துக்கொண்டு வெளியே செல்லவேண்டும். அடைப்பை உடைத்துக்கொண்டு செல்லும் இந்த முறையில் செய்வது சிறந்த பரிகாரமாகும்.
தனிஷ்டா பஞ்சமியில் குறிப்பிட்ட நாள்வரை வீட்டை அடைத்து வைப்பர்.
அப்படிச் செய்யமுடியாத தால், இறந்தவர் வீட்டில் அவரது புகைப்படத்தை வடக்குப் பார்த்து வைத்து தீபம் மற்றும் நாளொன்றுக்கு ஒரு சூடம் என மாலை 6.00 மணிப்பொழுதில் ஏற்றிவைத்து, வீட்டுப் பெண்கள், சூடம் எரியும்வரை கண்கள்மூடி, இறந்தவர் ஆத்மா சாந்தியடைய அமைதி காத்துப் பிரார்த்தனை செய்யவேண்டும்.
அப்போதுதான் கடினமான பாதையில் செல்லும் ஆத்மாவுக்கு வெளிச்சம் கிடைக்கும். உணவு, தண்ணீரின்றி கஷ்டப்படும் ஆத்மா வுக்கு இங்கிருந்துசெய்யும் வழிபாட்டுமுறையால் பலம் கிடைக்கும். மேலும், வீட்டில் நுழைந்த துர்தேவதையின் தாக்கம் இங்கிருக்கும் குடும்ப உறுப்பினர்களை பாதிக்காது. தினமும் பிரார்த்தனை முடித்த பின் ஒரு கூடையில் அதனை மூடி வைக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலம் முடியும் வரை குடும்பத்தில் உள்ளோர், பந்தலிட்டு நடக்கும் நல்ல- கெட்ட விசேஷ காரியங்களில் கலந்துகொள்ளக் கூடாது. வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நலம். குறிப்பிட்ட காலம் முடிந்தபின்பு வீட்டிற்கு வெள்ளையடித்து, அதற்கான நபர்களை அழைத்து வழிபாடு செய்து, கோமியம் தெளித்து தீட்டுக் கழித்து, ஆத்மாவை வீட்டிற்கு அழைக்கவேண்டும்.
வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, சாந்திப் பரிகாரம் செய்தவருக்கு தானம் செய்தல்வேண்டும். அதன்பின்பு தான் கோவில், ஆற்றங்கரை, புண்ணியத் தலங்கள் சென்று தர்ப்பணம் செய்துவிட்டு வழிபாட்டு முறைகளைத் தொடர வேண்டும். இவையனைத்தையும் செய்தால்தான் தனிஷ்டா பஞ்சமியால் ஏற்படும் தீமையான பலன்களைத் தடுத்து நன்மைபெற முடியும்.
அடுத்தவனுக்குக் கிடைத்து விட்டதே என்று பொறாமைப் படாத ஒரு விஷயம் மரணம். அந்த இறப்பும் தன்னையும், தன் பரம்பரைகளையும் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வது நம்முடைய கடமை.
வாழும்போது உடனிருப்பவர்களுக்கு உதவாவிட்டாலும், அடுத்தவரைக் கெடுக்காமல், நோகடிக்காமல் இருந்தால்தான் ஆத்மா நற்கதியடையும்.
செல்: 96003 53748