ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர்களும், பாரம்பரியத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் தினமும் காலையில் எழுந்தவுடன் பஞ்சாங்கம் பார்க்கும் வழக்கம் இருக்கும். பஞ்ச அங்கங்களை உள்ளடக்கியதே பஞ்சாங்கம்.
பஞ்ச அங்கங்கள் என்பது திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்பது யாவரும் அறிந்ததே.
பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் சிவ, விஷ்ணு ஆலயங்களில், மூல ஸ்தானத்திலுள்ள இறைவனுக்கு தினமும் காலை வேளையில் பஞ்சாங்கம் வாசிக்கும் வழக்கம் இன்றும் இருந்துவருகிறது.
தினமும் பஞ்ச அங்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதால் ஏற்படும் நன்மைகளை அளவிட முடியாது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் திதி செல்வ விருத்தியையும்; வாரம் (கிழமை) ஆயுள் நீடிப்பையும்; நட்சத்திரம் பாவ நீக்கத்தையும்; யோகம் நோய் நிவர்த்தியையும்; கரணம் காரியசித்தியையும் தருகின்றன.
தினமும் பஞ்ச அங்கங்களைப் பற்றித் தெரிந்துகொண்டபின் நித்திய செயல்களில் ஈடுபடுவது சிறப்பு.
பஞ்சாங்கத்தின் முதல் அங்கமான திதி எவ்வாறு சூன்யம் அடைகிறது- அதனால் ஜாதகருக்கு ஏற்படும் நன்மை- தீமைகள் என்னவென்பதை இங்கு காணலாம்.
திதி சூன்யம் என்பது சூரியனின் பயணப்பாதைக்கும், சந்திரனின் பயணப்பாதைக்கும் உள்ள தூரமாகும்.
வளர்பிறைத் திதி 15, தேய்பிறைத் திதி 15 என 30 திதிகளாகக் கணக்கீடு செய்கிறோம்.
உலகின் அனைத்து ஜீவராசிகளும் ஒளிகிரகங்களான சூரிய சந்திரர்களின் ஒளியைப் பெற்றே இயங்குகின்றன. அதனால்தான் விதியை (லக்னத்தை) சூரியனைக்கொண்டும், மதியை (ராசியை) சந்திரனைக்கொண்டும் அறிகிறோம்.
இத்தகைய சூரிய சந்திரர்களின் கதிர்வீச்சுகள் 12 ராசிகளுக்கும் பரிபூரணமாகக் கிடைக்கும்போது மட்டுமே ஒவ்வொரு ராசியும் அதில் நின்ற கிரகங்களும் தத்தம் வேலையைச் செயல்படுத்தும்.
சூரிய சந்திரருடைய கதிர்வீச்சு கிடைக்காத ராசியே திதிகளின் விஷ சூன்ய ராசிகள் எனப்படும்.
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே பன்னிரு ராசிகளுக்கும் பரிபூரணக் கதிர்வீச்சு கிடைக்கிறது. மற்ற திதிகளில், பிரதமை முதல் திரயோதசி வரையான நாட்களில் இரண்டு ராசிகள் சூன்யம் அடைகின்றன. சதுர்த்தசி திதியில் மட்டும் நான்கு ராசிகள் சூன்யம் அடைகின்றன. (திதிகளின் விஷ சூன்ய ராசிகளை அட்டவணையில் காண்க).
இத்தகைய திதி சூன்ய ராசிகள் ஜாதகப் பலன்களைத் தீர்மானம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
நம் ஜாதகத்தில் ஆட்சி, உச்சமடைந்து வலிமைபெற்ற லக்ன சுபகிரகங்கள்கூட மிகுதியான அசுபப் பலனையும், அசுப கிரகங்கள் சுபப் பலனையும் தந்துவிடும்.
திதி சூன்ய தோஷத்திற்கான விதி விலக்குகள்:
திதி சூன்ய கிரகம் நீசமடைவது அல்லது வக்ரம் அடைவது.
சூன்ய ராசியில் நீச வக்ர கிரகம் அமர்வு, ராகு- கேதுக்கள் அமர்வு.
சூன்ய கிரகம் அஸ்தமனம் பெறுவது; சூன்யமடைந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகமும் வலிமையிழக்கும்.
இரண்டு ஆதிபத்தியம் கொண்ட கிரகத்தின் ஒரு வீடு சூன்யமடைந்தாலும் மற்ற வீட்டிற்கு சுபப் பலம் ஏற்படும். ஒரே காலகட்டத்தில் இரண்டு பாவகம் பாதிக்கும்; சூலமும் சிலசமயம் உருவாகும்.
திதி சூன்யமடைந்த கிரகம் நின்ற, பார்த்த, இணைந்த பாவகத்திற்கு ஏற்படும் விளைவுகள் என்னவென்று பார்ப்போம்.
1-ஆம் பாவகம்: ஜாதகரின் புகழ், தோற்றம், அந்தஸ்து குறையும்.
2-ஆம் பாவகம்: பொருளாதாரப் பின்னடைவும், குடும்பத்தில் குழப்பம், நிம்மதியின்மையும் உருவாகும். இளவயதாக இருந்தால் கல்வி தடைப்படும்.
4-ஆம் பாவகம்: வீடு, வாகன யோகம் தடைப்படும். தாயாரின் உடல்நலம் குறையும். உயர்கல்வி தடைப்படும்.
5-ஆம் பாவகம்: குழந்தை பாக்கியமின்மை, குழந்தைகளால் பிரச்சினை, குலதெய்வ அனுக்கிரகமின்மை உருவாகும்.
7-ஆம் பாவகம்: களத்திரத்திடம் கருத்துவேறுபாடு, திருமணத்தடை, தொழில் கூட்டாளியுடன் பகை ஏற்படும்.
9-ஆம் பாவகம்: தந்தையுடன் கருத்து வேறுபாடு, தந்தைக்கு உடல்நலக் குறைவு, பூர்வீக சொத்தை அனுபவிக்க முடியாமை ஏற்படும்.
10-ஆம் பாவகம்: திடீர் தொழில் முடக்கம், வேலை இழப்பு, நிரந்தர வருமானமின்மை உருவாகும்.
11-ஆம் பாவகம்: மூத்த சகோதரரின் வாழ்வாதாரம் பாதிக்கும். மூத்த சகோதரருக்கு நோய்த்தாக்கம், சகோதரருடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12-ஆம் இடங்களும் அதன் அதிபதிகளும் சூன்யம் அடையும்போது நன்மை செய்யும்.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் தசா, புக்திக்காலங்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். பலமுறை ஜாதகம் பார்த்தும் பலன் தவறுவதற்குத் திதி சூன்யமும் ஒரு காரணம். திருமணத்தடை, பிள்ளைப்பேறின்மை போன்றவற்றுக்கு திதி சூன்யமும் முக்கிய காரணம் வகிக்கிறது. இதை கவனித்து சரிசெய்தால் நற்பலன் அடையலாம்.
தீர்வு: திதி சூன்ய அதிபதிக்குரிய வழிபாட்டை அந்தந்த திதிகளில் செய்யும்போது காரிய சித்தி கிடைக்கும்.
செல்: 98652 20406