காலங்களை அறிவதற்கு ஆதாரமாக விளங்கும் கதிரவனே ஆரோக்கியத்திற்கும் காரகன் என்று ஜோதிட உலகம் கூறுகிறது. சூரியனை வழிபட்டால் நம் உடலிலுள்ள நோய்கள் அழிவதோடு, சுற்றுப்புறத்திலுள்ள மாசுகளும் அழியும். கிருமிகளும் காணாமல்போகும். இந்த மகத்தான சிந்தனை உலகில் நோய்த் தாக்கத்தால் கட்டுண்டிருக்கும் மக்களுக்குத் தோன்றவில்லையா மக்களைக் காக்கும் அரசுக்கு எழவில்லையா என்று பலரும் முணுமுணுக்கலாம். ஆனால் ஆன்மிக நாட்டமும் நம்பிக்கையும் உடைய மனிதர்களுக்கு மட்டுமே சூரிய வழிபாடு சாம்ராஜ்ஜிய சுகங்களைத் தருமென்று சௌரபூஜா கல்பம் என்னும் நூல் சொல்கிறது.
காலையில் சூரிய உதயகாலம் ஆறு மணி, 28 நிமிடங்கள் என்றால், "ஏன் இவ்வாறு தாமதமாக உதிக்கிறது?' என்று சிலர் கேட்பார்கள். சூரிய உதய நேரமானது இடத்திற்கு இடம் சற்று மாறுபடும். இதைப் புரியாமல் கேள்வி கேட்பவர் ஜாதகத்தில் சூரியன் மறைந்திருப்பார். அத்தகைய ஜாதகர் மனதளவிலும் உடலளவிலும் நோய் வாய்ப்பட்டவராக இருப்பார்.
தைப்பொங்கலன்று, நமக்கு நல்வாழ்வு தரும் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வழிபாடு செய்கிறோம். ரத சப்தமியன்று உத்தராயணத்தில் நகர்ந்து ஒளிபரப்பச் செல்லும் சூரியனை வழியனுப்புவதற் காகப் பூஜிக்கிறோம். ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையிலான சூரியஹோரை காலத்தில் சூரிய நமஸ்கார பூஜை செய்கிறோம். கிரகண காலத்தில் புண்ணிய தர்ப்பணமும், மூலமந்திர உச்சாடன ஜபங்களும் செய்கிறோம். சூரியவம்ச மன்னர்கள் ஆற்றல்மிக்கவர்களாகத் திகழ்ந்து ஆட்சிபுரிந்ததுபோல, மனித இனம் உடல் வலிமை, புகழ்மிக்க வாழ்க்கை, எக்காலத்திலும் வெற்றிகிட்ட ஒளிக் கடவுளாம் சூரிய பூஜையை தினமும் பத்து நிமிடங்களாவது செய்ய வேண்டும்.
வேதமறிந்த பண்டிதர்கள் திரிகால சந்தியா வந்தனத்தில், காலையில் சூரியனுக்கு அர்க்கோதய கால தீர்த்தத்தை ஆற்றங்கரையிலிருந்து விடுவதை வழக்கமாகக்கொண்டனர்.
"ஓம் ஆதித்யாய நம' என்று தொடங்கி 12 சூரியர்களை அழைத்து நீர் வார்ப்பார்கள்.
வான சாஸ்திரத்தில்...
தன்னுள் சுய ஒளியையும் வெப்ப ஆற்றலையும் கொண்டு விளங்கும் சூரியன் பூமியிலிருந்து 14 கோடியே 96 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனது இயக்கத்தின் வேகம் வினாடிக்கு 20 கிலோமீட்டர் எனப்படுகிறது. 25 1/2 நாட்களுக்கு ஒருமுறை தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது. தன்னைச் சுற்றியுள்ள கோள்களைத் தனது ஈர்ப்புவிசையால் காத்து சரியாக இயங்கச் செய்கிறது.
"ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள்பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி
தாயினும் பரிந்து சாலச் சகலரை
அணைப்பாய் போற்றி
தவிக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி'
எனும் தமிழ்த் துதியில் சூரியனைப் பற்றிக் கூறியுள்ளதைக் காணும்போது, துன்பத்தில் தத்தளிக்கும் மனிதர்களுக்கு துணையாக நிற்பவர் சூரியபகவானே என்பதை உணரமுடிகிறது. காயத்ரி ஜபம் செய்வோர் சூரியனையே பிரதான தெய்வமாக முக்காலமும் வழிபட்டுவருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையில் சூரிய வழிபாடு
இதற்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்லப்படுவதால் பலரும் சூரியனை வழிபடுவதிலிருந்து விலகுகின்றனர்.
இராவணனை வெற்றிகொள்ள இயலாமல் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தவித்தார். அவர் சிவபெருமானை சிந்தித்தவாறு, "தனக்கு வரவேண்டிய எல்லா வெற்றிகளையும் கைப்பற்றி கொண்டவன் இராவணன். தான் அவனிடம் தோல்வியடைந்துவிட்டால் ரகு வம்சத்திற்கே பெருத்த அவமானமாகிவிடும்' என்று வருந்தி, அகத்திய முனிவரிடம் ஆலோசனை கேட்டார். அகத்தியரும், "சூரிய பகவானை மனமுருகப் பிரார்த்தனை செய்வாய். வெற்றி உனக்கே' என்று ஆசிர்வதித்து, அந்த துதியையும் உபதேசம் செய்தார். அதன்படி சிரத்தையோடு சூரியனை வழிபட்டு இராவணனை வென்றார் ராமச்சந்திர மூர்த்தி.
ஞாயிற்றுக்கிழமையன்று சூரிய சக்கரத்தை புள்ளிகள் மாறாமல் வரைந்து, தனியறையில் மரப்பலகையில் வைத்து வணங்கிவந்தால் பலன்கள் கைமேல் கிட்டும். ஒரு வீட்டில் சூரிய சக்கர பூஜை செய்தால், அந்த வீட்டுக்கும் தெருவுக்கும் எதிரி தொல்லை, நோய்க் கிருமிகளின் தாக்கம் வராது.
யஜுர்வேதப் பகுதியில் சூரிய வழிபாட்டு விதி தைத்திரீய உபநிஷத்தின் ஒரு பகுதியில் சாயா, சுவர்ச்சலாம்பிகா உடனுறையும் சூரிய பகவானை வழிபடும் துதி 32 அனுவாகங் களாகப் பிரித்துச் சொல்லப்பட்டுள்ளது. வெள்ளை நூல் சுற்றப்பட்ட கலசத்தை பச்சரிசி இடப்பட்ட வாழையிலையில் வைத்து, வெள்ளை, சிவப்புநிற மலர்களால் அலங்கரித்து, வருண பகவானையும் சூரியதேவனையும் அதில் ஆவாகனம்செய்து, அருகில் ஒரு தட்டில் சூரிய சக்கரத்தை வைத்து வர்ணித்தபின், ஆசனம் முதலிய 11 உபசாரங்களைச் செய்யவேண்டும். பின்னர்
"ஓம் மித்ராய நம: ஓம் தும்ரவயே நம:
ஓம் சூர்யாய நம: ஓம் பாநவே நம:
ஓம் ககாய நம: ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசயே நம: ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம: ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:
ஓம் ச்சாயா சமக்ஞா சமேத
ஸ்ரீ சூரியநாராயண சுவாமினே நம:'
என்று சொல்லி தூபம், தீபம், நிவேதனம் செய்து ஆரத்தி காட்டவேண்டும். கைகூப்பியபடி எந்திரத்திற்கான தியானத் துதியை மூன்றுமுறை கூறவேண்டும்.
"ஓம் உதயகிரி முபேதம் பாஸ்கரம்
பத்ம ஹஸ்தம் ஸகல புவன நேத்ரம்
நூத்ன ரத்னோ பதேயம் திமிரகரி
ம்ருகேந்த்ரம் போதகம் பத்மினீனாம்
சுரகுரும் அபிவந்தே சுந்தரம் விஸ்வரூபம்.'
தொடர்ந்து 'ஓம் ஸ்மிருதி பிரத்யக்ஷ மைதிஹ்யம்' என்று தொடங்கும் சூரிய நமஸ் காரத் துதியைக் கூறவேண்டும். ஒவ்வொரு நான்கு வரிகள் முடிந்ததும் நமஸ்காரம் செய்தல்வேண்டும்.
மொத்தம் 32 பாகங்களாகவுள்ள இந்த நமஸ்காரத் துதியின் முடிவில், "ஸ்ரீ சாயா சுவர்ச்சலாம்பிகா சமேத ஸ்ரீ சூர்ய நாராயண சுவாமினே நம: ஓம் நமோ நாராயணாய' என்று சொல்வது அவசியம். ஆவாகன பூஜையின்போது ஒருமுறை சொல்லிவிட்டால் போதும். பிறகு எளிய சூரிய தியான மந்திரங்களால் 48 தினங் கள் பூஜைசெய்தபின், வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்காரத்தைச் செய்துவரலாம்.
சூரிய பகவானின் மூர்த்தி ரகசியம்
ஒரு ஆலயத்தின் அமைப்பையும், பிம்ப வடிவம் குறித்தும், எந்திரத்தில் உட்கணிக் கப்படவேண்டிய சுவாமியின் வர்ணிப்பைப் பற்றியும் பாத்ம சம்ஹிதையின் கிரியாபாதம் என்னும் பகுதியிலும், கருட சம்ஹிதையிலும் மூர்த்தி ரகசியம் தெளிவாகக் கூறப்பட் டுள்ளது.
ஒரு தெய்வத்தைக் குறிப்பிட்ட பலனுக்காக ஆவாகனம் செய்து வழிபடும்போது மூர்த்தி ரகசியம் என்னும் துதி பயன்படுத்தப்பட்டால் விரைவில் கைமேல் பலன் பெறலாமென்று இதன் பலன்தரும் பாகம் கூறுகிறது. இங்கு சூரியபகவானின் மூர்த்தி ரகசியத்தைக் காண்போம்.
"ரக்தமம்போருஹாரூடம் தாடிமீகுசுமப்ரபம்
ஸ்புரத்ரக்த மகாதேஜோ வ்ருத்தமண்டல
மத்யகம் ஹம்சாரக்த ஸ்புடத்பத்ம
வராபய கரத்வயம் ஏகாஸ்யம்
சிந்தயேத் பானும் த்விநேத்திரம்
ரக்த வாசஸம் ஆதித்யம் பிம்ப
மத்யஸ்தம் ரக்த மூர்த்திம் அஹம் பஜே.'
சிவந்த தாமரை மலர்மேல் விளங்கு பவரும், மாதுளங்கனி நிறத்தோடு சிவந்த முகப் பொலிவுடையவரும், வட்டமான மண்டலத்தின் நடுவே காட்சி தருபவரும், இரண்டு தாமரை கள், வரத அபய முத்திரைகள் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரும், ஆதித்த பிம்பத்தின் நடுவில் ரக்த வர்ண மூர்த்தியாகவும், செவ்வாடை உடுத்திக் கொண்டிருப்பவரும், ஒரு முகம், இரண்டு கண்கள் உடையவரும், சகல சக்திகள் உடையவருமான சூரியனை தியானம் செய்கிறேன் என்பது இந்த துதியின் பொருள். இந்த மூர்த்தி ரகசியத்துடன் சூரிய எந்திரத்தை ஒவ்வொருவரும் பிரதிஷ்டாபனம் செய்துகொண்டால், ஒளிமயமான வாழ்வைப் பெற்றுச் சிறக்கலாம்.
என்ன பலன் கிட்டும்?
கண்ணுக்குத் தெரியும் கடவுள் என்று சூரியனை உலகமே போற்றுகிறது. ஆத்ம காரகன், பித்ருகாரகன் என்று அழைக்கப் படும் சூரியனின் பலத்தைவைத்தே ஒரு ஜாதக ரின் அரசியல் வாழ்க்கை, வேலையின் தன்மை, பதவி, தந்தையின் நிலை, தந்தைவழி தொழில், உறவினர், சிரசு ஆகியனபற்றி அறிய லாம். பொதுவாக கார்த் திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு ஆரம்ப தசையாக சூரியதசை வரும். இவர்கள் சூரியனது பலனை முழுமையாகப் பெற, தங்கள் ஜாதகத்தில் சூரியனது பலம் பலவீனம,றிந்து சூரிய நமஸ்காரத்தைச் செய்து, பரிகார முறையை அறிந்துசெய்து முழுப்பலனையும் அடையலாம்.
'சூரியனின் வியாதி கேளும்
சுரக்கும் நீர்த் துவாரத்தில்
பாரிய குளிர் ஜுரங்களோடு
பகர் ஜன்னி தலையில் பாரம்
வீரிய விருத்தி இல்லை
விஷபயம் அண்டவாதம்
சூரிய ப்ரீத்தி செய்ய சுருக்கிடும்
நோய் தீரும் தானே'
என்பது பாடல்.
நவ கிரகங்களின் பார்வையால் பல தோஷங்கள் ஏற்பட்டு அதனால் பரிகாரம் தேடமுடியாமல் அவதிப்படுவோர் தெளிவு பெறவேண்டி, பல ஆண்டுகளுக்கு முன்பே சூரியனின் தோஷம் வந்தால் எத்தகைய நோய்கள் வரும் அதற்குத் தீர்வென்ன என்பது சொல்லப்பட்டுள்ளது. அதன்படி மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமல் போனால் விஷஜுரம், ஜன்னி, தலைபாரம், விஷநோய்களால் பாதிப்பு உண்டாகுமென்று அறியமுடிகிறது.
சூரிய புஷ்பாங்க மூலிகை
உயர்ந்து வளர்ந்த ஆலமரத்தில், புல்லுருவிபோல் நூலாய் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒருவகை மூலிகையே புஷ்பாங்க புல்லுருவி மூலிகை.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த மூலிகை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை மாபெரும் சக்திகொண்டதாக விளங்கும். இதனை விதிப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்திசெய்து எடுத்துவந்து பூஜையறையில் வைத்து, சூரியபூஜையை விதிப் படி நடத்தி கையில் கட்டிக்கொள்ளவேண்டும். தாயத்து ரட்சையாகவும் கட்டிக்கொண்டு சூரிய சக்கர (எந்திர) வழிபாடு செய்துவரலாம். இந்த விதி தனிமனித முன்னேற்றத் திற்குச் சொல்லப்பட்டது.
தற்போது இந்த நாடே வைரஸ் கிருமி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிலிருந்து அனைவரும் மீண்டெழுந்து நலம்பெற பொது இடங்கள், கோவில்கள், தேவாலயங்களில் இந்த சூரியாஸ்திரம் என்னும் சக்கர வழிபாட்டை பொதுப் பிரார்த்தனையாகச் செய்யலாம். பஞ்ச பூதங்களில் காற்று மாசுபட்டு வளி மண்டலமே அசுத்தமாகிவிட்டதால், அதனை ஊடுருவி வரும் சூரிய ஒளியும் மாசுபட்டுள்ளதாலேயே இத்த கைய இக்கட்டான நிலை வந்துள்ளது என்பதை அறியவேண்டும். ஆதவனை எண்ணி ஆனந்தவாழ்வை மீண்டும் பெற அவரது சக்கர வழிபாட்டை மேற் கொள்ளலாம்.