"எந்தவொரு நல்ல காரியத்திற்கும் நாளும் நேரமும் கூடிவரவேண்டும்' என்பது பெரியோர்களின் வாக்கு. இதிலிருந்து நாள், நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது. வாரத்திற்கு ஞாயிறுமுதல் சனிவரையிலான ஏழு நாட்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! சாஸ்திரப்படி அந்த ஒரு நாள் என்பது சூரிய உதயம்முதல் அடுத்தநாள் சூரிய உதயம்வரையிலான 24 மணி அல்லது 60 நாழிகைகள் கொண்டதாகும். இந்த ஏழு நாட்களில் புதன், வியாழன், வெள்ளி முதல்தர சுபதினங்களாகக் கருதப்படுகின்றன. அடுத்த தர நாட்களாக ஞாயிறு, திங்கட்கிழமைகளும்; அதற்கும் அடுத்த தரமாக செவ்வாய், சனிக்கிழமைகளும் கருதப்படுகின்றன.

இனி நேரத்திற்கு வருவோம். இந்த நேரமானது ஆங்கிலத்தில் "ஹவர்' என்றும், வடமொழியில் "ஹோரை' என்றும், தமிழில் "ஓரை' என்றும் பெயர் பெறுகிறது. ஒரு மணிநேரம் அல்லது இரண்டரை நாழிகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாட்களை ஒட்டி, நவகிரகங்களில் ராகு- கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஒவ்வொரு மணி நேரத்தை ஆட்சி அல்லது ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கிரகம் என்றபடி ஏழு நாட்களும் பின்வருமாறு அமைகின்றன.

dd

ஞாயிற்றுக்கிழமை- சூரியன்;

Advertisment

திங்கட்கிழமை- சந்திரன்;

செவ்வாய்க்கிழமை- செவ்வாய்;

புதன்கிழமை- புதன்;

Advertisment

வியாழக்கிழமை- குரு;

வெள்ளிக்கிழமை- சுக்கிரன்;

சனிக்கிழமை- சனி.

முதல் ஓரையானது அந்த தின கிரகத்தை யொட்டியே அமையும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் ஓரை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை சூரியஹோரை; 7.00 மணிமுதல் 8.00 மணிவரை சுக்கிர ஓரை; 8.00-9.00 புதன் ஓரை; 9.00- 10.00 சந்திர ஓரை; 10.00-11.00 சனி ஓரை; 11.00-12.00 குரு ஓரை; 12.00-1.00 செவ்வாய் ஓரை. பின்னர்வரும் ஒவ்வொரு மணி நேரமும் சூரிய ஓரையிலிருந்து ஆரம்பித்து செவ்வாய் ஓரை வரையிலும் அதே வரிசைப்படி அமையும். திங்கட் கிழமை என்றால் காலை 6.00-7.00 மணிவரை சந்திர ஓரை என்று ஆரம்பித்து தொடர்ச்சி யாக சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன் என்று ஓரைகள் வரிசையாக வரும். இவ்வாறு ஒவ்வொரு நாளுக்குரிய ஓரைகளை (நேரத்தை) கிரக வரிசைப்படி தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஓரைகள் சுப ஓரைகள், அசுப ஓரைகள் என்று இருவகையாகப் பிரிக்கப் படுகின்றன. சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகியன சுப ஓரைகளாகவும்; சூரியன், செவ்வாய், சனி ஓரைகள் அசுப ஓரை களாகவும் கருதப்பட்டு தனித்தனியாகப் பலன்கள் கூறப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து எந்தெந்த ஓரைகளில் என்னென்ன செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி செயல்பட்டால் வெற்றிகள் உறுதி என்றும் நம்பப்படுகிறது. அவற்றைத் தனித்தனியே பார்க்கலாம்.

சூரிய ஓரை: மருந்துண்ணுதல், பயணம் செய்தல், மேலோரைக் காணல், உயில் எழுதுதல், சிபாரிசு செய்தல் போன்ற காரியங்கள். சுபகாரியங்கள் தவிர்க்கப்படும்.

சந்திர ஓரை: புதுக்கடை, வியாபாரம் தொடங்குதல், புது நகை வாங்குதல், வெளிநாடு புறப்படுதல். தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்கப்படும்.

செவ்வாய் ஓரை: மருத்துவப்பணிகள், அறுவைசிகிச்சை செய்துகொள்ளல், ஆயுதங்கள் செய்தல் போன்றவை. சுபகாரி யங்கள் தவிர்க்கப்படுவதுடன், அநாவசியப் பேச்சையும் குறைத்தல் அவசியம்.

புதன் ஓரை: புதுக்கணக்கு தொடங்குதல், நிலம் வாங்குதல், கலைக்கல்வி பயிலுதல், வியாபாரம் தொடங்குதல் ஆகிய சுபகாரியங்கள்.

குரு ஓரை: சகலவிதமான சுபகாரியங் களுக்கு ஏற்ற நேரம். அனைத்தும் வெற்றி களைத் தேடித்தரும். முகூர்த்த நேரம் அமைவது மிகவும் உத்தமமானது. நகைக் கடை, பெரிய தொழில்கள் துவங்கலாம்.

சுக்கிர ஓரை: திருமணம் தொடர்பான செயல்கள் தொடங்குதல், சாந்தி முகூர்த்தம் குறித்தல், ஆடை, ஆபரணம் அணிதல், புதிய வீடு, வாகனம் வாங்குதல், விருந்தளித்தல் போன்றவை.

சனி ஓரை: வீட்டு மனை வாங்க- விற்க ஏற்பாடு செய்தல், இரும்புப் பொருள் வாங்குதல் போன்றவை. சுபகாரியங்கள், பயணம், மருத்துவமனை செல்லல், அறுவை சிகிச்சை தவிர்த்தல் நல்லது.

உதாரண விளக்கம்:

அன்பர் ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியதாயிற்று. சாஸ்திர சம்பிரதாய நம்பிக்கை கொண்டவர், ஆலோசனை கேட்டார். அவரது பிறவி எண் கிரகத்திற்கேற்ப புதன்கிழமையும், அறுவை சிகிச்சை செய்துகொள்ள செவ்வாய் ஓரையான 10.00 மணிமுதல் 11.00 மணிவரை யிலும் பரிந்துரை செய்யப்பட்டது. இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து உடல்நலம் தேறி மகிழ்ச்சியாக உள்ளார்.

செல்: 74485 89113