சென்னை மாம்பலத்திலுள்ள எனது அலுவலகத்திற்கு ஒரு அன்பர் ஜீவநாடியில் பலன்கேட்க வந்திருந்தார். மிகவும் படபடப்பாக இருந்த அவர், நான் கேட்பதற்கு முன்பே எதற்காக வந்தார் என்னும் விஷயத்தைக் கூறத் தொடங்கினார்.
"ஐயா, எனக்கு இரண்டு மகள்கள். ஆண் வாரிசில்லை. இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இளைய மகள் ஒருவனைக் காதலித்து, அவனைத் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள்.
நாங்கள் அவனைப்பற்றி விசாரித்த போது, பலவகையிலும் ஒழுக்கக்கேடானவன் என்பதை அறிந்துகொண்டோம்.
ஆனால் என் மகள், "திருமணம் செய்து வைக்காவிட்டால் அவனுடன் ஓடிப் போய்விடுவேன்' என்று எங்களிடமே தைரியமாகக் கூறுகிறாள். இதனால் நிம்மதியிழந்து தவிக்கிறோம். அவளது திருமண நிலையையும், எதிர்கால வாழ்வைப் பற்றியும் அறிந்துகொள்ளவே வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் எழுத்து வடிவில் தோன்றி அகத்தியர் பதில்கூறத் தொடங்கினார்.
"இவன் மகளின் காதல் நிறைவேறாது.
காதலனுடன் திருமணம் நடக்காது. இவன் மகளின் காதல்நிகழ்வு உடல் கவர்ச்சியால் ஏற்பட்டது. உடல்சுகம், பொருளாசை, பொழுது போக்கு, மோகத்தைத் தீர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றையே இவர்கள் காதல் என்று எண்ணிக்கொள்கிறார்கள். இவன் மகளது காதலன் உண்மையான அன்புடையவன் அல்ல.
பல பெண்களிடம் பழக்கமுடையவன்.
அவனுக்குப் பெண்கள் ஒரு பொழுதுபோக்குப் பொருள். உடல் உணர்ச்சிகளுக்கு வடிகால்.
இவன் மகளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி பழகிவருகிறான். ஆனால் அவனே மனம்மாறி இவன் மகளைவிட்டு விலகிவிடுவான்'' என்று கூறி, இவர்கள் காதல் நிகழ்வுகளில் ஈடுபட காரணங்களையும் கூறினார். மேலும் மகள் மனமாற்றமடைய- அவன் நினைவு அகல- காதலன் இவளைவிட்டுப் பிரிந்துசெல்ல சில நிவர்த்தி முறைகளையும் கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.
இவற்றையெல்லாம் கேட்ட பெண்ணின் தந்தை மனக்கவலை நீங்கி மனக்களிப்புடன் விடைபெற்றுச் சென்றார்.
இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்கள் செய்துவைக்கும் திருமணங்களுக்கு இணை யாக காதல் திருமணங்களும் நடக்கின்றன. ஆண் நண்பர்- பெண் நண்பர், காதலன்- காதலி என்று சொல்லிக்கொள்வதை இளைய தலைமுறையினர் பலர் பெருமையாக எண்ணிக்கொள்கின்றனர். காதலிக்கும் அனைவரும் திருமணம் செய்துகொள்வதில்லை. காதல் வலையில் சிக்கிக்கொள்பவர்கள் யார்? அதில் வெற்றிபெறுபவர் யார்- தோல்வி யடைபவர் யார் என்பது குறித்து சில கிரக நிலைகளை இங்கு காணலாம்.
பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் என்னும் கவர்ச்சி உணர்வை உருவாக் கும் கிரகம் புதனாகும். காதல் வலையில் சிக்கவைக்கும் கிரகம் கேதுவாகும்.
ஒரு ஆண் அல்லது பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில், புதன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் அல்லது 2, 6, 10-ஆவது ராசிகளில் கேது இருந்தால், அவர் காதல் நிகழ்வுகளில் ஈடுபடுவார்.
ஜாதகத்தில் புதன் வக்ரம்பெற்று, அதற்கு 4, 8, 12-ஆவது ராசிகளில் கேது இருந்தால், ஜாதகர் காதல் வலையில் சிக்குவார்.
புதன் பரிவர்த்தனை அடைந்திருந்தாலும் அல்லது புதனின் ஆட்சி வீடுகளான மிதுனம், கன்னியிலிருந்து எண்ணும்போது அதற்கு 1, 5, 9- 2, 6, 10-ஆவது ராசிகளில் கேது இருந்தா லும், ஆண்- பெண் யாராக இருந்தாலும் காதல் நிகழ்வுகளில் ஈடுபட்டுவிடுவார்கள்.
புதன் வக்ரம்பெற்று தனது ஆட்சி வீடு களான மிதுனம் அல்லது கன்னியில் இருந்தால், அதிலிருந்து எண்ணும்போது 4, 8, 12-ஆவது ராசிகளில் கேது இருந்தால் காதல்வலையில் சிக்கிக்கொள்வார்கள்.
புதன், கேது இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் குருவும் சுக்கிரனும் இருந்தால், காதலில் வெற்றியடைந்து திருமணம் செய்துகொள்வார்கள்.
ஜாதகத்தில் புதன், கேது கிரகங்களுக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் செவ்வாய் இருந்தால் காதலில் தோல்வி உண்டாகும். திருமணம் புரிந் தாலும் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகிவிடும்.
புதன், கேது இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சனி இருந்தால், காதல் வெற்றியடைவதில் தாமதம் ஏற்படும்.
புதன், கேது இருக்கும் ராசிக்கு 1, 5, 9- 2, 6, 10-ஆவது ராசிகளில் சந்திரன் இருந்தால் ஜாதகன்- ஜாதகி காதலித்து அவமானப்படு வார்கள். கெட்டபெயர் உருவாகும். காதலன் அல்லது காதலி யாராவது ஒருவருக்கு அடிக்கடி மனம் மாறும். பல குழப்பங்கள் உருவாகும். காதலில் தோல்வி, பிரிவு, நிம்மதிக்குறைவு உண்டாகிவிடும். யாராவது ஒருவர் மற்றவரை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிடுவார்.
புதன், கேது இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரன், சுக்கிரன் இருந்தால், இந்த ஜாதகர்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவு சுகத்தை அனுபவிப்பார்கள். காதலியானவள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைவாள். இதுபோன்ற கிரக அமைப் புள்ள ஆண்களுக்கு பல காதலிகள் இருக்கவும், பெண்களுக்கு பல காதலர்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. (சுபர் பார்வையைப் பொருத்து பலன் மாறுபடும்.) பிறப்பு ஜாதகத்தில் புதன், கேது இணைந் திருக்கும் ஆண்- பெண் இருபாலரில் பலருக்கு இளம்வயதிலேயே மோக உணர்வு கள் உண்டாகிவிடும். நட்பு, காதல் என்று கூறிக்கொண்டு, ஒருவருடன் ஒருவர் பழகி தங்கள் எதிர்கால வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாமல்- கௌரவத்தை இழந்து விடாமல், தன்னையறிந்து வாழ்க்கையை இனிமையானதாகவும், சமூகத்தில் மதிப்பு மிக்கதாகவும் மாற்றிக்கொள்வது அவரவர் பொறுப்பாகும்.
செல்: 99441 13267