உலகிலுள்ள அனைவரும் அதிக பணம் சம்பாதித்து, ஆடம்பரமாகவும் பணக்காரர் களாகவும் வாழ விரும்புகிறார்கள். ஒருவரு டைய பொருளாதார நிலைமையே இந்த சமூகத் தில் அவரை உயர்ந்தவராகவும் தாழ்ந்த வராகவும் சித்தரிக்கிறது. சமுதாய அங்கீகாரம் தரக்கூடிய பணத்தை சம்பாதிக்க நிறைய முதலீடும், முயற்சியும், கடின உழைப்பு தேவை என்று பொதுவாகக் கூறிவிடலாம். கடினமாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்குமென்று கூறுவது மிக எளிது. ஆனால் நடைமுறையில் அது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை. கடினமாக உழைப்பவர்கள் குறைந்தபட்ச பணத்தை சம்பாதிக்கிறார்கள். கடின உழைப்பின்றி இருப்பவர்கள் மிகப்பெரிய செல்வ வளத்துடன் வாழ்கிறார்கள். ஏன் சில நபர்களிடம் மட்டும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது? இன்னும் சிலருக்கோ பணமென்ற ஒன்று அவர்கள் கையில் கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் இருப்பது அதிர்ஷ்டம் மட்டுமே.
ஜனனகால ரீதியான அதிர்ஷ்டம் வீட்டு வாசல்கதவைத் தட்டும்போது குப்பைமேட்டில் இருப்பவர்கள்கூட குபேரானாகிவிடுகிறார்கள். இந்த நவீன யுகத்தில், உழைக்காமல் உட்கார்ந்த இடத்தில் அதிக முதலீடில்லாமல் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்யுமளவில் சம்பாதிக்கவே பலரும் விரும்புகிறார்கள். குறுகிய காலத்தில் அதிக வருமானத்தைப் பெற்றுத் தரும் தொழிலாகவும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணியாகவும் விளங்கும் பங்கு வர்த்தகம் அனைவராலும் விரும்பப் படும் எளிய வணிகமாகும். இந்த பங்கு வர்த்தகத்திற்கு ஜனனகால ஜாதகரீதியான அதிர்ஷ்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவராலும் விரும்பப்படும் பங்கு வர்த்தகம் தொடர்பான சில தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
பங்கு வர்த்தகம் என்றால் யூகத்தின் அடிப்படையில் செய்யும் வணிகமாகும். நிறைய கணக்குகள், புள்ளி விவரங்கள் , சந்தையின் தேவை, நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் போன்ற பல்வேறு காரணிகளைப் பற்றிய போதிய தெளிவு இருப்பவர்களே பங்குச் சந்தையில் ஈடுபட முடியும். பங்கு வர்த்தகம் செய்ய விரும்புபவர்கள் இதனை தனித்தோ, கூட்டாகவோ குறைந்த முதலீட் டிலோ, அதிக முதலீட்டிலோ செய்யலாம். இதை மூன்றாகப் பிரிக்கலாம். அவை:
1.நீண்டகாலப் பங்குப் பரிவர்த்தனை (Long term holdings).
2. குறுகியகாலப் பங்குப் பரிவர்த்தனை (Short term holding). ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி குறிப்பிட்ட காலம் வைத்திருந்து, சந்தையின் நிலவரத்திற்கேற்ப விற்பனை செய்வது.
3. அன்றாடப் பங்குப் பரிவர்த்தனை (Intraday). ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கிய அன்றே லாபத்திற்கோ நட்டத்திற்கோ விற்று பரிவர்த்தனையை முடித்தலாகும்.
ஒட்டுமொத்த பங்குச் சந்தையையும் ஆதிக்கம் செய்வது புதன் மற்றும் குரு கிரகம் என்றாலும், ஒவ்வொரு நிறுவனத்தின் பங்கும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கத்தில் செயல்படுகின்றன. எந்தெந்த கிரகம் எந்தெந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை இங்கு காணலாம்.
சூரியன்
அரசு, அரசு சார்ந்த நிறுவனத்தின் பங்கு கள், மருத்துவ மனையின் பங்குகள், ரத்தினங் கள், தங்கம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பங்குகள்.
சந்திரன்
F.M.C.G எனப்படும் அன்றாடத் தேவை களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், எண்ணெய், பால், மது வகைகள், குளிர்பானம், உணவு உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பங்குகள், போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகள் .
செவ்வாய்
கட்டுமானப் பொருட்கள், இயந்திரம், இரும்பு உற்பத்தி, மின்சார மோட்டார் உற்பத்தி, கட்டட நிறுவனங்களின் பங்குகள், காபி, தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள், இரயில்வே துறையின் பங்குகள், வாகன உற்பத்தி நிறுவனத் தின் பங்குகள்.
புதன்
கல்வி, பத்திரிகை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகள், வணிக நிறுவனங்களின் பங்குகள்.
குரு
வங்கிகள், நிதி நிறுவனத்தின் பங்குகள்.
சுக்கிரன்
உயர்ரக அழகு, ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனத்தின் பங்குகள், சினிமா, தொலைக்காட்சி, தொலைபேசி நிறுவனத்தின் பங்குகள்.
சனி
இரும்பு, உலோகம், விவசாயக் கருவிகள் உற்பத்தி நிறுவனத்தின் பங்குகள், நிலக்கரி, சுரங்கத்துறை சம்பந்தமான பொருட்கள்.
ராகு
தொலைக்காட்சி, வானொலி, செல்போன், எலக்ட்ரானிக்ஸ் பொருள் உற்பத்தி, இன்டர்நெட் சேவை நிறுவனத்தின் பங்குகள்.
கேது
தகவல் தொடர்பு நிறுவனத்தின் பங்குகள், கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பங்குகள், மருந்துப் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் பங்குகள்.
பங்குச் சந்தை ஆர்வம் பலருக்கு இருந்தாலும் குறிப்பிட்ட சில கிரக அமைப்பு இருப்பவர் களுக்கே பங்குச் சந்தை வணிகம் நன்மை தருவதாக அமைகிறது.
ஒரு ஜாதகத்தில் திரிகோணம் எனும் 1, 5, 9 ஆகிய லட்சுமி ஸ்தானங்களும், பணபர ஸ்தானம் எனும் 2, 5, 6, 8, 11 ஆகிய பாவகங் களும் பணம் வரும் வழிகள்.
ஒன்றாமிடம் எனும் லக்னம், லக்னாதிபதி கேந்திர, திரிகோண சம்பந்தம் பெறுவது ஜாதகரின் சிந்தனை மற்றும் செயல் திறனை மேம்படுத்தும்.
இரண்டாமிடம் தன வரவு, வாக்கு சாதுர்யம், உடலுழைப்பு இல்லாமல் மூளையைப் பயன்படுத்தி பேச்சின்மூலம் பணம் சேர்க்கும் வழியைச் சொல்கிறது. இரண்டாம் அதிபதி சுபர்களுக்கு மத்தியில் இருப்பதும், கேந்திரங்களில் இருப்பதும் திருப்தியான தன வரவைத் தரும். இந்த இடம் எந்த வகையில் செயல்பட்டாலும் சிறு தன வரவாவது இருந்துகொண்டே இருக்கும்.
ஐந்தாம் அதிபதி அல்லது ஐந்தில் நின்ற கிரகங்கள் யூகம், பங்குகள், வர்த்தகம் மற்றும் யோசனை, சிந்தனை, பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், உழைப்பில்லாத செல்வம், பலருக்கு திட்டங்கள் தீட்டிக் கொடுத்து சம்பாதிப்பது, யோசனை சொல்லி செல்வம் திரட்டுவதைக் குறிப்பிடுகிறது.
ஆறாமிடம் என்பது எதிரி ஸ்தானம் மட்டுமல்ல. அடுத்தவர்களின் பணத்தையும், ஐந்தாம் பாவகத்தின் இரண்டாம் பாவகம் என்பதால் வர்த்தகத்தால் வரும் வருமானத் தையும் குறிக்கும்.
எட்டாமிடம் என்பது மறைமுக பணவரவு, எதிர்பாராத லாபம், வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ், புதையல், பங்குச் சந்தை, பல வகைகளில் பொருள் குவிவதைக் கூறுமிடம்.
இரண்டாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் பார்வைத் தொடர்புண்டு. 2, 8-ஆம் இடங்களில் எந்த கிரகம் இருந்தாலும் தன் 7-ஆவது பார்வையால் பார்க்கும் இடத்தின்மூலம் மறைமுக வருமானத் தைப் பெற்றுத் தரும். எட்டாம் அதிபதி அல்லது எட்டில் நின்ற கிரகம் கேந்திர, திரிகோணாதிபதிகள் சம்பந்தம் பெற்று சுபத் தன்மையுடன் இயங்கினால் மட்டுமே பெரும் பணம் சாத்தியம்.
தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும் ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளின் சம்பந்தமானது பங்கு வர்த்தகக்தில் பெரும் பொருள் வரவைப் பெற்றுத்தரும்.
பதினொன்றாமிடம் தொழில், முத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயம், அதிர்ஷ்ட சொத்து, பினாமி சொத்து, பினாமி பணம், உழைக்காத வருமானம், வட்டி, ஷேர் மார்க்கெட், பங்குச் சந்தை, கட்டட வாடகைகள், புரோக்கர், கமிஷன் ஏஜென்சி என்று எத்தனையோ நூற்றுக்கணக்கான வகையில் சேரும் பெரும் செல்வம், பெரிய லாபங்கள், ஒரே நேரத்தில் வரும் பெரிய தொகைகள் போன்றவற்றைக் குறிக்கும். சுருக்கமாக, ஒரேநேரத்தில் வரும் பெரிய தொகைகளைக் குறிக்கும்.
மேலே கூறிய பல ஸ்தானங்களால் பணம் வரும் வாய்ப்பு இருந்தாலும், பங்குச் சந்தை லாபம் என்பது 2, 5, 6, 8, 11 ஆகிய தசா புக்தி அந்தர காலங்களில் மட்டுமே எளிதில் கிட்டும். அத்துடன் தன கிரகங்களான குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியோரின் அமர்வு முக்கியம். மிகக்குறிப்பாக பங்குச் சந்தை வருமானத்திற்கு ஐந்தாம் பாவகம், அதன் அதிபதி, பதினொன்றாம் பாகவம், அதன் அதிபதி மற்றும் குருபகவான் சேர்க்கை நல்ல பலனைத்தரும்.
பத்தாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தாலும், நான்காம் அதிபதி ஐந்தில் இருந்தாலும் பங்கு வணிகத்தில் ஈடுபட்டு சிலர் லட்ச லட்சமாக அல்லது கோடி கோடியாக சம்பாதிப்பார்கள்.
அத்துடன் ஜனன ஜாதகத்தில் வர்த்தக வியாபாரத்தைக் குறிக்கும் புதன்; பொன், பொருள் மற்றும் செல்வ வளத்தை அள்ளித் தரும் சுக்கிரன்; பணப் பரிவர்த்தனைக்குக் காரணமாக இருக்கும் குரு; சந்தை ஏற்ற- இறக் கம் மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறிக்கும் சந்திரன் சாதகமாக இருக்கவேண்டும். இந்த கிரகங்கள் லக்ன பாவர் சம்பந்தமில்லாமல், கிரக யுத்தத்தில் தோற்காமல், அஸ்தமனமடையாமல், அவயோகமாகாமல், திதி சூன்யம் அடையாமல், திதி சூன்யாதிபதி சாரம் பெறாமல் இருப்பது நல்லது.
பங்கு வர்த்தகம் செய்யும் பலர் பங்குச் சந்தை பற்றிய எந்த விஷயமும் தெரியாமல் ஈடுபடுகிறார் கள். இதற்கு ஜனனகால ஜாதகத்தில் உள்ள ராகுவின் நிலைப்பாடே காரணம். ராகு சம்பந்தம் இல்லாத ஒரு யூக வணிகம் இல்லை. கணப்பொழுதில் எதிர்பாராத லாபத்தையும், நட்டத்தையும் தருவது ராகுவே. சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தைக் கொடுத்து பேராசையை உருவாக்கி பெரிய முதலீட்டை ஊக்குவித்து நிலைகுலைய வைப்பது ராகுவே. சந்திரன், ராகு சம்பந்தம் உள்ளவர்கள் பேராசை கலந்த பய உணர்வால் ஏமாறுகிறார்கள். ராகு இல்லாமல் புதுமை இல்லை; மாயத்தோற்றம் இல்லை; ஏமாற்றம் இல்லை.
ஒரு குறிப்பிட்ட நாளில் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கை வாங்கவேண்டும் என்ற எண்ணம் உதயமாகும். அன்று அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கின் விலை அதிகமாக உயரும். மேலும் ஒரு குறிப்பிட்ட நாளில் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கை விற்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
அன்று அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கின் விலை வீழ்ச்சியடையும். இது போன்ற மாற்றத்தை ஏற்படுத்துவது கோட்சார கிரகங்களே. பங்கு வணிக லாபத்தை நிர்ணயம் செய்வதில் ஜனனகால ஜாதகத்தைவிட கோட்சார கிரகங்களின் வலிமையும் மிக அதிகம்.
பங்குச் சந்தையில் ஏறுமுகப் போக்கிற்கான கிரக நிலைகள்:
கோட்சார சூரியனுக்கு இயற்கை சுப கிரகங்களின் சம்பந்தம் ஏற்படுதல்.
கோட்சார சூரியனுக்கு 4-ல் குரு அல்லது சந்திரன் நிற்பது.
கோட்சார சூரியனுக்கு 2, 12-ல் புதன் நிற்பது.
கோட்சாரத்தில் சூரியனுக்கு 11-ல் சுக்கிரன் நிற்பது.
கோட்சாரத்தில் சூரியனுக்கு 2-ல் சனி நிற்பது.
கோட்சாரத்தில் புதனுக்கு 2, 3, 11, 12-ல் சுக்கிரன் நிற்பது.
ரிஷபத்தில் சுக்கிரன் நிற்பது.
மேஷ, விருச்சிகத்தில் செவ்வாய் நிற்பது.
கோட்சாரத்தில் புதனும் குருவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் சஞ்சரிக்கும் காலம்.
கோட்சாரத்தில் புதனும் ராகுவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் சஞ்சரிக்கும் காலம்.
கோட்சாரத்தில் சுக்கிரனும் குருவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் சஞ்சரிக்கும் காலம்.
கோட்சாரத்தில் சுக்கிரனும் ராகுவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் சஞ்சரிக்கும் காலம்.
கோட்சாரத்தில் சனி- சுக்கிரன், சனி- புதன் சேர்க்கை ஏற்படும் காலம்.
பங்குச்சந்தையில் இறங்குமுகப் போக்கிற்கான கிரக நிலைகள்:
கோட்சார சூரியனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அல்லது சனி நிற்பது.
கோட்சார சூரியனுக்கு 1, 2, 12-ல் ராகு நிற்பது.
கோட்சார புதனும், சுக்கிரனும் ஒரே ராசியில் நிற்பது.
கோட்சார புதனும், கேதுவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் நிற்பது.
கோட்சார சுக்கிரனும், கேதுவும் ஒரே ராசியில் அல்லது ஒன்றுக்கொன்று திரிகோணத்தில் நிற்பது.
சுக்கிரன், புதன் நீசம், அஸ்தமனமாகும் காலம்.
பெரும்பாலும் நமது இந்தியாவில் பலர் பங்கு வணிகம் சூதாட்டம் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதார மாற்றத்தை நிர்ணயிப்பதில் பங்குச் சந்தை முக்கியப் பங்கு வகிப்பதால் பங்கு வணிகமும் சிறப் பான ஒரு தொழில் என்பதில் எந்த ஐயமுமில்லை. அதனால் ஜனனகால ஜாதகத் தில் ஆழ்மனம், ஆழ்ந்த சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாமிடம் வலிமையாக இருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம். அன்றாட வணிகத்தில் ஈடுபடும்முன் அன்றைய கோட்சார கிரக நிலை, சாதகமான ஹோரை மற்றும் ஜாதகரின் பட்சியின் நிலையறிந்து செயல்படுபவர்களுக்கு அமோக லாபம் உண்டு.