ராஹமிஹிரர், "பிருஹத் சம்ஹிதை' என்னும் ஓர் அற்புத ஜோதிட நூலை எழுதினார். அதில், வாஸ்து சாஸ்திரத்தின் ஆதிகுருவே பிரம்மாதான் என்கிறார். இவரை விஸ்வகர்மா, கல்ப பிரஜாபதி என்றும் "மேதினகோச நிகண்டு' கூறுகிறது.

விஸ்வகர்மாவை தேவசிற்பி என்றும், மகரிஷி மயனை அசுரசிற்பி, தைத்தியானம் சிற்பி என்றும் "சப்த கல்த்ருமம்' என்னும் வட மொழி அகராதி- நூல்களில் குறிப்புகளைக் காணலாம்.

vv

Advertisment

ஆதியில் வானியல் வேதவாஸ்து சாஸ்திரத்தை பதினெண் மகரிஷிகள் அருளினர் என்ற கருத்தும் ஆழமாக நிலவுகிறது. அக்கால சுவடிகளை ஆராய்கிறபோது, பதினெண் மகரிஷிகளின் பெயர்களில் சில மாறுபடுகின்றன. மேலும் ஒருவர் பெயரில், பலர் பின்னாளில் வாழ்ந்தும் இருக்கின்றனர்.

எனவே வாசகர்கள் இது பற்றிய குழப்பம் கொள்ளாமல், கருத்துகளை மட்டும் மேலே படியுங்கள்.

1. விஸ்வகர்மா. 2. மயன். 3. நந்தீசர். 4. பிருகு.

5. அத்திரி. 6. நாரதர். 7. நக்னசித். 8. விசாலா க்ஷன். 9. புரந்தரன். 10. பிரம்மா. 11.குமாரன்.

12. சௌனகர். 13. கர்கர். 14. வசிஷ்டர். 15. வாஸு தேவர். 6. அனிருத்தன். 17.சுக்கிராச்சாரியார். 18. பிருஹஸ்பதி.

மேற்கண்ட மகரிஷிகள் அரும்பாடுபட்டு அமைத்துத் தந்த வாஸ்துக் கலையை- பாதையை, பின்னர் வந்த வாஸ்து ஆசான்கள் இராஜபாட்டையாக மாற்றி ஓலைச் சுவடிகளில் எழுதினர். அவர்களின் பணியைப் பாராட்டுவோம். தலை வணங்குவோம்!

சிவபெருமானுக்கு ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்று ஐந்து முகங்கள் உண்டு.

அதுபோல், விஸ்வகர்மாவுக்கும் ஐந்து முகங்கள் உண்டு. கிழக்கு (வெண்மை), தெற்கு (கறுப்பு), மேற்கு (சிவப்பு), வடக்கு (மஞ்சள்), ஈசானம் (பச்சை) என்னும் ஐந்து திசைகளில் ஐந்து முகங்கள்கொண்டு, ஐந்து வண்ணங்களுடன், விஸ்வகர்மா சடாமுடியுடன் திகழ்கிறார்.

ஒளிமிக்கதாக விளங்கும் சிவனின் கண்கள் போல், விஸ்வகர்மாவுக்கும் கண்கள் ஈரைந்தா கும். இவர் பாம்புத் தோலைத் தோடுகளாகவும், பாம்பினைப் பூணூலாகவும், சம்புநாதம் என்று கூறப்படும் பொன்னாலான ஆடை யையும் அணிந்தவர்.

தன் பத்துக் கைகளில் உருத்திராட்ச மாலை, மான், பாம்பு, சூலம், வில், உடுக்கை, வீணை, அம்பு, சங்கு, சக்கரம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்திருக்கும் விஸ்வகர்மா ஆதி குருவாகத் திகழ்கிறார்.

பிரம்மா- படைக்கும் தொழிலையும், விஷ்ணு- காக்கும் தொழிலையும், சிவன்- அழிக்கும் தொழிலையும் ஏற்றனர். சிருஷ்டி கர்த்தாவான, பிரம்மா நான்கு திசைகளையும் நோக்குவதால், பிரம்மாவுக்கு நான்கு முகங்கள் உண்டு.

இந்திரன் திசையாகிய பிரம்மாவின் கிழக்கு முகத்திற்கு "விஸ்வபு' என்று பெயர்.

விஸ்வபு முகத்திலிருந்து ஆதி விஸ்வ கர்மாக்கள் உற்பத்தியானார்கள். ஆதி விஸ்வ கர்மா, மகாவிஷ்ணுவின் மகளை மணந்து, "ஸ்தபதி' என்னும் ஆண் மகவைப் பெற்றார்.

எமன் திசையாகிய தெற்கு முகத்திற்கு "விசுவவிசு' என்று பெயர். விசுவவிசு முகத்திலிருந்து மயனாதியர்கள் உற்பத்தியானார்கள். மயனானவர் இந்திரன் மகளை மணந்து "சூத்திராகிராஹி' என்னும் ஆண் மகனையும், "மண்டோதரி' என்னும் பெண் மகளையும் பெற்றார். மண்டோதரி, இராவணனின் மனைவியானாள்.

வருணன் திசையாகிய மேற்கு முகத் திற்கு "விசுவபிரஷ்டா' என்று பெயர். விசுவ பிரஷ்டா முகத்திலிருந்து மனுவாதியர்கள் உற்பத்தியானார்கள். மனுவானவர் நளன் மகளை மணந்து "தட்சகன்' என்னும் ஆண் மகனைப் பெற்றார். நளன் வாஸ்துக் கலையில் வல்லவன்.

குபேர திசையாகிய வடக்கு முகத்திற்கு "விசுவம்' என்றுபெயர். விசுவம் முகத்திலிருந்து துவாஷ்டாதியர்கள் உற்பத்தியானார் கள். துவஷ்டா, குபேரன் மகளை மணந்து "வர்த்தகீ' என்னும் ஆண் மகனைப் பெற்றார்.

ஸ்ரீ விஸ்வகர்மாவின் கிழக்கு முகத்திலிருந்து ரிக் வேதம் தோன்றியது. தெற்கு முகத்திலிருந்து யஜுர் வேதம் தோன்றியது. மேற்கு முகத்திலிருந்து சாமவேதம் தோன்றியது. வடக்கு முகத்திலிருந்து அதர்வண வேதம் தோன்றியது.

விண்ணுலக அமரர்களின் இன்ப- இனிய உலகை இனிதே படைக்க, "விஸ்வ கர்மா' அழைக்கப்பட்டார். அதுபோல் அசுரர் களின் இன்ப உலகை இனிதே படைக்க- மாடமாளிகை, கூட கோபுரங்கள் யாவும் கட்ட "மயன்' அழைக்கப்பட்டார். அதனால் தான் விஸ்வ கர்மாவை தேவகுலசிற்பி என்றும், மயனை அசுரகுலசிற்பி என்றும் நம் முன்னோர் அழைத்தனர் போலும்.

செல்: 94431 46912