"ஒரு ஜோடிக்குத் திருமணம் செய்துவைத்தால் பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்த பலன் கிடைக்கும்' என்பது பெரியோர் வாக்கு. மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் மரங்களுக்கும் திருமணம் செய்துவைத்து பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவதும் உண்டு. ஆக, திருமணம் செய்து வைப்பது அல்லது திருமணம் செய்துவைக்க உதவுவது புண்ணியம். இன்றைய நிலையோ, திருமணப் பொருத்தம் மேலோட்டமாக அட்டவணையின்படி பார்க்கப்படுகிறது. சரியான முறையில் திருமணப் பொருத்தம் பார்த்தால் நல்ல திருமணங்கள் தடையில்லாமல் நடக்கும் என்பதே உண்மை.

Advertisment

செவ்வாய் தோஷம் என்ற பெயரில் சில திருமணங்கள் தடை செய்யப்படுகின்றன. ஜோதிடத்தில் கால, தேச, வர்த்தமானம் பார்க்காமல் பலன் சொன்னால் தவறாகப் போகும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம். விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பிரதேசங்கள் (தென்னிந்தியா), வடக்கே உள்ள பிரதேசங்கள் (வடஇந்தியா) என்று பிரித்துப்பார்த்துப் பலன் சொல்ல வேண்டும் என்ற ஜோதிடத்தின் அடிப்படை அறியாதவர்களால் வந்த குழப்பமே இது. (ஆதாரம்: அகத்தியர் மற்றும் மனுஸ்மிருதி).

murugan

ஜாதகக் கட்டத்தின் அமைப்பு தென்னிந்தியர்களுக்கும், வடஇந்தியர்களுக்கும் மாறும். பிரதேச ஆளும் கிரகங்களைக் குறிப்பிடும் ஜோதிடம், தென்னிந்தியாவின் ஆளும்கிரகம் செவ்வாய் என்றே குறிப்பிடுகிறது. செவ்வாயின் அம்சம் கொண்ட முருகன் வழிபாடு தென்னிந்தியாவில் மட்டுமே அதிக அளவில் உள்ளது.

"தான் நிற்கும் மரக்கிளையை தானே யாரும் வெட்டுவதில்லை' என்ற அடிப்படையில், ஒரு இடத்தின் ஆளும் கிரகம் அந்த பிரதேசத்தில் பிறப்பவர்களுக்கு தோஷம் தராது. ஆகவே, தென்னிந்தியாவில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷமில்லை.

நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் என்று பல பெயர்களில் பல திருமணங்கள் தடுக்கப்படுகின்றன.

காலசர்ப்ப யோகம்

1. ஆனந்த காலசர்ப்ப யோகம் (லக்னத்தில் ராகு; 7-ல் கேது).

2. குளிக காலசர்ப்ப யோகம் (2-ல் ராகு; 8-ல் கேது).

3. வாசுகி காலசர்ப்ப யோகம் (3-ல் ராகு; 9-ல் கேது).

4. சங்கல்ப காலசர்ப்ப யோகம் (4-ல் ராகு; 10-ல் கேது).

5. பத்ம காலசர்ப்ப யோகம் (5-ல் ராகு; 11-ல் கேது).

6. மஹாபத்ம காலசர்ப்ப யோகம் (6-ல் ராகு; 12-ல் கேது).

7. நாஸக காலசர்ப்ப யோகம் (7-ல் ராகு; லக்னத்தில் கேது).

8. கார்கோடக காலசர்ப்ப யோகம் (8-ல் ராகு; 2-ல் கேது).

9. சங்ஹக காலசர்ப்ப யோகம் (9-ல் ராகு; 3-ல் கேது).

10. படஹக காலசர்ப்ப யோகம் (10-ல் ராகு; 4-ல் கேது).

11. வைசாகம காலசர்ப்ப யோகம் (11-ல் ராகு; 5-ல் கேது).v 12. சேஷநாக காலசர்ப்ப யோகம் (12-ல் ராகு; 6-ல் கேது).

எல்லா காலசர்ப்ப யோகங்களும் (தோஷங்களும்) திருமணத்தைத் தடை செய்வதில்லை.

தினம்- ரஜ்ஜு- கணம் ஆகிய பொருத்தங்களே முக்கியம். தம்பதிகளின் மனம் ஒத்துப்போக வேண்டும் என்பதற்காகவே கணப்பொருத்தம் பார்க்க வேண்டியுள்ளது.

மிருகசீரிஷம், மகம், ஸ்வாதி, அனுஷ நட்சத்திரக்காரர்களுக்குப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம்.

திருமணத்தில் ஜாதகப் பொருத்தத்தைவிட திருமண முகூர்த்த நிர்ணயம் மிக முக்கியம். உதாரணமாக அபிஜித் முகூர்த்தத்தில் (சூரிய உதயாதி நாழிகையைப் பொருத்து உத்தேசமாக பகல் 11.36 முதல் நண்பகல் 12.24 வரை (புதன்கிழமை தவிர்த்து மற்ற கிழமைகளில்) திருமணம் செய்தால் ஜாதக தோஷங்கள் நீங்கும்.

இதுதவிர புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவற்றை லக்னம், கிரகங்கள் நிற்கும் ராசிகளை வைத்து மட்டும் சொல்வது சரியாகாது.

ஜாதகத்தின் கொடுப்பினை, ஜாதகம் பார்க்கும்போது உள்ள கிரக நிலைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். எல்லா பொருத்தங்களும் பொருந்த வேண்டுமென்று பார்க்காமல், முக்கியப் பொருத்தங்கள், ஆயுள் பாவம் ஆகியவற்றை மட்டும் பார்த்தால் எல்லா வீடுகளிலும் மங்கள மேளம் முழங்கும்.

செல்: 63819 58636