வகிரகங்களின் இயக்கமே உலகம் என்பதை நம் கண்ணிற்குப் புலப்படும் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியைக் கொண்டு உணரமுடியும். இவர்களின் ஒளியை ராகு அல்லது கேது மறைப்பதே கிரகணமாகும். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் நிகழும்.

சூரியனை ராகு மறைக் கும்போது ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் ஏற்படும். கேது சூரியனை மறைக்கும்போது கேது கிரகஸ்த சூரிய கிரகணம் நிகழும்.

சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் ஒரு பகுதி சூரியனை மட்டுமே மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம். சந்திரன்முழுமையாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.

சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து சூரியனின் விளிம்புப் பகுதியைச் சுற்றி நெருப்பு வளையம் தென்படும். சூரியனின் நடுப்பகுதி கறுப்பாகக் காட்சி தரும். கிரகணம் தெரியும் பகுதிகளில் வெளிச்சம் குறைந்து மாலைப்பொழுதுபோன்ற உணர்வைக் கொடுக்கும். இதைக் கங்கண சூரிய கிரகணம் எனவும் கூறலாம்.

Advertisment

solareclipse

சூரிய கிரகணம் 2020

சார்வரி வருடம், ஆனி மாதம் 7-ஆம் நாள் (21-6-2020) (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை யன்று மிருகசீரிடம் மற்றும் திருவாதிரை நட்சத்திரங்களில் ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் காலபுருஷ 3-ஆமிடமான மிதுன ராசியில் சம்பவிக்கப்போகிறது.

இந்தியாவில் தெரியும் இந்த சூரிய கிரகணம் 2020-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.

இந்தியாவில் காலை 9.15 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.03 மணிவரை நீடிக்கிறது.

தமிழ்நாட்டில், சென்னை சூரிய உதயப்படி காலை 10.21 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1. 41 மணிக்கு முடிகிறது.

கிரகணப் பலன்

பலவகையான தோஷங்கள் இருந்தாலும் கிரகண தோஷம் மனிதர்களுக்குப் பலவிதமான நெருடல்களைத் தந்துகொண்டேதான் இருக்கிறது. விண் வெளியிலுள்ள அனைத்துக் கோள்களும் சூரியனின் ஒளியைப் பெற்று இயங்குவதால், சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் மற்றும் அகச்சிவப்புக் கதிர்களே பூமிக்குப் பரிபூரண இயக்கத்தைத் தருகின்றன. சூரிய ஒளியை நிழல்கிரகங்களான ராகு-கேதுக்கள் மறைக்கும்போது பூமிக்குக் கிடைக்கும் ஒளிசக்தித் திறன் குறைகிறது.

சூரியன் மாபெரும் ஒளி கிரகம். ராகு மாபெரும் இருள் கிரகம். மாபெரும் ஒளிக்கும் மாபெரும் இருளுக்கும் நடக்கும் போராட்டம். சூரியன் எதையுமே சட்டப்பூர்வமாகச் செய்யும் அரச கிரகம். ராகுவோ தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய எந்தத் தவறையும் தயங்காமல் செய்யவைக்கும் சட்டத்தைத் தகர்க்கும் கிரகமாகும். சூரியன், ராகு சேர்க்கை மாபெரும் ஒளி கிரகமான சூரியனை வலுவிழக்கச் செய்துவிடும்.

ராகு-கேதுவைத் தவிர, அனைத்து கிரகங்களும் ராசிக் கட்டத்தில் கடிகார முள் சுற்றும் திசையில் சுற்றிவருகின்றன. சூரியன், சந்திரனைத் தவிர, அனைத்து கிரகங்களுக்கும் அதாவது- செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் வக்ரகதி உண்டு. வக்ர கிரகங்கள் ராகு-கேதுவுக்கு இணையான அசுபப் பலன் தரும் வல்லமை உண்டு.

கிரகணம் சம்பவிக்கும் மிதுன ராசியில் சூரியன், சந்திரன், புதன், ராகு ஆகிய நான்கு கிரகங்கள் நிற்கின்றன. மிதுன ராசியை மீனத்தில் நிற்கும் செவ்வாய் 4-ஆம் பார்வையாகப் பார்க்கிறது .தனுசில் நிற்கும் கேது 7-ஆம் பார்வையாகப் பார்க்கிறது. மேலும், அன்று குரு, சனி, புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களும் ராகு-கேதுவைப் போல் வக்ர கதியில் இயங்குகின்றன.

வக்ர கிரகங்கள் சுபப் பலனைத் தருவது அரிது. அத்துடன் சனியின் 3-ஆம் பார்வை செவ்வாய்க்கும், செவ்வாயின் 4-ஆம் பார்வை செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் மிதுன ராகுவுக்கும் இருக்கிறது. செவ்வாய் காலபுருஷ அஷ்டமாதிபதியின் பார்வை மிதுன ராகுவுக்கு இருப்பதால் இக்காலம் இந்த சூரிய கிரகணம் பூமிக்கு தோஷ காலமாகும். இதனால், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கும். திருமணத்தடை, கல்வித்தடை, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பில் பாதிப்பு, இயற்கைச் சீற்றங்களான புயல், மழை அபாயம், விபத்துகள், வன்முறைகள், நோய்த் தாக்கம், கூட்டு மரணமங்கள் போன்றவை அதிகரிக்க லாம். போலி ஆவணங்கள் அதிகமாக உருவாக்கப்படலாம்.

கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை இயன்றவரை வீட்டிலிருந்து குல, இஷ்ட தெய்வத்தை வழிபடுவது சிறப்பு.

குருமார்களிடம் தீட்சை பெறுவது மற்றும் உபதேசம் கேட்பதும் மிகச்சிறப்பு.

கிரகண காலத்தில் செய்யப்படும் ஜபம் மற்றும் மந்திர உச்சாடனத்திற்கு பன்மடங்கு பலன் உண்டு.

நியாயமான, நீண்டநாட்களாக நிறைவேறாத கோரிக்கை உடையவர்கள், ஜனனகால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் கிரகண நேரத்தில் நீராடி தியானம் , ஜபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தி அடையும்போது அடையமுடியாத வெற்றியே கிடையாது.

ஜனனகால ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் நாகப்பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய ராகு- கேது தோஷம் நிவர்த்தியாகும்.

கிரகண காலத்தில் சிவ வழிபாட்டாலும் மிகுதியான சுபப் பலனை அடையமுடியும்.

கிரகண நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறை பித்ரு சாபம், பித்ரு தோஷம் நீங்கும்.

பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

ஜனனகால ஜாதகத்தில் சூரியன், ராகு கிரகச் சேர்க்கையால் திருமணத்தடையை சந்திக்கும் கன்னிப்பெண்கள் உக்ர தெய்வங்களான காளி மற்றும் பிரத்யங்கரா தேவியை கிரகண நேரத்தில் வழிபட திருமணத்தடை அகலும்.

கிரகண காலத்தில், வீட்டில் வயது முதிர்ந்த பெரியவர்களின் நல்லாசி பெறுவது மற்றும் வயதானவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்போது குழந்தை பாக்கியமின்மை, திருமணத்தடை அகலும். நீண்டநாள் வறுமை, கடன் பிரச்சினை நீங்கி தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

செய்யக்கூடாதவை சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்கள் தடைப்பட்டு ராகு-கேதுவின் ஆதிக்கம் மிகுதியாக இருப்பதால்- நம் உடலின் எதிர்ப்பு சக்தி, ஜீரண சக்திகுறைவாக இருக்கும் என்பதால், கிரகண நேரங்களில் உணவு அருந்தக்கூடாது. 21-6-2020 அதிகாலை 5.00 மணிக்குள் உணவு அருந்த வேண்டும்.

கிரகண நேரத்தில் தூங்கக்கூடாது.

கிரகண தோஷம் கர்ப்பிணிப் பெண்களை அதிகம் பாதித்து, பிறக்கும் குழந்தைக்கு சர்ப்ப தோஷம் உண்டாகும் அல்லது கிரகண கதிர்வீச்சுகளால் குழந்தையின் உடலமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.எனவே, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது.

ஜனன ஜாதகத்தில் சூரியன், ராகு கிரகச் சேர்க்கையால் திருமணத் தடையை சந்திக்கும் கன்னிப்பெண்கள் உக்ர தெய்வங்களான காளி மற்றும் பிரத்யங்கரா தேவியை கிரகண நேரத்தில் வழிபட திருமணத்தடை அகலும்.

சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்க்கக் கூடாது.

உயிர் காக்கத் தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் இரண்டு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம் .

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்

1. ரோகிணி

2. மிருகசீரிடம்

3. சித்திரை

4. அவிட்டம்

5. புனர்பூசம்

6. திருவாதிரை

7. சுவாதி

8. சதயம்

பரிகாரம்

கிரகணம் முடிந்த பின்னர், வீட்டிலேயே கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளிக்கவேண்டும்.

இந்த கிரகணத்தின்போது பரிகார நட்சத்திரங்களான ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம், புனர்பூச நட்சத்திரக்காரர்கள் ராகுவின் தானியமான முழு கருப்பு உளுந்தை தானம் செய்தால் கிரகண தோஷம் நீங்கி சுபப் பலன் கிட்டும்.

வீட்டை சுத்தம் செய்து, இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, புதியதாக சமைத்த சூடான உணவை சாப்பிட வேண்டும்.

வெளியூர்ப் பயணம் தவிர்த்தல் நலம்.

செவ்வாயின் 4-ஆம் பார்வை ராகுவுக்கு இருப்பதால் கூட்டு மரணம், நோய்த் தாக்கம், விபத்து அதிகரிக்கும். பரிகாரம், மந்திரம் ஆகியவற்றைவிட தன்னம்பிக்கை, மன தைரியம் மிகுந்த பக்தியே நம்மைக் காக்கும்.

நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தங்கள் கடமை யைச் செய்யும்போது- நமக்குள் இருக்கும் உயிரே இறைவன் என்பதை உறுதியாக உணரும்போதுமரணபயம் அகலும்.

ஆத்மார்த்தப் பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.

கிரகணம் நடந்து கொண்டிருக்கும்போது காயத்ரி மந்திர ஜபம், ராம நாமப் பாராயணம், திருக்கோளறுப் பதிகம் பாராயணம் செய்யலாம் .

ராகு, காற்று ராசியான மிதுனத்தில் சஞ்சாரம் செய்வதால், பரிகாரங்கள் பாராயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். வீடும் நாடும் நலம்பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜபித்துவர அளவிடமுடியாத நன்மை உண்டாகும்.

"ஓம் ஸஹநாவவது ஸஹநௌ புனஸ்து ஸஹவீர்யம்

கரவாவஹை தேஜஸ்வி நாவதீ தமஸ்து மாவித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி'

செல்: 98652 20406