கூட்டுக் குடும்பங்கள் அருகி மெலிந்து, தனிக் குடித்தனம் எனும் நியூக்ளியர் குடும்பமாக மாறி விட்டது.
இந்த டிஜிட்டல் உலகில், முதுகில் சோலார் பேனல், காதில் ஹெட் ஃபோன், ஒரு கையில் ஆண்ட்ராய்ட் ஃபோன், இந்த கையில் டேப்லேட், வாயில் ஆம்லெட், காலில் கொஞ்சம் இடம் இருக்கிறது- அங்கே சின்னதாக ஒரு சோலார் பேனல் என நடக்கத் தொடங்க மக்கள் தயாராகி விட்டார்கள்.
ஃபோன் செய்தால் போதும்; வாயில் ஊட்டி விடும் நிறுவனங்கள், வீடு தேடிவரும் தடுப்பூசி... இப்படி நிறைய மாற்றங்கள் வந்தாலும், இன்னும் மனிதன் வாயால்தானே சாப்பிடுகிறான்... அது சரி.. உண்மையிலேயே சாப்பிடுகிறார்களா என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.
"காலையில எங்கே சாப்பிட நேரமிருக்கு' என்று பிள்ளையை ஒரு பள்ளிக்கூடத்தில் தள்ளிவிட்டு, கணவனும் மனைவியும் அலுவலகதிற்குப் போகிற அவசரத்தில் சாப்பாட்டை மறந்து, மதிய உணவை "வெந்தவரை போதும்; மீதத்தை ஆபிசில் ஓவனில் சூடுபடுத்திக்கொள்ளலாம்' என எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.
காலையில் உணவு, மிட் மார்னிங் உணவு, மதிய உணவுபின் மாலை உணவு என தொடர்ந்து இரவில் முடியவேண்டும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை உணவுண்பதால் ஆரோக்கியமான உடல்நலம் கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் நோயெதிர்ப்பு சக்தி தானே உடலில் அமைந்துவிடும். இதுதான் தமிழர்கள் முறை.
இதையே இன்றைய மருத்துவர்கள், ஆரோக்கிய மான வாழ்க்கைக்கு உணவை ஐந்து முறையாகப் பிரித்து உண்ணவேண்டும் என்று சொல்கிறார்கள்.
அதிலும் பாருங்கள்... இந்த வகையில்தான் இந்தப் பயிரை சாகுபடி செய்யவேண்டும் என்றும், எதைத் தவிர்க்கவேண்டும் என்றும் சொல்லிப் பழக்கியது தமிழர் மரபு. அதை இயற்கை நமக்காக அப்படி அமைத்துத் தந்திருக்கிறது.
உதாரணமாக, ஆச்சாரமான குடும்பங்களில், ஆடிமுதல் புரட்டாசிவரை கத்திரிக்காயைத் தவிர்ப் பார்கள். கத்திரிக்காய் ஆடிப் பட்டத்திற்கு ஏற்றதல்ல என்பதை விவசாய நண்பர்கள் சொல்லித் தருவார்கள்.
அறுசுவை உணவுக்கும் கிரகங்களின் ஆளுமை உண்டு. அதுவும் நமக்குப் பிரியமான சாப்பாடு என்றால் கேட்கவா வேண்டும். இந்த பிரியமான சாப்பாட்டை நமக்கு அடையாளம் காட்டுவது ஜாதகத்தி லுள்ள ஆறாமிடம்தான். "அட... ஆறில் இத்தனை இருக்கா?' என்று கேட்காதீர்கள். பாசனத்திற்குப் பயன்படும் நீரை "ஆறு' என்றுதான் சொல்வார்கள் ஆறாம் வீட்டில் சுக்கிரன் உள்ள ஜாதகர் பலவகையான உணவுகளை உட்கொள்வார். "வெரைட்டி' இருந்தால்தான் இவருக்கு சாப்பாடு இறங்கும். சனி இருந்தால் அவருக்கு போதுமான அளவு சாப்பாடும் கிடைக்காது அல்லது கிடைத்த சாப்பாட்டில் சத்தும் இருக்காது.
ஆறாமிடம் நீர் ராசிகளாக இருந்துவிட்டால் ஜாதகர் மதுப் பிரியராக இருப்பார். உடன் ராகு இருந்தால் போதும்; அவ்வளவுதான்! தினமும் அவரை "அந்த'க் கடையில் பார்க்கலாம்.
செவ்வாய் இருந்தால் தேவைக்கு அதிகமாக உணவை சாப்பிட்டுவிட்டு, மலைப்பாம்பாக நெளிவார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு சாப்பாடு- அதை அறிய இந்த ஆறாமிடம் தான். மன ஆரோக்கியத்திற்கு கடனில்லாத வாழ்க்கை. அந்த கடன்பற்றிச் சொல்வதும் இந்த ஆறாமிடமே. அமைதியான வாழ்க்கைக்கு எதிரிகள் இல்லாத சூழல்தான். அதையும் இந்த ஆறாமிடம்தான் குறிக்கிறது என்பது ஜோதிடக் குறிப்பு.
அதனால் அன்றாட வாழ்வில் ஜோதிடம் என்ற அடிப்படை சிந்தனை யைப் புரிந்து நடந்துகொண்டால் நிம்மதியான வாழ்க்கையை வாழமுடியும்.
முன்பெல்லாம், அய்யர் ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பார். அவர் மனைவி, "ஏன்னா... இன்னிக்கு என்ன சமைக்கட்டும்?'' என்று கேட்பார். அய்யர், பஞ்சாங்கத்தில் திதி, நட்சத்திரங்களைப் பார்த்து, நீர்த்தன்மை யுடைய அல்லது வெட்பத்தன்மையுடைய என, அறுசுவையில் எந்த சுவை அன்றைய நாள் ஆரோக்கியத்திற்கு ஏற்றதோ அதை சமைக்கச் சொல்வார். அவர்கள் எந்தத் தொற்று நோயுமில்லாமல் ஆரோக்கியமாகதான் இருந்தார்கள்.
ஆனால் இன்று, எந்த காய் மார்க்கெட்டில் விலை குறைவாக இருக்கிறதோ- அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற எந்தத் தன்மையுள்ள காயாக இருந்தாலும், அது எதிர்மறை விளைவுகளைத் தருவதாக இருந்தாலும்கூட அதை சமைத்துப் போடுகிறார்கள். இது ஆரோக்கியமற்றது மட்டுமல்ல; அன்றைய நாளுக்கு ஏற்புடையதாகவும் இல்லை என்பதால், நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது; நோய்த்தொற்றுகூட எளிதாகப் பரவுகிறது.
உடல் சக்திபெற உதவும் உணவுதான் உடலில் சேரும் சாப்பாடு. அதன் கூழானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து மற்றும் கழிவு என ஏழு இடங்களில் வடிகட்டி உயிர்வாழ உதவுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவரவரின் அன்றைய நாள் இருக்கவேண்டும்.
பசிக்காகவோ, ருசிக்காகவோ எதையாவது சாப்பிட்டு எப்படியோ வாழவேண்டுமா? நோயில்லாத வாழ்வே செல்வம் என்ற மனநிலையில் திருப்தியாக வாழவேண்டுமா என்பதை நாம்தானே முடிவுசெய்ய வேண்டும். ஆரோக்கியம் நம் கையில் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, அடுக்குமாடி வீட்டில் இருப்பவர்கள்கூட வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை தொட்டியில் வளர்க்கமுடியும்.
அடிப்படை ஜோதிடம் தெரிந்துகொண்டுவிட்டால் இன்றைய உணவு தயாரிப்புக்கு நாமே மெனு போட்டுவிடலாம். அப்புறமென்ன... நோய்த் தொற்றுக்கு சொல்லுங்கள்- குட் பை!
செல்: 94443 27172