மகாவிஷ்ணு, மச்சம் முதல் கிருஷ்ணாவதாரம் வரை அவதாரங்கள் எடுத்து, இந்த பூமியில் வாழ்ந்தார் என புராண, இதிகாசக் கதைகளில் கூறப்பட்டுள்ளன. இதில் மச்சம்முதல் நரசிம்மம் வரை பிராணிகள், மிருகங்களாகப் பிறந்தார். இந்த பூமியில் முதல் உயிரினம் நீரில் உருவாகி, பின் பரிணாம வளர்ச்சி பெற்று, மனித சரீர நிலையை அடைந்ததை இது உணர்த்துகிறது.
வாமன அவதாரம்முதல் கிருஷ்ணாவதாரம் வரை மனித உருவில் பிறந்தார். இதனால் ஒரு ஆன்மா உடல், மனம், அறிவு வளர்ச்சி பெற்ற நிலையை அறியமுடிகிறது. மகாவிஷ்ணுவின் ஆன்மாதான் பல அவதாரங்களை எடுத்துப் பிறந்தது என்பதையும், இதனால் "சரீரம் அழியும்; ஆன்மா அழியாது' என்றும், "ஒரு ஆன்மா பல பிறவிகள் எடுத்து இந்த பூமியில் பிறக்கும்; மறுபிறவி உண்டு' என்பதையும் அறியமுடிகிறது.
மகாவிஷ்ணு பல பிறவிகள் எடுத்து மற்றவர்களுக்கு நன்மைகளைச் செய்து காப் பாற்றினார். ஆனால் தன் சுயவாழ்க்கையில் ஏராளமான சிரமம், தடை களை அனுப வித்தார். இதற் குரிய உண்மைக் காரணத்தை ஜீவநாடியில் ஆசான் அகத் தியர் கூறிய விளக் கத்தினை ராமா வதார நிகழ்வுகள் மூலம் மிகச்சுருக்க மாகஅறிவோம்.
ராமாயண காவிய நாயகன் ராமர், ஒரு சக்கரவர்த்தியின் மகனாய்ப் பிறந்தும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவில்லை. பிறப்புமுதல் இறப்புவரை ஏதாவது ஒரு குறையுடனேயே வாழ்ந்தார். இதற்குக் காரணம் விதி அல்ல. ராமரின் வம்ச முன்னோர்களும் அவரும் முற்பிறவிகளில் செய்த வினைப் பயனே காரணம் என அறியமுடிகிறது.
தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாய்ப் பிறந்தும், ராமர் மன்னராகப் பதவி ஏற்கமுடியாமல் போனது ஏன்?
வாமன அவதாரத்தில், மகாபலிலி என்ற அரசனைக் கொன்றதும், பரசுராம அவதாரத்தில் சத்திரியவம்ச மன்னர்களைக் கொன்றதால் உண்டான பாவமும் சாபமும் இவர் மன்னராவதைத் தடுத்து, முறையாகக் கிடைக்கவேண்டிய பதவியை அடையமுடியாமல் செய்தது. மேலும் தந்தைவழி பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்க முடியாமல் தடுத்தது.
ராமரின்மீது அதிக பாசம்கொண்ட தசரதன், கைகேயியின் பேச்சை மறுக்கமுடியாமல் ராமரைக் காட்டிற்கு அனுப்பக் காரணம் என்ன?
ராமரின் முன்னோர்களில் ஒருவரான அரிச்சந்திரன், விசுவாமித்திரருக்குக் கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற தன் மனைவியையும் மகனையும் காசுக்காக விற்றார். ராணியாக வாழவேண்டிய சந்திரமதியும், இளவரசனாக வாழவேண்டிய லோகிதாசனும் அடிமைபோல் பிறர் ஆதரவில் சிரமப்பட்டு வாழ்ந்தனர். இதற்கு வினைப்பயனே காரணம்.
இந்த வம்ச சாபத் தொடர்ச்சி, கைகேயின் பேச்சைக்கேட்டு தசரதன் ராமரையும், அவர் மனைவி சீதையையும் காட்டிற்கு அனுப்பினான். ராமரும் தன் நாட்டுக் குடிமகன் ஒருவன்கூறிய வார்த்தையைக்கேட்டு, கர்ப்பிணியான தன் மனைவி சீதையைக் காட்டிற்கு அனுப்பினான். ராணியாக வாழவேண்டிய சீதையும், அரசகுமாரர்களான லவன், குசன் இருவரும் வான்மீகி முனிவர் ஆதரவில் கானகத்தில் வாழ்ந்தார்கள். இது வம்ச முன்னோர்களால் வந்த பாவம்.
ராமர்மீது பாசம்மிக்க கைகேயியின் மனம் மாறியது ஏன்? பெற்ற தாய் கோசலை தன் மகன் ராமனுக்காகப் பரிந்து பேசாததற்குக் காரணம் என்ன? கைகேயியின் வேலைக்காரி கூனி ராமனின்மீது வெறுப்பு கொண்டது எதனால்?
ராமவதாரத்திற்கு முந்தைய அவதாரமான பரசுராம அவதாரத்தில், தந்தையின் சொல்லைக்கேட்டு, பெற்ற தாயையும், அவளுக்கு அடைக்கலம் தந்த பெண்ணையும் பரசுராமன் வெட்டிக்கொன்றதால் உண்டான தாய் சாபமும், ஒரு பாமரப் பெண்ணின் சாபமும் அடுத்த பிறவியான ராமாவதாரத்தில் செயல்பட்டது. பணிப்பெண் கூனியின் பேச்சைக்கேட்டு, சிற்றன்னை ராமனைக் காட்டிற்கு அனுப்பினாள். தாய் சாபத் தாக்கத்தால் கோசலை ராமனுக்காகப் பரிந்து பேசவில்லை. மேலும் ராமர் தன் வாழ்க்கையில் கைகேயி, மந்தரை, தாடகை, சூர்ப்பனகை, மனைவி சீதை என பெண்களால்தான் அதிக பாதிப்பும் சிரமமும் அடைந்தார்.
ராமருக்கும் சீதைக்கும் திருமணத்தை, ராமரின் பெற்றோர்கள் செய்து வைக்கவில்லை. விசுவாமித்திரர் வழிகாட்டுதல்படி, சீதையின் சுயம்வரத்தில் கலந்துகொண்டு வில்லை ஒடித்து, தன் முற்பிறவி மனைவியான சீதையைத் திருமணம் செய்துகொண்டார். ராமர் தன் திருமணத்தைத் தானே செய்துகொண்டு, முற்பிறவியில் எவ்வளவுநாள் வாழமுடியாமல் விடுபட்டுப்போனதோ அந்த காலஅளவு மட்டும் வாழ்ந்து முடித்தவுடன் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தனர்; சீதையும் மறைந்தாள்.
ராமரின் முன்னோரான அரிச்சந்திரனிடமிருந்து அவனது மனைவி, மகனைப் பிரித்ததால், விசுவாமித்திரர் தனக்கு உண்டான பாவத்தை, அதே வம்சத்தில் பிறந்த ராமருக்கு சீதையை மணம் முடித்துவைத்ததன் மூலம் நிவர்த்தி செய்துகொண்டார்.
தசரத மன்னர் மரணம் அடையும் போது, ராமர் அருகில் இல்லை. முறைப்படி மகன் தந்தைக்குச் செய்யவேண்டிய கருமக் காரியங்களைச் செய்யவில்லை. இதுவும் ஒரு சாபத் தாக்கம்தான். பெற்றோரின் தாகம் தீர்க்க நீர் எடுக்க வந்த முனிகுமாரனை மிருகம் என நினைத்து தசரதன் அம்பெய்து கொன்றான். மகன் இறந்த சோகத்தால் சிரவணனின் பெற்றோர், தங்கள் இறப்பைப்போன்றே தசரதனும் தன் மகனைப் பிரிந்து, அந்த புத்திர சோகத்தால் மரணமடைய வேண்டும் என சாபமிட்டு மடிந்தனர். இந்த சாபத்தின் விளைவால் தரசதனும் ராமனைப் பிரிந்த சோகத்தால் மாண்டான்.
தசரத மன்னனுக்கு இன்னும் மூன்று மகன்கள் இருந்தபோதும், இதுபோன்ற முற்பிறவி பாவ- சாபங்களால் அவர்களுக்கு பெரிய பாதிப்பில்லை. ராமர் அனுபவித்த சிரமங்களை அவரின் தம்பிகள் அனுபவிக்கவில்லை.
இதன்மூலம், யார் ஒருவர் தன் முற்பிறவிகளில் தன் குடும்பத்து உறவுகளுக்கும், பிறருக்கும் தீமைகளைச் செய்தார்களோ, அதற்குரிய பலனை தனது அடுத்தடுத்த பிறவிகளில் அவரவரே அனுபவித்துத் தீர்க்கவேண்டும் என்பதே இயற்கை நிர்ணயித்த மாற்றமுடியாத விதி. இதன்படி தன் முந்தைய பிறவிகளில் செய்த வினைப்பதிவுகளுக்கு உண்டான பலனை ராமர் மட்டுமே அனுபவிக்க நேர்ந்தது. மற்ற சகோதரர்களுக்கு பாதிப்பில்லாமல் போனது.
ராமர் பட்ட சிரமங்களைத் தீர்க்க குலகுரு வசிட்டர், மற்ற ரிஷிகள், சகோதரர்கள், மற்ற அரசர்கள் என யாருமே உதவி செய்யவில்லை. தெய்வம், தேவதைகள், பரிகாரம், பூஜை, யாகங்களால் தீர்க்கமுடியவில்லை. எல்லாருக்கும் நன்மையும் உதவியும் செய்து காப்பாற்றிய ராமருக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற நிலைதான். ஆனால் அஷ்டமகா சக்திகளையும், சகல சித்திகளையும் பெற்ற சித்தரான அனுமனை அடைந்தபின், ராமருக்கு உண்டான அனைத்து சிரமங்களையும் அனுமன்தான் தீர்த்துவைத்தார். ராமர் வாழ்வில் சுகமடைந்தார்.
இளம்வயதில் எல்லாரின் அன்பையும் பெற்ற ராமரின் வாழ்க்கையில் திருமணத்திற்குப் பின்பே எல்லா சிரமங்களையும் அனுபவிக்க நேர்ந்தது. இந்த பூமியில் ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களின் திருமணத்திற்குப் பின்பே முற்பிறவி பாவ- சாப- புண்ணியப் பதிவுகள் செயல்பட்டு இல்லற வாழ்வில் உயர்வு- தாழ்வினை உண்டாக்கி வைக்கும்.
ராமரின் வாழ்வில் இதுபோன்று இன்னும் ஏராளமான நிகழ்வுகளை அறியலாம்.
மனிதர்கள் அனுபவிக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் உண்டு. காரணமில்லையேல் காரியமில்லை என்பதே ராமாயணம் நமக்குக்கூறும் உண்மையாகும். ஒரு மனிதன் இப்பிறவியில் எவ்வளவு நல்லவராக, பக்திமானாக, பரோபகாரியாக இருந்தாலும், அவரின் முன்வினைப் பதிவுகள் நன்மையானதாக இல்லை என்றால், எவ்வளவு பரிகாரம், பூஜை, யாகம், தான, தர்மங்களைச் செய்தாலும் பலன் கிட்டாமல் சிரமங்களை அனுபவித்தே வாழவேண்டும்.
ராமர் தன் முன்பிறவிகளிலும், ராமவதாரத்திலும் செய்த செயல்களுக்குரிய வினைகளை கிருஷ்ணாவதாரத்தில் எப்படி நிவர்த்திசெய்து தீர்த்தார் என்பதை அடுத்து அறிவோம்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 99441 13267