ஜீவநாடிப் பலன் கேட்க சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், சுமார் 26 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் வந்திருந்தனர். பிரசன்ன நாடி பார்த்தபோது பெண்ணின் பிரச்சினைக்காக வந்திருந்தனர் என்பதை அறியமுடிந்தது. ஜீவநாடி ஓலைக் கட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் அகத்தியர் பெருமான் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
""இவன் தன் மகளின் வாழ்க்கைபற்றி அறிந்துகொள்ள என்னை நாடி வந்துள்ளான். இந்த மகள் தொழிற்கல்வி படித்துவிட்டு ஒரு வெளிநாட்டு அலுவலகத்தில் பணிபுரிகிறாள்.
இவள் முன்பு பணிசெய்த இடத்தில் ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவன் வேற்றுமொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவன். இருவரும் ஒருவரையொருவர் நேசித்து, திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்கள். இந்த மகள் தாய்- தந்தையிடம் வந்து, தான் விரும்பும் ஆணுடன் திருமணம் செய்ய சம்மதம் தரவேண்டு மென்று கேட்டாள். ஆனால் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த மகளோ "அவனைத் தான் திருமணம் செய்துகொள்வேன். நீங்கள் சம்மதிக்கவில்லை என்றால் இனி வீட்டிற்கே வரமாட்டேன்' என்று கூறிச் சென்று விட்டாள்.
இவனும் இவன் மனைவியும், "நமக்கிருப் பதோ ஒரே மகள். அவள் விருப்பப்படியே சம்மதம் கொடுத்துவிடுவோம்' என்று முடிவு செய்து திருமணமும் நடத்திவைத்தார்கள். இந்த மகளுக்குத் திருமணம் நடந்துமுடிந்த ஒரு வருடத்திற்குள், அவளுக்கும் அவள் கணவனுக்கும் காதலித்தபோது இருந்த பாசமும் நேசமும் மாறி, வெறுப்பாகி, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவனைவிட்டுப் பிரிந்து தன் பணியையும் மாற்றிக்கொண்டு வந்து விட்டாள். இப்போது பெற்றோருடன்தான் வசித்துவருகிறாள்.
இவன் செய்த பாவம் இவனது மகளின் வாழ்வைக் கெடுத்து அவளை வாழமுடியாமல் தடுத்துவருகிறது. இவனுக்கு சுமார் எட்டு வயது இருக்கும்போது இவனது தந்தை இறந்துபோனான். தாயும் இவனும் நிராதரவாக நின்றார்கள். தந்தையின் சொத்து எதுவுமில்லை. தந்தைவழி உறவுகளால் உதவியுமில்லை. தினமும் இவனது தாய் கூலிவேலை செய்து வாழவேண்டிய நிலை.
இவனும் இவனது தாயும், தாயின் சகோதரர் ஊருக்குச் சென்று அவரது ஆதரவில் வாழ்ந்தார்கள். இவனது தாய்மாமன்கள் இவனைப் படிக்கவைத்து பட்டதாரி ஆக்கினார்கள். அதன்பின் இவனுக்கு அரசுப்பணி கிடைத்தது. தாய்மாமன் மகளை இவனுக்குத் திருமணம் செய்துவைக்க இவன் தாயும் தாய்மாமனும் விரும்பினார்கள். ஆனால் இவனோ தன்னைக் காப்பாற்றி வளர்த்த தாய்மாமன் ஆசையை நிறைவேற்றி நன்றிக்கடனைத் தீர்த்தானா?
இவன் பணிபுரியும் இடத்தில் இவனது இனத்தைச் சேர்ந்த மேலதிகாரி ஒருவன், தன் மகளை இவனுக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணி, பலவித ஆசை வார்த்தைகளைக் கூறி பணத்தாசை காட்டினான். இவனும் அந்த அதிகாரியின் மகளையே திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்கு இவனைப் பெற்ற தாய், வளர்த்த தாய்மாமன் வரவில்லை. திருமணத்திற்குப்பின் தாயைப் பிரிந்து வேற்றூர் சென்று வசித்தான். இவன் தாய், தாய்மாமன் உறவுகளை மறந்து, தன் மனைவிவழி உறவுகளையே உறவாகக்கொண்டு வாழ்ந்துவருகிறான். இவனது தாய் மரணமடைந்தபோது, அந்தச் செய்திகேட்டு அங்குசென்று தாய்க்கு மகன் செய்யவேண்டிய இறுதிக் கடன்களைச் செய்து வந்தான். பாசத்துடன் வளர்த்த தாய்மாமன் இறந்தபோது இவன் அங்கு செல்லவே இல்லை.
இவன் தன் பணியில் தவறான வழியில் செயல்பட்டு நிறைய பணம், வீடு, வாகனம், சொத்து என சேர்த்து வைத்திருக்கிறான்.
ஆனால் இவன் மனைவி, மகள் என இந்த மூன்று பேரும், எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதவர்கள்போல் நிம்மதி யின்றி வாழ்ந்துவருகின்றனர்.
இவன் தன்னைப் பெற்ற தாயின் வயதான காலத்தில் அன்னம், தண்ணீர் தந்து காப்பாற்றாமல் விட்டதால், பெற்ற தாயைக் கொன்றவனுக்கு சமமாகிறான். தாய் தனது மரணத் தறுவாயில் இவனுக்கு கைமண் வாரியிறைத்த சாபம் இப்போது இவனது மகள் வாழ்வைக் கெடுத்து நிற்கிறது. தாயின் சாபம் இவனது மனைவிக்கும் நோயைத் தந்து, உணவு சுகத்தைக் கெடுத்து ஆசைப்பட்டதை உண்ணமுடியாமல் செய்துவிட்டது.
தாய்மாமன் சொத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு, இறுதியில் அவனது மகளைத் திருமணம் செய்யாததை எண்ணி இவனது தாய்மாமன் மனம்வெறுத்து விட்ட சாபம், இவன் குடும்ப வாழ்விலும் மகளின் இல்லற வாழ்விலும் நிம்மதியைக் குலைக்கிறது. பெற்ற தந்தை செய்த பாவத்தின் பலனை இவனுக்கு மகளாகப் பிறந்ததால் இவள் அனுபவிக்கிறாள். இவள் வருங்கால வாழ்க்கை வளமாக அமைய நிவர்த்தி வழிமுறைகளைக் கூறுகிறேன்.
தாய்மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள இவன் மறுத்துவிட்டதால் அவளை வேறொருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார்கள். இப்போது அவளுக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு இவனே ஒரு மாப்பிள்ளையைத் தேடி, திருமணத்திற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் செய்து, ஒரு தந்தையைப்போலிருந்து நடத்திவைக்கவேண்டும். அவ்வாறு செய்துவைத்தால் அந்தப் பெண்ணை மணந்த கணவன்வழி உறவில், அந்தப் பெண்ணின் உதவியால் ஒருவன் இவன் மகளைத் திருமணம் செய்துகொள்வான். அந்தப் பெண்மூலம்தான் இவன் மகளுக்குத் திருமணம் நடந்து இனிவரும் வாழ்க்கை சிறப் பாக அமையும்.
இவ்வாறு செய்தால் இவன் தாய்மாமனுக்குப் பட்ட பணக்கடன், பாவக்கடன் தீரும். தாயின் ஆத்மாவும் தாய்மாமன் ஆத்மாவும் சாந்தியடைந்து சாபங்கள் நிவர்த்தியாகும். இந்த மகளின் இல்லற வாழ்விலும், இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளின் வாழ்விலும் தாய் சாபமும் தாய்மாமன் சாபமும் தொடராது; வம்சம் பாதிக்காது'' என்று கூறிய அகத்தியர் ஓலைச்சுவடியிலிருந்து மறைந்தார்.
செல்: 99441 13267