இராமரின் ஜாதகம் என ஜோதிடர்களால் கூறப்படும் ஜாதகம் இங்கு தரப்பட்டுள்ளது. இந்த ஜாதகத்தில், வேத ஜோதிடமுறையில் சூரியன், குரு, சனி, செவ்வாய், சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சம்பெற்றும், சந்திரன் தன் சொந்த வீடான கடகத்தில் ஆட்சிபெற்றும் அமைந்துள்ளன. இது மிக யோக ஜாதகம் என கூறுவார்கள். ஆனால், அயோத்தி மன்னனின் மகனாகப் பிறந்து, எந்தவொரு சுகத்தையும், யோகத்தையும் இராமர் அனுபவிக்கவில்லை. தன் வாழ்நாளில் சிரமங்களை மட்டுமே அனுபவித்தார் என்பதே இராமாயணம் கூறும் உண்மை.
இனி, இராமரின் ஜாத கத்தை, சித்தர்கள் கூறிய தமிழ்முறை ஜோதிடம் வழியில் பலன் அறிவோம். இம்முறையில் பலன் அறிய, லக்னம், ராசி, தசை, புக்தி, பாவம், பாவாதிபதிகள் என எதனையும் பார்க்கத் தேவையில்லை. ஒருவர் ஜாதகத்திலுள்ள கிரகங்களை உதாரணமாகக்கொண்டு, முற்பிறவி கர்ம வினைகளை அறிந்து, இப்பிறவி வாழ்க்கை நிலை கூறப் படுகின்றது.
அயோத்தி மன்னன் தசரதனுக்கு, பட்டத்திற்குரிய மூத்த மகனாக இராமன் பிறந்ததும். மணிமுடி தரிக்க முடியாமல் 14 ஆண்டு கள் காட்டிற்குச் செல்ல நேர்ந்தது. இந்த தோஷம் அவரின் முற்பிறவியில் செய்த செயல்களால் உண்டானது. இந்த தோஷம் உண்டாகக் காரணத்தையும், அது தரும் பலன்களையும் அறிவோம்.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் என்ற கிரகம், அவரின் தந்தை, மகனைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். ராகு என்ற கிரகம் அவர் பூர்வ ஜென் மத்தில் பிறருக்குச் செய்த தீமையைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். இந்த சூரியன், ராகு கிரகங்கள் ஜாதகத்தில் சம்பந்தம் பெற்றிருந்தால், அவர் பித்ரு, புத்திர தோஷமுடையவர் ஆவார்.
ஒருவரின் ஜாதகத்தில், சூரியன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 2-ஆவது ராசிகளில் ராகு இருந்தால் அவர் தோஷமுள்ளவர் ஆவார்.
சூரியன் + ராகு
இந்த தோஷமுள்ளவரின் தந்தைக்கு அற்பாயுள் அல்லது இவரின் மகனுக்கு அற்பாயுள் அல்லது தந்தையையும் மகனையும் பிரித்து வைக்கும். இவரின் பிறப்பிற்குப் பிறகு தந்தைக்கு ஏதாவது நோய் காட்டும் அல்லது தந்தை ஏதாவது சிரமத்திலேயே வாழ்வார். புத்திர சோகம் உண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், துஷ்ட சக்திகளால் பாதிப்புண்டாகும். ஜாதகருக்கு பூர்வீக சொத்துகளால் நன்மை இராது. தந்தைமூலம்- தந்தைவழி உறவுகள்மூலம் எந்த நன்மையும் கிடைக்காது. சொந்த இனத்து மக்களால் நன்மை இராது. தன்னைவிட கீழானவர்களால் துன்பம் உண்டாகும். மாற்று இனம், மாற்றுமொழி பேசுபவர்களால் சிறிது நன்மைகளை அடையக் கூடும்.
குடும்பத்தில் கஷ்டம் இருக்கும். அது தீர கடவுளை வழிபட்டுக் கொண்டிருப் பார்கள். ஆனால் கஷ்டம் எளிதில் தீராது. கோவில்களில் தெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல் பலிக்காது. பிறருக் காக செய்யும் செயல்களில் வெற்றியடையவார்கள். ஆனால் தன் வாழ்க்கை உயர்வுக்கு செய்யும் சொந்த காரியங்களில் அவ்வளவு சீக்கிரம் வெற்றி கிடைக்காது. ஒவ்வொரு செயலையும் சிரமப்பட்டேதான் செய்யவேண்டும்.
இளகிய மனமும், இரக்க குணமும் உள்ளவர்கள் என்பதால், பிறர் காரியத்தை தன் காரியம்போல் எடுத்துச்செய்து, பிறர் துன்பத்தைத் தீர்த்து வைப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எவரும் உதவி செய்யமாட்டார்கள். எவ்வளவு பணம், பொருள் சம்பாதித்த போதும் கையில் தங்காது. பணம் விரயமாகிக்கொண்டே இருக்கும். பூர்வீகத்தில் வாசம் செய்யமுடியாது. வேறிடம், வேற்றூர் சென்று வசிக்க நேரிடும்.
பெற்ற தந்தையாலும், மகனாலும் பெரிய நன்மை கிடைக்காது. பெற்ற தாய்- தந்தையை சோறு போட்டுக் காப்பாற்றமுடியாது. தந்தை இறக்கும்போது அருகில் இருக்கமுடியாது. குடும்ப உறவுகளால் ஒதுக்கப்படுவார்கள். உயர்ந்த இடத்தில், அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பு, பழக்கம் இருக்கும். ஆனால் அவர்களால் எந்த உதவியும் கிடைக்காது. நன்றி கெட்டவர்களையும், விசுவாசமில்லாதவர்களையுமே சந்திப்பார். நண்பர்களாலும் பெரிய உதவியை அடையமுடியாது. எல்லோரும் "இவரால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும்' என்று எண்ணித்தான் இவருடன் பழகுவார்கள். இவருக்கு உதவி செய்யவேண்டும் என்று யாரும் பழகமாட்டார்கள். சுயநலவாதிகள்தான் இவரை சூழ்ந்திருப்பார்கள். இதுபோன்று இன்னும் பல சிரமங்களை இந்த பித்ரு, புத்திர தோஷம் தந்து அனுபவிக்கச் செய்துவிடும்.
இராமரின் ஜாதகத்தில் சூரியன் (தந்தை) கிரகத்திற்கு 9-ஆவது ராசியில் ராகு (பாவம்) உள்ளது. இந்த இரு கிரகங்களும் ஒரே நட்சத்திர மண்டலத்தில் இணைவு பெற்றுள்ளன. இந்த இணைவு பித்ரு, புத்திர தோஷத்தை உண்டாக்கி, இராமர் வாழ்வில் பல துன்பங்களைத் தந்து அனுபவிக்கச் செய்தது. இராமர் 100 சதவிகிதம் இந்த தோஷம் பெற்ற ஜாதகர் ஆவார்.
இராமர் ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றிருந்தாலும், அந்த கிரகம் ராகுவுடன் சம்பந்தம் பெற்றதால், உச்ச சக்தி அடக்கப்பட்டு, சூரியன் நன்மைகளைச் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. சூரியன், ராகு சேர்க்கை கிரகண தோஷமாகும்.
வேதமுறை கணித ஜோதிடத்தில், ஒரு உச்ச கிரகத்தை மற்றொரு உச்ச கிரகம் பார்த்தால் நற்பலன் தராது என்று கூறுவார்கள். இராமர் ஜாதகத்தில் மேஷத்திலுள்ள சூரியனை, அதற்கு 7-ஆமிடமான துலாமில் உச்சம்பெற்ற சனி பார்ப்பதாலும், மகரத்திலுள்ள உச்சம்பெற்ற செவ்வாய் தனது 4-ஆம் பார்வையால், மேஷ சூரியனைப் பார்ப்பதாலும் நற்பலன் கிடைக்கவில்லை என கூறுவார்கள். ஆனால் எந்த ஒரு கிரகப் பார்வை இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருவர் ஜாதகத்தில் சூரியன், ராகு சம்பந்தம் இருந்தால் அவரின் வாழ்க்கைப் பலன் இதுதான்.
(தொடரும்)