"சும்மா இருந்தால் சோற்றுக்குக் கஷ்டம்; சோம்பல் வளர்ந்தால் ஏற்படும் நஷ்டம்' என்று சொல்வார்கள். இந்நிலை வராமலிருக்க நாம் ஏதாவது ஒரு வேலை செய்து பொருளீட்ட வேண்டும். சிலருக்கு வியாபாரம் செய்வதென்பது பிடித்தமானதாக இருக்கும். அதற்கு நல்ல வேலையாள் அமைவது அவசியமாகும்.

வியாபாரம் செய்யும் யோகம் அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. எனவே, வியாபாரம் செய்ய எண்ணுபவர்கள் தங்கள் ஜாதகத்தை பரிசீலித்துக்கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் புதனும் செவ்வாயும் லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களுள் ஏதேனும் ஒன்றில் பலம்பெற்று அமைந்து விட்டால், அந்த ஜாதகர் செய்யும் வியாபாரங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைத் தரும். இத்தகைய ஜாதகர்கள் எதார்த்தமாக லாபம் பெறுவர்.

vv

வியாபாரம் செய்வதற்கு நல்ல வேலையாள் அமைய வேண்டும் அல்லவா? ஒன்பதாம் வீட்டிற்குரிய கிரகம் 11-ஆமிடத்தில் அமையப் பெற்ற ஜாதகர் ஒரு முதலாளி யிடம் வேலை செய்வாரேயானால், அந்த ஜாதகரின் யோகம் முழுக்க முதலாளிக்குக் கிடைக்கும். இத்தகைய ஜாதக அமைப்புள்ளவர் சொந்தமாக வியாபாரம் செய்தால், ஆயுள் முழுவதும் மந்தமில்லாமல் நடக்கும்.

வியாபாரம் பெருகிடவும், யோகம் தரும் வேலையாள் அமைந்திடவும் நமக்குத் துணைநிற்கும் தெய்வங்கள் விநாயகப் பெருமானும் ஆஞ்சனேயரும் ஆவர். வியாபாரம் செய்பவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சனே யருக்கு நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். சஞ்சீவி மலையைத் தூக்கிவந்து பலரது உயிரைக்காத்த அனுமன் தன்னை நம்பியவர்களைக் கைவிடமாட்டார். வாடிக்கை யாளர்களை அதிகரித்து வியாபா ரத்தைப் பெருகச் செய்வார்.

தற்போதுள்ள சூழலில் சனிக்கிழமைதோறும் ஆலயம் சென்று ஆஞ்சனேயரை வழிபடுவது சிரமம்தான். எனவே, வெள்ளெருக்கு வேரில் செய்த விநாயகர் உருவத்தை வாங்கிவந்து பணப்பெட்டியில் வைத்து தினசரி வழிபடலாம். காலையில் வியாபாரத் தலத்தைத் திறந்தவுடன் விநாயகர் சிலையை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு வியாபாரம் பெருகிட வேண்டுமென மனதாரப் பிரார்த்தித்துக் கொள்ளவும். வியாபாரம் செழிப்பாக நடக்கும்.

- விநாயக ராமன்