சென்ற இதழ் தொடர்ச்சி...
அதிக உழைப்பையும் குறைந்த வருமானத் தையும் தரும் பொதுவான கிரக அமைப்புகள் நவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்றுசேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நிற்பது; அதிக கிரகங்கள் நீசம்பெறுவது; அதிக கிரகங்கள் உச்சம் பெறுவது; லக்னத் துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் இருப்பது; கேதுவுடன் நான்கு கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் மூன்று கிரகங்கள் சேர்ந்திருப்பது போன்ற அமைப்புகள் இருந்தால், வாழ்வில் கஷ்டம் தவிர, சுகம் அனுபவிக்கமுடியாத நிலையே உருவாகும். இவர்களுக்கு ஜாதகம் சொன்னால்கூட பலிதமாகாது.
கேதுவை நோக்கி எல்லா கிரகங்களும் சென்றுகொண்டிருந்தால், என்னதான் யோகமிருந்தாலும், கைகூடாமலே போகும். தக்கசமயத்தில் இவர்களது புத்தி உதவாது.
அமாவாசை திதியில் பிறந்து சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் ராகு அல்லது கேதுவுடன் சேர்க்கை பெறுவது; அதிக கிரகங்கள் ராகு- கேது நட்சத்திர சாரம் பெறுவது ஆகிய கிரக அமைப்புகள், அன்றாடத் தேவையை நிறைவுசெய்யமுடியாத நிலையையும், உணவிற்கே இல்லாத நிலையையும் தரும்.
அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இல்லாதவர்கள் தினமும் 1,008 முறை அல்லது குறைந்தது 108 முறை 'ஓம் நமோ நாராயணாய நமஹ' என்று கூறிவர, விதியால்- வினைப்பயனால் ஏற்படும் தாக்கம் வெகுவாகக் குறையும்.
லக்னத்திற்கு 2-ஆமிடத் திலோ, 5-ஆமிடத்திலோ சுபர்கள் இருந்தால், எளிமையான வேலையில் மிகுதியான பொருளாதாரமும், சொகுசு வாழ்க்கையும், அரசு பாராட்டும் கிடைக்கும்.
என் அனுபவத்தில், எந்த கிரகம் எப்படி இருந்தாலும் புதனும் சனியும் மட்டுமே- ஒருவர் சிறிய உழைப்பில் அதிக வருமானம் பெறுவதையும், அதிகம் உழைத்தும் குறைந்த ஊதியம் சம்பாதிப்பதையும் நிர்ணயம் செய்யும் கிரகங்களாகும். புதனும் சனியும் ஓரளவு வலிமையாக இருந்தாலே "இல்லை' என்ற நிலை இருக்காது.
புதன்
புதன் என்றால் புத்தி. ஒரு மனிதனின் அறிவிற்கும், ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக் கும் காரக கிரகம் என்பதால், புதன் வலிமை பெற்றவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் கண்டுபிடிக்கப்படப்போகும் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக் காரர்கள் இவர்களே. புதன் வலுப்பெற்றால் எந்த சூழ்நிலையிலும் தன் அறிவின்மூலம் வாழ்க்கையில் முன்னேறிவிடுவார்கள். காலத்தின் வேகத்திற்குத் தக்கவாறு சமயோசித மாக, சிந்தனையையும் செயல்பாடுகளையும் அறிந்து, எடுத்துச் சொல்லும் பக்குவம் உண்டு.
உலகியல் நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் போக்கும் உண்டு. வித்தியாசமான பேச்சு மற்றும் புத்தி சாதுரியத் தால் எதிராளியைத் தன்வசப்படுத்தும் வல்லமை புதனுக்குண்டு. மற்றவர்களின் மனநிலையை அறிந்து அதற்குத் தக்க வாறு தன் முடிவை மாற்றிக் கொள்வார்கள்; முடிவெடுப் பார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எத்தனை நண்பர்கள் இருந்தாலும் அவர்கள் தன்னிடமிருந்து பிரிந்துசெல்லாதவாறு தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். நண்பர்கள்மூலம் எல்லா நன்மை களையும் அடைவார்கள். நிபுணத்துவம் நிறைந் திருக்கும். சாதிக்கும் குணம்கொண்டவர்கள். எழுத்திலும் பேச்சிலும் வல்லவர்கள். மிக கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பவர்கள். மற்றவர்கள் செய்யும் தவறை உடனே தெரிந்து கொள்வதால், அதை சுட்டிக்காட்டி அந்த தவறை சரிசெய்ய வேண்டுமென்று அறிவுறுத்துவார்கள். உடல் உழைப்பு அதிகமின்றி, புத்தியை உபயோகபடுத்தும் தொழில் செய்பவர் கள். இனிமையாகப் பேசி மற்றவர்களை வசியபடுத்தும் ராஜ தந்திரியாக இருப் பார்கள்.
அடிக்கடி மாறும் குணம் கொண்டவர் கள். எதிரிகளை நேரடி யாக எதிர்க்காமல் உறவாடியே அழிப்ப வர்கள். சிரித்துப் பேசும் திறமையால் எவரையும் வெல்லும் சூட்சுமம் தெரிந்தவர் கள். ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் எடை போடும் ஆற்றல் உண்டு. எதையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமுடையவர். கல்வித் திறமை காரணமாக எங்குசென்றாலும் உயர்ந்த அந் தஸ்து கிடைக்கும். சுய உழைப்பினால் உயர்ந்து நிற்பவர்கள். அழுத்தமான மனதால் பிறரிடம் ரகசியத்தை வெளியிட விரும்பமாட்டார்கள். வியாபாரத் தந்திரம் நிறைந்தவர்கள். கல்லைக்கூட காசாக்குவார்கள். ஒரு கல்லை எறிந்தால் இரண்டு மாங்காய்கள் விழவேண்டும் என்பது இவர்களது கொள்கை.
இளமையுணர்வு, காதல், சாதிக்கும் வெறி, சுயநலம், இரட்டை வேடம், நடிப்பு, பிறரைப் புகழ்ந்து வேலைவாங்கும் திறன், மகா புத்தி சாலித்தனம், ஆழ்ந்த அறிவு நிரம்பியவர்கள். அறிவால்- தைரியத்தால் எதையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுவதில் வல்லவர்கள். பின்னர் வரக்கூடிய விஷயங்களை முன்பே அறிந்து, அதற்கான தீர்வை நோக்கி திட்டமிடுவார்கள். அரசியல்வாதிகளுக்கு ராஜதந்திரத்தை போதிக்கும் கிருஷ்ண பரமாத்மாவே புதன் பகவான்தான்.
பாவ கிரகங்களுடன் சேராமலிருந் தால் புதன் தனித்தன்மை யுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவுக்கு நிகரான சக்தியுண்டு. அதே நேரத்தில் புதன் இரட்டைத் தன்மை யுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்குத் தகுந்தாற்போல் தன் தன்மையை மாற்றி அசுபப் பலனும் தரும்.
தன் புத்தி சாதுர்யத் தால் உட்கார்ந்த இடத்திலிருந்து உலகத்தை தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, எளிமையாக சம்பாதிப்பவர்கள் புதன் வலிமை பெற்றவர்கள்.
பரிகாரம்
புதனை வலிமைப்படுத்த புதன்கிழமை சக்கரத்தாழ்வார் சந்நிதியை 108 முறை வலம்வர வேண்டும். அல்லது ஹயக்ரீவரை வழிபடலாம். விஷ்ணு சகஸ்ஹர நாமம் பாராயணம் செய்யலாம். வளர்பிறை ஏகாதசி யன்று கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்று அவல், பொரி, பாயசம் வைத்து நைவேத்தியம் செய்யவேண்டும்.
சனி
அரசர்முதல் ஆண்டிவரை சனி என்றால் அனைவருக்கும் பயம் வரும். காரணம், நன்மை- தீமை இரண்டையும் உறுதியாகவும் சரியாகவும் செய்யக்கூடிய கதிர்வீச்சுகளைத் தன்னுள் அடக்கியவர். சனி தசை, ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி ஆகிய கோட்சாரக் கோளாறுகளால், தனிமனித வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள்மூலம் வாழ்க்கைத் தத்துவத்தைப் புரியவைத்து, உலகியல் அனுபவத்தைப் பெறவைக்கக்கூடிய மிகப்பெரும் தனித்தன்மை சனி கிரகத்துக்கு உண்டு. அதுமட்டுமின்றி ஒருவரது ஆயுள், ஆரோக்கியம், உடலில் கால்சியம் சத்து, எலும்புகளின் வலிமை, கைகால் மூட்டுகள், மருத்துவ சிகிச்சைக்குக் கட்டுப்படாத நோய்கள் ஆகியவற்றை சனி குறிப்பிட்டுக் காட்டும். காரணம்தெரியாத தொழில்வகைச் சிக்கல்கள், ஒருவரது சகிப்புத் தன்மையை சோதிக்கும் தினசரி சோதனைக்களமாக அமைந்த தொழில், உத்தியோக சங்கடங்கள், மருத்துவ உலகிற்குத் தண்ணீர் காட்டும் கொடிய நோய்கள், தீராத, தீர்க்கமுடியாத துன்ப துயரங்கள் போன்ற அனைத்தும் சனியினால் வரக்கூடியவையாகும்.
காலபுருஷ 10-ஆமிடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்வார். சனிக்கு கர்மகாரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி, பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப நன்மை- தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவருக்கு சனியால் யோகப் பலன்கள் அனுபவிக்கவேண்டுமென்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.
தொழில் மற்றும் உத்தியோகத்திற்குக் காரகன் சனி என்பதால், சனியோடு சம்பந்தம் பெறும் கிரகங்களின் காரகத்துவத் தொழிலே ஜாதகருக்கு அமையும்.
சனியோடு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சம்பந்தம் பெற்றால், எந்த கிரகத்தின் தொழிலை ஜாதகர் செய்தால் மேன்மையடைய முடியுமென்ற சந்தேகம் தோன்றும். ஷட்பல நிர்ணயத்தில் எந்த கிரகம் வலிமைபெறுகிறது என்பதை நிர்ணயம் செய்யவேண்டும். வலுவான கிரகத்தின் காரகத்துவத் தொழில் ஜாதகரை இயக்கும். வலுவற்ற கிரகங்களின் காரகத்துவத் தொழில் உப தொழிலாக அமையலாம். சனியோடு எந்த கிரகமும் சம்பந்தம் பெறாதவர்கள் அடிமைத்தொழில் செய்ய நேரும்.
அதாவது 10-ஆமிடம், 10-ஆமதிபதி, 10-ஆமதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10-க்குடையவன் நின்ற ராசி, சனிக்கு 10-ஆமிடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முத-ல் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலைத் தீர்மானிக்கும்.
ஜனனகால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக்கு ஏற்பவே ஒருவருக்கு தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. சனியின் பலம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே பதவிகளை அடைய இயலும். அடிமட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் இணைத்துப் பயன்படுத்துபவர்கள். முதலாளியாக இருந்தால்கூட தொழிலாளிபோல் உழைப்பவர்கள். சனி குறைந்த பாகையில் இருந்தால் சிறிய உழைப்பில் பெருத்த வருமானமும், அதிக பாகையில் இருந்தால் கடின உழைப்பில் சிறிய வருவாயும் இருக்கும்.
சனி பலம்குறைந்தால் நீசத்தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மைகளும், நோய் நொடிகளும், கஷ்ட ஜீவனமும் நிரம்பியிருக்கும்.
"சனி கெடுப்பின் யார் கொடுப்பார்? சனி கொடுப்பின் யார் கெடுப்பார்?' "சனியைப் போன்று கொடுப்பவரும் இல்லை; சனியைப் போன்று கெடுப்பவரும் இல்லை' என்பதுபோன்ற பழமொழிகளின் உண்மையை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
பரிகாரம்
சனி பலம் குறைந்தவர்கள் சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம்.
பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், தொழிலாளிகள், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும்.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமித்தால் ஹோமம் செய்து வழிபடலாம்.
சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண் ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்யவேண்டும். மேலும் அன்று ஆதரவற்ற முதியோர்களுக்கு பொருளுதவி செய்யும் நாளாகவும், வயதில் மூத்த பெரியோர்களிடம் ஆசிகளைப் பெறும் நாளாகவும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நாளாகவும் கடைப்பிடிப்பது மிக முக்கியமானதாகும்.
உளவியல்ரீதியாக, உழைக்காமல்- எளிமையான வேலையில் அதிக பணம் பெறுவதையே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் புதனின் மதிநுட்பமும் சனியின் கடின உழைப்பும் இருக்கும் நபர்களுக்கே தடைப்படாத, நிரந்தர, நிறைந்த வருமானம் இருக்கும் என்பதே உலகியல் உண்மை. பொதுவாக புதன் மற்றும் சனி பலம்குறைந் தால் புத்தி சாதுர்யமின்றி சம்பாதிக்கத் தெரியாமல் இருப்பார்கள். கோழையாய், உடலுழைப்பு இல்லாமல் இருப்பார்கள். குடும்பத்தில் தரித்திரம் பிடிக்கும். தொழில் அல்லது வேலைவாய்ப்புகளில் இருக்கும் நிரந்தரமற்ற தன்மைகளை நீக்க புதன் மற்றும் சனி பகவானை வழிபடவேண்டும்.
உலகிலுள்ள அனைத்து இயக்கங்களுமே இருவேறு எதிர்நிலைகளைக் கொண்ட மாறுபாடான சமன்பாடுகள்தான். இரவு- பகல், ஆண்- பெண், நன்மை- தீமை, இன்பம்- துன்பம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். அதாவது இரவு இருந்தால்தானே அங்கு பகலுக்கு வேலை? உலகில் எல்லாருமே நல்லவர்களாக இருந்துவிட்டால், எல்லாமே சுபமாக இருந்துவிட்டால் உலகில் பிரச்சினைகளே இல்லையே! அதேபோல் எல்லாரும் சிறிய உழைப்பில் அதிக வருமானம் பெற்றால் கடினமாக உழைக்கவேண்டிய வேலைகளை யார் செய்வது? ஆக, சுபமும் அசுபமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்துகொண்டு, எந்த பிரச்சினையும் நிரந்தரமானதல்ல என்ற எண்ணத்தை ஆன்மாவினுள் செலுத்தவேண்டும். அதாவது மன்னராட்சி முறை இருந்த அந்தக் காலத்தில், ஒரு குடியானவனுக்கு நாடாளும் அமைப்பு எனப்படும் அரசயோகம் இருந்தாலும் அவன் அரசனாவன் என்று சொல்லப்படவில்லை. அரச குலத்தைச் சேர்ந்தவருக்கு மட்டுமே ராஜாவாகும் யோகம் இருப்பதாக, குலத்தின் அடிப்படையில் பலன் சொல்லப்பட்டது. அது சரியாகவும் இருந்தது. ஆனால் சாமானியரும் முதல்வராகலாம்; பிரதமராகலாம் என்ற ஜனநாயக முறை வந்துவிட்ட இந்தக் காலத்தில், ராஜயோக ஜாதகமுடைய அமைப்பில் பிறந்த ஒருவருக்கு 'நீ முதல் மந்திரியாக முடியாது; பிரதமர் பதவி உனக்கு கிடைக்காது' என்று நாம் பலன்சொல்ல முடியுமா? எனவே ஜோதிட விதிகளும் கால மாற்றத்திற்கு உட்பட்டவைதான் என்பது உறுதி.
அதேநேரத்தில் ஜோதிடத்தின் அடிப்படை விதிகள் மாற்றமுடியாதவை என்பதோடு மாறவும் மாறாதவை.
அதனால்தான் ஒருவரின் ஜாதகத்திற்குப் பலன் சொல்லும்போது விதி, மதி, கதிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. விதி என்பது லக்னம். மதி என்பது சந்திரன் நிற்கும் ராசி. கதி என்பது சூரியன் நிற்கும் ராசி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஜனன ஜாதகம், தசாபுக்தி, அந்தரம், கோட்சாரம் ஆகிய நிலைதான் விதி, மதி, கதி என்பதாக எடுத்துக்கொண்டோமானால், ஜனன ஜாதகம் நடக்கவிருக்கும் வினை என்னவென்று காட்டும். தசாபுக்தி அந்தரங்கள் அந்த வினை எப்பொழுதென்று காட்டும். கோட்சாரம் அவ்வினையால் நாம் அடையும் திருப்தியைக் காட்டும்.
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்தவுடன் அனைவரின் வாழ்வாதாரமும் உயரும் . விதியை மதியால் வெல்லும் சூட்சுமப் பரிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றிபெற வாழ்த்துகள்.