திருமணப் பொருத்தமானது நடைமுறையில் பெயர் பொருத்தம், ருது நட்சத்திரப் பொருத்தம், தசவித நட்சத்திரப் பொருத்தம், முழு ஜாதகப் பொருத்தம் என நான்கு முறையில் பார்க்கப்படுகிறது.
பெயர் பொருத்தம்
ஜாதகம் இல்லாதவர்கள் இணைக்கும் வது-வரனின் முதல் எழுத்திற்கான நட்சத்திரத்தைக் கண்டு அதன்மூலம் பார்க்கப்படும் பொருத்தம்.
ருது நட்சத்திரப் பொருத்தம்
பெண்ணின் ருது நட்சத்திரத்தையும், ஆணின் ஜென்ம நட்சத்திரத்தையும் கொண்டு பார்க்கும் பொருத்தம். முற்றிலும் தவறான இந்த இரண்டு முறைகளும் கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன.
தசவித நட்சத்திரப் பொருத்தம்
பெரும்பான்மையோரால் பின்பற்றக்கூடிய இந்த நட்சத்திரப் பொருத்தத்தை நமது முன்னோர்கள் இருபது பொருத்தங்களுக்கு மேலாகப் பார்த்திருக்கின்றனர்.
தற்போது நடைமுறையில் பத்துப் பொருத்தமாகிவிட்டது. ஆண்- பெண்ணின் ஜென்ம நட்சத்திரம், ராசி கொண்டு பார்க்கப்படும் நட்சத்திரப் பொருத்தம்மூலம் உடல்சார்ந்த பொருத்தத்தை மட்டுமே அறியமுடியும்.
தினம், கணம், மகேந்திரம், ஸ்த்ரி தீர்க்கம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜு, வேதை, நாடி என்ற பத்து விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. இதில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜுப் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்கிறார்கள். இன்னும் சிலர் ராசி, ரஜ்ஜு பொருத்தம் மட்டும் இருந்தால்கூட திருமணம் செய்கிறார்கள்.
ஜென்ம நட்சத்திரம் என்பது சந்திரன் என்ற உடலைக் குறிக்கிறது. உயிருள்ள உடல் மட்டுமே இயங்கும். உயிரில்லாத உடல் இயங்குவது சாத்தியமற்றது. உடலை இயக்க விதி, மதி, கதி இயக்கம் மிகவும் முக்கியம். இதில் விதி என்பது ஒருவரின் பிராப்தம், கொடுப்பினை, புண்ணியப் பலன் என்று சொல்லலாம். ஜோதிடரீதியாக விதியை லக்னம் என்று சொல்லலாம். மதி என்பது நட்சத்திரம். நட்சத்திரத்தைக் கொண்டே தசை, புத்தி கணக்கிடப்படுகிறது. கதி என்பது கோட்சாரம் என்ற அன்றைய கிரக நிலவரம். இவற்றை ஆய்வுசெய்து பொருத்துவது நன்று.
ஜோதிடத்தில் ஒரு ராசியோ, ஒரு கிரகமோ, ஒரு நட்சத்திரமோ மட்டும் தனித்து எந்தவிதமான தனிப்பட்ட சுப- அசுபப் பலன்களுக்கும் காரணமில்லை. ராசி, கிரகம், நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்தே பலனை ஜாதகருக்குத் தருகின்றன.
சிலர் "இன்டர்நெட்'டில் பொருத்தம் பார்த்துக்கூட திருமணத்தை முடிவு செய்கிறார்கள். "நெட்'டில் இரு பெண்களின் பிறந்த தேதி, நேரத்தை அல்லது இரு ஆண்களின் பிறந்த தேதி, நேரத்தைக் கொடுத்தால்கூட பொருத்தம் பார்த்துத் தரும். இதை நாம் உணரவேண்டும். பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தால்கூட கடவுள் விட்ட வழி என்று கூறலாம். "நெட்'டில் பொருத்தம் பார்ப்பது அவ்வளவு சிலாக்கியமானதல்ல.
எனவே நட்சத்திரப் பொருத்தம் என்பது நூறில் ஒருவருக்கு மட்டுமே சுபப் பலனைத் தரும். அதுவும் பிராரப்தம் நன்றாக இருப்பவர்களுக்கு மட்டுமே.
முழு ஜாதகப் பொருத்தம்
மன நிறைவான திருமண வாழ்வைத் தேர்வுசெய்து கொடுக்க விரும்பும் பெற்றோர் ஆண்- பெண் இருவர் ஜனன ஜாதகத்தையும் நான்கு நிலைகளில் ஆய்வு செய்யவேண்டும். விவாகம் தொடர்பான தோஷங்கள், பாவகரீதியான ஆய்வு, தசா ரீதியான ஆய்வு, கிரக இணைவு அடிப்படையில் ஆய்வுசெய்து பொருத்தும்போது சிறந்த திருமண வாழ்வை அமைத்துத்தர முடியும்.
விவாகம் தொடர்பான தோஷங்களில் ஆண்- பெண்ணின் ஜனன ஜாதகத்தில் எந்த வகையான தோஷம் இருக்கிறதோ, அதை சரிசெய்யும் அமைப்புள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு பெண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால் புத்திர தோஷமில்லாத ஆண் ஜாதகத்தை இணைக்கும்போது அந்த தோஷம் சரிசெய்யப்பட்டு தம்பதியினர் குழந்தைப்பேறு கிடைக்கப் பெறுவர்.
பாவக ரீதியான ஆய்வில், ஒன்று எனும் லக்னத்தின் ஒற்றுமை, இரண்டில் வரும் வாக்கின் தன்மை, மூன்றில் எழும் போகம், நான்கு தரும் சுகம், ஐந்தில் வரும் புத்திரம், ஆறில் பெறும் நோய்கள், ஏழில் பெறும் இன்பம், எட்டு கூறும் ஆயுள், ஒன்பது தரும் பாக்கியம், பத்தில் ஏற்படும் செயல்திறன், பதினொன்றில் ஏற்படும் செயல் ஆதாயம், பன்னிரண்டின் இல்லற இன்பம், செலவின் தன்மை என திருமண பந்தத்திற்குத் தேவையான அனைத்தையும், இருவரின் ஜனன ஜாதக பாவத்தைக் கொண்டும், அதில் நிற்கும் கிரகங்களைக் கொண்டும் பொருத்த வேண்டும்.
தசா ரீதியான ஆய்வு
மானிட வாழ்வில் நன்மை- தீமைகளைத் தீர்மானிப்பதில் தசாபுக்தியின் வலிலிமை நூறு சதவிகிதம். ஒருவர் ஜாதகத்திலுள்ள நன்மை- தீமைகளை கிரக தசா காலங்களில் மட்டுமே அனுபவிப்பார்.
இருவர் ஜாதகத்திலும் நன்மை தரும் தசை ஒருசேர வருவதுபோலும், தீமை தரும் தசா வரும் காலங்களில் ஒருவருக்கு வரும் தீமை மற்றவரின் தசையால் சரி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் ஒரே கிரகத்தின் தசை இல்லாமல் இருப்பதுடன், இருவருக்கும் ஒரே தசை இருந்தால் மூன்று வருட இடைவெளி இருக்கும்படி அமைக்கவேண்டும். தசாநாதர், சாரநாதர் பகை கிரகமாக இல்லாமலிருப்பது தம்பதியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்.
கிரக இணைவுகள்
ஒரு ஜாதகரின் வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளுக்கும் கிரக இணைவுகளே காரணம். குறித்த காலத்தில் திருமணம் நடைபெறாமைக்கும் கிரக இணைவுகளே பெரும் பங்கு வகிக்கின்றன.
கிரக இணைவென்பது ஒரு ராசிக் கட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருப்பது மட்டுமல்ல. ஒரு கிரகத்தின் சாரநாதன், பாகை இடைவெளி, பாகை முறை சம்பந்தம், பார்வை பலம், திரிகோண- கேந்திர இணைவு, நாடிமுறை தொடர்பு என்று சூட்சுமரீதியாக ஆய்வுசெய்து, எந்த கிரக இணைவு பாதிப்பைத் தருகிறது என்பதை ஆய்வு செய்து, ஒருவரின் கிரக இணைவு மற்றவரின் கிரக இணைவுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யவேண்டும்.
முழுஜாதகப் பொருத்தத்துடன் தோஷ சாம்யம் பார்ப்பது மிக முக்கியம். இந்தப் பொருத்தம் பார்க்காவிட்டால் பல சங்கடங்களை ஜாதகர் அனுபவிக்க நேரும். தோஷ சாம்யத்தில் ஐந்துவிதமான முறைகள் உள்ளன.
1. பாவ குண எண்கொண்டு தோஷ சாம்யம் கண்டறிதல்.
2. கிரக குண எண்கொண்டு தோஷ சாம்யம் கண்டறிதல்.
3. பாவ குண எண்கொண்டும், கிரக குண எண்கொண்டும் தோஷ சாம்யம் கண்டறிதல்.
4. கிரக குண எண்கொண்டும், கிரக பல குண எண்கொண்டும் தோஷ சாம்யம் கண்டறிதல்.
5. பாவ குண எண், கிரக குண எண். கிரக பல குண எண்கொண்டு தோஷ சாம்யம் கண்டறிதல்.
முதல் நான்குமுறைகளைவிட ஐந்தாவது முறையான பாவ குண எண், கிரக குண எண், கிரக பல குண எண்கொண்டு தோஷ சாம்யம் கண்டறிதலே சிறந்ததாகும்.
இதன்படி ஒரு ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 பாவத்தில் சூரியன், சனி, ராகு, கேது, செவ்வாய் இருந்தால் தோஷத்தினைத் தருகிறது.
ஏன் இந்த கிரகம், இந்த பாவம் மட்டும் தோஷம் தருகிறது என்ற எண்ணம் வரலாம். கிரகங்களைப் பொருத்தவரையில் சூரியன், சனி, ராகு- கேது, செவ்வாய் இவ்வைந்தும் பாவ கிரகங்கள். ஆதலால் இக்கிரகங்களுக்கு மட்டும் தோஷமுண்டு. குரு, சுக்கிரன், சந்திரன், புதன் சௌம்ய கிரகங்கள். அதனால் தோஷம் கிடையாது.
பாவ கிரகங்கள் உபஜய பாவமான 3, 6, 10, 11-ல் இருந்தால் தீமை தருவதில்லை. ஆதலால் இந்த பாவங்களை விலக்கிவிடலாம். மேலும் எந்த கிரகமும் 5, 9-ஆம் இடமான திரிகோணத்தில் இருந்தாலும் தீமை தருவதில்லை. ஆதலால் இந்த பாவங்களையும் விலக்கிவிடலாம். மீதி கிடைப்பது 1, 2, 4, 7, 8, 12 பாவங்கள் மட்டுமே. ஆதலால்தான் இவற்றை மட்டும் செவ்வாய் தோஷம், தோஷ சாம்யம் போன்றவற்றிற்கு எடுத்துக்கொள்கிறோம்.
பெண் ஜாதகத்தின் தோஷ அளவானது ஆண் ஜாதகத்தின் தோஷ அளவினைவிட குறைவாக இருந்தாலும், சமமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.
பெண் ஜாதகத்தின் தோஷ அளவானது ஆண் ஜாதகத்தின் தோஷ அளவினைவிட அதிகமாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் நிலையைக்கொண்டு சிதம்பரமா, மதுரையா என்று சொல்லமுடியும்.
ஆண் ஜாதகத்தில் குடும்பத்தைக் காப்பாற்றும் வல்லமை பெற்றவராக இருப்பின், கணவரின் பணிக்கு உதவியாக இருக்குமாறு- கணவனுக்குக் கட்டுப்பட்டிருக்குமாறு செவ்வாய் உள்ள ஜாதகத்தை இணைத்தால் சிறந்த தம்பதியாக வாழ்வார்கள்.
ஆண் வலிலிமை படைத்தவராக இருந்தும், கணவருடன் இணைந்து செயலாற்றாமல்- குடும்பத்தாருடன் அனுசரிக்காமல் படாதபாடு படுத்தும் பெண்களையும் பார்க்கிறோம். இதற்குக் காரணம் செவ்வாயின் நிலையே. பெண்ணுக்கு ஆண் தன்மையை அதிகம் தந்து வாழவும் விடாமல் சாகவும் விடாமல் வாழ்வை நரகமாக்கும் நிலைக்கு பெண்ணின் ஜாதகத்தில் உள்ள செவ்வாயின் நிலையே காரணம். ஆண் ஜாதகத்தின் சுக்கிரனுக்கும் பெண் ஜாதகத்தின் செவ்வாய்க்கும் ஈர்ப்பு இருப்பதே எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்யும் பொருத்தம். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து, உப்புக்கும் சர்க்கரைக்கும்கூட வித்தியாசம் தெரியாது வாழ்ந்த எத்தனையோ பெண்கள், திருமணத்திற்குப் பிறகு லகுவாக குடும்பம் நடத்துவதையும் பார்த்திருக்கிறோம்.
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாயின் நிலை சரியில்லாமல், குடும்பத்தை வழிநடத்தும் தலைமைப் பண்பு குறைந்திருந்தால், கணவனையும் குடும்பத்தாரையும் அனுசரித்து வழிநடத்தும் தன்மையுள்ள செவ்வாய், சுக்கிரன் உள்ள ஜாதகியை இணைப்பதே தீர்வு.
இங்கே செவ்வாயின் வலிலிமை என்று குறிப்பிடுவது ஆட்சி, உச்சம், நீசம், தோஷம் மட்டுமல்ல; செவ்வாயுடன் சம்பந்தம்பெறும் கிரகம், செவ்வாயின் சாரநாதன் மற்றும் பாகையே காரணம்.
திருமணத்திற்கு முன், பின் தவறான நட்பை உருவாக்குவது செவ்வாய், சுக்கிரனே. அதனால் செவ்வாய், சுக்கிரனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பொருத்துவது மிக முக்கியம்.
திருமணத்தை எதிர்நோக்குபவர்கள் முழு ஜாதகப் பொருத்தத்தைப் பார்த்துத் திருமணம் செய்யமுடியும். ஆனால் திருமணமானவர்கள் திருமணத்திற்குப் பின்வரும் கருத்து வேறுபாட்டை சரிசெய்ய, திருமணத்தை உடல்சார்ந்த விஷயமாகப் பார்க்காமல் அறம், பொருள், இன்பம் சார்ந்த விஷயமாகப் பார்த்தால் தம்பதியினரிடம் சுமுக உறவு ஏற்படச் செய்யலாம்.
அனைவருடைய திருமண வாழ்க்கையிலும் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லவே இல்லை. காரணம், தனிமனிதனாக இருக்கும்போது நாம் ஒருவர் மட்டும்தான். நம்முடைய பிரச்சினைக்குரிய தீர்வு நாம் மட்டும் எடுப்பதே.
அதேசமயம், திருமணத்திற்குப்பின் தன்னுடைய மனைவி அல்லது கணவன், குழந்தைகளின் மனநிலையும், அவர்களின் தேவைகளும் சேர்ந்து கொள்கின்றன. நம்முடைய தீர்வு நம் குடும்பத்தாருடன் ஒத்துப்போவதில்லை. அதுதான் பிரச்சினை. விட்டுக்கொடுத்தல், தியாக எண்ணம் கொண்டவர்கள் அனுசரித்து பிரச்சினையை சரிசெய்துவிடுவர். தீர்க்கமுடியாத சிக்கல் வரும்போது ஜோதிடரை அணுகுபவரும் உண்டு.
திருமணம் நடந்தபின்பு வரும் பிரச்சினைகளை நான்காக வகைப்படுத்தலாம்.
1. அறம் சார்ந்த பிரச்சினைகள்.
2. பொருள் சார்ந்த பிரச்சினைகள்.
3. இன்பம் சார்ந்த பிரச்சினைகள்.
4. மோட்சம் சார்ந்த பிரச்சினைகள்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 98652 20406