காலை எழுந்தவுடன் அங்க சுத்தம் செய்தபிறகு, முதலில் நெற்றிக் குறி என்னும் திருநீறு, குங்குமம் போன்றவற்றை, தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொல்லி இட்டுக்கொள்வது சைவர்கள் மட்டுமின்றி, பொதுவாக அனைவரிடத்திலும் வழக்கமாக இருந்து வந்தது.
"நீறில்லாத நெற்றி பாழ்; அதன் பின்னிருக்கும் மூளை திறமையோடு செயல்படாது' என்று முன்னோர் சொன்னதை அறிந்த சிலரே கடைப்பிடித்து வெற்றி இலக்கை அடைந்தனர்.
இதை அறியாதவர்கள் "நெய் இல்லா உண்டி பாழ்' என்பதைத் தெரிந்துகொண்டு, உணவை மட்டுமே ருசியாக உண்டு சண்டியாகி விட்டனர். நெற்றியில் திருநீறு பூசிக் கொள்வதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்கமுடியுமா?
விபூதியின் மகிமை பற்றி பஸ்ம உபநிடதம் விரிவாகக் கூறியதை, வரும் தலைமுறையினர் சரிவரக் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்றெண்ணி, அதிலுள்ள ரகசியத்தை மறைத்துவிட்டார்கள்.
இறைவன் தன்னையும் காட்டி, தன்னைப் பூஜிக்கும் மலர்வனத்தையும் காட்டி, அருட்பிரசாதமாய் விபூதியையும் திருமண்ணையும் காட்டி இருக்கிறான்.
நோய்வாய்ப்பட்ட மதுரை அரசனுக்கு, ஞானசம்பந்தர் திருநீறு கொடுத்தபடியே அதன் பெருமையை பதிகம்பாடி எடுத்துக்கூறி, வெறும் சாம்பல் அல்ல திருநீறு; அது நமக்குப் பேறுகளும், பெரும் வெற்றிகளும் தருவது என்றும் எடுத்துக்கூறினார்.
மனதினுள் ஏற்படும் தீய எண்ணங்களை அழித்து ஆத்மாவைத் தூய்மைப் படுத்த வல்லது திருநீறுமட்டுமே என்றார் வள்ளலார் சுவாமிகள்.
திருநீறானது வாதம், பித்தம், சிலேத்துமங்களை சமநிலைக்குக் கொண்டு வரும். மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றையும் தூய்மை யாக்கும். காமம், மயக்கம் குறை செய்தலைத் தீர்த்துவிடும். மூன்று மலங்களான ஆணவம், கன்மம், மாயையை அகற்றும். ஆகாம்யம், சஞ்சிதம், பரார்த்தம் ஆகிய தத்துவங் களைப் புரிய வைக்கும். மன சஞ்சலம், மயக்க நிலை, விபரீத செயல் நடக்காத வாறு செய்யும். ஆத்ம- வித்யா- சிவ தத்துவங்களை விளங்கிடச் செய்யும்.
துர்நிகழ்வு, இறப்பு, எதிரிகளின் தாக்கத்தை முன்னறிந்து விலகும் மனநிலையைக் கொடுக்கும். மேலும் மனிதர்கள் எதிர்பார்க்கின்ற காலம், பொருள், அந்தஸ்து ஆகியவற்றைத் தந்து வியந்திடச் செய்யும். இக்காலத்தில் ஒரு மாத்திரை சாப்பிட்டால் உடலில் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறது. ஆனால் மூன்று பக்கவிளைவுகள் உருவாகிவிடுவதைக் காண்கிறோம்.
ஆனால் தெய்வங்களின் அருட்சங்கம மான திருநீறை முறைப்படி அணிவதால் இத்தனைப் பலன்களும் கிடைத்துவிடும் என்பதை ஞானிகள் உணர்ந்து சொன்னார் கள். திருநீறை எல்லாரும் தயாரித் துப் பயன்படுத்தலாம். சம்பந்தர் கூறிய "மந்திரமாவது நீறு' என்ற வாக்கிற்கிணங்க தயாரித்துப் பயன்படுத்த வேண்டும். திருநீறில் சில வகைகள் உண்டு. அவற்றில் நான்கு விதமான பஸ்மங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஐந்தாவதாக உள்ள ஸ்ரீபல பஸ்மம் இவற்றைவிட அபூர்வ சக்தி வாய்ந்தது.
பசு தரும் பஸ்மம்: தேவர்களும் மகரிஷிகளும் தெய்வங்களும் வாசம் செய்யும் பசுவிடமிருந்து வரும் சாணத்தைக் காயவைத்து, சிவராத்திரியன்று விரஜா வேள்வி செய்து உருவாக்குவது.
யக்ஞாக்னி ரட்சை: வீட்டிலோ, ஆலயங்களிலோ மகாயாகம் நடந்து நிறைவு பெற்றபிறகு, வெளிவரும் பஸ்மத்தை வாசனைப் பொருள் சேர்த்துச் செய்துகொள்வது.
சிவாக்னி சாரம்: சிவன் கோவிலில் யக்ஞம் நடைபெற்ற மறுநாள், முக்கோணமான சிவாக்னியிலிருந்து பிரித்து தாழம்பூ பொடியுடன் சேர்த்து வைப்பது.
இயற்கை கால பஸ்மம்: இறைவன் கோவில்கொண்ட மலைப்பாங்கான இடங்களில், மணற்பாறைகளுக்கிடையில் சிக்கிய மூலிகை மரங்கள் அக்னிக்கு ஆட்பட்டு உருவாகி, வெண்துகளாக வெளிவருவது. தமிழகத்திலுள்ள முருகன் தலங்கள் சிலவற்றில் கிடைப்பதாகச் செவிவழிச் செய்தி மட்டுமே உள்ளது.
மகிமை வாய்ந்த இந்த விபூதியை மூன்று வேளைகளும் அணிபவர் நாளடைவில் சர்வபூபதி- சகல வல்லமைகளும் படைத்த- எதையும் செய்யும் பணக்காரராகி விடுகிறார். அவரிடம் ஐஸ்வர்யம் நிலைபெறும் என்று சிவரகசியம் தெளிவுபடுத்துகிறது.
ஸ்ரீபல பஸ்மம்
பாவங்களைப் பஸ்மமாக்கி (சாம்பலாக்கி) விடுவதால் பஸ்மம் என்றும், ஜீவராசிகளின் துக்கங்களை விரட்டுவதால் சாரம் என்றும், மனிதர்களின் அஞ்ஞான இருளை அகற்றி ஆத்ம ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்வதால் பசிதம் எனவும், சகலவிதமான பூத, பிசாச, துர்சக்தி சேஷ்டைகளிலிருந்தும், கெட்ட கனவுகள், சகுனங்களை அகற்றி மனிதர்களைக் காப்பதால் ரட்சை எனவும் போற்றப்படுகிறது. இவ்வாறு ஐந்து செயல்களையும் நடத்தும் சக்தி படைத்த ஸ்ரீபல பஸ்மத்தை மந்திரார்த்தத்துடன் செய்து பயன்படுத்தும் விதியை அறியவேண்டும். இந்த விதியை ஞானசம்பந்தப் பெருமானே தனது பதிகத்தில் சூட்சுமமாகக் கூறிவிட்டார்.
மந்திரமாவது நீறு: சொல்பவனைக் காத்தருளும் மந்திரத்துக்கு இணையான பலமுடைய திருநீறை, விதியோடு மந்திரம் கூறி செய்தல்வேண்டும்.
தந்திரமாவது: உலகில் வாழ சாதுர்யமான புத்தியை வளரத் தருவது.
வேதத்தில் உள்ளது: வேதங்கள் கூறுகின்ற வாழ்க்கைமுறையில் திருநீறு பூசும் முறை, சிறப்புகள், அதன் கட்வுட்தன்மை பற்றிக் கூறப்பட்டுள்ளது.
அந்தரமாவது: விபூதியை அணிபவர் முகம் மட்டும் அழகாகத் தெரிவதில்லை. அவரது வாழ்நாளும் நாளடைவில் பிறர் வியந்து போற்றும்படி அழகாகிறது.
சத்தியமாவது: நம்பிக்கையோடு அணிபவர்களுக்கு சொன்னவாக்கு தவறாது நன்மைகளை வழங்குவது.
சித்தி தருவது: மானுடர்கள் கேட்கும் காரியசித்தி என்னும் செயல்வெற்றிகளைக் கொடுப்பது. இறைவன்பால் பக்தியை வளரச் செய்து அவரைக் காக்கும்படி உரைப்பது.
வெந்துயர் தீர்ப்பது: நம்மிடம் அகலாமல் நெடுநாள் குடிகொண்டுள்ள கொடிய நோயை இல்லாமல் செய்துவிடும் ஆற்றல் கொண்டது. உண்மை உரைப்பது. இந்த மாய உலகில் சூட்சும முடிச்சுகளை அவிழ்த்து உண்மைகளைக் காட்டுவது.
மேலும், "புண்ணியர் பூசும் நீறு' என்றும் புகழப்படுவதன் உட்பொருள்- தேசத்தில் பல மதச் சின்னங்கள், பொடிகள்பால் ஈர்ப்புகொண்டு, திருநீற்றைப் பூசுவதை நிறுத்தி வேறு பொடிகளைப் பூசுகின்றனர். ஆன்மாக்கள் இப்பிறவியில் பூர்வபுண்ணியம் செய்திருந்தாலே திருநீற்றைப் பூசும் நல்லபேறு கிடைக்கும் என்கிறார்.
விபூதிக்கு "ஐஸ்வர்யம்' என்னும் மங்களகரமான பெயருண்டு. அதைப் பெறுவதற்கான பஸ்மம் செய்யும் விதியை அறியவேண்டும்.
சிவாக்னியில் தெய்வீகப் பொருளிடல் பஸ்மம் தயாரிப்பதற்குப் பல வழிகளில் முயற்சி செய்வதுண்டு. கிராமப் புறங்களில் மாசிமாதம் மட்டுமே பசுவின் சாணத்தை எடுத்து வடைபோல் செய்து வெயிலில் காயவைத்து, அக்னி மூட்டம் போட்டு சாம்பலானதும் சல்லடையில் சலித்து, வாசனைப் பொருள் கலந்து பத்திரப்படுத்துவது வழக்கத்தில் இருக்கிறது.
ஸ்ரீபல பஸ்மத்தை அப்படித் தயாரிக்க முடியாது. ஆகம முறைப்படி முக்கோண சிவாக்னி குண்டம் செய்து, அதில் பசுவறட்டி, வில்வ இலை, விளாமிச்ச வேர், தேவதாரு, அகில்கட்டை, அரசு, ஆலங்குச்சிகளை பசுநெய் கலந்து, சிவபெருமானுக்குரிய நாளில் பஞ்சாட்சர மந்திரம் ஜபித்து கிழக்கு முகமாக அமர்ந்து, யக்ஞம்போல அக்னியில் இட்டு பஸ்மமாக்குதல் வேண்டும். இதற்கு வழிகாட்டும் துதிகளும் சிவநூல்களில் கிடைக்கின்றன.
சிவாக்னியில் ஸ்புடமிடுவதால் பஸ்மத்திற்கு அதிக சக்தி உண்டாகிறது. ஆதிசங்கர பகவத் பாதர், சௌந்தர்யலகரி 33-ஆவது செய்யுளில், "சிவாக்னியை மூட்டி ஒருவன் ஈசனை ஆராதிப்பதால் கிடைத்தற்கு அரிதான பாக்கியங்களைப் பெறுகிறான்' என்று சிறப்பிக்கிறார்.
"பஜந்தித் வாம் சிந்தாமணி
குண நிபத்தாக்ஷ வலயா:
சிவாக்னௌ ஜுஹ்வந்த
ஸுரபிக்ருத தாராஹுதி சதை:'
சிவாக்னியில் இடும் பொருள்கள் அனைத்தும் நெய்யோடு கலந்து செய்யும் உபாசகனுக்கு, சிந்தாமணி என்னும் கோரியது தரும் தெய்வீக மணி போல் நலன்களைத் தந்துவிடுகிறது. ஸ்ரீபல பஸ்மம் இந்த இலக்கணப்படி செய்வதால் அதீத சக்தி உடையதாகி விடுகிறது என்பதற்கு இது உதாரணம். மேலும் பஸ்ம தாரண விதியில் ஜபம்செய்து விபூதி இடவேண்டுமென்று சொல்லப்படுகிறது.
ஸ்ரீபலத்தில் வைக்கும் முறை
வில்வப் பழத்திற்கு ஸ்ரீபலம் என்ற பெயருண்டு. கீறல், துளை, பறவை எச்சம், பிளப்பு போன்ற குறைகள் இல்லாத வில்வப்பழத்தைச் சிவனுக்குரிய நாளில் சுபவேளையில் எடுத்து, அதற்கு உபசாரங்கள் செய்து, தலைபாகத்தில் வட்டவடிவமாக மூடிபோல் எடுத்து, உள்ளே இருக்கும் பழம் போன்ற பகுதிகளை சுத்தம் செய்து, மஞ்சள் நீர் நிரப்பியபிறகு சுத்தம்செய்து காயவைக்க வேண்டும்.
விபூதியை சுத்தமாக்கிய பிறகு சாம்பிராணிப் புகையை அதற்குள் செலுத்தி கலாகர்ஷண மந்திர விதியைச் செய்யவேண்டும். தொடர்ந்து குடுவை போன்று அமைந்துள்ள ஸ்ரீபலத்தினுள் பஸ்மத்தை செலுத்தவேண்டும். ஸ்ரீருத்ரம் அல்லது சிவத்தியானங்களைப் பாராயணம் செய்துவிட்டு, ஈஸ்வரனின் சிவ சிந்தாமணி மந்திரமும் 108 முறை ஜெபம் செய்தல்வேண்டும்.
ஸ்ரீபல பஸ்மமும் மடல் விபூதியும்
கடந்த 50 ஆண்டுகளுக்குமுன் சிவாலயங்களில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுப்பதற்காக தாழம்பூ போன்ற குழிவான மடல் பயன்படுத்தினர்.
காலப்போக்கில் அவை பித்தளைக் கிண்ணங்களாக மாறிவிட்டன. பஞ்ச லோகத்தில் செய்யப்பட்ட மடல்கள் இன்றும் ஆறுகால பூஜைகள் நடத்தப்படும் ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளன. பூஜைசெய்யப் பட்ட விபூதியே பக்தர்களுக்கு வழங்கப் பட வேண்டும் என்பதால், சிவலிங்கத் திருமேனிமுன் பூஜைக்காலத்தில் மடல் வைக்கப்பட்டிருக்கும்.
ஆலய தரிசனத்திற்குச் செல்வோர் இக்காலகட்டத்தில் அர்ச்சகரை அவசரப்படுத்தி, விபூதி, குங்குமம் வாங்கி இடுகின்றனர். அல்லது தானே எடுத்துச் செல்கின்றனர். இது பலனைத் தராது.
பஸ்மம் இடுவதால் பயன் என்ன?
அழகுக்காக சந்தனம், குங்குமம், பஸ்மம் இடுவதில்லை. நமது புருவமத்தியில் மூளைக்கு முன்புறமாக "பைனியல் கிளாண்ட்' என்ற சரப்பி அமைந்திருக்கிறது. யோகப் பயிற்சியில் ஈடுபடுவோர் இதை ஆக்ஞா சக்கர ஸ்தானம் என்பர். வேதநூலும் சிவாகமங்களும் இதை ஞானக்கண் என்று கூறும். பரமேஸ்வரனுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றி நடுவில் சுண்ணாகத் திறந்து அதிகமான சக்தியை வெளிப்படுத்து கிறது. மனித ஜீவன்களுக்கு நெற்றிக் கண் திறக்கும் வழி தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் எங்கும் எதிலும் வெற்றிக்கனி கிடைத்துவிடும். ஈசன் வில்வமர வடிவிலும் அதன் கனி வடிவிலும் தோன்றுவதால், அதனுள் இருக்கும் ஸ்ரீபல பஸ்மத்தை நாம் நம்பிக்கையோடு எடுத்துக்கொள்ள பக்தி, யோகங்கள், சாதனைகள் கைவரப்பெறும் என்பது உறுதி. வெற்றிக் கனியை நமதாக்கலாம்.
செல்: 95511 84326