"சிவலிங்கத்தை ஆன்மாவுக்குள் நிலைநிறுத்தி வணங்குபவர்களுக்கு பேரானந்தப் பெருவாழ்வு கிடைக்கும்' என்றார் திருமூலர்.
கருங்கல் லிங்கம், வெள்ளி லிங்கம், ஸ்வர்ண லிங்கம், மரகத லிங்கம், சந்திர காந்தக்கல் லிங்கம், ஸ்டிக லிங்கம், சூரிய காந்தக்கல் லிங்கம் போன்ற திருமேனிகளை எங்கும் காணலாம். இவற்றில் சூரிய காந்தக்கல் லிங்கத்தை வீட்டில் வைத்து விதிப்படி வணங்குவோர் அரசியல், அரச பதவி அனுகூலங்களைப் பெறுவார்கள். அதுபோல ஒருவர் பாதரச லிங்கத்தை ஆகம விதிப்படி வழிபட்டுவந்தால் அனைத்துவகை லிங்கங்களையும் பூஜை செய்த பலனைப் பெறுவார்கள் என்பது அனுபவ உண்மை. பாதரச லிங்கத்தை எவர் வேண்டுமானாலும் வழிபடலாம். அகலாத தனச் சேர்க்கையும் பெற்றுவிடலாம்.
ரசலிங்கத்தின் ஆற்றல் வெளிப்பாடு
ஓரிடத்தில் கோடிக்கணக்கில் சிவலிங்கங்கள் இருப்பதை தரிசிக்கச் செல்வதைவிட, ஒரு பாதரச லிங்கத்தை பூஜையில் வைத்து வணங்கிவந்தால், அதன் ஆற்றல் வெளிப்பாட்டால் மாற்றங்களைக் காண இயலும். "இந்த லிங்கத்தைப் பூஜிப்பவர்கள் இவ்வுலகில் சூரிய- சந்திரர்கள் இருக்கும்வரை ஆரோக்கிய வாழ்வும், அளவில்லாத சுகத்தையும் பெறுவார்கள்' என்று பத்மபுராணம் எடுத்துச் சொல்கிறது.
பாதரச லிங்கம் ஆத்மார்த்த பூஜைக்குத் தயாரிக் கும் முறைப்படி வார்க்கப் பட்டிருந்தால் கேட்டதைக் கொடுத்துவிடும். விரும்பியதைத் தரும் சாந்நித்யத்தை அதனுள் புகுத்தி, வணங்குவதற்கு ஏற்றபடி தயாரிக்க வேண்டும். இதை "வாயவ்ய சம்ஹிதாம்' என்னும் வேத ஸ்துதி ரகசியமாக உபதேசிக்கிறது.
பாதரசம் என்பது நிலையின்றி அசைந்தாடும் சக்தி வாய்ந்த திரவம். அதனுடன் மூலிகைகளின் சாற்றைக் கலந்து திடப்பொருளாக மாற்றி சிவலிங்கமாக உருவாக்கிடவேண்டும். இந்த அற்புதமான கலையை நன்றாக அறிந்தவர்கள் முக்காலங்களையும் உணர்ந்த மகரிஷிகளும் சித்தர்களும் ஆவர். பதினெண் சித்தர்களில் எல்லாருமே ரசவாதம், ரசக்கட்டு வித்தைகளைச் செய்யும்போது, பாதரச லிங்கங்களை வைத்து வணங்கி காயக்கட்டு என்னும் உடற்கட்டு அங்க சுத்தமும் பெற்றனர்.
தூய்மையான பாதரசத்தை "சிவதாது' என்று சித்தர்கள் கூறுவர். இது ஆண் இனத்தைக் குறிப்பது. இதன் சூட்சுமத்தைக்கண்ட சித்தர்கள், அதற்கான பெண் இனத்தைக் குறிக்கும் மூலிகைச் சாற்றை (சக்தி, கௌரி, தேவி) கலந்து சக்தியை வெளிப்படுத்தி மனித இனத்திற்கு நலம்புரியும் பாதரச லிங்கத்தை உருவாக்கி வழங்கினர்.
தோஷங்கள் விலக்கல்!
உலகமக்கள் என்றும் மகிழ்ச்சியோடு இருக்க இறைவனைப் பாடியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வள்ளலார் சுவாமிகள். அவர் ஒன்பதுவகை பாதரச மணிகளைப் பலனோடு கூறியுள்ளார்.
பரம்பர மணி- அண்டத்தையும் அதில் அடங்கிய பொருட்களையும் காட்டுவது; பராபர மணி- பிண்டமும் பொருளும் காட்டுவது; அரும்பெறல் மணி- நினைத்ததை நினைத்தபடி அருள்வது; ககன மணி- விண்ணுலகப் பொருட்களை ஆட்டிவைப்பது; சரவொளி மணி- மண்ணுலகப் பொருட்களை ஆட்டிவைப்பது; வித்தக மணி- கண்ணில் தெரியும் பொருட்களை ஆட்டுவது; கலைநிறை மணி- எல்லா உலகத்திற்கும் உலவ வைப்பது; சித்து செய் மணி- மகாசித்திகளை அருளவல்லது; வளரொளி மணி அழியாத வாழ்வளிப்பது! சிவலிங்கத் திருமேனியை விதிப்படி செய்துவிட்டால் சுவாமிகள் கூறிய ஒன்பதுவகை மணிகளும் அருளும் பணியை ஒரே பாதரச லிங்கம் செய்துவிடும் என்று தெளிதல் வேண்டும்.
முக்கியமாக எட்டுவித தோஷங்களையும், ஏழுவகை யான சட்டைகள் என்னும் அழுக்குகளையும் மந்திரார்த்த மாக லிங்கம் அமைப்பதற்குமுன் விலக்கிவிடல் வேண்டும்.
இதனால் லிங்க உருவத்துக்குள் மின்னாற்றல் உண்டாகி விடும். பஞ்சகவ்யம், மூலிகை திரவியங்களை அதன்மேல் விடுவதால் தோஷங்கள் களையப்படுகிறது.
ரசலிங்கம் செய்யும் ரகசியம்
பாதரச லிங்கத்தை விஷயம் அறிந்த சிற்ப அளவீட்டாளர், வேதபண்டிதர், ஆசார்யர் மூலமாகச் செய்யவேண்டும். பூஜை செய்பவர். பொதுவாக கிரகஸ்தன் எனப்படுகிறார். அவரது வலக்கை ஐந்து விரல்களின் சென்டிமீட்டர் அளவுகளை எடுத்துக்கொண்டு கூட்டி, ஐந்தால் வகுத்துவரும் அளவுக்கு உயரம் வைத்து, சுண்டு விரலின் அகலமும், கட்டை விரலின் தடிமனும் வைத்து, அவர் கையால் லிங்கமுத்ரா பிடிக்க வைத்து, அதனுள் அடங்கும் அளவுக்கு செய்தல் விதி.
கோவிலில் செய்யப்படுகிற சிலா சங்கிரணம்படி (சிலை செய்யும் விதி நூல்) வீட்டில் வழிபடும் ஆத்மார்த்த லிங்கம் செய்யும் விதியைத் தவறாமல் பின்பற்றல் வேண்டும். இல்லையென்றால் விளையாடுவதற்கு பொம்மை செய்த கதையாகிவிடும். ஆவுடையார் விட்ட அளவு ஒன்பது சென்டி மீட்டருக்குமேல் போகாமலும், பாணத்தின் உயரம் எட்டு சென்டிமீட்டருக்கு அதிகமாகாமலும், கீழ்ப்பாகம் ஏழு சென்டிமீட்டருக்குமேல் போகாமலும் பார்த்துக் கொள்ளலாம்.
உயர்ந்து எழும்பியிருக்கும் பாணம், உயந்த எண்ணங்கள் உள்ளத்தில் இருந்தால் வாழ்வில் மேல்நோக்கி முன்னேற்ற மடையலாம் என்ற தத்துவத்தைச் சொல்கிறது. நான்குவகை யில் சிவலிங்கத்தைச் செய்து வழிபடலாம் என்று சிவாகமம் சொல்கிறது.
சமகண்டம்: சிபாகம், விஷ்ணுபாகம், பிரம்மபாகம் ஆகிய மூன்றும் சமமாக இருப்பது.
வர்த்தமானம்: பிரம்மபாகத்தைவிட விஷ்ணுபாகமும், விஷ்ணுபாகத்தைவிட ருத்ரபாகமும் ஒருபங்கு அதிகமாக இருப்பது.
சைவாதிக்யம்: பிரம்மபாகம், விஷ்ணு பாகம் சம அளவிலும், ருத்ரபாகம் அதிகமாக வும் காணப்படுவது.
த்ரி ராசிகம்: லிங்கத்தின் உயரத்தை ஒன்பது பாகமாக அளவிட்டு, அதற்கு ஏற்றாற்போல மற்ற பாகங்களை அமைப்பது ஒருவகை. மேலும் லிங்கத்தின் வடிவங்கள் செய்யும் போது அமைவதை தேவிகம் திவ்யம், மானுஷம், ராட்சசம், ஆர்ஷம், பாணம் என்று வகைப் படுத்தினார்கள் மகரிஷிகள். ரசலிங்கத்தைச் செய்யும்போது முதல்வகையான சமகண்டம் என்ற விதியில் செய்வதே இல்ல பூஜைக்குப் பொருந்தும்.
ரசலிங்க பூஜை செய்வோர் வெளியூர் களுக்குச் செல்லும்போது, தினபூஜை விட்டு விடாமலிருக்க அரிசி, மணல், சாதம், ஆற்றுமண், சாணம், வெண்ணெய், ருத்ராட்சம், சந்தனம், கூர்ச்சம், பூமாலை, வெல்லம், மாவு போன்றவற்றால் சிவலிங்கம் செய்து வழிபட்டு, பிறகு தண்ணீரில் கரைத்து விடுவது சாஸ்திர விதி.
லிங்கத்திற்கு தண்ணீர் மஞ்சள்பொடி, பால் விட்டு அபிஷேகம் செய்து, சந்தனம் குங்குமம், மலரிட்டு 18 வகை கலைகள் விளங்கும்படி "தபிநீ தாபிணீ, கலா' தொடங்கி "காமதாயிணீ கலா'வரை பெயர் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்து, ஆவாகன பூஜை செய்ய வேண்டும். தினமும் சிவலிங்க தியானம் ஐந்துமுறை சொல்லியபிறகு பஞ்சாட்சர மூலமந்திரத்தை (ஓம் நமசிவாய ) 108 முறை ஜெபித்து வரவேண்டும்.
சிவலிங்க பூஜையில் வழிபாட்டுத் துதிகள்
எல்லாரும் சிவபூஜை செய்ய தீட்சை எடுத்துக் கொண்டு, தினமும் கட்டுப்பாடுகளோடு நடந்துகொள்ள முடியாது. ஈசனை அனைத்து உபசாரங்களோடு பூஜை செய்த பயன்தரும் சிவமானச பூஜை துதியை காலையில் சொல்லிவிட்டு சிவதியானம் செய்யலாம்.
"ஓம் ரத்னன: கல்பித மானஸம்
ஹிமா ஜலை ஸ்நானம் ச திவ்யாம்பரம்
நானாரத்ன விபூஷிகம் ம்ருகமதா
மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம்
புஷ்பஞ்ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே
ஹ்ருத கவ்பிதம் க்ருஹ்யதாம்.'
பாதரச லிங்கத்தினுள் மகாசதாசிவன் கோவில் கொண்டிருப்பதாக எண்ணியபடி, ஈஸ்வரனின் ரூப தியானத்துதி கூறும் வடிவத்தை எண்ணி பிரார்த்தனை செய்வது சிறப்பான மூர்த்திகரத்தைக் கொடுக்கும்.
"ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்றவகைகளில் மேலிருந்து கீழாக அமைகின்ற இருபத்தைந்து முகங்களைப் பெற்றவரும், திருச்சடை வைத்திருப்பவரும், கண்கள் எழுபத்தைந்தைப் பெற்றவரும். கபால குண்டலங்களோடு காட்சி தருபவரும், ஐம்பதுகைகளைப் பெற்றவரும், வரத அபய முத்திரைகளைக் கொண்டிருப்பவரும், பாம்பை மாலை யாக அணிந்துள்ளவராகவும் காட்சி தரும் சதாசிவனை, மங்களங்கள் தருபவராக பாதரச லிங்கத்தினுள் கண்டு வணங்குகிறேன்' என்பது மேற்கண்ட சுலோகத்தின் பொருள். இந்த வாசகம் உடலிலுள்ள சக்கரங்களை எண்ணி தியானிப்பதற்குச் சமமானது.
திருமுறைப் பதிகங்கள், பஞ்சாக்கர மந்திரம் ஓதும்போது புலடைக்க விதிகளைப் பின்பற்றினால், வாழ்க்கை நலன்கள் வந்துகொண்டே இருக்கும்.
ஜாதகத்தில் ரசவாத சித்தி வாழும்போது பொன்னும் பொருளும், ஆளடிமையும், மின்னும் மேனியும் கிடைக் குமா என்று சிவலிங்கத்தை வைத்து வழிபடுகின்ற னர். பூர்வபுண்ணிய ஸ்தானம் 5-ல் அல்லது 9-ல் சனி இருந்தால், ரசலிங்கப் பூஜையில் மேன்மை உண்டாகும். ஐந்தாம் அதிபதி குருவாகி 9-ல் இருக்க, தங்கம் சேரும் யோகம் வரும். சந்திரன் 5-ஆம் அதிபனாகி 9-ல் அமர்ந் தால், ஔஷத சித்தி; ரசமணிகள், ரசலிங்கத்தின் மூலம் பெரும் பொருட்சேர்க்கை உண்டாகும்.
பொதுவாக ஐந்து, ஒன்பதுக்கு உடையவர்கள், விரயமோ மறைவோ பெற்று தோஷமடைந்தால் கிரக சாந்திகள் செய்து ரசவாத சித்தியால் பயன்பெறலாம். ஏழாமிடத்தில் செவ்வாய், பூர்வத்தில் குரு, ஜீவனத்தில் சுக்கிரன் அமர்ந்தால் ரசலிங்க வழிபட்டால் பல சாதனைகள் செய்வார்கள் என்று அகத்தியர் பாடல் கூறுகிறது.
செல்: 95511 84326