சென்ற இதழ் தொடர்ச்சி...
யானையானது ஆலயங்களில் மட்டுமே திறந்தவெளியில் நின்று பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்துகொண்டிருக்கிறது. ஆலயத்திலுள்ள விநாயகர் வடிவமாகவும், குருவின் வாகனமாகவும், லட்சுமி தேவியின் சந்நிதியில் தோரணச் செல்வியாகவும், முருகனுக்கு வாகனமாகவும், தெய்வங்களின் கருவறை கோபுரத்தின்மேல் ஆவரணபீட சக்தியாகவும் பொறிக்கப்பட்டுள்ளதை அறிவோம்.
மன்னர்களின் வாரிசுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது மாலை அணிவித்து பதவிப்பிரமாணம் ஏற்க வைப்பதும் ஐராவதம் என்னும் யானையே.
உடல்நலமில்லாத பிள்ளைகள் நலமாக வேண்டி, தெருவில் உலாவரும் யானையின்மேல் சிறிதுநேரம் அமரச்செய்து பிரார்த்தனை செய்வார்கள். சிறப்பிற்குரிய இந்த ஐராவதம் தெய்வமுகமாக விளங்குவது எப்படியென்று, லட்சுமி தேவி பாற்கடலில் தோன்றிய வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து அறிந்து தெளியலாம்.
ஒருசமயம் இந்திரன் தனது ஐராவத யானையின்மீது அமர்ந்து உலா வந்துகொண்டிருந்தான். அதேசமயத்தில் துர்வாச முனிவர் திருக்கயிலாயம் நோக்கிச்சென்று கொண்டிருந்தபோது இருவரும் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். இந்திரனுக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பிய துர்வாசர், மகாவிஷ்ணு அவருக்கு அளித்திருந்த அழகான பாரிஜாத மலரை இந்திரனுக்குக் கொடுத்தார். அதன் புனிதத்தன்மையை உணராத இந்திரன் யானையின் தலைமீது அலட்சியமாக வைத்தான். தலைமீது பூ பட்டவுடன் அது அசைவு கொடுக்க, அது தரையில் விழுந்தபோது காலால் மிதித்துக் கசக்கிவிட்டது. இக்காட்சி யைக் கண்டு கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற துர்வாச முனிவர், "இந்திரனே, மகாவிஷ்ணு எனக்கு அளித்த சக்தி வாய்ந்த மலரை நீ அலட்சியம் செய்த தால், லட்சுமி தேவி உனக்களித்த செல்வங்கள், பதவி அனைத்தும் விலகிப்போகட்டும்' என்று சாபம் கொடுத்ததோடு, "மலரை மிதித்த யானையும் தரையில் உருளட்டும்' என்றார். அதேசமயம், "ஐராவதம் பிற்காலத்தில் மிகப்பெரிய புகழைப் பெற்று விடும். பகவான் விஷ்ணுவின் அருட்பிரசாதத் தைத் தலைமேல் ஒரு கணம் தாங்கிய அந்தத் தலை, பரமேஸ்வரனது மூத்த பிள்ளையாகிய கணபதிக்குத் தலையாக அமையும். அந்த நேரத்தில் பாரிஜாத மலரின் மகிமையை உணர்வாய்' என்றார். அவரிடம் மன்னிக்க வேண்டிய தேவர் தலைவன் சாபவிமோசனத்திற்கான வழியையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, மந்தாகிணி நதிக்கரையில் ஜெபம் செய்துவந்த குருவை வணங்கி விமோசனம் பெற்றான்.
சிவாகம உற்சவ விதிகளின்படி, யானை வாகனம் பிரம்மோற்சவ காலங்களில் ஆறாம் நாள் காலையில் திருத்தேர் ஓட்டமும், இரவில் கஜ வாகனத்தில் எழுந்தருளல் என்றும் சிவன், சக்தி, முருகன், ஐயனார் சந்நிதானங்களில் செய்யப்படுகிறது.
சிவராஜதானி என்று புகழ்ந்து பேசப்படுகிற நாகப்பட்டினத்தில் பன்னிரு சிவாலயங்கள் உள்ளன. அந்நகரின் நடுவில் மெய்கண்டமூர்த்தி குமரன் கோவிலின் வரலாறு வியப்பான ஒன்று.
ஒருசமயம் இந்திரன் முருகனை தரிசிக்க வந்த போது, முருகனின் அழகைக்கண்டு அதிசயித்து, அவரிடம் அடையாளமாக ஒன்றை விட்டுச்செல்ல நினைத்தபோது கையில் எப்பொருளும் இல்லாதுபோகவே, தன் வாகனமாகிய ஐராவதத்தை விட்டுச் சென்றான். இந்த ஆலயத்தில் அழகன் முருகனுக்கு ஐராவத யானையே வாகனமாக நின்றுகொண்டிருக்கிறது. கப்பல் வாணிபத்திலிருந்து சில்லரை வணிகம்வரை இன்று வியாபாரச் செழிப்புடன் நாகப்பட்டினம் நகர் விளங்குவதற்கு முக்கிய காரணம், முருகனை எதிர்நோக்கியபடி நின்றிருக்கிற ஐராவதம் என்னும் ஐஸ்வர்யம் என்பதையும், அவரைக் காண திருச்சுற்றில் நிற்கும் குபேரன் என்பதையும் சொல்லவும் வேண்டுமோ!
ஐஸ்வர்யங்கள் பெற ஐராவத வழிபாடு
"மூர்த்தி தியானம்' என்னும் ஓலைச்சுவடி நூலில், மகாலக்ஷ்மி தேவியைப் பற்றி சூட்சும ரகசிய தியானம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது. அதில் பொன்னிற மேனியளாக, பொன்னிற ஆடையணிந்து பத்மாசனத்தில் வீற்றிருக்கும் திருமகள், இருபக்கங்களிலும் யானையின் தும்பிக்கை நுனியிலுள்ள குடங்களின் வழியாக நீராட்டப்படுவதால் ஐஸ்வர்ய லட்சுமியாக மாறி செல்வ மழை பொழிகிறாள் என்று வர்ணிக்கப்படுகிறது. "ஓம் ஐம் ஹேம வர்ணாம்...' என்று தொடங்கி "வல்லபாம்' என்று முடியும் மூன்று அனுவாகங்களாக நிறைவு பெறுகிறது. இதனால்தான் பிரம்மோற்சவ காலங்களில் "கஜபூஜை' என்னும் யானை வழிபாடு பக்தர்களுக்கு ஐஸ்வர்ய லக்ஷ்மி தரிசனம் கிடைக்க நடத்தப்படுகிறது.
அரசாங்கப் பதவி, அரசியல் வெற்றிகளுக்கு ஐராவத பூஜையைத் தொடர்ந்து செய்து வரலாம். "ஒருவர் யானையை வாங்கினார், கடன் வந்ததாம். அதைப் பூஜித்ததால் கடன் சென்றதாம்' என்றொரு சொல்மொழி இருந்தது. ஐராவத வழிபாட்டை விரிவான முறை, இலகு முறை என்ற இரு வகைகளில் செய்யலாம். யானையின் உருவில் அஷ்டஐஸ்வர்யங்கள், அஷ்ட லட்சுமிகள், நாகங்கள், அஷ்ட மங்களங்கள், சந்தனம், தீபம், சங்கு, பாரிஜாத மலர், தெய்வ விருட்சங்களில் செண்பகம், துதிக்கையில் நவநாயகர்கள் உள்ளனர். மங்கள யானையின் படத்தைப் பூஜையறையில் வைத்து ஐஸ்வர்யம் தரும் ஐராவத பிம்பமாக நினைத்து சந்தனம், குங்குமம் வைத்து மலர் சாற்றி, செவ்வாய், ஞாயிறு, பௌர்ணமி, சதுர்த்தி நாட்களில் பூஜிக்கலாம்.
முதலில் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து மலர்களால் அர்ச்சனை செய்து வணங்கியபிறகு-
ஓம் ஸ்வேத வர்ணாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ கஜ: ப்ரசோதயாத்
என்று ஐராவத காயத்ரி மந்திரத்தை மூன்றுமுறை சொல்லவும். தொடர்ந்து கஜபூஜைக்கான விசேட எண்வகை கஜராஜ மூலமந்திரங்களைக் கூறி வாசனை மலர்களால் (வெண்தாமரை விசேடமானது) அர்ச்சனை செய்யவும்.
ஓம் ஐம் அபிரமூ சஹித
ஐராவத கஜாய நம:
ஒம் ஸ்ரீம் கபிலா சஹித
பௌண்டதீக கஜாய நம:
ஓம் சௌம் பிங்கலா சஹித
வாமன கஜாய நம:
ஓம் க்லீம் அனுபமா சஹித
குமுத கஜாய நம:
ஓம் சாம் தாம்ரபரணீ சஹித
அஞ்சனா கஜாய நம:
ஓம் க்லாம் அங்கனா சஹித
புஷ்பதந்த கஜாய நம:
ஓம் கம் சுப்ரதந்தீ சஹித
சுப்ரதீக கஜாய நம:
ஓம் அம் அங்கஜனா சஹித
சார்வ பௌம கஜாய நம:
ஓம் ஐம் ஐராவத கஜ
ஐஸ்வர்ய லக்ஷ்மீ கஜாய நம:
சகல ஆராதனை சுவர்ச்சிதம்
என்றபின் பஞ்ச பூஜைகள்செய்து மங்கள ஆரத்தியுடன் நிறைவுசெய்ய வேண்டும். இங்கே சொல்லப்பட்ட எட்டு ஐராவத கஜங்களும் ஐஸ்வர்ய லக்ஷ்மி வடிவானவை. மிகவும் சக்தி நிறைந்த நாமங்களாக அவரவர் தேவியுடன் காட்சி தருபவை. மாந்திரீக விதிமுறைகளை, துஷ்டதேவதா மந்திரங்களை இந்த பூஜாவிதானத்துடன் கலத்தல் கூடாது. ஆற்று மண், புற்று மண், குதிரைக் குளம்படி மண், யானையடி மண் கலந்து யானை வடிவம்செய்து இப்பூஜையை ஒரு வருடகாலம் செய்துவர, ஐஸ்வர்ய நிலையை அடையலாம்.
கே. குமார சிவாச்சார்யார்
செல்: 91765 39026