ரண்டாமிடத்தில் இருக்கும் கிரகங்கள் தங்களுக்குண்டான குணத்தையும் காரகப் பலன்களையும் கொடுக்கும். இரண்டாமதிபதி நின்ற இடத்தைப் பொருத்து ஒருவரின் வாக்கு, பணவரவு, குடும்ப வாழ்க்கை, குடும்ப நிலை, குடும்ப வருமானம், குடும்ப உறவுகள் என அனைத்து பொருளாதாரச் சூழலையும் அறிந்துகொள்ளலாம். இது திருமண வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கிய இடமாகும்.

இரண்டாமிடம் தோஷமின்றி, இரண்டாமதிபதி நல்லநிலையில் இருந்தால்தான் உரிய வயதில் திருமணம் நடைபெறும். இரண்டாமிடம் கெட்டால் தாமதத் திருமணம், குடும்ப வாழ்க்கையில் பிரிவு, பிரச்சினைகளைத் தந்துவிடும். "காசு இல்லாதவனுக்கு கல்யாணம் எதற்கு?' என்கிற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இரண்டாமிடம் சிறப்பானால் நல்ல வேலை, நல்ல வருமானம் பருவத்தில் கிடைக்கும். அதனால் நல்ல மனைவி, குடும்ப வாழ்க்கை அமையும்.

இரண்டாம் அதிபதி நின்ற இடத்தை வைத்து குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையுமா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

yogam

Advertisment

ஒன்று

இரண்டாமதிபதி லக்னத்தில் அமர்ந்தால் சொந்த ஊரிலிருந்து வருவாய் ஈட்டுவார். செல்வந்தராகப் பிறப்பார் அல்லது செல்வந்தராவார். பேசியே சம்பாதிக்கும் ஆற்றல் இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக, சொந்தங்களுடன் சொந்த ஊரில் வசிப்பார். முக வசீகரம் கொண்டவர். சுபத்தன்மை பெற்றால் நன்கு கல்வி கற்பார். கிடைத்ததைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்.

பாவகிரகச் சேர்க்கை, பார்வை பெற்றால் மந்தபுத்தியும் மாற்று சிந்தனையும் கொண்டவராக இருப்பார். மறைவிட அதிபதிகள் சேர்க்கை நன்மைகளைக் குறைக் கும். அலைந்து திரிய நேரிடும்.

இரண்டு

இரண்டாமதிபதி இரண்டில் ஆட்சிபெற்றால் நல்ல வருமானம் கடைசிவரை குடும்பத்திற்குண்டு. பணக்கஷ்டமின்றி வாழ்வார். சுபகிரக, சுப ஸ்தானப் பார்வை இருந்தால் செல்வம் பலவழியில் வீட்டிற்குக் கிடைக்கும். சொந்தவீடு, வாகனத்தால் வருமானம் பெறுவார். சுய அறிவால் முன்னேற்ற மடைவார். ஆரம்பக் கல்வி நன்றாக அமையும். சுபகிரகப் பார்வை, இணைவானது நல்ல பெயர், கல்வி, தொழில், புகழ் தரும். தீயகிரக இணைவு, பார்வையால் கெட்ட சிந்தனை ஏற்படும். சட்டத்திற்குப் புறம் பானதை சத்ததுடன், தைரியத்துடன் செய்வார். பாதகாதிபதி, மாரகாதிபதி, மறைவிட அதிபதிகள் தொடர்பு அவமானப் பட வைக்கும். நிதானத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் அக்கறை இல்லை யென்றால் சிறு வயதிலேயே திருமணம் நடைபெறும்.

மூன்று

ஆரம்பக் கல்வி ஸ்தானம் மூன்றில் மறைவது- கல்வியில் மந்தம், இடம், பள்ளி மாறிமாறிக் கற்றல், வருமான இழப்பு, சகோதரம் பாதிக்கப்படுதல், எவ்வளவு பணம் கிடைத்தாலும் தங்காமை, வாக்கு தவறுதல் போன்ற கெடுபலனைத் தரும். தசாபுக்திகள் நன்றாக அமையவில்லையென்றால் கல்வித்தடை, இளம்வயதில் பணத்தால் பிரச்சினை, நஷ்டம், கஷ்டம் உண்டு. சுபகிரகப் பார்வை நன்கு அமைந்தால் சகோதரரால் லாபம், சகோதரருக்கு ஜாதக ரால் லாபம் உண்டாகும். ஒருவருக் கொருவர் வருமானத்தைத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வர். கல்வியில் முன்னேற்றம் உண்டு. வீட்டுக்குள் தைரியசாலியாக இருப்பார்.

நான்கு

கற்ற கல்வியால் வேலை கிடைத்து வீடு, வாகனம் பெறுவார். ஆரம்பக் கல்விக்கும் உயர்கல்விக்கும் தொடர்பு, தொடர்ச்சி இருக்கும். பள்ளி, கல்லூரி சொந்தமாக நடத்தக்கூடியவர். நல்ல அறிவுத்திறன் மிக்கவர். கட்டடக்கலை வல்லுனர். வீடு, வாகனத்தால் வருமானம் பெறக்கூடியவர். உறவினர்கள் மெச்சக்கூடிய அளவில் வாழ்ந்துகாட்டுவார். சொந்தங்களை அனுசரித்து அன்போடு வாழ்வார். எதிர்பாராத பணவரவு ஏற்படும். தாயாரால் இவருக்கு அல்லது இவரால் தாயாருக்கு நன்மையுண்டு. தாய்மாமன் உறவு நல்ல முறையில் இருக்கும். பாவகிரகப் பார்வை, சேர்க்கையானது மேற்கண்டவற்றில் நன்மையைக் குறைக்கும்.

ஐந்து

பூர்வபுண்ணிய அருளால், முன்னோர் கள் ஆசியால் குழந்தைகளுக்குத் தேவை யானதைக் கேட்டதும் வாங்கித்தரும் பொருளாதார பலம் இருக்கும். குலதெய்வத்திற்கு கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் பெறுவார். நல்ல சிந்தனை, புத்திக்கூர்மை, அறிவுத் திறமையால் முன்னுக்கு வருவார். குழந்தைகளால் நற்பயனடைவார். ஊர்போற்றும் பதவி, அந்தஸ்து தேடிவரும். பெரிய மனிதர்களின் நட்பு, ஆதாயம், ஆதரவுண்டு. செல்வந்தராகவும் அதிஷ்டசாலியாகவும் இருப்பார். தீயகிரகத் தொடர்பு, சாரம்பெற்றால் நேர்மாறான பலனைத் தரும்.

ஆறு

ஏதாவது நோயால் அடிக்கடி அவதிப்பட நேரும். கூட இருந்தே குழி பறிக்கும் கூட்டம் இருக்கும். எதையும் உடனே புரிந்துகொள்ளாத மந்தபுத்தி ஏற்படும். புரியாமல் எதிர்வாதம் பேசுவார். தவறை ஒப்புக்கொள்ளமாட்டார். பணத்தை வீண்வழியில் வீணடிப்பார். யாரையும் நம்பிப் பணம்கொடுத்தால் திரும்ப வராது. கடன் அன்பை முறிக்கும். எல்லாம் நன்மைக்கே என தோல்வியை ஏற்றுக்கொள்வார். கடன் வாங்கினால் திரும்பச் செலுத்தமுடியாத சோதனை ஏற்படும். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் தேவை. கடன் வாங்காமலும் கொடுக்காமலும் வாழப் பழகிக்கொண்டால் நன்மையே. சுபகிரகப் பார்வை தீமையைத் தவிர்க்கும். நின்ற அதிபதி நல்ல இடத்தில் இருந்தால் கொடுக்கல்- வாங்கல் தொழில் சிறப் பாக இருக்கும். பினாமியாக வாழும் யோகம் தரும். எதிரியை வெல்லும் ஆற்றல் பெறுவார்.

ஏழு

வாழ்க்கைத்துணைவரை நன்றாக வைத்துக்கொள்ளுமளவு பணம், அன்பு நிறைந்தவர். தொழில் கூட்டாளிக்கு இவரால் பணவரவுண்டு. எல்லாரையும் அனுசரித்துப் போகும் குணம் நிறைந்தவர். எல்லாருக்கும் பிடித்தவர். அடுத்தவரை நம்பியில்லாமல், இவரை நம்பி ஆட்கள் இருப்பர். நல்ல சிந்தனையாளர். பழக இனியவர். எல்லா துறையிலும் நண்பர்கள் இருப்பார்கள். எல்லா நிலையில் உள்ளவர்களிடமும் நட்பு பாராட்டுவார். விரும்பிய துணை, ஆசைகள் நிறைவேறும். பிறரை வசீகரிக்கும் ஆற்றல் பெற்றவர். சுபகிரகத் தொடர்புகள் பெரும் பதவியைக் கொடுக்கும். பாவகிரகப் பார்வை, சேர்க்கை நன்மைகளைத் தடை செய்யும். பொறுமை வெற்றி தரும்.

எட்டு

வாக்குத் தவற நேருமென்பதால் யாருக்கும் வாக்குத் தரக்கூடாது. சேமிக்கும் பழக்கம் இருக்காது. வரவுக்குமீறிய செலவுவந்து வாட்டும். அடிக்கடி கடன் தொல்லையால் அவதிப்படுவார். சுயநலவாதியாக, யாரையும் மதிக்காமல், இஷ்டம்போல் வாழ்க்கை நடத்துவார். குடும்பத்திற்குக் களங்கத்தை உண்டுசெய்வார். பொறாமை குணம் கொண்டவர். தவறுசெய்து அகப் பட்டுக்கொள்வார். பாவகிரக பலம்பெற்றால் நிலையில்லா புத்தி ஏற்படும். பைத்தியக்காரராக மாறுவார். தற்கொலை எண்ணம் தோன்றும். வாகன விபத்துகளை சந்திப்பார். அஷ்டமாதிபதி தசை நடந்தால் தீமைகள் உண்டு.

ஒன்பது

அனைத்து பாக்கியங்களும் குடும்பத்திற்குக் கிடைக்கும். தந்தைக்கு லாபகரமானவராக இருப்பார். தந்தைவழி உறவுகள்மீது பற்றும் பாசமும் கொண்டவர். தந்தைவழி சொத்துகள் கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி இருக்கும். சொந்தபந்தத்தை மதித்து நடப்பார். ஒழுக்கசீலர். பெரியவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நிதானமாக யோசித்து செயல்படுவார். யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டார். புத்திசாலி. ஆர்ப்பாட்டமில்லாதவர். பாவகிரகத் தொடர்பு ஏற்பட்டால் பிதுர்வழித் தொல்லைகள் இருக்கும். முன்யோசனையற்றவராக இருப்பார். பாக்கியக்குறை ஏற்படும். எளிதில் யாரையும் நம்பி ஏமாந்துவிடுவார்.

பத்து

தொழில் பக்தி மிக்கவர். உழைப்பாளி. உழைப்புக்கேற்ற உயர்வடைவார். தொழில்மூலம் பணம், புகழடைவார். சிறந்த ஞானி. பின்னர் நடப்பதை முன்னரே யூகிக்கும் ஆற்றல்பெற்றவர். ஜோதிடஞானம் கொண்டவர். வாக்குவழி வருமானம் உண்டாகும். பேச்சுத்திறனால் வருவாய் ஈட்டுவார். தீங்கு நினைக்காதவர். பொறா மைப் படாதவர். போட்டி போட்டு முன்னேறத் துடிப்பவர். சுபகிரக பலமும், தொழிலதிபதி தசையும் நடந்தால் குறுகிய காலத்தில் தொழிலதிபராவார். யாரும் எதிர்பாரத வளர்ச்சி பெற்று செல்வந்தராவார். சனி பலம்பெற்றால் மக்கள் தொடர்புடைய தொழிலால் லாபம் பெறுவார். மறைவிட அதிபதிகள் தொடர்பு, பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டமடைவார். அடிமைத் தொழிலே சிறந்தது.

பதினொன்று

மூத்த சகோதரர்களுக்கு உதவிகரமாக, லாபகரமாக இருப்பார். மூத்த சகோதரர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள். இளைய மனைவி இருந்தால் ஜாதகரால் நன்மை பெறுவார். வாக்கு, கொடுக்கல்- வாங்கல் தொழில், மக்கள் தொடர்புடைய தொழில், பேங்க், கமிஷன் ஏஜென்சி, இன்சூரன்ஸ் போன்றவற்றால் நல்ல லாபம் பெறுவார். குடும்பத்தை லாபகரமாக நடத்துவார். சொந்தபந்தங்கள் போற்றும் நிலை ஏற்படும். வீடு, வாகனம், சொத்துகளால் மன நிம்மதியுடன் வாழ்வார். தீயகிரகப் பார்வை, சேர்க்கை, மறைவிட அதிபதிகள் தொடர்பு லாபத்தைக் குறைக் கும். மேற்கண்டவற்றால் பாதிப்புகளை அடைவர்.

பன்னிரண்டு

சம்பாதித்த சொத்துகளைப் பலவகையில் விரயம் செய்ய நேரும். முன்னோர்களின் குடும்பச் சொத்தை இழப்பார். வீண் விரயங்களால் குடும்பம் நஷ்டத்தையடைந்து கஷ்டம் பெறுவார். தான் தோன்றித்தனமாக சுற்றித் திரிவதால் மதிப்பற்றவராகவும், சகல பாக்கியங்களைப் பெறாதவராகவும் இருப்பார். வரவுக்கு மீறிய செலவு, எதற்கெடுத்தாலும் கடன்வாங்கி வீண்விரயச் செலவு செய்பவராகவும், பணத்தால் நிம்மதி இழந்தவராகவும், அடுத்தவர் என்ன நினைத்தால் என்ன என மனம்போன போக்கில் வாழ்பவராகவும் இருப்பார். பாவகிரகத் தொடர்பு அதிக நஷ்டத்தைத் தரும். சுபகிரக வலுப்பெற்றால் வெளிநாடு சென்று பணம் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்றுவார். சுப ஆதிபத்தியம் பெற்று தசை நடந்தால் வீடு, வாகனம், கல்விக்காக சுபச்செலவு செய்வார்.

இரண்டாமதிபதி நல்ல ஸ்தானங் களில் இருந்தாலும், சுபகிரக வலுப்பெற்றாலும், சுப ஆதிபத்திய சாரம் பெற்று, வலுப்பெற்று தசைநடந்தால் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், நல்ல குடும்பம், வாரிசு யோகம், நல்ல தொழில் பெற்று யோகமான பொற்காலமாக வாழ்வார்.

பரிகாரம்

இரண்டாம் அதிபதியின் பாதிப்பிருந்தால் இரண்டாம் அதிபதிக்குரிய தெய்வங்களை வழிபடுதல் நற்பலன் தரும். தன்னம் பிக்கையுடன், பொறுமையுடன் உழைத்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

செல்: 96003 53748