வறுமை, கலகம், நோய், அவமரியாதை ஆகியவற்றுக் கெல்லாம் காரணமானவர் சனி. பொதுவாக சனி பகவான் நீண்டகால வாழ்வுக்கும், மரணத்திற்கும் காரணமானவர். கருமையான இவர் சூரியனின் புதல்வர். எமதர்மராஜனின் தம்பி. மெதுவான குணம் கொண்டவர். சனி பகவானைப் பொருத்தவரை கேந்திரங்களில் வந்தால் நல்ல பலனையே தருவார். ஜாதகத்தில் எட்டில் சனி உள்ளவர்கள் பெரும்பாலானோர் நீதிபதிகளாகவும், வக்கீலாகவும், காவல்துறையைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். ஏனென்றால் சனி குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்.
சனி பகவான் பலம்பெற்ற ஜாதகர் சர்வசக்திகளையும் பெற வாய்ப்புள்ளவர். உழைப்பவர்களையும், சுயநலமற்ற தியாகிகளையும், மாபெரும் தேசத் தொண்டர்களையும், சமூகநல ஊழியர்களையும் உருவாக்கும் தன்மை சனி பகவானுக்கே உண்டு. ஜாதகத்தில் சனி முதல் நிலையில் இருந்தால் அந்த ஜாதகர் ஒரு நாட்டுக்குத் தலைவராகும் வாய்ப்புண்டு. குறைந்த பட்சம் ஒரு நகரத்திற்காக வாவது தலைமைதாங்கும் சக்தியை சனி உண்டாக்குவார்.
ஒருவருக்கு பலம்பெற்ற சனி இருப்பாரேயானால், உலகியல் அறிவை வழங்கு வார். வெளிநாட்டு மொழி களில் பண்டிதராகச் செய்வார். விஞ்ஞானத்தில் தேர்ச்சி உண்டாக்குவார். நீண்டகாலம் வாழவைப் பவர். இரும்புக்குக் காரகன் சனியே ஆவார். எண்ணெய்த் தொழிலுக்கும் பொறுப் பேற்பார். கருப்பு நிற தானி யங்களின் பிரதிநிதி. இயந் திரங்களில் ஈடுபடுத்துவார். பெரிய இயந்திரச் சாலை களை இயக்குவோரின் ஜாதகங்களில் சனி பகவான் பலம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவர் கிரகங்களில் சேவகர். உடலில் நரம்பு இவர். கல் நெஞ்சன் என்று கூறப் படுவார். ஆனால் ஒருவரது சுயஜாதகத்தில் உச்சமாகவோ ஆட்சியாகவோ இருந்து, சுபகிரகச் சேர்க்கை அல்லது பார்வை பெற்று சுப ஆதிபத் தியம் அடைந்து சுபவீடுகளில் இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகர்களை இமாலய உச்சிக்கு உயர்த்திவிடுவார். வாதம், பித்தம், கபம் என்ற மூன்றில் வாதத்திற்குக் காரண மானவர். தாமச குணத்துடன் நீலக்கல்லுக்குடையவர். காடு, மலைகளுக்கு உரியவர். கீழ்நிலையில் உள்ளவர்கள் தங்கும் இடங்களைத் தனது இடமாகக் கொண்டிருப்பார். ஆண்- பெண், அலி எனும் பிரிவில் அலி இனத் தைச் சேர்ந்தவர். அந்த அலியிலும் ஆண் அலி இவர். ஊழியர் களைப் பிரதிபலிப்பவர். பஞ்சபூதங்களில் காற்று; மேற்கு திசைக்குரியவர். பாவகிரக வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்தவர். நால்வகை உபாயங்களில் பேத உபாயத் திற்குரியவர்.
துலாம் இவரது உச்ச வீடு. மகரம், கும்பம் ஆட்சி வீடுகள். பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு தசை நாதராவார். புதனும் சுக்கிரனும் நண்பர்கள். செவ்வாய், சூரியன், சந்திரன் பகைவர். இவர் காசிக்குச் சென்று லிங்கபூஜை செய்து கிரக வரிசையில் ஒருவரானார். ஒற்றைக் கால் சிறுத்தவர் என்பதால் மந்தநடை நடப்பார். இதனாலேயே மந்தன் எனப் பெயர் கொண்டார்.
தீக்ஷிதர், "திவாகர தனுஜம் சனைச் சரம்' என்று ஆரம்பித்துப் பாடும் கீர்த் தனையில், "காலனின் கைத்தண்டத்தால் அடிபட்டுக் கால் முடமானவர்; மிகவும் துணிவுடையவர்; சிவபெருமானின் அருள் பெற்றோருக்கு எல்லா நன்மைகளை வழங்குவார்' என்று கூறுகிறார். பலவித கொடுமைகளுக்கும் காரண பூதனான சனி பகவானை வழிபட்டுப் போற்றினால் நிவாரணம் உண்டாகத் தடையிராது. சனியை இடைவிடாது தியானம் செய்வோருக்கு நிச்சயமாக நன்மைகள் உண்டாகும். சனியின் அருளைப் பெறும் பரிகாரங்களைக் காண்போம்.
பரிகாரம்-1
சனி தசை, சனி புக்தி நடப்பவர்களும், ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி நடப்பவர்களும் மதுரை மாவட்டம், வேலூர் அருகே ஆறு கிலோமீட்டரில் உள்ள திருவாதவூர் சென்று, அங்குள்ள சிவனை வழிபட்டு, பின்பு அங்குள்ள சனீஸ்வரரிடம் தங்களின் குறைகளைச் சொல்லி மௌனமாக வேண்டிவர வேண்டியது நடக்கும். ஏனென்றால் சனீஸ் வரருக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாதவூரில் உள்ள சிவனை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார்.
அதன்பிறகு இத்தலத்திற்கு வந்து வழிபடுவோரைத் தான் துன்புறுத்துவ தில்லை என்று சிவபெருமானிடம் வரம் பெற்றார்.
அன்றுமுதல் திருவாதவூர் வந்து வழிபடும் பக்தர்களை சனி பகவான் ஒன்றும் செய்வதில்லை. சனீஸ்வரருக்கு வாதத்தை நீக்கியதால் இத்தலம் வாதவூர் எனப் பெயர் பெற்றது.
பரிகாரம்-2
வசதியிருப்பவர்கள் திருநள்ளாறு, தேனி மாவட்டம் குச்சனூர், சிவகங்கை மாவட்டம், சிவகங்கையிலுள்ள சனீஸ்வரர், சிவகங்கை மாவட்டம் பெரிச்சி கோவிலிலுள்ள ஒற்றை சனீஸ்வரர் போன்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு சனீஸ்வரரின் அருளைப் பெறலாம்.
பரிகாரம்-3
"மந்தனாம் சனியே உந்தன் மகத்துவம்
அறிந்துகொண்டேன்
வந்ததோர் துயரம் நீக்கு மனதினில்
அமைதி கூட்டு'
என்று தினசரி காலையில் பூஜை யறையில் 18 முறை சொல்லி வணங்கிட, சனி பகவானின் முழுப்பலனையும் அடைய லாம். மேலும் ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச் சனி உள்ள வர்கள் தினசரி காலையில் காக்கைக்கு சாதம் வைத்துவர தோஷம் நீங்கும்.
பரிகாரம்-4
கீழுள்ள மந்திரத்தை எந்த நேரமும் ஜெபித்துப் பயன் பெறலாம்.
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தா தா.'
செல்: 94871 68174