சாமானியர்கள், "எனக்கும் இதே ராசி, நட்சத்திரம். ஆனால் சிலர் நன்றாகத்தானே இருக்கிறார்கள்' என- பணக்காரர்கள், புகழ்பெற்றவர்களோடு தங்களை ஒப்பீடு செய்வார்கள்.
இன்னும் சிலர், "கெட்டவனெல்லாம் நல்லா இருக்கான். ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்கான். சட்டத்திற்குப் புறம்பான தொழில் செய்றான். பணம் கொட்டுது. சந்தோஷமா இருக்கான்' என கொதிப்பார்கள். "எல்லாம் கலி−காலம். கெட்டவனுக்குதான் இப்போது காலம்' என்ற உண்மையை வேதனையாக, எளிதாகச் சொல்லிவிடுவார்கள். இதில்தான் ரகசியம் அடங்கியிருக்கிறது.
கடவுள் மிகப்பெரியவர். எந்த யுகத்தில் எப்படிப்பட்ட மனிதர்களைப் படைத்து, எதையெதை எப்படி நடத்த வேண்டுமென்பதைக் கடவுளே தீர்மானிப்பார். உலகில் எது நன்மை- தீமை என அவருக்கே தெரியும். அவர் நினைத் தால் அனைவரையும் நல்லவர்களாகப் படைக்கமுடியும். ஆனால், க−யுகத்தில் இந்த வேலையை, இந்த காலத்தில், இவன் இப்படிச் செய்து முடிக்கவேண்டுமென்று தீர்மானித்து, பூமியில் வாழும் சூழலை உருவாக்கி மனிதர்களை உலவவிடுகிறார். இந்த யுகத்தில் இதுதான் நேர்மை, உண்மை, வஞ்சகம், துரோகம் என எதுவுமில்லை. அவரவர் பிராப்தப்படி அவை அன்றாடம் நடைபெறும். அவற்றை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களே நிம்மதியாக இருக்கமுடியும். அடுத்த யுகத்தில் இன்னொரு கிரகத்தில் உயிர்கள் வாழும் சூழலை இறைவன் உருவாக்குவார். அனைத்தும் ஆண்டவன் செயலன்றி வேறில்லை.
சித்தர்கள்
சித்தர்கள் என்ற அறிவியலார்களை அன்றைய பொதுமக்கள் சாமியாராகவும், மேதாவிகளாகவும் எண்ணி விலகியும், விலக்கியுமே வைத்திருந்தார்கள். நெருங்கிப் பழகமாட்டார்கள். ஆனால் மன்னர்களும், வியாபாரிகளும், கடல்கடந்து வணிகம் செய்வோரும், பொருளாதார வளம் பெற்றவர்களும் அவர்களின் ஆலோசனைப்படியே நடந்தனர். சித்தர்கள் தங்களை உண்மையாக நம்பியவர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்கிக் காப்பாற்றினர்.
படைக்கப்பட்ட வாழ்க்கை ஏன், எதற்கு, எப்படி என சிந்தித்து, அதற்கான வழிமுறைகளை சித்தர்கள் வகுத்துள்ளார்கள். சிந்திக்கவைத்து, சில மனிதர்களின் வாழ்க்கையை விதிப்படி மாற்றியமைக்கக் கடவுளால் படைக்கப்பட்டவர்களே சித்தர்கள். சித்தர்கள் கண்டு பிடித்ததைப் பயன்படுத்த வேண்டுமானால், விதி இருந்தால்தான் முடியும். விதியை மதியால் வெல்வதற்கும் விதி வேண்டும். சில விதிவிலக்குகளை இறைவனருளால் நம்நாட்டு அறிவியலார்களான சித்தர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரிகாரங்களாக அருளியுள்ளனர்.
சனி பாதிப்புக் காலங்கள்
ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச்சனி, அஷ்டமச்சனி, கருமச்சனி என ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சனி பாதிப்பு ஏற்படும். குறிப்பாக ஏழரைச்சனி, அஷ்டமச்சனி வரும்போது அதிகமான மன உளைச்சல் காரணமாக வாய்விட்டுக் கதறுவார்கள். எதிர்பார்ப்புகளில் ஏமாற்றங்களைத் தந்து, மனதைக் காயப்படுத்தி உலகை வெறுக்கச் செய்வார் சனி. "என்னால் எல்லாம் முடியும்' என்ற அகங்காரத்தை ஒழிப்பதற்காக, சனி பகவான் நாம் எடுக்கும் முயற்சிகளிலெல்லாம் தோல்வி தந்து, "உன்னால் எதுவும் முடியாது' என்பதை நிரூபிப்பார். நல்லவர்களாகக் காட்டிக் கொண்டவர்களைக் கெட்டவர்களாக்கி அவமானம் தருவார். விரும்பிய காரியங்களைத் தடுத்து நிறுத்தி மன்றாடவிடுவார். ஏமாற்றங்கள், நட்பில் துரோகங்கள் மனதை வாட்டும். நம்பிப் பணத்தைக் கொடுத்து ஏமாறுதல், வாய்ப் பேச்சால் வம்பு, உடல்நலக்குறைவு, நெருங்கியவர்கள் இழப்பு, சொந்தபந்தம், உற்றார்- உறவினர், கண்ணில் படுபவர்களிடமெல்லாம் எதிரியாவது, தற்கொலை செய்யும் அளவு மனக்கஷ்டம் போன்றவற்றைத் தருவார்.
சித்தர் பரிகாரம்
சித்தர்கள் வழங்கிய பரிகாரங்களைப் பின்பற்றியவர்கள் சனி பாதிப்பி−ருந்து தப்பியிருக்கிறார்கள். அஷ்டமச்சனி, ஏழரைச்சனியில் பாதுகாப்புப்பெற எளிமையான பரிகாரம் சித்தர்களால் உபதேசிக்கப்பட்டுள்ளது.
"உணவே மருந்து; உடலே கோவில்; உயிரே கடவுள்' என்ற மும்மந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது உடலைப் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை.
சனி பாதிப்புக்காலங்களில் தொடர்தோல்வியால் மனநிலை பாதித்து, உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. தூக்கம் கெடுகிறது. உடலை வலி−மைப்படுத்த உணவே மருந்து. இரும்புச் சத்து அவசியமென்பதால் தயிர், எள், உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். நோயெதிர்ப்பு சக்திக்காக, செப்புப் பாத்திரத்தில் தூய்மையான நீரூற்றி, அறுகம்புல், துளசி போன்றவற்றை இட்டு அருந்தவேண்டும். குடல் சுத்தத்திற்கு விரதம், மன உளைச்சலால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க நல்லெண் ணெய்க் குளியல், உடலுறுப்புகள் வலுப்பெற விநாயகர், அரசமர வழிபாடு, நோயெதிர்ப்பு சக்திதரும் வழிமுறைகள், அங்கப் பிரதட்சண உடற்பயிற்சி என பாதுகாப்பு வளையத்திற்குள் உடலைக் கொண்டுவருவதால் அலைபாயாத மனநிலை வந்துவிடும். இத்துடன் பலர் பரிகாரம் முடிந்துவிட்டதாய் எண்ணி முடித்துக்கொண்டு பலனை முழுதாய்ப் பெறுவதில்லை.
உடல் மனிதனின் உயிர்வாழும் கோவில். உடலை உணவென்னும் மருந்தால் சரிசெய்து, உடலென்ற கோவிலைக் கட்டிவிடுகிறார்கள். ஆனால் உடலுக்குள் இருக்கும் உயிருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை செய்யாமல் வருந்துகிறார்கள். கடைசி யில் சனி பாதிப்புக்காலங்களில் மிகவும் வருந்து கிறார்கள். உடலென்ற கோவிலையும், உயிரென்ற தெய்வத்தையும் காப்பாற்ற சொல்லப்பட்ட ரகசியம்தான் கணவன்- மனை விக்கிடையேயான கருத்தொருமித்த தாம்பத்திய வாழ்க்கை.
சனி பாதிப்புக்காலத்தில் எதையெடுத்தாலும் பிரச்சினை என்பதால், பெரும்பாலும் தாம்பத்திய உறவுக்கான சூழ்நிலை அமைவ தில்லை. கணவன்- மனைவிக்கிடையே மனஸ்தாபம் அல்லது உடல்நிலை பாதிப்பு அல்லது வேலை விஷயமாக குடும்பத்தைப் பிரிந்து வாழும் சூழல் அமையும். தனக்கோ துணை வருக்கோ நோயோ, கண்டத்தையோ ஏற்படுத்தி விடுவதால், யாராவது ஒருவருக்கு சனி ஏக்கத்தைப் பரிசாக்கிவிடுகிறார்.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனிக் காலங்களில், துணையின் பிரிவு ஏற்படும்போது சிலருக்கு ஆறுதலுக்கு இன்னொரு துணை வழங்கப் படுகிறது. பலர் ஆற்றில் ஒரு கால்; சேற்றில் ஒரு கால் என தடுமாறி அவமானங்களை சந்திக் கின்றனர். வெகுசிலரே அவ்வாறு வரும் துணை யைத் தன்னோடு இணைத்துக்கொண்டு துன்பங்களி−ருந்து தப்பிக்கிறார்கள்.
பொதுவாக, செவ்வாய் என்ற கணவனின் கிரகம் சனி, ராகுவால் பாதிக்கப்படுவதால் பெண்கள் கணவனை இழக்கநேரிடும். சூரியன், செவ்வாய் இணைந்து பாவகிரகப் பார்வை படுபவர்களுக்கு, அந்த தசையில் விதவையாக்கிவிடுகிறது. வாழவேண்டிய வயதில் வாழவிடாமல் செய்துவிடுகிறது. போனஜென்ம சாபத்தால் ஆண் மரணமடைகி றான். பெண் விதவையாக்கப்படுகிறாள். பெண் இறந்தால் ஆண் தாரமிழக்கிறான்.
கணவனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, இளைய தாரமாகிய 11-ஆம் இடம் வலுத் திருந்தால் மறுமணம் செய்து இழந்த வாழ்வைப் பெறுவார். பதினொன்றாம் பாவம் சுபர் பார்வையின்றி, சுக்கிரன் பார்வை பெற்றால், சிலருக்கு நாற்பது வயது கடந்த பின்கூட சனி பாதிப்புக்காலத்தில் இன்னொரு துணை மறை முகமாக அமைந்துவிடுகிறது. 3, 7, 11-ஆம் பாவம் பலமிழந்தவர்கள் மட்டும், குரு பார்வையால்- தன் மனக்கட்டுப்பாட்டால் இத்தகைய துணை யைத் தவிர்த்துவிடுகிறார்கள்.
கர்மவினை
காலபுருஷ தத்துவப்படி கர்ம ஸ்தானாதிபதி சனியானவர் பாதிப்பு தரும் காலங்களில், நாம் முன்பு செய்துவைத்த வினையை செய்வினையாக்கி நம்மை நமக்கு உணரவைப்பார். 5-ஆமிடமான பூர்வபுண்ணியத்திற்கு ஏற்றபடி பலன் தருகிறார். ஆதலால்தான் நமக்கு மட்டுமின்றி, நம் பெற்றோர், கணவன் அல்லது மனைவி, உடன்பிறந்தோர், பிள்ளைகள், நெருங்கிய உறவினர்களுக்கும் பாதிப்பு கொடுத்து, அவர்களால் ஜாதகருக்கு பாதிப்பைத் தருகிறார்.
சனி பாதிப்புக்காலங்களில் "எதைத் தின்றால் பித்தம் தீரும்' என்ற மனநிலையில், தவறான பழக்கவழக்கமான மது, போதைக்கு அடிமை யாகின்றனர். சிலர் கோவில் கோவிலாகச் சென்று கேள்விப்படுகின்ற பரிகாரங்களைத் தன் துன்பம்தீர செய்கின்றனர். தனக்கு யாரோ செய்வினை வைத்ததாக எண்ணி மாந்ரீக மாய உலகத்திற்குச் சென்று அவதிப்படுகின்றனர். முடிவில் அனைத்துப் பரிகாரங்களும் செய்தும் எந்தப் பலனுமின்றி மனம்வருந்தி நிற்கின்றனர்.
தான் கும்பிட்ட கடவுள் கைவிட்டதாகவும், பரிகாரம் அனைத்தும் வியாபாரம் எனவும் கூச்சலிடுகின்றனர்.
நம் ஆத்மாவை மனிதனாக இந்த உலகுக்குத் தந்த தெய்வம் பெற்றோர். குழந்தையாய் இருக்கும் போது நம் மலத்தைத் துடைத்து, உடல் தேற உழைத்து, உயிர் தந்தவர்களை பலர் மறந்தே விடுகிறார்கள். தானாகப் பிறந்து வளர்ந்தது போல், "யார் உதவியுமின்றி உழைத்து உயர்ந்து விட்டேன்' என்கிறார்கள். பெற்றோர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு உழைக்க முடியாத நிலையில், அவர்களுக்கு மருத்துவச் செலவு செய்வதைப் பொருளாதாரச் சுமையாக வும், உடல்நிலை பாதிக்கும்போது சேவை செய்வதை உடல் சுமையாகவும் எண்ணு கிறார்கள்.
உடல் சுமையும், பொருளாதாரச் சுமையும் தராமல் திடீரென்று இறந்துவிடுவதை நல்ல சாவு என புகழும் பழக்கம் வந்துவிட்டது.
"பெற்றவர்களை கவனிப்பவர்களுக்குதான் கடவுள் சோதனைமேல் சோதனை தருகிறார். செய்யாதவர்களைதான் நன்றாக வைத்திருக் கிறார்' என வரும் தலைமுறைக்கும் போதிக் கிறார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது வருங்கால பெற்றோர்களும், மனிதமற்ற அடுத்த தலைமுறையும்தான். உண்மையில் கர்மவினை தீர முதன்மைப் பரிகாரம் பெற் றோரை கடைசிக் காலங்களில் கவனிப்பதே. இதனால் மட்டுமே ஆத்மா சாந்திபெறும். இல்லையென்றால் பெற்றோர்களுக்கு உதவாத வர்களின் சந்ததிகள் அழிந்துவிடும்.
உடன்பிறந்தவர்களுக்கு உரிய நேரத்தில் உதவாமல் தவிக்கவிடுவது மாபாதகச் செயல். உறவினர்களுக்கு கஷ்ட நேரத்தில் உதவாமல், "நீ செய்ததற்கு அனுபவிக்கிறாய்' என்று இகழ்ந்து பேசுவதும் தவறு. தனக்கும் தன் சந்ததிக்கும் அதே பாதிப்பை கர்மவினை வழங்கிவிடும். நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு உதவாமல் எங்கெங்கோ இருப்பவர்களுக்கு அன்னதானம், உதவிகள் செய்வதால் எந்த நற்பலனும் கிடைக்காது. உதவி என்றால் பணம் கொடுப்பது மட்டுமல்ல; நல்வழி காட்டும் ஆலோசனைதான் நம்மைக் காப்பாற்றும் சிறந்த பரிகாரம்.
செல்: 96003 53748