ப் ஜெ. ரமேஷ், கடலூர்-1.
எனக்கு தற்போது 47 வயது. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்? எனது தகப்ப னார் காலமாகிவிட்டார். பித்ரு தோஷப் பரிகாரத்திற்கு திருவெண் காடு சென்று தர்ப்பணம், மாகாளய பட்ச நவமி திதியில் தர்ப்பணம் கொடுத்தேன். என் தாயாருக்கும் உடல்நிலை சரியில்லை.
ஜெ. ரமேஷ் 21-11-1974-ல் பிறந்தவர். கடக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரன் 8-ல் மறைவு. லக்னத்துக்கு 7-ஆம் அதிபதி சனி 12-ல் மறைவு. ராசிக்கு 7-ஆம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை. லக்னத்துக்கு அதிர்ஷ்ட அதிபதி 8-ல் மறைந்து, அதிர்ஷ்டக் குறைபாட்டைக் கொடுக்கி றார். மேலும் அம்சத்தில் சனி, சுக்கிரன், சந்திரன் நீசம். திருமணத்திற்குரிய அத்தனை கிரகங்களும் நீசமாகி உள்ளன. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சூரியன், ராகு, சுக்கிரன் மூவரும் ஒரே நட்சத்திரக் காலில் நின்று கிரக யுத்தம் பெற்றுள்ளனர். மேலும் கிரகண தோஷமும் உள்ளது. பூர்வ ஜென்ம பாவங்களே உங்களுக்கு குடும்பம், குழந்தைகள் என ஒரு பந்தம் ஏற்படவிடாமல் தடுக்கிறது. நடப்பு சனி தசையில், சந்திர புக்தி. இந்த காலகட்டத்தில், தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. 2021, அக்டோபர் முதல் 2023, ஏப்ரல் வரை சந்திர புக்தி நடக்கும். உங்களுக்கு பித்ரு தோஷம் உள்ளது. அதற்குரிய பரிகாரத்தை ஏற்கெனவே செய்துவிட்டீர்கள். 5-ஆமிடத்திலுள்ள கிரகச் சேர்க்கை புத்திர தோஷம் உள்ளதைக் காட்டுகிறது. இதற்கு நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் சென்று, காலையில் கோமதி அம்மன் மற்றும் சங்கர நாராயணரை வணங்குவது அவசியம். சந்நிதியை 27 முறை சுற்றிவரவும். சனி, சந்திர சந்திப்பில், பிறமதப் பெண் ணோடு குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று அமைய வாய்ப் புள்ளது. உங்கள் தாயார் ஜெ. மகாலட்சுமி 28-2-1953-ல் பிறந்தவர். மிதுன லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். நடப்பு குருதசையில் கேது புக்தி 2022, ஆகஸ்ட் வரை. உடல்நிலை சற்று பாதிக்கக்கூடும். கேது 2-ல் இருப்பதால் கண் பிரச்சினைகள் வரும். வியாழக்கிழமைதோறும் விநாயகரையும், இஷ்டமான சித்தரையும் வணங்கவும்.
ப் ஏ. சேது, மதுரை-20.
எனக்கு தாமதத் திருமணம் நடந்தது. இரு பெண் குழந்தைகள் உள்ளன. வாழ்க்கை துன்பமாகவும் போராட்டமாகவும் உள்ளது. வீண் அவதூறு, வீண்பழி வந்து சேர்ந்துள்ளது. என் வாழ்வில் விடிவு வருமா?
25-6-1970-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் சூரியன், செவ்வாய், புதன். மேலும் தனஸ்தானத்தில் சுபகிரகம் சுக்கிரன் அமர்ந்திருந்தாலும், அவர் இரு பாவர்களுக்கிடையே சிக்கிக்கொண்டு விழிக்கிறார். அதிர்ஷ்ட அதிபதி சனி நீசபங்கம். ராசியில் ராகு; 7-ல் கேது. எனவே, இதுபோன்ற அமைப்பு ஜாதகரை முன்னேறவிடாமல் வாழ்க்கையில் வேகத்தடையை ஏற்படுத்திவிடுகிறது. நடப்பு கேது தசை 2027, ஜூன் வரை. எனவே, சற்று வீண்பழிகளை சுமக்கவேண்டிய நிலை உருவாகும். கேது தசையின் தீமைகள் விலக சித்ரகுப்தனை வணங்கவேண்டும். மேலும் மதுரை மீனாட்சி அம்மனையும், அங்குள்ள விநாயகரையும், சண்டிகேஸ்வரரையும் வணங்குங்கள். அடுத்துவரும் சுக்கிர புக்தி பணவரவையும் சுபச் செலவுகளையும் தரும்.
ப் விஜயராகவன், புதுச்சேரி.
என் மைத்துனர் மகன் ரங்கசாமி திருமணம் எப்போது நடக்கும்?
ரங்கசாமி 22-6-1990-ல் பிறந்தவர். கன்னி லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நடசத்திரம். லக்னத்துக்கு 7-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷ ஜாதகம். மேலும் 4-ல் அமர்ந்த சனி, ஏழாம் அதிபதி குருவைப் பார்க்கிறார். அதனால் திருமணம் தாமத மாகிறது. நடப்பு குரு தசையில் சுக்கிர புக்தி 2022, ஆகஸ்ட் வரை. அதற்குள் திருமணம் நடந்துவிடும். இவருக்கு விருப்பத் திருமணம் என்று நடந்தாலும், அது உங்கள் சொந்த இனத்தில் நடக்கும். அனேகமாக அவர் வேலை செய்யும் இடத்திலிருந்தே பெண் அமைவார். சனி, குரு ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால், ஒருமுறை திருவிடை மருதூர் சென்று வழிபடவும். திருமணம் தாமதப்படுபவர்கள் மூன்று மாலைகள் வாங்கி முருகன், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளிக்கிழமையன்று சாற்றி வழிபடவும்.
ப் சங்கரன், தென்காசி.
சொத்து பாகப்பிரிவினை நீண்டகால மாக இழுத்துக்கொண்டே இருக்கிறது. எப்போது சொத்து எனக்குக் கிடைக்கும்?
23-12-1963-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். தனுசு லக்னத்தில் சூரியன், கேது, செவ்வாய், புதன் என நான்கு கிரகங்களின் சேர்க்கை. உங்களுக்கு வாழ்வின் எந்த செயல்களுமே எளிதாக, நிறைவாக நிறைவேறாது. கிரக யுத்த ஜாதகம். பூர்வபுண்ணியக் குற்றமுள்ள ஜாதகம். தினந் தோறும் சிவனை வணங்கவேண்டும். நடப்பு சுக்கிர தசை- உங்கள் தனுசு லக்னத்திற்கு 6-ஆமிட தசை. 2011 முதல் ஆரம்பித்து உங்களை எப்போதும் ஒருவித பதட்டம், நிம்மதியின்மையிலேயே வைத்துள்ளது. நடப்பு சுக்கிர தசையில் குரு புக்தி. குரு, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குச் செல்வதற்குள், இந்த சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை மட்டும் திருப்தியாக வாங்கிக்கொள்ளுங்கள். பங்காளிகள் பாகப்பிரிவினை வருத்தங்கள் நீங்கி நல்லமுறையில் சொத்து கிடைக்க, விழுப்புரம்- திருவாமத்தூர் சென்று வணங்கவும்.
ப் சித்ரா சங்கரன், தென்காசி.
எனது உடல்நிலை, சொத்து வரவு பற்றிக் கூறவும்.
சித்ராசங்கரன் மகர லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். நடப்பு சனி தசை- 58 வயதுவரை. இதில் தற்போது சந்திர புக்தி 2022, ஜனவரி 27 வரை. சனி தசை, சந்திர புக்தி நடந்ததால் உங்கள் உடல், மனநிலை சற்று சோர்வாக, நிம்மதியில்லாமல் இருந்துள்ளது. அடுத்து 2023, பிப்ரவரி வரை செவ்வாய் புக்தி. இதில் உங்கள் பூர்விக சொத்து கிடைக்கும். மேலும் சனி தசை, செவ்வாய் புக்தி என்பதால் உறவினரோடு பகையும் ஏற்படும். உங்களுக்கும் உஷ்ணம் சம்பந்த பிரச்சினைகளும், அதிக கோபமும் உண்டாகும். இந்த கால கட்டத்தில் சிவதரிசனமும், வில்வ பூஜையும் நன்மை தரும். மாதத்திற்கு ஒருமுறை சிவன் கோவில் சண்டிகேஸ்வரருக்கு பொங்கல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்யவும். செவ்வாய், சனி சம்பந்தம் ஏற்படும் காலகட்டங்களில் இந்தப் பரிகாரம் சிறப்பு டையது.
ப் மகேஸ்வரி, திருச்சி.
தற்போது ஆரம்பித்துள்ள ராகு தசை எப்படியிருக்கும்?
31-7-1973-ல் பிறந்தவர். கன்னி லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். லக்னாதிபதி புதன் 10-ல் சனி மற்றும் கேதுவுடன். 4-ல் ராகு. ராகு கேது சாரம்; கேது ராகு சாரம். சாரப் பரிவர்த்தனை. நடப்பு ராகு தசை 2021, அக்டோபரில் தொடங்கியுள்ளது. வீடுகொடுத்த குரு நீசம். இந்த ராகு தசை, ராகு புக்தி நல்ல பலன்கள் கொடுத்தால், அடுத்துவரும் புக்திகள் கெடுபலன்களைக் கொடுக்கும் என்பர். அது எப்படியிருப்பினும், ராகு தசை நடப்பில் ஜாதகர்கள் கவனமாக இருந்துகொள்ளவேண்டும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடல் பரிசோதனை செய்யவும். வீடு, வாகனங்களில் பழுது நீக்கிக்கொள்ளவும். தாயார் உடல்நலனில் கவனம் தேவை. வேலை செய்யுமிடத்தில் அவமானம், பொய் குற்றச் சாட்டு வராமல் பார்த்துக்கொள்ளவும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தனிச்சந்நிதியிலுள்ள துர்க்கையை வணங்கவும். கோவிலில் சுவாமி அருகேயுள்ள விளக்கு எரிவதற்கு நெய் வாங்கி அர்ச்சகரிடம் கொடுக்கவும். திருநாகேஸ்வரம் சென்று அர்ச்சனை செய்யவும். அரச மரத்தடியிலுள்ள, நாகர் ஜோடிக்கு வெள்ளிக்கிழமைகளில் பால், மஞ்சள், சந்தன அபிஷேகம் செய்து, பூ சாற்றி விளக்கேற்றி வழிபடவும். ராகு தசை, ராகு புக்தி நடப்பவர்கள் அனைவரும் இந்தப் பரிகாரங்களைப் பின்பற்றலாம்.
ப் வெங்கடகிருஷ்ணன்.
தற்போது சற்று பிரச்சினைகள் உள்ளன. அடுத்துவரும் கேது தசை எவ்வாறு அமையும்?
10-6-1967-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். நடப்பு புதன் தசையில் சனி புக்தி. அதனால் வேலை, உடல்நிலை சற்று பிரச்சினை தந்துகொண்டிருக்கும். இது 2023, மார்ச் வரை இருக்கும். அதுவரை சக்கரத்தாழ்வாரை வணங்கவும். 2023-க்குப்பிறகு கேது தசை ஆரம்பித்து ஏழு வருடங்கள் நடக்கும். அப்போது நிறைய சுபச்செலவுகள், பயணங்கள், சில ஆரோக்கியக் குறைபாடுகள், தடங்கல்கள், சில கெட்ட பழக்கம் எல்லாம் ஏற்படும். விநாயகர் மற்றும் துர்க்கை வழிபாடு சிறப்பு. மிதுன ராசிக்கு அஷ்டமச் சனி நடப்பதால் அதுவும் மனக்குழப்பம் தரும்.