ப் கே. சத்யா, திருப்பூர்.
எனக்குத் திருமணம் தடைப்பட்டு வருகிறது. எப்போது நடக்கும்? நல்ல வரனாக அமைவாரா?
21-9-1994-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். ராசியில் 7-ஆமதிபதி புதன் உச்சம். சுக்கிரன் ஆட்சி. உங்கள் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானாதிபதி சந்திரன்- சனி, கேது என்னும் இரு பாவர்களிடையே சிக்கிக்கொண்டுள்ளார். இந்த பாபகர்த்தாரி யோகத்தால் மாங்கல்ய பாக்கியம் தாமதமாகிறது. மேலும் 7-ஆமிட செவ்வாய் தோஷமும், ராசிக்கு 2-ல் கேது- 8-ல் ராகு என நாகதோஷமும் உண்டு. 7-ஆமிட செவ்வாய், சூரியனைப் பார்க்கி றார். இதுவும் திருமணத் தடையைக் கொடுக்கும். சுக்கிரன், ராகு சேர்க்கை. நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி 2023, ஆகஸ்ட் வரை. இதில் உங்கள் இனத்தில், சற்றே வேறு பிரிவு உள்ளவர் வரனாக அமைவார். அவர் அரசுப்பணியில் பெரிய உத்தியோகம் பார்ப்பவராக அல்லது அவரது தந்தையின் வியாபாரத்தை கவனித்துக்கொள்பவராக இருப்பார். செவ்வாய், சூரியன் பார்வை தோஷம் நீங்க உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவிலிலுள்ள, சோமாஸ்கந்தர் அமைப்பிலுள்ள சிவனை வணங்கவும். கருடனுக்கு வெள்ளிக்கிழமை நெய்தீபமேற்ற, திருமணம் சீக்கிரம் கூடிவரும்.
ப் பி. ரூபா, திருப்பூர்.
நான் மூன்றுமுறை சி.ஏ., தேர்வெழுதி தோல்வியடைந்து விட்டேன். மீண்டும் மே மாதம் தேர்வெழுதவுள்ளேன். அதில் வெற்றிகிட்டுமா? அரசுப்பணி அமைய வாய்ப்புள்ளதா?
25-12-1997-ல் பிறந்தவர். கும்ப லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் 11-ல் உள்ள சூரியனை சனி பார்க்கிறார். எனவே, அரசுப் பணி கிடைக்க தடை செய்வார். நீங்கள் சி.ஏ., எனும் கல்வியை மறுபடியும் முயற்சி செய்யுங்கள். நடப்பு சனி தசையில் சனிபுக்தி. அடுத்து 2022, நவம்பர் மாதம் புதன் புக்தி ஆரம்பம். அதில் உங்கள் சி.ஏ., கனவு பலித்துவிடும். உங்களின் குரு நீசபங்கமாகி நிற்பதால் எந்த விஷயமும் உடனே நடக்காது. பல தடங்கலுக்குப் பிறகுதான் நடக்கும். கல்வி முயற்சிகளில் வெற்றிபெற விரும்புவோர், வீட்டில் ஹயக்கீரிவர் படம் வைத்து ஏலக்காய் மாலை சாற்றி நெய்தீபமேற்றி வழிபட, நீங்கள் எதிர்பார்த்த கல்வி வெற்றிகள் தேடி ஓடிவரும்.
ப் எஸ்.வி. கிருஷ்ணன், சென்னை-42.
என் மூத்த மகனுக்கு 42 வயதாகிறது. அவனுக்கு 4-ஆம் தசையாக சனி தசை நடக்கவிருக்கிறது. அந்த தசை விபத்தார தசையென்றும், மாரக தசை அல்லது மாரகத்துக்கு ஒப்பான சிரமங்களை சந்திக்கும் தசை என்றும் ஏற்கெனவே "பாலஜோதிடம்' இதழில் படித்துள்ளேன். இதற்குப் பரிகாரம் உள்ளதா?
உங்கள் மகனின் பிறந்த தேதி 23-3-1980. மீன லக்னம், மிதுன ராசி, மிருகசீரிடம் நட்சத்திரம். எப்போதுமே 4-ஆம் தசையாக சனி தசை வந்தால், அது மாரக தசை என்பர். இது செவ்வாய் சார நட்சத்திரமான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 4-ஆவது தசை சனி தசையாக அமையும். உங்கள் மகனுக்கு நடப்பு சனி தசை. மீன லக்னத்து சனி 11, 12-ஆம் அதிபதி. அவர் 6-ஆமிட சிம்மத்தில் மறைந்துள்ளார். இதில் அவர் விபரீத ராஜயோகம் பெறுகிறார். கூடவே குருவும் உள்ளார். மேலும் சனி 8-ஆமிடத்தையும் பார்க்கிறார். எனவே நீங்கள் மிகவும் சஞ்சலப்பட வேண்டாம். வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் ஆயுள் விருத்திக்கான தலம். அங்குசென்று வணங்கவும். ஆயுள் சம்பந்தமான பரிகாரமெனில் சனிக்கிழமை சனீஸ்வரர் மற்றும் பைரவர் வழிபாடு சிறப்பு. விளக்கேற்றி வணங்கவும்.
ப் ஆர்.எம்.கே. பாஸ்கர், நாட்டரசன் கோட்டை.
நினைவு தெரிந்த நாள்முதல் மிகுந்த வேதனையை அனுபவித்து வருகிறேன். அச்சுத் தொழிலில் குறைந்த சம்பளம். சினிமாவுக்கு கதைகள் எழுதிவைத்திருக்கிறேன். அதன் மூலம் முன்னேறமுடியுமா? தாயாருக்கும் உடல்நிலை சரியில்லை. என் இரு மகன்களின் ஜாதகமும் இணைத்துள்ளேன். அவர்கள் எதிர்காலம் எப்படியிருக்கும்?
நீங்கள் 22-6-1963-ல் பிறந்தவர். தனுசு லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னத்தில் கேது. 7-ல் சூரியனும் ராகுவும் இணைவு. இதனால் வெளிவட்டாரப் பழக்கம் ஒரு மறைவு நிலையிலேயே இருக்கும். லக்னாதிபதி குரு அம்சத்தில் நீசம். அதிர்ஷ்ட அதிபதி சூரியனும் அம்சத்தில் நீசம். தனாதிபதி எட்டாமதிபதி சாரம். "நான் நன்றாக இருக்கிறேன்' என்று எழுதியிருந்தால்தான் நம்பியிருக்க மாட்டேன். நடப்பு ராகு தசையில் குரு புக்தி. இதில் தாயாரின் நிலையை கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். சினிமாவுக்கு கதை எழுதி பெரிய ஆளாக வரமுடியுமா என்று கேட்டிருக்கிறீர்கள். நீங்கள் நேரிடையாக ஈடுபட வேண்டாம். பிறருக்காக உங்கள் ஊரிலிருந்தே எழுதிக்கொடுங்கள். உங்கள் சொந்தப் பெயரில் வந்தால் சரிப்படாது. கூடவே அச்சகத் தொழிலையும் பார்த்துக் கொள்ளவும். மதுரையில் இருக்கிறீர்கள். அந்த மீனாட்சி அம்பாளைவிட சிறந்த வழிபாடு ஏது? அவளையே சரணடையுங்கள். அவ்வப்போது வண்டியூர் அம்மனையும் வணங்கி வரவும். மூத்தமகன் கார்த்திகேயன் 29-9-1995-ல் பிறந்தவர். மகர லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். சந்திரன், சுக்கிரன் நீசபங்கம். புதன் உச்சம். இவருக்கு நல்ல வேலையும் அதில் அதிர்ஷ்டமும் கிடைக்கும். சனி, சந்திரன் சம்பந்தம் இருப்பதால், திருமணத்திற்குமுன் திருப்பைஞ்ஞீலி சென்று பரிகாரம் செய்துவரவும். நடப்பு கேது தசை. 29 வயதிற்குப்பின் சுக்கிர தசை ஆரம்பம். அப்போது சிறு தடங்கலுக்குப்பின் திருமணம் நடக்கும். தாய்மாமன் ஆதரவுண்டு. சித்திகளும் ஆதரவாக இருப்பர். இவரது தந்தை சற்று விலகியிருந்தாலே போதுமானது. இவருக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும் என இவரது தந்தை கேட்டிருக்கிறார். இதற்கெல்லாமா ஜோதிடரிடம் கேட்பது? அவரது சாமர்த்தியத்தைப் பொருத்து பிள்ளை பெற்றுக்கொள்வார். தற்போது விநாயகரை வணங்கவும். ஒருமுறை ஆலங்குடி, திங்களூர் சென்று அர்ச்சனை செய்துவிட்டு வரவும். இளையமகன் அழகர் 12-1-1998-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். செவ்வாய் உச்சம். சனி, குரு பரிவர்த்தனை. இவர் எழுத்து, பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குவார். இப்போதைக்கு மாதச் சம்பளத்திற்கு வேலை செய்வார். பிற்காலத்தில் சொந்த தொழில் செய்யும் வாய்ப்புண்டு. உடன்பிறந்தவரிடம் சுமுகமாக இருப்பார். நடப்பு சனி. 29 வயதிற்குள் திருமணம் நடந்துவிடும். மிதுன ராசிக்கு அஷ்டமச்சனி நடக்கிறது. அதனால் சனீஸ்வர பகவானையும், ஆஞ்சனேயரையும் வணங்கவும். சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை. வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்கவும் நன்று.
செல்: 94449 61845