ரா. முருகையன், கொன்றைக்காடு.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும், பரிகாரங்கள் பல செய்தும் இதுவரை திருமணம் கைகூடவில்லை. என் திருமணத் தடைக்கு என்ன காரணம்?

17-7-1974-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னத்திற்கு 5-ஆமிடத்தில் சனி, சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் இணைவு. கிரக யுத்த ஜாதகம். கிரக யுத்தத்தில் சிக்கிய கிரகங்கள் தங்கள் பலத்தை இழந்துவிடும். சனி, சந்திரன் இணைவு புனர்பூ யோகம் தருகிறது. புதன், சனி, ஒரே நடசத்திரக் காலில் உள்ளனர். மேலும் உங்கள் 3-ஆம் அதிபதி நீசமாகி சூரியனுடன் சேர்ந்துள்ளார். உங்கள் ஜாதகப்படி திருமணம் செய்வதில் உங்களுக்கே நிறைய மணத்தடைகள் உள்ளன. முன்பே திருமணமாகியிருந்தால், அந்த மனைவி விபத்தில் சிக்கியிருப்பார். நடப்பு சனி தசையில் திருமணம் நடக்கும் வாயப்புள்ளது. அந்தப் பெண் திருமண பந்தத்திலிருந்து விடுபட்ட, ஒரு குழந்தையுடன் உள்ள, உங்கள் உறவுக்காரப் பெண்ணாக அமைவார். நடப்பு கும்ப குருவை, உங்கள் ஏழாம் அதிபதி சூரியன் கடக்கும் மாசி மாதத்தில் திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கோவிலில், ஜெயந்திநாதர் மிகப்பெரிய சிலை வடிவில் தியான கோலத்தில் அமர்ந்துள்ளார். அவரை ஒருமுறை வழிபட்டால், திருமணம் முடியுமா- முடியாதா என குழப்பத்தில் இருப்பவர்களுக்கு திருமணம் முடிந்துவிடும். உங்கள் ஜாதகத்தில் சனி 7, 2-ஆமிடங்களைப் பார்வையிடுவதால் பாப கர்த்தாரி யோகமும் உள்ளது. இதுவும் திருமணம் தாமதமாவதற்கு ஒரு காரணமாகும்.

சா. சரவணகுமார், கும்பகோணம்.

Advertisment

நான் மிகவும் உடல் பலவீனமானவன். என் தாய் 15-6-1986- லேயே காலமாகி விட்டார். என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த அம்மாள் மிக மோசமானவர். அவரால் என் வாழ்வு பாழாகிவிட்டது. என் தந்தையும் 2015-ல் காலமாகிவிட்டார். எனக்கு இன்றுவரை நல்ல வேலை அமைய வில்லை. விடிவு எப்போது கிட்டும்? திருமணம் எப்போது நடக்கும்?

22-7-1973-ல் பிறந்தவர். மீன லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னாதிபதி குரு நீசமாகி வக்ரம். அதனால் உச்சநிலை அடைவார். உங்கள் 6-ஆம் அதிபதி நோய்க் குரியவர் 5-ஆமிடம் எனும் ஆரோக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். எனவே, எப்போதும் உடல்நிலை சீராக இராது. அவ்வப் போது வைத்தீஸ்வரன் கோவில் சென்று வரவும். செவ்வாய், சனி சம்பந்தம். பூர்வீக சொத்து சம்பந்தமாக வழக்கு போட்டால் ஓரளவு கிடைக்கும். நடப்பு செவ்வாய் தசை 2023, பிப்ரவரி வரை. இதில் உங்களுக்கு நன்கு தெரிந்த பெண்ணுடன் திருமணமாகும் வாய்ப்புள்ளது. அடுத்துவரும் ராகு தசையில் ஒரு இஸ்லாமியர் நடத்தும் போக்குவரத்துக் கடையில் வேலை கிடைக்கும். நீங்கள் பிறந்த திலிருந்து நடந்துவந்த தசைகள் 6-ஆமிட சம்பந்தம் கொண்டவை. அதனால் வாழ்நாள் முழுவதும் ஏதோவொரு இடைஞ்சலை அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த ஜாதகத்தில் மீனம் எனும் உபய லக்ன பாதகாதிபதியும் 6-ஆம் அதிபதியும் சேர்க்கை. மேலும் சனி, செவ்வாய், ராகு- கேது சம்பந்தம். இதனால் எதைத் தொட்டாலும் விருத்தியில்லாமல் இருக்கிறது. நாகை மாவட்டம், சீர்காழியிலுள்ள சட்டைநாதர் கோவில் சென்று, தேய்பிறை அஷ்டமியில் அஷ்ட பைரவர்களையும் வழிபட கஷ்டங்கள் காணாமல் போகும்.

Advertisment

Q&A

கண்ணா, சேலம்.

எனக்கு 47 வயதாகிறது. திருமணம் எப்போது நடைபெறும்?

31-7-1974-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். லக்னத்தில் ராகு, 7-ல் கேது. 7-ஆம் அதிபதி சுக்கிரன் 8-ஆம் வீட்டில் சனி மற்றும் புதனுடன் மறைவு. சனி, செவ்வாயை 3-ஆம் பார்வையால் நோக்கு கிறார். 3-ஆமதி பதி சனி 8-ஆம் வீட்டில் மறைவு மற்றும் சுக்கிரன், புதனுடன் புதனின் வீட்டில் உள்ளார். இவரின் 5-ஆம் அதிபதி குரு வக்ரமாகி 7-ஆம் அதிபதி சுக்கிரனைப் பார்க்கிறார். உங்களுக்கு காதலில் இருக்கும் ஆர்வம் கல்யாணத்தில் இருக்காது. தசா இருப்பு எழுதவில்லை. அனேகமாக 6-ஆமிட செவ்வாய் தசைதான் நடந்துகொண்டிருக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் சுப்பிரமணியருக்கு தீபமேற்றி வழிபடவும். வரும் ராகு தசையில் ஒரு பெண்ணோடு, திருமணமாகாமல் சேர்ந்துவாழ வாய்ப்புண்டு. விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது.

எஸ். பி. கே, ஜெயராமன். கோடங்கிப்பட்டி, தேனி.

வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துவருகிறேன். சொத்துப் பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும்? என் இரண்டு மகன்களின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். பெரிய மகன் திருமணம் எப்போது நடைபெறும்? வேலை, வீடு பற்றியும் கூறவும்.

5-6-1954-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். லக்னாதிபதி குரு பாதகஸ்தானத்தில் 6-ஆம் அதிபதியோடு மற்றும் அம்சத்தில் நீசம். உங்கள் செயல்களில் அவ்வப்போது தடங்கல், தடை இருந்துகொண்டே இருந்திருக்கும். சனி 11-ஆமிடத்தில் உச்சமாகி வக்ரம். எனவே நீசம். பணப்புழக்கம் இருந்தும், இல்லாதததுபோல் அமையும். நடப்பு ராகு தசை ராகு புக்தி. 2024-க்குள் சொத்து உங்கள் அனுபவ பாத்தியதைக்கு வந்துவிடும். நீங்கள் இராஜபாளையம் அருகிலுள்ள தாருகாபுரம் மத்தியஸ்நாதர் சிவன் கோவில் சென்று வழிபடவும். வழக்கிலுள்ள சொத்தை உங்கள் வசமாக்க இயலும். யாராவது சித்தரை வழிபடவும். சனி 8-ஆம் வீட்டையும், 8-ஆம் அதிபதியையும் பார்ப்பதால், பலமான ஆயுள் உண்டு. மூத்த மகன் 7-6-1994-ல் பிறந்தவர். மகர லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரம். மகர லக்ன 7-ஆம் அதிபதி, 8-ஆம் அதிபதி சூரியனுடன்கூடி 5-ல் உள்ளார். இதன்மூலம் இவருக்கு வரும் மனைவி குடும்ப பராம்பரியத்தில் சற்று குறைகள் தென்படும். நடப்பு ராகு தசை. 2022, ஜனவரிக்குமேல் ராகு தசையில் புதன் புக்தி. அதில் திருமணம் முடிந்துவிடும். குலதெய்வ வழிபாடு அவசியம். இவர் வாழ்க்கையில் கடன் வாங்கினால், கடன் பெருகிவிடும். கவனம் தேவை. இரண்டாவது மகன் சிப்பு சாண்டில்யன் 4-4-2000-ல் பிறந்தவர். மகர லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் கேது, 7-ல் ராகு. நாகதோஷம் உள்ளது. லக்னத்துக்கு 4-ல் ஆட்சிபெற்ற செவ்வாய். எனவே பரிகாரச் செவ்வாய். நடப்பு புதன் தசை 2027, மே வரை நீசபங்க தசை. எந்தவொரு செயலும் தடை, தாமதம், விரயம் ஏற்பட்டு, அலைச்சலுக்குப் பின் நடக்கும். நடப்பு புதன் தசை. ராகு புக்தி 2022, ஜூன் வரை. இதில் இவர் யார் சொல்வதையும் கேட்காமல் அலைந்து கொண்டிருப்பார். வீண் சண்டைகளை இழுத்துவிடுவார். அடுத்துவரும் குரு புக்தி நல்ல பலன்களைத் தரும். நிறைய மேன்மை கள் நடக்கும். இவருக்கு ராசியில் சுக்கிரன் உச்சம். செவ்வாய், சனி சேர்க்கை. அம்சத்தில் குரு உச்சம். லக்னாதிபதி சனி நீசபங்கம். இவருக்கு விவசாயம் சம்பந்தமானது நன்கு அமைந்துவரும். புதன் தசையில் சற்று அலர்ஜி நோய் உண்டாகும். சிம்மக்கல் (மதுரை) ஆதி சொக்கநாதரை வணங்கவும்.