ஆண்மகன் என்றால் முதல் தேவை புருஷ லட்சணமான பணம் சம்பாதிக்கும் நல்ல வேலை. அதைச் செய்யத் தவறுபவரை வீட்டுப் பெண் களான பாட்டி, தாய், அக்காள், தங்கை, மனைவி, மகள், பேத்தி என யாராக இருந்தாலும், பாசமாக இருந்தாலும் பல நேரம் மதிக்கமாட்டார்கள்.
"பணம்தான் வாழ்க்கையா' என்கிற கேள்வி, பக்குவமற்றவரிடமிருந்தே வரும். இன்று நமக்கு அவசரத்திற்குப் பணம் தருபவர்களை "நல்ல மனுஷன்' என நாம் சொல்வதைப்போலவே, மற்றவர்களும் நம்மைச் சொல்வார்கள் என்கிற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். எந்த நேரமும் சோகத்தைச் சொல்பவர்களையும், அறிவுரை சொல்பவர்களையும் யாருக்கும் பிடிக்காது. ஆனால் பணம் வைத்திருப்பவர்களைவிட, நமக்காக செலவு செய்யும் நபர்களைத்தான் எல்லாருக்கும் பிடிக்கும். இது இயற்கை.
ஆணாகப் பிறந்தவருக்கு சில முக்கிய கடமைகள் உள்ளன. பேரனாக, மகனாக, உடன்பிறந்தவனாக, கணவ னாக, மருமகனாக, தந்தையாக, மாமனாராக, தாத்தாவாக என பல பரிணாமம் மாறும்போது, ஒவ்வொன்றுக்கான மனநிலை அறிந்து செயல்பட்டால்தான் முழு வாழ்க்கையைப் பெறமுடியும்.
மகன்
சிறுவயதில் மகனாக இருக்கும்போது செய்ய வேண்டிய கடமை நன்றாகப் படிக்கவேண்டும். உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களின் ஆசை, கனவு அனைத்தும் இந்த இரண்டை நோக்கியே இருக்கும். சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் பார்வை, இணைவு சந்திரனுக்கு இருந்தால் நல்ல உடல்நிலை இருக்கும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேதுவின் இணைவு, பார்வை, தசாக்கள், சனி பாதிப்புக் காலங்கள், ஆறு, எட்டாம் அதிபதிகள் தசை போன்றவை காரணமே இன்றி அடிக்கடி உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும். மருந்துண்ண நேரும். சிலருக்கு உடல்நிலை நன்றாக இருந்தால் கல்வியைக் கெடுக்கும். கல்வி நன்றாக இருந்தால் உடல்நிலையைக் கெடுக்கும். ராகு தசையும் ஏழரைச்சனியும் ஒன்றாக நடந்தால் பெற்றோர் பிரிவு, பெற்றோர்களுக்குள் பிரிவு, ஏமாற்றம், அவமானம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நாணயம் கெடும்.
பரிகாரம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடைய நட்சத்திரத்தின் பெயரில் அடிக்கடி அர்ச் சனை, அபிஷேகம் செய்ய வேண்டும். தசாபுக்தி தெரிந்து அதற்கேற்ற தெய்வ வழிபாடு செய்யலாம். ஆரோக்கியக் குறையுள்ள குழந்தைகளே சொல்பேச்சு கேட்காமல் சேட்டை செய்வார்கள். ஆதலால் பெற்றோர் கள் உணவுப் பழக்கத்தை சரிசெய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் விரும்பியதைக் கொடுக்காமல் தேவையானதைக் கொடுக்கவேண்டும். பொறுமை, நிதானம் பெற்றோர் களுக்குத் தேவை. நல்ல மகனாக வேண்டுமானால், தனக்காக வாழும் பெற்றோரின் பாசம் புரிந்து, வயதான காலத்தில் அவர்களை கவனிக்கவேண்டும். பரம்பரை செழிக்க தகுந்த பரிகாரமே இதுதான்.
உடன்பிறந்தவர்
பதினொன்றாமிடம் மூத்த சகோதரத்தையும், மூன்றாமிடம் இளைய சகோதரத்தையும் குறிக்கும். செவ்வாய் பலமின்றி பாதித்தாலும், 3-ஆமிடம், 11-ஆமிடம், 6, 8, 12-ஆம் இடங்களில் இருந்தாலும் உடன்பிறந்தவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகி பிரிவு, இழப்பைத் தந்துவிடும். இன்று உடன்பிறந்தவர் இல்லாதவர்களுக்கு நண்பர்கள் சகோதர ஸ்தானமாகி விடுகிறார்கள். சகோதர கிரகமாகிய செவ்வாயுடன் சனி, ராகு, கேது இணைவு, பார்வை உறவுகளுக்குள் பாதிப்பைத் தந்துவிடும்.
பரிகாரம்
தற்காலத்தில் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டாகதான் உள்ளது. ஆதலால் உடன்பிறந்தவர்களுக்கு உரியநேரத்தில் உதவுவதைவிட முக்கியமானது உலகில் இல்லை என்கிற உணர்வை வளர்த்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக நடந்துகொள்ள பெற்றோர் அறிவுறுத்தவேண்டும். எப்போதும் அன்பைப் பிறரிடம் எதிர்பார்ப்பதைவிட கொடுத்துப் பார்க்கவேண்டும். சந்தோஷம் இரட்டிப்பாகும். இன்று சிதறிக் கிடக்கும் பல குடும்பங்களுக்கு அடிப்படைக் காரணம் சகோதரர்களின் வீண்கௌரவம், வீராப்பு மற்றும் வீண் பொறாமை போன்றவைதான்; சுயநல நடவடிக்கைகள்தான் என்பதைப் புரிந்து, மாற்றிக்கொள்ள வேண்டும். நல்ல உடன் பிறப்பாக இருக்கவேண்டுமானால் தன்னுடன் பிறந்த அக்காள், தங்கைக்கு கடைசிவரை ஏதாவதொரு விதத்தில் உதவிகரமாக, துணையாக நிற்கவேண்டும்.
கணவன்
ஆண்களுக்கு இருப்பதிலேயே முக்கியமான பொறுப்பு கணவன் என்கிற ஸ்தானம். மனைவியை சரியாகக் கையாளத் தெரிந்தவரால் மட்டும்தான் இந்த ஜென் மத்தில் நிம்மதியாக வாழமுடியும். 2, 7-ல் சூரியன், 2, 4, 7, 8-ல் செவ்வாய், ராகு, 7-ல் சுக்கிரன், சனி, 11-ஆமிடம் வலுப் பெறுதல் போன்ற அமைப்பு திருமண வாழ்க்கையைக் கெடுக்கும். பாவகிரகங்கள் இணைவு, பார்வை 2, 4, 7, 11-க்கு ஏற்பட்டால், களத்திரதோஷம் ஏற்பட்டு இல்லற வாழ்க்கையைக் கெடுக்கும். தன, குடும்ப ஸ்தனமான 2-ஆமிடம், சுகத்தை அள்ளித் தரும் 4-ஆமிடம், வாழ்க்கைத் துணையின் 7-ஆமிடத்தில் சுபகிரகம், சுபகிரகப் பார்வை, இணைவு போன்ற அமைப்புகள் இருந்தால், பருவத்தில் திருமணமாகி சந்தோஷகரமான இல்வாழ்க்கை பெறுவர்.
பரிகாரம்
செவ்வாய் தோஷம், நாகதோஷம், களத்திர தோஷம் உள்ளவர்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்வது மிகச்சிறந்த பரிகாரம். பொதுவாக, ஒழுக்கமான ஆண்- பெண்கள் சரியாகக் குடும்பம் நடத்தமுடியாமல் தவிப்பதற்குக் காரணம், நடைமுறை தெரியாமல், ஏமாற்றத்திற்குப் பழகாமல் இருப்பதுதான். இளமையில் திருமணம் செய்யவேண்டுமானால் பெண்களைப் புரிந்து கொள்வது அவசியம். வாழ்க்கையில் மனைவி என்கிற உறவைத் தவிர மற்ற அனைத்து உறவுகளும் ரத்த சொந்தம் கொண்டவை. ஆனால் மனைவி புதிய சொந்தம். நேற்றுவரை இன்னொரு வரின் மகளாக வாழ்ந்தவர், திருமணத்திற்கு மறுநாளிலிருந்து மனைவியாகி வந்ததும் தன்மீதும், தன் குடும்பத்தின்மீதும் அன்பு, பாசம் கொள்ள எண்ணுவது இந்த காலத்தில் எதிர்பார்க்க முடியாது. அப்படி நினைக்க வைத்த பெற்றோரும், சமூகமும் இன்றில்லை. ஒத்துவந்தால் சேர்ந்து வாழலாம்; இல்லையென்றால் பிரிய வழியுண்டு என பல பெண்கள் எண்ணுகின்றனர். எனவே, அவர் களுக்குப் பிடித்தபடி வாழும் கலையை ஆண்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
பெண்களின் எண்ணிக்கை இன்று குறைவாக உள்ளதால் ஆண்களுக்குப் பெண் கிடைப்பதே வரமாகிவிட்டது. இன்று இந்த நிலைக்குக் காரணம், கடந்த சில வருடங்களில் பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டி கருக்கலைப்பும், கொலையும் செய்ததுதான். மனைவி என்பவள் தனி உயிர். தனி உணர்வுகள் அவர்களுக்கும் உண்டு என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களின் ஆசைப்படி அனுசரித்து வாழ்ந்தால் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தமுடியும். குறிப்பாக, "காசு இல்லாதவன் கல்யாணமே பண்ணிக்கக் கூடாது. ரோஷம் உள்ளவன் குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடாது. ரோஷக்காரனுக்கு கடன் கொடு; மழுங்கப் பயலுக்கு பெண் கொடு' போன்ற அனுபவப் பழமொழிகளில் வாழ்க்கைச் சித்தாந்தம் அடங்கியிருக்கிறது. மொத்தத்தில் கோபப் படாமல், கோபம் வந்தாலும் வெளிக்காட்டா மல் நடிக்கத் தெரிந்த நடிகனாக மாறினால் தான் குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும். மனைவியை மகிழ்ச்சி யாக வைத்துக் கொண்டால்தான் மாமனார், மாமியாரிடம் நல்ல மருமகன் என்கிற பெயரெடுக்க முடியும்.
தந்தை
ஐந்தாமிடமாகிய புத்திர ஸ்தானம் கேந்திர, திரிகோணத்தில் இருந்து, சுபகிரகப் பார்வை பெற்றால் வாரிசு யோகமும் குழந்தைகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். ஐந்தாமிடம் 3, 6, 8, 12-ல் இருப்பது, ஐந்திற்கு பாவகிரக சம்பந்தம் உண்டானால், புத்திர தோஷத்தால் குழந்தை பாக்கியக்குறை உண்டாகும். அல்லது குழந்தைகள் வளர்ச்சி கெடும். ஆண்களில் பலர் பொருளாதாரரீதியாக வலுப்பெற்ற பின்தான் திருமணம் செய்கிறார்கள் அல்லது பெண் தருகிறார்கள். சிலர் உடல்நலக் குறைவால் குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்சினையை சந்திக்கிறார்கள். இதனால் கணவன்- மனைவி தாம்பத்திய உறவு பாதித்து, தாமதமாகக் குழந்தை பெற்றுக்கொள்வதால் குழந்தையை வளர்ப்பது பெரும் சவாலாகி விடுகிறது. களத்திர ஸ்தானமான ஏழாமிட மும், புத்திர ஸ்தானமான ஐந்தாமிடமும் சுபத் தன்மையுடன் இருந்தால் சரியான வயதில் திருமணம் நடந்து, புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
பரிகாரம்
இளமையில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியம் புரிந்து திருமண முயற்சி செய்தல் வேண்டும். மகளுக்கு அன்பின் காரணமாக செல்லம் கொடுப்பதை விட அனுசரித்து வாழக் கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல உணவு, உடை, கல்வி, வேலை வாங்கிக் கொடுப்பதோடு முடிந்து விடுவதில்லை. தன் மகளின் வாழ்க்கை நன்றாக இருப்பதற்காக, கெட்ட பழக்க வழக்க மின்றி, நிலையான வருமானம் கொண்ட இளம்வயது ஆண்மகனைத் தேடித் திருமணம் நடத்தி வைத்து, மகளுக்குப் பிரசவம் பார்த்து, பேரன்- பேத்திக்குத் துணையானால் தான் நல்ல தகப்பனாக முடியும். உயிருடன் இருக்கும்வரை பிள்ளைகளுக்குத் தேவையான நேரத்தில், தேவையான உதவி செய்தால்தான் நல்ல தந்தையாக வாழ்ந்து பூர்த்தி செய்ய முடியும்.
தாத்தா
சொத்து சேர்த்துவைத்துவிட்டுப் போகி றவர் மட்டும் தாத்தாவாகிவிட முடியாது. நமக்கு நல்லதோ- கெட்டதோ என்றால் ஓடிவந்து பார்க்க சொந்தங்களை சேர்த்து வைத்துவிட்டுப் போகிறவர்தான் தலைசிறந்த தாத்தா. ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானம் நல்ல நிலையிலிருந்து, சுபத்தன்மை பெற்றால் குழந்தைகளின் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வருவார்கள். பேரன்களின் ஜாதகத்தில் ராகு, கேதுக்கள் நன்றாக இருந்தால் தாத்தாவின் வாழ்க்கை நன்றாக இருக்கும். பிள்ளைகளுக்குக் கஷ்டம் கொடுக்காமல், கஷ்டமின்றி வாழ்வார்கள். ராகு, கேது கெட்டிருந்தால் தாத்தா, பாட்டிகளின் பாசம் கிடைக்காமல் போய்விடும்.
பரிகாரம்
ஒவ்வொரு மனிதனும் எதையும் பட்டுத் தெரிந்து, பிறகு திருந்திவாழ நினைத்தால் பாதி வயதும், பாதி வாழ்க்கையும் போய்விடும். அதற்காகத்தான் தான்பெற்ற நல்ல- கெட்ட அனுபவங்களை வாரிசுகளுக்கு உணர்த்திச் சென்றார்கள். இன்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்காத பிள்ளைகளும், தற்பெருமை பேசும் வயதானவர்களும் அதிகரித்துவிட்டனர்.
வழி சொல்வதை விட, "வயதான என்னை என் பிள்ளை கவனிக்க வில்லை' என பழி சொல்கிறார்கள். பணம் கொடுப்பதைவிட நல்ல ஆலோசனைகள் சொல்வதே புண்ணியத்தைத் தரும். பசியோடு இருப்பவனுக்கு அந்த நாளின் உணவுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன்பிடிக்கக் கற்றுத்தந்து, தூண்டிலை வாங்கிக் கொடுப்பதுதான் பெரிய புண்ணியம். பூர்வ புண்ணியத்தை சேர்த்துவைத்தால் ஜாதகத்தில் ஒன்பதாமிடம் வலுப்பெற்று பேரன்- பேத்திகளும் நல்வாழ்க்கை வாழ்வார்கள். யாரென்றே தெரியாத வருக்கு நாம் செய்கிற சிறு உதவி, நம் பிள்ளைகள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் வழியறியாது நிற்கும்போது, சரியான நேரத்தில் யார் மூலமாவது உதவி கிடைக்கும். ஆதலால் நல்லெண்ணத்துடன் வாழ்ந்தாலே நம் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.
செல்: 96003 53748