சென்ற இதழ் தொடர்ச்சி...

குரு

ஜனனகால ஜாதகத்தில் குரு பலம்பெற்று வலிமையுடன் தசாபுக்தி நடத்தினால் உடல் ஆரோக்கியம், மன அமைதி, ஆன்மிக சிந்தனை, தெய்வ பக்தி, நல்ல புத்திரர், நல்ல அறிவு, கற்பு, மந்திர சாஸ்திரம், தெய்வ தரிசனம், தீர்த்த யாத்திரை, ஆன்மிக குருக்களின் நட்பு, சமுதாயத் தில் நல்ல மதிப்பு, பிராமணர் ஆசி, செல்வாக்கு, சொல்வாக்கு ஆகிய நற்பலன்கள் தானாக வந்துவிடும். புகழ்பெற்ற ஆலயங்களில் சுவாமி தரிசனம் எளிதாகக் கிடைக்கும்.

குழந்தைகள் அதிக அன்புடன் இருப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணிய காரியங்கள் செய்வதில் நாட்டம் உண்டாகும். தனுசு, மீன லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். குரு தசை புக்திக் காலங்களில் மிகுதியான நன்மைகள் உண்டாகும். குருவின் புனர் பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர் களால் ஆதாயம் உண்டாகும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் குரு ஓரையில் நடக்கும்.

Advertisment

மஞ்சள்நிற ஆடைகள் அணிவதில் விருப்பமும் சேர்க்கையும் உண்டாகும். பொன், பொருள் சேரும்.

ஆசிரியர்களின் நட்பு கிடைக்கும். ஆலயத் திருப்பணி யில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும். தான, தர்மங்கள் செய்வதில் விருப்பம் அதிகரிக்கும். ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும்.

ஜனனகால ஜாதகத்தில் குருபலம் குறைந்தவர்களுக்கு அவப்பெயர், ஆரோக்கியமின்மை, ஆன்மிக நாட்டக் குறைவு, பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஏற்படும். திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும்.

Advertisment

பரிகாரம்

ஜாதகத்தில் குரு பகவானால் பிரச்சினைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய பசுக்களுக்கு அகத்திக் கீரை, தீவனம் தரவேண்டும். அல்லது யானைக்கு அறுகம் புல், கரும்பு போன்ற உணவளிக்கலாம். வசதியற்றவர் களின் திருமணத்திற்கு, தாலிக்கு பொன்தானம் தரவேண்டும்.

வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு செய்யவேண்டும். குருவின் தலமான ஆலங்குடி சென்று குரு வழிபாடு செய்யவேண்டும். திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடவேண்டும். வியாழக்கிழமை களில் கொண்டைக்கடலை சாப்பிடவேண்டும்.

சுக்கிரன்

ஜனனகால ஜாதகத்தில் சுக்கிரன் சுப வலுப்பெற்று தசை நடத்தினால், வாழ்க்கை யில் பூரண சுகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். பெண் நண்பர்கள் கிடைப்பார்கள். கலை, கவிதை, நடிப்பு, அழகு, ஆடம்பரத்தில் நாட்டம் மிகும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சுக்கிர ஓரையில் நடக்கும். ரிஷபம், துலா லக்னம், ராசியில் பிறந்தவர்களுடன் தொடர்புண்டாகும். சுக்கிரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். சுக்கிர தசை, புக்திக் காலங்களில் நற்பலன்கள் மிகுதியாகும். சேமிப்புகள் அதிகமாகும்.

லட்சுமி, விஷ்ணு அம்ச பெயர்களைக் கொண்டவர்களுடன் நட்பு உருவாகும். வெள்ளைநிற ஆடைகளின் சேர்க்கை, அணிவதில் ஆர்வம் உண்டாகும். விலையுயர்ந்த உணவு வகைகளை உண்பதில் நாட்டம் இருக்கும். அலங்காரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உயர்ரக ஆடை, ஆபரணம், வாசனை திரவியங் கள் பயன்படுத்தி தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். சொகுசு வாகனத்தில் பயணம் செய்வார்கள். ராஜபோக வாழ்வு, பலமாடி வீடு கட்டுதல் ஆகிய நற்பலன்கள் மிகும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் காரக கிரகம் என்பதால், சுக்கிரன் பலம்பெற்றவர்களுக்கு இனிமையான இல்வாழ்க்கை அமையும்.

ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்து தசை நடத்தினால் வீடு, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை இருக்காது. இளமைப் பொலிவு குறையும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும். இல்வாழ்க்கை நாட்டம் குறையும்.

பரிகாரம்

செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற, புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாகக் கொடுக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபமேற்றி லலிதா சஹஸ்ரநாமப் பாராய ணம் செய்யவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமித் தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்யவேண்டும். இளம் பெண்களுக்கு ஆடை தானம் தரவேண்டும்.

ff

சனி

ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி, பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப நன்மை- தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. அதனால்தான் சனி துலா ராசியில் உச்சமடைகிறார். இவரை கர்மவினை அதிகாரி என்றும் கூறலாம். ஜாதகத்தில் சனியின் வலிமையானது பூர்வஜென்ம வலிமைக்கேற்பவே இருக்கும். 9-ஆமிடம் என்னும் பாக்கிய ஸ்தானம் வலுப்பெற்றவர்கள் ஜாதகத்தில் சனி வலிமையாக இருப் பார். ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட் டால், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிடும். அதே நேரத்தில் யோகப் பலன்களை அனுபவிக்க வேண்டுமென்ற அமைப்பிருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டுசெல்லும் ஆற்றல், வல்லமையும் சனி பகவானுக்கு உண்டு.

இவருக்கு தசாபுக்திகளுடன், அந்தர பலத்துடன், கோட்சார பலமும் அதிகம்.

நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நலக் குறைவு, விபத்துகள், வியாபாரத் தில்- தொழிலில் கடன், நஷ்டம் ஏற்பட்டா லும், அலுவலகத்தில் ஏதாவது பிரச்சினை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும், வீட்டில் பிள்ளைகள் சொல்வதைக் கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், எந்த கிரக தசாபுக்திமூலம் கெடுதல் வந்தாலும், சனீஸ்வரரால்தான் தீமை நடக்கிறது என்ற தவறான எண்ணம் மக்களிடையே இருக்கிறது.

ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர் களுக்கு தன் தசா காலத்தில், தான் நின்ற இடத்திற்கேற்ப ஏராளமான நற்பலன்களை வாரிவழங்குவார். உயர்பதவி, தொழில், அந்தஸ்து என எட்டாத உயரத்தில் ஏற்றி விடுவார். வலிமையிழந்தவர்களுக்கு நீசத்தொழில், வறுமை, சிறை தண்டனை கொடுத்து, பாவ- புண்ணியங்களை உணர்த்தி வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுப்பார். ஒரு ஜாதகத்தில் சனி அமர்ந்த இடத்தை வைத்தே பூர்வஜென்ம பாவ- புண்ணியப் பலனைக் கூறிவிடமுடியும். மேலும் சனி ஒளியற்ற கிரகமென்பதால், தன்னுடன் இணைந்த கிரகத்தின் ஒளிக்கேற்ப நன்மை- தீமைகள் இருக்கும்.

பொதுவாக அசுப கிரகங்கள் தரும் பலன்களில் ஏற்ற- இறக்கம் மிகுதியாக இருக்குமென்பதால் நன்மை வந்தாலும் அந்த நன்மையை அனுபவிக்கமுடியாத சிரமமும் இருக்கும். சர்க்கரை ஆலை அதிபருக்கு சர்க்கரை வியாதியைத் தருவார். சர்க்கரை வியாதி இல்லாதவருக்கு சர்க்கரை வாங்கப் பணமில்லா நிலையைத் தருவார்.

பரிகாரம்

சனி தசை, புக்தி, அந்தர காலங்களிலும், கோட்சார பாதிப்புக் காலங்களிலும் செய்யவேண்டியவை: சனி பகவானின் அருளைப்பெற எருமை, கருப்புநிற நாய் மற்றும் கருப்புநிறப் பறவையான காகம் ஆகியவற்றுக்கு உணவளிக்கலாம். சனித் தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

ராகு

நவகிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு. ஒளி கிரகங்களான சூரிய- சந்திரர்களைத் தன் பிடியில் சிக்கவைத்து செயலிழக்கச் செய்யும் வலிமை மிக்கவர். கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகம் ராகு. மனிதத் தலையும் பாம்பின் உடலும் கொண்டவர். மனித உடலின் ஐம்புலன்களின் வாய், கண், மூக்கு, காது ஆகிய முக்கிய உறுப்புகள் மனிதனின் தலைப் பகுதியில் உள்ளன. தலையும் மெய் என்னும் புலனுக்கு உட்பட்டது. ஆக, ஐம்புலன்களையும் இயக்கி புறச்சிந்தனைகளை உருவாக்கி லௌகீக உலகோடு இணைக்க வைப்பதே ராகுவின் வேலை. லௌகீக உலகோடு இணையும் மனிதனே தவறு செய்வான். ராகு சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசையைக் குறிக்கும்.

ஜாதகத்தில் கேந் திர, திரிகோணங்களில் இருக்கும் ராகுவும், சுயசாரம் பெறும் ராகுவும் தசாபுக்திக் காலங்களில் அதிக வலுப்பெற்று, பூர்வஜென்ம கர்மவினைக்கேற்ற பலனை முழுமையாக அனுபவிக்கச் செய்கிறது. மறைவு ஸ்தானங் களில் உச்சம்பெறாத ராகு விபரீத ராஜயோகத்தையும் தரும். அதேநேரத்தில் அதிக கிரகங்கள் ராகு சாரம் பெறும்போதும், கிரகண காலத்தில் பிறந்திருந்தாலும் ஜாதகரை மீளமுடியா துயரத்தில் ஆழ்த்துகிறது. சிலருக்கு நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, மதம் மாற்றுவது, அந்நிய நாட்டிற்குச் சென்று பிழைக்கவேண்டிய சூழ்நிலை, சிறைத் தண்டனை, விஷமருந்தச் செய்தல், கூட்டுமரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு, மாந்திரீகம், பிறறைக் கெடுத்தல், அந்நியமொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷக்கடி போன்ற பிரச்சினைகளால் பாதிப்படையச் செய்வார். அசுப கிரக தசாபுக்தி, அந்தர காலங்களில் ஏற்ற- இறக்கங்கள் மிகுதியாக இருக்கும் என்பதால், உரிய பரிகார வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க, கெடுபலன்கள் குறையும்.

பரிகாரம்

ராகுவினால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய நாய்களுக்கு பிஸ்கட் கொடுக்கலாம். கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி அல்லது துர்க்கை, காளி, வழிபாடு சிறப்பு. காலபைரவரை வணங்க வேண்டும். பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்யலாம்.

கேது

கேது உருவமில்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால் உடலில் சூட்சுமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்திக்கு ஒப்பிடலாம். குண்டலினி சக்தியைப் பாம்பாக உருவகப்படுத்துகிறார்கள். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசரவென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்துகொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அப்படி இருக்கும்வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம்மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிடமுடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். அதேபோல் லௌகீகம் என்னும் மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை அடக்கி முக்தியடையச் செய்பவர் கேது. முக்தியை ஆன்மா நாடும்வரை அனுபவப் பாடத்தை கற்றுக்கொடுத்துக் கொண்டே இருப்பவர் கேது. தடையில்லாத குண்டலினி சக்தி ஆன்மாவுடன் ஒருமுறை தொடர்பு கொண்டுவிட்டால், இந்த உயிர் எப்படி செல்லவேண்டுமோ அதேவழியில் ஆன்மா செல்லும். கேது- உறவுகளில் இருவகைப் பாட்டிகளைக் குறிக்கும். பாம்பின் தலைப்பகுதியை ராகுவாகவும், வால்பகுதியைக் கேதுவாகவும் உருவகப் படுத்தி இருக்கிறார்கள். எனவே வால் போன்று தொங்கும் எல்லா பொருட்களும் கேதுவாகும். தலைமுடி, கயிறு, நூல் போன்றவை பாம்பின் வால்போன்ற தோற்றமுடியவை. தலைமுடி, கயிறு, நூல் இவற்றில் சிக்கல் விழுந்தால் நீக்குவது கடினம். மனித வாழ்வில் ஏற்படும் தடை, தாமதம், வம்பு, வழக்கு, பிரிவினையை ஏற்படுத்துபவர்

கேது.

கயிறு கட்டுவதற்குப் பயன்படும் பொருள். பாம்பு தன் பிடியிலுள்ள பொருளை வாலி னால் சுற்றி இயங்கவிடாமல் கட்டிப்போடும். அதேபோல் தன் பிடியிலுள்ள மனிதனை இயங்கவிடாமல் கட்டிப் போடுபவர் கேது. ஜாதகத்தில் கேது பலமாக இருப்பவர்கள் ஒல்லியான- குள்ளமான தோற்றத்துடன் இருப்பார்கள். மூளைபலம் மிக்கவர்கள். எப்போதும் உஷாராக- எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றுவார்கள். சுய ஜாதகத்தில் கேது சுபத்தன்மை பெற்றால் ஞானம், மோட்சம், புண்ணிய தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம் கிட்டும். பலமிழந்தால் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட சகவாசம், கீழ்த்தரமான சேர்க்கை, கடுமையான தடை, தாமதம், தடங்கல், மாந்திரீக நாட்டம், பைத்தியம் பிடித்தல், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப் படல் ஆகிய பலன்கள் மிகும்.

பரிகாரம்

எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப் பொருட்களை உணவாகக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். கேது வாலைக் குறிப்பதால், தெய்வங்களில் விநாயகருக்கு துதிக்கையும், ஆஞ்சனேயருக்கு வாலும் இருப்பதால் விநாயகர், ஆஞ்சனேயர் வழிபாடு நல்ல பலன் தரும். மேலும் சடைமுடியும், தாடியும் வைத்திருக்கும் சாது, சந்நியாசிகள் வழிபாடு சிறப்பைத் தரும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சென்று வழிபட இன்னல் தீரும். ஒருவரின் நல்வினை- தீவினைகளே தசாபுக்திகளாக அமைந்து இன்ப- துன்பங்களைத் தருகின்றன; கிரகங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் எத்தகைய யோகமான அமைப்புகள் பல இருந்தாலும், தசாபுக்தி களின் பலன்கள் மிக முக்கியம்.

செல்: 98652 20406