ரு தனிமனிதனுடைய வாழ்வாதாரம் தொழிலை வைத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. வளமான வாழ்க்கைக்கு நிலையான- நிரந்தரமான தொழில் மிக அவசியம். தொழிலை- முதலீட்டை அடிப்படையாகக்கொண்ட தொழில், முதலீடில்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் என இரண்டாக வகைப்படுத்தலாம். முதலீடு போட்டுச்செய்யும் தொழிலை விட முதலீடில்லாமல் கமிஷன் அடிப்படை யிலான தொழிலே அதிக வருமானம் ஈட்டித் தருமென்பது நிதர்சன உண்மை. தற்கால இளைஞர்கள் அதிக முதலீட்டில் தொழில் செய்வதையே பெருமையாகவும், கௌவரமாகவும் நினைக்கிறார்கள்.

122

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கடனில்லா வாழ்வே சிறப்பென்பதால், கடனில்லாமல் இருக்கவே அனைவரும் விரும்பினார்கள். கடனென்பது ஒருவரைக் கவிழ்த்துவிடுமென்பதால் அதை வாங்கவே கூடாது என்கிறவர்களும் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், இன்றைய தலைமுறை யினர் தொழில், வீடு, வாகனம் போன்ற பலவற்றையும் தங்களது இளம்வயதிலேயே அனுபவிக்க ஆசைப்படுகின்றனர்.

கடன் வாங்கித் தங்களது தேவைகளை நிறைவேற்றியாகவேண்டிய கட்டாயத்திற்குப் பலரும் தள்ளப்படுகிறார்கள். அதுவும் தொழிலில் சாதனைபடைத்து முன்னேற விரும்பும் பல இளைஞர்கள், தொழில் மூல தனத்திற்குக் கடன் பெற்றேயாகவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். தற்போது வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்கள் எந்த பிணையமுமின்றி இளைஞர்களுக்குக் கடன்தர முன்வருகிறார்கள். இதுபோன்ற கடன் சலுகைகள் பல இருக்கின்றன. பலருக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். வாங்கிய தொகையை முதலீடாகப் பயன்படுத்தி தொழிலில் வெற்றிவாகை சூடி, கடனையடைத்து முன்னேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். சிலருக்கு எவ்வளவு முயற்சிசெய்தாலும் கடன் கிடைப்பதில்லை. வெகுசிலருக்கு கடன் கிடைத்தாலும் திரும்பக் கட்ட முடியாத சூழ்நிலையால் வாழ்நாள் கடனானியாகிவிடுகிறார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி ஒரு ஜாதகருக்குக் கடன் ஏற்படுவதற்குக் காரணம் பூர்வஜென்ம கர்மவினைகளே. கடன் தொடர்பான அனைத் துப் பிரச்சினைகளையும்- அதாவது கடன் ஏற்படும் காலம், அதனால் உருவாகும் மன உளைச்சல் மற்றும் வம்பு வழக்குக் கடனிலிருந்து மீளும் காலம் ஆகியவற்றை, ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில், கீழே தரப்பட்டுள்ள காரணிகளே தீர்மானம் செய்கின்றன.

ப் ஆறாமிடத்தோடு சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை, புக்தி, அந்தர காலங்களில் கடன் உருவாகும்.

ப் ராகு- கேதுக்களின் தசாபுக்திகள் மற்றும் ராகு- கேதுக்களுடன் சேர்ந்த கிரகங்களின் தசாபுக்திகள் கடனை ஏற்படுத்துகின்றன.

ப் எந்த லக்னமாக இருந்தாலும் புதன் தசை, புதன் புக்திகளில் கடன் ஏற்படுகிறது.

ப் ஆறாம் பாவகத்துடன் தொடர்புடைய எல்லா கிரகங்களுக்கும் கடனை ஏற்படுத்தும் அதிகாரம் உள்ளது.

ப் ஆறாம் பாவகத்தை அல்லது ஆறாம் அதிபதியைப் பார்த்த கிரகம் கடன்வாங்கத் தூண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் பாவகம் பன்னிரு பாவகங்களோடு தொடர்பு பெறும்போது ஏற்படும் கடன் பற்றிய விவரங்கள்:

6- 1 = கடன் வாங்கும் திறன்.

6- 2 = கடனுக்கு பதில் கூறும் திறன்.

6- 3 = கடன் வாங்க எடுக்கும் விடாமுயற்சி.

6- 4 = கடனால் வாங்கப் படும் அசையாச் சொத்து.

6- 5 = பல இடங்களில் நம்பிக்கையின் பெயரில் பெறப் படும் கடன்.

6- 6 = ஒரு கடனைத் தீர்க்கும் மற்றொரு கடன்.

6- 7 = சிற்றின்பத்திற்கான கடன்.

6- 8 = அவமானங்கள் தரும் கடன்.

6- 9 = ஆன்மிகக் காரியக் கடன்.

6- 10 = தொழில் பெருக்கக் கடன்.

6- 11= வட்டி பெறும் கடன்.

6- 12 = தப்பி ஓடவைக்கும் கடன்.

மேலே கூறப்பட்ட இந்த ஆறாம் பாவகம் இல்லை யென்றால் மனித வாழ்க்கையே இல்லை எனலாம். ஒரு மனிதன் வாழ்வில் முன்னேறி வெற்றி, புகழ்பெற வேண்டு மென்றால் உபஜெய ஸ்தானங்கள் எனப்படும் 3, 6, 10, 11-ஆம் பாவகங்களின் உதவிவேண்டும்.

3-ஆம் பாவகமென்பது வெற்றி, முயற்சி ஸ்தானம்; சகோதர சகாய ஸ்தானம்.

10-ஆம் பாவகமென்பது தொழில் ஸ்தானம்; புகழ், அதிகார ஸ்தானம்.

3-ஆம் பாவத்திற்கு பாக்கிய ஸ்தானம் 11-ஆமிடமான லாப ஸ்தானம்.

10-ஆம் பாவத்திற்கு பாக்கிய ஸ்தானம் 6-ஆம் பாவகம்.

அதாவது ஆறாம் பாவகமெனும் பொருள்கடன் இருந்தால் மட்டுமே தன் முயற்சியால் (3-ஆம் பாவகம்) தொழில் செய்து (10-ஆம் பாவகம்) லாபம் (11-ஆம் பாவகம்) எனும் மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியும்.

இதையே வேறுவிதமாகச் சொன்னால் பொருள் கடன் மிகுதியாக இருக்கும் ஒருவரே பொருளீட்ட, உழைக்க முயற்சிசெய்து லாபம் ஈட்டுவார். ஒருவருக்கு எல்லாவிதமான வாழ்வியல் வெற்றியைப் பெற்றுத்தருவது ஆறாம் பாவகமே. அப்படி யென்றால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம்தானே. அது கெட்ட பாவகம், நோய், கடன் என்று ஏன் பயப்படுகிறார்கள்? வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தினால் ஆறாம் பாவகம் நன்மை செய்யும் பாவகம் தான். வாங்கிய கடனைத் திரும்ப அடைக்க முடியாதவர்களுக்கு ஆறாம் பாவகம் சாபம் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அப்படியென்றால் சுய ஜாதகத்தில் கிரக அமைப்பு சரியில்லாத ஒருவர் எப்படி ஆறாம் பாவகத்தால் பலன்பெறமுடியுமென்ற கேள்வி இங்கே எழும். முறையான வழிபாடுகள் மூலம் ஜாதகரை அனைத்துவித சங்கடங் களிலிருந்தும் மீட்கமுடியும். எனவே தலை விதியை சரிசெய்யமுடியாது என்றால் மனிதர்கள் வாழ்க்கையில் கரையேறமுடியாமல் போகும். ஜனனகால ஜாதகத்தில் தற்சமயம் நடைபெறும் தசையின் கிரகத்தினுடைய பலத்திற்கேற்ப மனமும் புத்தியும் இயங்கும். அந்த கிரகம் சார்ந்த செயல்களில் மிதமிஞ்சிய ஈடுபாடு கொள்ளாமல், எச்சரிக்கை உணர்வுடன் மிதமாக செயல்பட்டு, இறையருளைப்பற்றி வாழ்க்கை நடத்தினால் பெருமளவு பாதிப்புகளைக் குறைக்களாம்.

இனி பன்னிரு லக்னங்களுக்கும் ஆறா மதிபதியால் ஏற்படும் தீய பலன்களையும், அதற்கான பரிகாரங்களையும் காணலாம்.

மேஷம்

இதன் லக்னாதிபதி செவ்வாய். ஆறாமதி பதி புதன். இவை இரண்டும் பகை கிரகங்கள் என்பதால் எந்த நிலையிலும் ஜாதகரை கவிழ்க்கவே பார்ப்பார்கள். புதன் மிதுனம், கன்னியில் ஆட்சிபெற்றாலும், கடகம், விருச்சிகம், மீனத்தில் புதன் சுயசாரத்திலிருந்தாலும் கடனால் வேதனை இருக்கும். செவ்வாய் புதனின் நட்சத்திரத்தில் இருந்தாலும் அல்லது புதன் செவ்வாயின் நட்சத்திரத்திலிருந்தாலும் கடன் உருவாகும்.

ஜனனகால ஜாதகத்தில் புதனுக்கு செவ்வாய், சனி, ராகு, கேது சம்பந்தமிருந்தால் ஜாதகர் கடன் என்ற அத்தியாயத்திற்குள் நுழையாமலிருப்பது சாலச்சிறந்தது.

ராசிக்கு புதன் யோகாதிபதியானாலோ அல்லது லக்னாதிபதி மிக நல்லநிலையில் இருந்தாலோ, இதுபோன்று வேறேதாவது விதிவிலக்குகள் ஏற்பட்டாலோ தீயபலன் குறைவுபடும்.

பரிகாரம்

கடுகெண்ணெய்யானது கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும். கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படு வோர் கட்டாயம் கடுகெண்ணெய்யில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும். திருச்செந்தூர் மற்றும் பழனி முருகனை செவ்வாய் ஹோரையில் வணங்கிவிட்டுக் கடனைச் செலுத்தினால் விரைவில் கடன் தொல்லை தீரும். சரபேஸ்வரர் சந்நிதியில் செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6.00 மணிக்குமேல் ஒன்பது நெய்விளக்கேற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். புதன் கிழமைகளில் ஸ்ரீ லட்சுமிநரசிம்மரை வழிபட, கடன்தொல்லைகள் நீங்கி நன்மை பெறலாம்.

ரிஷபம்

ரிஷப லக்னத்திற்கு லக்னாதிபதியே ஆறாம் அதிபதியாக வருவதால், தனக்கு ஏற்படும் கடன் பிரச்சினைக்குத் தானே காரண மாக இருப்பார். கடனை வாங்கும்போது இருக்கும் ஆர்வம் திரும்பச் செலுத்தும் போது இருக்காது. அழகு, ஆடம்பரம் என சுயசெலவால் கடனை அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். எந்த தேவைக்குக் கடன்வாங்கினாலும் சுயதேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையைத் தட்டும்போது மட்டுமே கடனைப்பற்றிய சிறு கலக்கம் இருக்கும். ரிஷபம், துலாத்தில் ஆட்சிபலம் அடைந் தாலும், மீனத்தில் உச்ச நிலையிலிருந்தாலும், மேஷம், சிம்மம், தனுசில் சுயசாரம் பெற்றாலும் ஜாதகருக்கு கடனால் தலைக்குனிவுண்டு. சுக்கிரனுக்கு ராகு- கேதுக்கள் சம்பந்தமிருந் தால் கடுமையான திருமணத்தடை அல்லது விவாகரத்து வரும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல்விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய்தீபமேற்றி வழிபட, கடனுடன், கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகளும் நீங்கும். தாமரைத்தண்டுத் திரி மற்றும் வாழைத் தண்டுத் திரியினால் வீட்டில் தீபமேற்றினால் குலதெய்வக் குற்றம், கோபம்நீங்கி குலதெய்வ அருள் கிடைக்கும்; கடன் நீங்கும். "ஓம் லலிதாம்பிகை தேவியே நம ஓம்' என்னும் மந்திரத்தை தினமும் பூஜையறையில் அமர்ந்து 108 முறை சொல்லி அம்பிகையை வழிபடவும். தினமும் காலையும் மாலையும் சொல்லலாம். நேரம் கிடைக்கும்போதெல் லாம் சொல்லிவர அனைத்து நலன்களையும் தந்தருள்வாள் அம்பிகை.

மிதுனம்

லக்னாதிபதி புதன். ஆறாம் அதிபதி செவ்வாய். மேஷ லக்னத்திற்குக் கூறியபடியே தான். லக்னாதிபதி புதனுக்கு ஆறாமதிபதி செவ்வாய் பகை கிரகம். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். செவ்வாய்தசைக் காலங்களில் மிதுன லக்னத்தாரின் வாழ்க்கை சற்று கொடூரமாகத்தான் இருக்கிறது. செவ்வாய் புதனின் நட்சத்திரத்தில் இருந்தாலோ அல்லது புதன் செவ்வாயின் நட்சத்திரத்திலிருந்தாலோ கடன் உருவாகும். செவ்வாய்க்கோ லக்னாதி பதி புதனுக்கோ குரு பார்வையிருந்தால் பெரிய பாதிப்புகள் இருக்காது. செவ்வாய் விருச்சிகம், மேஷத்தில் ஆட்சிபலம் அடைந் தாலும், மகரத்தில் உச்சம்பெற்றாலும், செவ்வாய் சுயசாரத்திலிருந்தாலும் கடனால் கவலையுண்டு. ஜனன ஜாதகத்தில் புதன், செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் கடன்வாங்கக் கூடாது.

பரிகாரம்

தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமை களில் ஒன்பது அகல்விளக்குகளில் நெய் விட்டு, அதில் தாமரைத்தண்டுத் திரிகளைப் போட்டு, சரபேஸ்வரர் சந்நிதியில் தீபமேற்றி வைக்கவேண்டும். சரபேஸ்வரரின் அருளால் கடன் மற்றும் பல்வேறு தொல்லைகள் நீங்கும். எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் சுந்தரகாண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராய ணம் செய்வதால் நன்மைகள் பல கிடைக்கும். கடன்தொல்லையிலிருந்து மீண்டுவர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பௌர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக் கடனும் அடைபடும்.

கடகம்

லக்னாதிபதி சந்திரன். ஆறாமதிபதி குரு. பொருளாதாரத்திற்கு மிகச்சிறப்பான கிரகச் சேர்க்கை. குரு, சந்திரன் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் தேவைக்கு மிகுதியாகவே பொருளைக் கடனாகவோ, உழைப் பாலோ பெற்றுத்தரும். இதைத்தான் நமது ஜோதிட முன்னோடிகள் குருச்சந்திரயோக மென்று சொல்கிறார்கள். லக்னத்தில் குரு உச்சம்பெற்றாலும், தனுசில் ஆட்சியடைந்தாலும், குருவின் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தாலும், சந்திரனின் நட்சத்திரத்தில் குரு இருந்தாலும் கடன் கதவைத் தட்டும். குரு, சந்திரனுக்கு சனி, கேது சம்பந்த மில்லாதவரை கடனைப்பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. ஏதாவது ஒரு வழியில் "ரொட்டேஷன்' செய்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வார்கள். குருவிற்கு சனி, கேது சம்பந்தம் இருப்பவர்களின் கடன் ஜாதகரை உருத்தெரியாமல் ஆக்கிவிடும். குரு மற்றும் கேதுதசைக் காலங்களில் மிகுந்த கவனம் தேவை.

பரிகாரம்

தொடர்ந்து ஒரு வருடம் மூன்றாம்பிறையை தரிசித்துவர கடன் குறையும். ஜென்ம நட்சத்திர நாட்களில் சிவன் கோவிலில் காலபைரவரை வணங்கிவர கடன் பாதிப்பு குறையும். தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கிடைக்கும். வியாழக்கிழமை காலை 11.00-12.00 மணிவரையான சந்திர ஓரையில் திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதியை அடிக்கடி தரிசித்துவர குரு, சந்திரன் சம்பந்தத்தால் பெரும்பொருள் கிடைக்கும். புற்றுநோய் மற்றும் தொழுநோய் சிகிச்சை மையங்களில் உள்ளவர்களுக்கு நீர், மோர், பழரசம் அருந்தத் தரவேண்டும். தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406