ரிஷபம்

இது ஸ்திர ராசி என்பதால், ஒன்பதாம் அதிபதியான சனி பாதகாதிபதி.லக்னாதிபதி சுக்கிரனே ஆறாமதிபதியாக இருப்பதால், பொருள் கடனைவிட பிறவிக்கடன் அதிகமாக இருக்கும். அதாவது, தன் முன்ஜென்ம வினையால் அல்லது நீத்தாருக்குரிய வழிபாட்டை முறையாகச் செய்யாத முன்னோர் கடன் தாக்கமிருக்கும். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால், பெரும் பாதகத்தைச் செய்ய மாட்டார்கள் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். சனி பாக்கியாதிபதி என்பதால் முழுமையாக பாதகம் செய்ய மாட்டார். சாதகமும், பாதகமும் கலந்தே இருக்கும். ஆனால், ஒன்பதாமிடத்திற்கு ராகு- கேது, குரு சம்பந்தமிருந்தாலும், குருவுக்கும் சனிக்கும் சம்பந்தம் எவ்வகையில் இருந்தாலும், பாதகம் ஜாதகரை நிலையிழக்கச் செய்யும். ஸ்திர லக்னம் என்பதால்- பாதிப்பு எளிதில் விட்டுவிலகாதென்பதால், குரு மற்றும் சனி தசைக் காலங்களில் சுயஜாதகத்தை சரிபார்ப்பது மிகமிக அவசியம்.

பரிகாரம்

குரு, சனி சம்பந்தத்தால் பாதகத்தை சந்திக்கும் ரிஷப லக்னத்தினர், ஜென்ம நட்சத்திர நாளில் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை வழிபட தோஷத்தின் வீரியம் குறையும். அமாவாசை நாட்கள் மற்றும் மகாளய பட்ச காலங்களில் முன்னோர் வழிபாட்டை முறைப்படுத்த, பாக்கியப் பலன் அதிகரிக்கும்.

Advertisment

12

மிதுனம்

இது உபய லக்னம் என்பதால், ஏழாமதிபதியான குருவே பாதகாதி பதி, மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதி யாக இருப்பதால், குரு சுபவலுப் பெறக் கூடாது. மிதுன லக்னத்திற்கு ஆட்சி, உச்சம் பெற்ற குரு தன் தசாபுக்திக் காலங்களில் மீளமுடியாத பாதகம் மற்றும் மாரகத்தை நிச்சயம் கொடுப்பார். லக்னத்திற்கு இரண்டில் குரு உச்சம் பெற்றால், 2, 10 சம்பந்தம்- பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழில் நல்ல லாபம் பெற்றுத்தருமென பலர் கூறுவார்கள். குருதசை நடக்காதவரை இவரே ராஜா! குருதசை, புக்தி வந்தால், லாபத்தைவிட பன்மடங்கு பாதகமும், மாரகமும் இருக்கும். ஆட்சி பலம்பெற்ற குரு திருமணத்தில், திருமண வாழ்க்கையில், தொழிலில், கூட்டாளி கள் மற்றும் நண்பர்களால் சுபத்தைவிட அசுபத்தையே மிகுதிப்படுத்துவார். குருவுக்கு சனி மற்றும் ராகு- கேதுக்களின் சம்பந்தமிருந்தால், ஜாதகருக்கு பாதகமும், மாரகமும் கண்டமாகப் பின்தொடர்ந்து துயரம் தரும். மிதுனம் உபய லக்னம் என்பதால் பிரச்சினை தீவிரமடையுமா? வலுவிழக்குமா என்பதை கோட்சார குரு, சனி, ராகு- கேதுக் களே முடிவுசெய்யும். பாதகாதிபதி குருவே மாரகாதிபதியாக இருப்பதால், கொடிகட்டிப் பறந்த பல மிதுன லக்னத்தினர் குருதசைக் காலங்களில் கடுமையான பாதகம் கலந்த மாரகத்தை சந்தித்திருக்கிறார்கள். லக்னம் மற்றும் ஏழாமிடத்தில் ஆட்சி பலம்பெற்ற குரு பல மிதுன லக்னத்தினருக்குத் திருமணம் என்னும் அத்தியாயத்தைத் தரவில்லை என்பது நிதர்சனமான உண்மை. பல மிதுன லக்னத்தினர் திருமண வாழ்க்கையில் தோல்வியைத்தான் சந்தித்திருக் கிறார்கள். குரு, சனி சம்பந்தம் பல மிதுன லக்னத் தாருக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவைத் தந்தாலும், திருமண வாழ்க்கையில் தோல்வியையும் விரக்தியையும்தான் சந்திக்க வைத்தது. சிலருக்கு நண்பர்களால் ஏற்பட்ட சாதகத்தைவிட பாதகம் கலந்த மாரகமே அதிகம். எனவே, குருதசை, புக்திக் காலங்களில் மிதுன லக்னத்தினர் கவனத் துடன் செயல்படவேண்டும்.

பரிகாரம்

பாதக தோஷத்தால் தொழிலில் இடர்ப் பாடுகளை சந்திப்பவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 மணிமுதல் 3.00 மணிவரையான ராகு வேளையில் பைரவரை வழிபட, உடனே பலன் தெரியும். திருமணத்தடையை சந்திப்பவர்கள் வியாழக் கிழமை வரும் பிரதோஷ வேளையில் நந்திக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்துவர தடையகலும்.

கடகம்

சர ராசியான கடகத்திற்கு பதினொன்றாம் அதிபதியான சுக்கிரன் பாதகத்தைச் செய்வார். கடகத்திற்கு அஷ்டமாதிபதி சனியின் சம்பந்தமானது பாதகாதிபதி சுக்கிரனுக்கு எவ்விதத்தில் இருந்தாலும், பாதகத்தின் விளைவு ஜாதகருக்கு மோசமான கஷ்டத்தைத் தரும். சனி, சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றாலும் ராகு- கேதுக்களின் சம்பந்தமிருந்தாலும் திருமண வாழ்க்கை மனநிறைவைத் தராது. பதினொன்றாமிடமான பாதக ஸ்தானத் தில் எந்த கிரகம் இருந்தாலும், நின்ற கிரகத்தின் தசையின் ஆரம்பத்தில் லாபத்தைக் கொடுத்தாலும் தசையின் முடிவில், கொடுத்ததைவிட பன்மடங்கு அழிவு, ஏமாற்றம் மற்றும் வம்பு, வழக்குண்டு. கடகம் சர லக்னம் என்பதால் பிரச்சினையிவிருந்து மீள்வது எளிது. எனினும், சுக்கிர தசைக் காலங்களில் சுக்கிரன் நின்ற இடத்திற்கேற்ப பலன் மாறுபடும்.

பரிகாரம்

பாதக தோஷத்தால் திருமணத்தடையை சந்திக்கும் கடக லக்னத்தினர் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகலாண்டேஸ்வரியை வழிபட திருமணத்தடை அகலும். ரிஷபத்தில் நின்ற கிரகத்தின் தசைக் காலங்களில், தொழில் இடர்ப்பாடுகளைத் தவிர்க்க, தசைக்காலம் முழுவதும் பிரதோˆ நாட்களில் நந்திக்கு பச்சரிசி மாவில் அபிúˆகம் செய்துவர பாதிப்பு குறையும்.

சிம்மம்

சிம்மம் ஸ்திர லக்னம். பாதகாதிபதி செவ்வாய். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள். சிம்மத்திற்கு ஏக யோகாதிபதி செவ்வாய். இங்கே செவ்வாய் சிம்மத்திற்கு பாக்கியத்தைத் தருவாரா? பாதகத்தைத் தருவாரா என்னும் கேள்வி எழும். சிம்மம் ஸ்திர லக்னமாக இருந்தாலும், சூரியனை லக்னாதிபதியாகக் கொண்ட சிம்ம லக்னத்தவர்களுக்கு அனுபவத்தில் செவ்வாய் பெரும் பாதகத்தைத் தருவது கிடையாது. செவ்வாய்க்கு குருவின் சம்பந்தமிருந்தால் சிறிய பாதகம் உண்டு. கடும் பகைவர்களான ராகு- கேது, சனியின் சம்பந்தம் சூரியன் மற்றும் செவ்வாய்க்கு இருந்தால், பாதக தோஷத்தைத் தரும். குரு, செவ்வாய் சம்பந்தமிருக்கும் சிம்ம லக்னத்தினர் உபரிப் பணத்தை அரசுடைமை வங்கியில் சேமிக்கவேண்டும். தங்க நகைகளை லாக்கரில் வைக்கவேண்டும். பூர்வீக சொத்தைப் பிரித்துப் பத்திரம் எழுதும்போது கவனமாக இருந்தால் பாதிப்பைத் தவிர்க்கலாம்.

பரிகாரம்

ஆந்திர மாநிலம், காளஹஸ்தி சென்று காளத்தியப்பரையும் ஞானப் பிரசுனாம்பி கையையும் வழிபட பாக்கியப் பலனுண்டு. குரு- செவ்வாய் சம்பந்தத்தால் பாதகத்தை சந்திப்பவர்கள், செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணிமுதல் 1.00 மணிவரையான குரு ஓரையில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பான உணவை தானம் தருவது சிறப்பு.

கன்னி

உபய லக்னமான கன்னிக்கு பாதகாதிபதி, கேந்திராதிபதி மற்றும் மாரகாதிபதி குரு. இவர்களுடைய ஜாதகத்தில் பாதகாதி குரு, அஷ்டமாதிபதி செவ்வாய் சம்பந்தம் எவ்வகையில் இருந்தாலும் பாதகம் மிகுதியாக இருக்கும். ஏழில் ஆட்சி பலம்பெறும் குருவும், கன்னி யில் நிற்கும் குருவும் தன் தசை, புக்திக் காலங் களில் திருமணத்தில், திருமண வாழ்க்கையில் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யத் தவறுவதில்லை. ராகு- கேதுக்களின் தாக்கத் தைக்கூட வழிபாட்டால் சரிசெய்கிறோம். பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வரும் கிரகங்கள் விசாரணையே செய்வது கிடையாது. நேரடியாக எதிர்பாராத தண்டனையைக் கொடுத்துவிடுவதுதான் விபரீத விளைவு. உபய லக்னம் என்பதால் பிரச்சினையின் தீவிரத்தை உணரும் முன்பே தண்டனையே கிடைத்துவிடும். மேலும், அனைத்துப் பிரச்சினைக்கும் ஜோதிடரீதியான தீர்வுண்டு என்பதால் பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏழில் மீனத்தில் குரு ஆட்சி பலம்பெற்று, குருதசை நடப்பவர்கள் கவனமாகச் செயல்பட்டால் பாதகத்தைக் குறைக்க முடியும். பல கன்னி ராசியினர் குருதசைக் காலங்களில் கனக புஷ்பராகக் கல்லை அணிந்தே மாரகத்தைத் தேடிக் கொள்கிறார்கள்.

பரிகாரம்

திருச்செந்தூர் முருகனை வழிபட்டு, கடற்கரையிலுள்ள மூவர் சமாதியில் உள்ள சித்தர்களை வழிபட வளம் பெருகும். மிகுதியான மாரகம், பாதகத்தை அனுபவிப்பவர்கள் வசதிவாய்ப்பிருந்தால் அந்தணர்களுக்கு பசுமாட்டை தானம் தரலாம். வசதியில்லாதவர்கள் கோபூஜை செய்யவேண்டும் அல்லது பசுவுக்கு உணவு தரவேண்டும்.

துலாம்

துலாம் சர லக்னம். பாகாதிபதி சூரியன். துலாம் சூரியனின் நீச வீடு என்பதால் பெரிய பாதகத்தைச் செய்வதில்லை. எனினும், 7-ல் உச்சம் பெறும் சூரியன் திருமண விஷயத்தில் ஜாதகருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சூரியன், கேது சாரத்தில் இருந்தால், திருமணத்தால் வம்பு, வழக்கையும், சுக்கிரன் சாரத்தில் இருந்தால் மிகக் காலதாமதமான திருமணத்தையும், சுய சாரத்தில் இருந்தால் திருமணமே கேள்விக்குறியாகும் நிலையையும் தரும். அத்துடன் 1969, 1970-களில் மேஷத்தில் சனி நீசமாக இருந்த காலகட்டத்தில் பிறந்த துலா லக்னத்தினர்- குறிப்பாக, சனிக்கு சூரியன் சம்பந்தம் பெற்ற பல துலா லக்னத்தினர்- திருமணத்தடைக்கான காரணம் தெரியாமல் ஜோதிடர்களை அணுகுவதே இதற்கு சாட்சி. பொதுவாக, சூரியனுக்கு அஷ்டம பாதக தோஷம் கிடையாதெனினும், சூரியனுக்குப் பகை கிரகங்களான சனி, ராகு- கேது சம்பந்த மிருந்தால் சூரியதசை, புக்திக் காலங்களில் பாதகம் தன் கடமையைச் செவ்வனே செய்கிறது.

பரிகாரம்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவிலில் அருள்பாலித்து வரும் சங்கர நாராயணர் மற்றும் கோமதியம்மனை வழிபட, பாதகம் சாதகமாகும். தொடர்ந்து 18 வெள்ளிக்கிழமை சிவன் கோவிலிலுள்ள அம்பிகைக்கு குங்குமார்ச் சனை செய்து வழிபட திருமணத்தடை அகலும்.

விருச்சிகம்

காலபுருஷ அஷ்டம ஸ்தானம். ஸ்திர லக்னம். இதன் அதிபதி செவ்வாய்.ஒன்பதாமதிபதியான சந்திரன் பாதகாதிபதி. சந்திரனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாக்கியாதிபதியா? பாதகாதிபதியா? ஒன்பதாம் அதிபதி சந்திரன் என்பதால் தாய்வழியில் பாதகமா? பாக்கியமா? ஒன்பதாம் அதிபதி என்பதால் தந்தைவழியில் பாக்கியமா? பாதகமா என்னும் சந்தேகம் எழும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமடைகிறார். கடகத்தில் செவ்வாய் நீசமடைகிறார். அதாவது, சர (கடகம்) லக்னத்தின் அதிபதி யாக வரும் சந்திரன் ஸ்திர லக்னமான விருச்சிகத்தில் நீசமடைகிறார். ஸ்திர லக்னத்தின் அதிபதியான (விருச்சிகம்) செவ்வாய் சர லக்னமான கடகத்தில் நீசம்பெறுகிறார். லக்னாதிபதி செவ்வாயின் நீசவீடு கடகம் என்பதால், சந்திரன் தன் தசை, புக்திக் காலங்களில் விருச்சிகத்திற்குக் கடுமையான பாதகத்தை மட்டுமே தருகிறது. ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனிக் காலங்களில் சந்திர தசை நடக்கும் விருச்சிக லக்னத்தினர் மிகுதி யான கர்மவினைப் பதிவை அனுபவிக்கிறார்கள். சந்திரன் உடல்காரகன் மற்றும் மனோ காரன் என்பதால், உடல் உபாதைகள் மற்றும் மன உளைச்சல் ஜாதகரை மனநோயாளியாக மாற்றிவிடுகிறது. லக்னத்தில் சந்திரன் நீசம்பெற்றவர்கள் மனசஞ்சலம் தாளாமல் உயிரைக்கூட மாய்க்கத் தயாராகிவிடுகிறார் கள். ஏழில் சந்திரன் உச்சம்பெற்ற விருச்சிக லக்னத்தினர் திருமணம் ஏன் நடந்தது என்று வருந்தும் வகையில் வாழ்க்கை இருக்கிறது. பாக்கிய ஸ்தானம் வலிமையிழப்பதால், பெற்றோரின் அன்பும் ஆதரவும் குறைவுபடும். ஜாதகரின் சந்திர தசைக் காலங்களில் விருச்சிக லக்னத்தவரின் தாய்- தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும் பாதிப்படைகிறது. பொதுவாக, விருச்சிக லக்னம் காலபுருஷ எட்டாமிடம் என்பதால், எளிதில் எந்தப் பிரச்சினையையும் வெளியில் தெரிவிக்காது. பிரச்சினை தீவிரமடைந்த பின்பே வெளியில் தெரியும். சந்திரனுக்கு சனி சம்பந்தமிருந்தால் புனர்பூ தோஷத்தால் கடுமையான பாதகம் உருவாகும். சந்திரனுக்கு ராகு- கேது சம்பந்தமிருந்தால் புத்தித் தடுமாற்றம் மிகையாக இருக்கும். மிகச்சுருக்கமாக, சந்திர தசைக் காலங்களில் ஜாதகரின் உடலில் உயிரைமட்டும் விட்டுவைத்து மனிதனை நிர்கதியாக்குகிறது. பன்னிரண்டு லக்னங்களுள் பாதக தோஷத்தால் கடுமையான பாதகத்தைச் சந்திப்பவர்கள் விருச்சிக லக்னத்தார்களே.

பரிகாரம்

சந்திர தசையில் பாதகத்தை அனுபவிப்பவர்கள் திருப்பதி வேங்கடாசலபதியை வழிபட மாற்றமும் ஏற்றமும் உண்டு. பௌர்ணமி திதியில், வயது முதிர்த்தவர்களுக்கு உணவு தருவது மிகச்சிறப்பு. பிரதோˆ காலத்தில் பச்சரிசிமாவில் நந்திக்கு தீபமேற்றி வழிபட புத்தித் தடுமாற்றம் மற்றும் மன சஞ்சலம் நீங்கும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406