பராசர முனிவர் கிருஷ்ணாவதாரம் குறித்து மைத்ரேயருக்குக் கூறிவருகிறார்.
"இராமனைப் பிரிந்து வனத்திற்குச் சென்றபிறகு, மறுபடியும் சீதை மரணமடையும் வரை சேர்ந்துவாழவில்லை. தான் கட்டிய மனைவிக்குச் செய்த பாவத்தால், இராமனுக்கு மனைவி சாபம், களத்திர சாபம் உண்டாகிவிட்டது.
லட்சுமணனும் தன் அண்ணனுடன் காட்டிற்குச் சென்றுவிட்டதால், அவனும் தனது மனைவிக்கு, ஒரு கணவன் செய்யவேண்டிய எந்தவொரு கடமையையும், அவள் கணவனால் அனுபவிக்கவேண்டிய எந்தவொரு பாசத்தையும் சுகத்தையும் அனுபவிக்கவில்லை. லட்சுமணன் மனைவி ஒரு துறவிபோல் வாழ்ந்தாள். இதனால் லட்சுமணனுக்கும் களத்திர சாபம் உண்டானது.
ஒரு மகன் தாய்- தந்தைக்குச் செய்யவேண்டிய எந்த கடமையையும் செய்யவில்லையோ, அதேபோன்றுதான் பெற்ற மகன்களான லவன், குசன் ஆகிய இருவருக்கும், ஒரு தந்தை செய்ய வேண்டிய கடன் எதனையும் செய்ய வில்லை. லவனும், குசனும் தங்கள் தந்தை யார் என்று அறியாமல், தந்தையின் பாசத்தை அனுபவித்து மகிழாமல், அனாதைக் குழந்தைகள்போல் வால்மீகி ஆசிரமத்தில் பணிவிடை செய்து தங்கள் உழைப்பால் உணவுண்டு வாழ்ந்தார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parigaram_67.jpg)
இராமன் தான் பெற்ற குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யாததால் புத்திர சாபத்திற்கும் ஆளானார்.
இராமாவதாரத்தில் இராமனும் சீதையும் வனவாசம் சென்றபோது, இராமனுக்கு யாரும் உதவிசெய்யவில்லை. லட்சுமணன் மட்டுமே அவர்களுடன் சென்று இறுதி வரை பல சிரமங்களை அனுபவித்து உற்ற துணைவனாக இருந்தான். இராமன் அவனுக்கு எந்தவிதமான நன்மைகளையும் இராமாவதாரத்தில் செய்யவில்லை. இதனால் இராமனுக்கு சகோதர கடன் ஏற்பட்டது.
இராமன் சீதையை சிறைமீட்க சுக்ரீவனின் உதவிதேவைப்பட்டதால், சுக்ரீவனுக்கு உதவிசெய்வதற்காக சுக்ரீவனின் அண்ண னான வாலியை, நேருக்குநேர் போர் செய்து கொல்லாமல், மரா மரங்களின் பின்னே மறைந்திருந்து அம்பெய்து கொன்றார். உண்மையில் இராமனுக்கும் வாலிக்கும் எந்த சம்பந்தமுமில்லை, பகையுமில்லை. வாலியைக் கொன்றதால் இராமனுக்கு கொலைப்பாவமான பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. மேலும் வானர மிருகத்தைக் கொன்ற பாவமும் சேர்ந்துகொண்டது.
இராமன் தன் சிறுவயதில், தனது அரண்மனையில் வேலைக்காரியாக இருந்த வயது முதிர்ந்த கூனல் முதுகையுடைய, உடல் ஊனமுற்ற கூனியின் (மந்தரை) வளைந்த முதுகில் விளையாட்டாக கவண்கல் எய்து அவளுக்கு கஷ்டத்தை உண்டாக்கினார்.
அதனால் துன்புற்ற மந்தரை மனம் கொதித்துவிட்ட சாபம், ஊனமுற்றவர்களைத் துன்புறுத்திய பாவமாகவும், ஒரு பாமர ஏழையை வதைத்த பாமர சாபமாகவும் இராமனைத் தொடுத்தது.
இராமாவதாரத்தில், இலங்கை வேந்தன் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறைவைத்தபோது, சீதையை சிறைமீட்க இராவணனுடன் நடந்த போரில், இராமனுக்கு உதவிசெய்த ஏராளமான வானரங்கள் இராவணன் படைவீரர்களால் கொல்லப்பட்டனர்.
இராவணனுக்கும், வானரங்களுக்கும் எந்தப் பகையுமில்லை. போரில் அவர்கள் கொல்லப்பட்டது இராமனால்தான்.
அதனால் மிருகங்களைக் கொன்ற பாவமும் இராமனையே சார்ந்தது.
இராமன், லட்சுமணன், சீதை ஆகிய மூவரையும் காப்பாற்றிய வானரங்களுக்கு இராமன், அந்த அவதாரத்தில் எந்த உதவியையும் நன்றியையும் செய்யவில்லை. இதனால் நட்புக்கடன் உண்டானது.
மைத்ரேயனே, மகாவிஷ்ணுவின் இராமாவதாரத்தில் இதுபோன்ற பாவங்களை, இராமன் தனக்குத்தானே உருவாக்கிக்கொண்டார். பல சாபங்களை அடைந்தார். மேலும், தனது முந்தைய அவதாரங்களில் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என பிறருக்கு உதவிசெய்வதற்காக, தனக்கு சம்பந்தமே இல்லாத பலரைக் கொன்றார். பல அசுரமன்னர்களைக் கொன்று அவர்களின் குழந்தைகளுக்கு தந்தை பாசம் கிடைக்காமலும், அவர்களின் மனைவிகளுக்கு கணவன் துணை இல்லாமலும் செய்தார்.
பரசுராம அவதாரத்தில் பல அரசர் களைக் கொன்றார். இதுபோன்று மகாவிஷ்ணு ஒவ்வொரு அவதாரத் திலும் பலரைக்கொன்றும், இன்னும் பல பாவங்களைச் செய்து பாதிக்கப் பட்டவர்களின் சாபத்திற்கு ஆளானார். இந்த அனைத்து பாவ சாபங்களையும் தீர்த்து, அவதாரப் பிறவித் தொடர்ச்சியை பூமியில் முடித்து, மோட்சமடைய வேண்டுமென்ற நோக்கத்தில், மனிதனாகப் பிறந்தது தான் கடைசி அவதாரமான கிருஷ்ணா வதாரம்.''
"பராசரரே, மகாவிஷ்ணு, பூமியில் எடுத்த அவதாரங்களில் இவ்வளவு பாவ- சாபங்களைதானே உருவாக்கி கொண்டதையும் அறிந்தேன். மேலும் பூமியில் எல்லா மனிதர்களிடமும் கடவுள் இருக்கிறார். எல்லா மனிதர்களும் கடவுளிடம் இருக்கிறார்கள். செய்யும் தொழிலின்மூலம்தான் காக்கும் கடவுள் விஷ்ணுவின் கருணையையும், தொழில்மூலம் வரும் பணம், பொருள் சேமிப்புள்ள இடத்தில்தான் லட்சுமி குடியிருப்பாள் என்பதையும் அறிந்தேன்.
முனிவரே, இந்த பாவ- சாபங்களை மகா விஷ்ணு பூஜை, ஹோமம், யாகம், தானம், தர்மம் போன்ற பரிகாரங்களைச் செய்து தீர்க்கவில்லை என்று கூறினீர்கள். கிருஷ்ணா வதாரத்தில் அவற்றை எப்படி நிவர்த்தி செய்தார் என்பதைக் கூறுங்கள். அதற்கு முன்பாக ஒன்றை எனக்கு தெளிவுபடுத்தி விடுங்கள்'' என்றார் மைத்ரேயர்.
(தொடரும்)
செப்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-10/parigaram-t_0.jpg)