மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிற்கும் மனித வாழ்வில் நம் பணிகளை திறம்பட செய்துமுடிக்க கடுமையாக முயற்சிசெய்து வருகிறோம்.
அனைவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒவ்வொருவரின் திறமையும் மற்றவர்களின் திறமையிலிருந்து நிச்சயம் மாறுபடும். முயற்சியில் வெற்றி அல்லது தோல்வியென்பது நம் விதிப்படிதான் நடக்குமென்றாலும், உள்ளுணர்வின் தூண்டுதலால் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஒருசிலர் தங்களின் வெற்றியின் சாதக, பாதகத்தை உள்ளுணர்வின் மூலம் துல்லியமாகக் கணித்துவிடுவார்கள். ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை, தீமைகளை உணர்த்துவது ஜோதிடம் என்றால், அந்த நன்மைகளை சாதகமாக்கவும், தீமைகளைத் தகர்க்கவும் உள்ளுணர்வு மிகமிக அவசியம்.
உள்ளுணர்வென்றால் என்ன?
உடலும் ஆன்மாவும் இணைந்து செயல்படுவதே உள்ளுணர்வு . நம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வுள்ளது. உடலென்பது பிறந்த ராசி. ஒருவர் பிறந்த ராசிக்கேற்பவும், ராசியில் உச்சம், நீசம் பெறும் கிரகத்தின் தன்மைக் கேற்பவும் ஆழ்மனதில், சிந்தனையில், உள்ளுணர்வில் மாறுபாடிருக்கும். ஆழ்மனதில் நல்ல சிந்தனை இருந்தால் உடலும் ஆன்மாவும் இணையும். தீய சிந்தனை இருந்தால் உடலோடு ஆன்மா இணையாது. ஒருவர் எதை நினைக்கின்றாரோ அந்த இடத்திற்கு அவரது ஆன்மா செல்லும். உதாரணமாக, இறைவனை நினைக்கும்போது உடலும் ஆன்மாவும் இணைந்து சூட்சுமசக்தி பெற்று இறைவனிடம் சென்று உள்ளுணர்வு சிறப்பாக இயங்கும். நாம் தீய செயல்களை நினைக் கும்போது சூட்சுமசக்தி அசுப வலிமை பெற்று எண்ணச் சிதறலால் உள்ளுணர்விற்கு வலிமை குறையும். ஒரு மனிதன் சமநிலையில் இருக்கும்போது மட்டுமே உள்ளுணர்வு சீராக இருக்கும். உச்சம்பெற்ற கிரகத்தின் ஆதிக்கத்தால் மிகுதியாகும் உள்ளுணர்வு, நீசம்பெறும் கிரகத்தால் வலிமையிழக்கும் .ஜோதிடரீதியாக சில ராசியினருக்கு இயல்பாகவே அபார மான உள்ளுணர்வுண்டு.
ஒருசிலருக்கு மட்டும் சாத்தியாக இருக்கும் உள்ளுணர்வு ஏன் எல்லாருக்கும் சாத்தியமாகவில்லை என்பதை ஜோதிட ரீதியாக இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராசி மண்டலத்தில் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. அவற்றை நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. பன்னிரண்டு ராசிகளில் எட்டு ராசிகளில் மட்டுமே கிரகங்கள் உச்சம், நீசம் பெறுகின்றன. கிரகங்கள் உச்சமடையும்போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும். உச்ச கிரகங்களின் கதிர்வீச்சு பூமிக்கு மிகுதியாகக் கிடைக்கும். ஒரு கிரகம் நீசம் பெறும்போது பூமிக்கு வெகுதொலைவில் இருக்கும். நீசம்பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்குக் குறைவாகக் கிடைக்கும். ஆக, உச்சமென்பது உயர்வான நிலை, நீசமென்றால் தாழ்வான நிலை என்பது புலனா கிறது. பன்னிரண்டு ராசிகளில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம் ,விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசிகளில் கிரகங்கள் உச்சம், நீசம் பெறுவதால் உள்ளுணர்வு சீராக இருக்காது.
அதாவது உச்சம்பெற்ற கிரகத்தினால் கிடைக் கும் உயர்வான சுப அதிர்வலைகள் நீசம் பெறும் கிரகத்தின் தாழ்வான அதிர்வலைகளால் பயனற்றுவிடும். உச்சம், நீசம் பெறும் கிரகங்களின் தன்மைக்கேற்ப உள்ளுணர்வின் தூண்டுதல்படி எடுக்கும் முடிவும் சில நேரங்களில் சாதகமாகவும் பல நேரங்களில் பாதகமாகவும் இருக்கும். மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் எந்த கிரகமும் உச்சம், நீசம் பெறாததால் உள்ளுணர்வு சீராக இயங்கி, எடுக்கும் முடிவு தீர்க்கமானதாக இருக்கும்.
பன்னிரன்டு ராசிகளுக்கும் ஜோதிட ரீதியாக உள்ளுணர்வில் மாற்றம் ஏற்படுவதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் காணலாம்.
மேஷம்
இதன் அதிபதி செவ்வாய் போர்க்குணம் நிறைந்த கிரகம். செவ்வாய் விவேகமற்ற வேகம் நிறைந்த கிரகமென்பதால் ஆழ்மனதைக் கட்டுப்படுத்தி சிந்திக்கும் திறனைக் குறைக்கும்.மேஷத்தில் உச்சமடையும் கிரகம் சூரியன். நீசமடையும் கிரகம் சனி. ஆன்மாவிற்குக் காரக கிரகமான சூரியன் உச்சம்பெறும் ராசியான மேஷத்தில் வினைப் பதிவைத் தன்னுள் முழுமையாக அடக்கி யிருக்கும் சனி நீசம்பெறுவதால் சுப, அசுப விளைவுகளின் விகிதத்தில் மாறுபாடிருக்கும். அத்துடன் உச்சம்பெறும் சூரியனும் நீசம்பெறும் சனியும் பகை கிரகங்கள் என்பதாலும் மேஷ ராசியினருக்கு உள்ளுணர்வின் தூண்டுதல் குறையும்.
பரிகாரம்: உள்ளுணர்வையும் சிந்திக்கும் திறனையும் அதிகரிக்க துர்க்கையம்மனை செவ்வாய்க்கிழமை ராகுகால வேளையில் ஒன்பது நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பு அணிவது நல்லது.
ரிஷபம்
இதன் அதிபதி சுக்கிரன். மனித வாழ்க்கைக் குத் தேவையான அனைத்து சுகபோகங் களையும் தருபவர். இங்கே உச்சம்பெறும் கிரகங்கள் சந்திரன் மற்றும் ராகு. மனிதனுக்கு சகல சுகங்களையும் தரும் சுக்கிரன் வீட்டில் மனிதனை லௌகீக வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் ராகு உச்சமாவதாலும், ஆன்மிக கிரகமான கேது நீசம் பெறுவதா லும் உடலும் ஆன்மாவும் இணைந்து செயல்படாது. உடல் , மனோகாரகனான சந்திரன், சுக்கிரன் வீட்டில் உச்சம்பெறுவதால் லௌகீகமா, ஆன்மிகமா என்ற தடுமாற்றம் ஏற்பட்டு சீரான உள்ளுணர்வு இருக்காது. ஆத்மஞானத்தை அடைய முடிவதில்லை. மேலும் ரிஷப ராசியினருக்கு இயல்பாகவே எளிதில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சக்தி இருக்காது. லௌகீக நாட்டம் மிகுதியாக இருப்பதால் உள்ளுணர்வு சிறப் பாக இயங்காது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் ஆறு நல்லெண்ணெய் தீபமேற்றி காளியை வழிபட ஆத்மஞானம் அதிகரிக்கும். மேலும் நற்பலன் களை அதிகரிக்க வெள்ளியில் இஷ்டதெய்வ டாலர் மற்றும் காப்பு அணியலாம்.
மிதுனம்
இதன் அதிபதி புதன் புத்திக்காரகன். புத்திக்கூர்மை மிகுதியாக இருக்கும். மிதுன ராசியினர் எப்பொழுதும் திட்டம்தீட்டிக் கட்டம்கட்டி காய் நகர்த்துபவர்கள். மிதுனத்தில் எந்த கிரகமும் உச்சமும் கிடையாது, நீசமும் கிடையாது. இவர்கள் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காரியத்தை சாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு என்பது பழமொழி. பெரும்பாலும் ஆசிரியர்கள், ஜோதிடர்கள், பொருளாதார வல்லூனர்கள் மிதுன ராசியினராகவே இருப்பார்கள். உடல் உழைப்பைவிட புத்தியைப் பயன் படுத்திஉணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், உள்ளுணர்வின் தூண்டுதலால் இவர்கள் எடுக்கும் முடிவு அபாரமான வெற்றியைத் தரும்.
பரிகாரம்: உள்ளுணர்வை மேலும் அதிகரிக்க புதன்கிழமை ராகு கால வேளையில் ஐந்து நெய்தீபமேற்றி ஆதி சேஷனன்மேல் சயனக் கோலத்திலிருக்கும் மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும். ஐம்பொன் கலந்த டாலர் மற்றும் காப்பு அணிய சீரான உள்ளுணர்வு நிலைக்கும்.
கடகம்
இதன் அதிபதி சந்திரன். சந்திரன் இயல்பாகவே மனசஞ்சலம், காம இச்சை, சுகபோக நாட்டம் நிறைந்த கிரகம். நீரைப் போலவே நிலையில்லாமல் மனதை அலையவிடுபவர்கள் . இங்கே உச்சம் பெறும் கிரகம் குரு. நீசம் பெறும் கிரகம் செவ்வாய். ஆன்மிக கிரகமான குரு கடகத்தில் உச்சம்பெறுவதால், ஆன்மா மனதை அடக்க முயன்றாலும் நீசம்பெறும் செவ்வாயால் முடிவெடுக்கும் திறன் குறைந்து கோழைத்தனம் முன் நிற்கும். பல நேரங்களில் உள்ளுஜ்ணர்வின் தூண்டுதலால் சரியான முடிவெடுத்தாலும் பயஉணர்வு மிகுதியால் உரிய நேரத்தில் செயல்படுத்த முடிவதில்லை. மனிதில் எந்தவித சலனமும் இல்லாத உடலுடன் இணையும் ஆன்மாவே வெற்றியைப் பெற்றுத்தரும்.
பரிகாரம்: மனசஞ்சலம் நீங்கி நிம்மதி குடிபுக திங்கட்கிழமை ராகுகால வேளையில் ஜோடி தீபமேற்றி அம்மையப்பனை வழிபட ஆத்ம ஞானம் பெருகும். மேலும் எப்பொழுதும் கையில் அல்லது கழுத்தில் சிவப்புக் கயிறு கட்டியிருப்பது தைரியத்தை அதிகரிக் கும்.
சிம்மம்
இதன் அதிபதி சூரியன். நவகிரகங் களில் முதன்மையானவர். விரும்புபவர், விரும்பாதவர் என எந்தப் பாகுபாடு மின்றி தன் ஒளிக்கதிர் களால் உலக உயிர் களுக்கு ஆத்மஞானம் வழங்குபவர். சாதனைகள் பல புரிந்த பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் சிம்ம ராசியினராகவே இருப்பார்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என எடுக்கும் முடிவு தீர்க்கமாக இருக்கும். ஆத்மாவும் உடலும் ஒன்றாக இணையும்போது அடைய முடியாத வெற்றியே கிடையாது. ஆத்மஞானம் பெறும்போதுதான் மனம் உயர்ந்த நிலையை அடைகிறது. அதாவது மனம் தன்னை உணரும்போதுதான் ஆத்மஞானமடைந்து லௌகீக சுகங்களை நாடுவதில்லை.மேலும் சிம்மத்தில் எந்த கிரகமும் உச்சம், நீசம் பெறாத காரணத்தால், உள்ளுணர்வு மிகச் சிறப்பாக இயங்கும் ராசி சிம்மமாகும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகால வேளையில் நெய் தீபமேற்றி சிவ வழிபாடு செய்ய வேண்டும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வர பலன் இரட்டிப்பாகும்.
கன்னி
இதன் அதிபதி புதன். புதன் புத்திகாரகன். இயல்பாகவே கன்னி ராசியினருக்கு சந்தேக குணம் மிகுதியாக உண்டு. சுயமாக செயல்படும் தன்மையின்றி அடுத்தவரின் ஆலோசனையை எதிர்பார்த்திருப்பார்கள். கன்னியில் உச்சம்பெறும் கிரகம் புதன். நீசம்பெறும் கிரகம் சுக்கிரன். புத்திக்கும் அறிவிற்கும் புதனை உவமைப்படுத்தினால், ஆசை மற்றும் உணர்விற்கு சுக்கிரனை உவமைப்படுத்தலாம். உச்சம்பெறும் புதனால் தெளிந்த புத்தியோடு உள்ளுணர்வு செயல்பட்டாலும், நீசம்பெறும் சுக்கிரனால் எந்தவித உணர்ச்சியுமற்ற இரட்டை மனநிலையை உருவாகுவதால் கன்னி ராசியினருக்கு உள்ளுணர்வு இயக்கம் குறைவாகவே இருக்கும்.
பரிகாரம்: புதன்கிழமை ராகுகால வேளையில் ஐந்து நெய் தீபமேற்றி, மதுரை மீனாட்சியம்மனை மனதால் நினைத்து வழிபட மாற்றமும் ஏற்றமும் தேடிவரும். மேலும் அதிக பலன் பெற பச்சைநிற கைக்குட்டையைப் பயன்படுத்தலாம்.பச்சைநிற ரட்சை அணியலாம். புருவ மத்தியில் பச்சைநிறக் குங்குமம் வைக்கலாம்.
துலாம்
இதன் அதிபதி சுக்கிரன். கிரகங்களில் மிகவும் பிரகாசமானதும், நட்சத்திர அந்தஸ்து பெற்றதுமான கிரகம் சுக்கிரன். சுய ஒளி இல்லாத சுக்கிரன் சூரிய ஒளியைப்பெற்று சுய ஒளியில் பிரகாசிப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைத் தரும். அதேபோல் இவர்களின் செயல்பாடுகள் உள்ளுணர்வு மிகுந்தவர்களைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை மட்டுமே தரும். இங்கே உச்சம்பெறும் கிரகம். சனி நீசம் பெறும் கிரகம் சூரியன். ஆத்மஞானத்தை வழங்கக்கூடிய சூரியன் நீசம்பெற்று, கர்ம வினைத் தாக்கத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய சனி உச்சம்பெறுகிறார். கர்மவினைத் தாக்க வெளிப்பாடு மிகுதியால் முழுமையான ஆத்மஞானம் கிடைக்காமல் உள்ளுணர்வு இயங்காது.
பரிகாரம்: துலா ராசியினர் வெள்ளிக் கிழமை ராகுகால வேளையில் ஆறு நெய்தீபமேற்றி வாராகி அம்மனை வழிபட வேண்டும்.மேலும் சுபபீ பலனை அதிகரிக்க வெள்ளியில் டாலர் அல்லது காப்பு அணியலாம்.
விருச்சிகம்
இதன் அதிபதி செவ்வாய். வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய கரடுமுரடான பாதையைக் கடக்கவேண்டும் என்பதை உணர்த்துவதே விருச்சிக ராசியின் தத்துவம். வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது எளிதான காரியமல்ல என்பதை உணர்த்து பவர் செவ்வாய். இங்கே உச்சம்பெறும் கிரகம் கேது. நீசம்பெறும் கிரகம் ராகு. எப்படியாவது லௌகீக இன்பங்களைப் பெறவேண்டு மென்ற சிந்தனையைத் தூண்டும் கிரகம் ராகு . ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்த்தி முக்திக்கு வழிகாட்டும் கிரகம் கேது. பொதுவாக விருச்சிக ராசியினரின் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். அதீத கஷ்டத்தை அனுபவிக்கும் ஒரு மனிதன் பாவாமா, புண்ணியமா என்று நிதானமாக உள்ளுணர்வுடன் செயல்படு வது சாத்தியமல்ல. எனவே விருச்சிக ராசி யினருக்கு உள்ளுணர்வுடன் செயல்பட முடியாது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ராகுகால வேளையில் சரபேஸ்வரை வழிபட இன்னல் கள் அகலும். மேலும் சுபப்பலனை அதிகரிக்க எறும்புப் புற்றுக்கு சர்க்கரை இட ஆன்ம ஞானம் கிடைக்கும்.
தனுசு
இதன் அதிபதி குரு. காலபுருஷ ஒன்பதாம் இடம். தனுசு ராசியினர் இயல்பிலேயே ஆன்மவலிமை பெற்றவர்கள். மேலும் இங்கே எந்த கிரகமும் உச்சம், நீசம் பெறாத காரணத்தால் நிதானமாக சிந்திக்கும் திறனிருக்கும். ஆன்மாவும், உடலும் எப்பொழுதும் இணைந்தே இயங்கு வதால் தனுசு ராசியினர் ஆன்மிக சொற்பொழி வாளர்களாகவும், மத குருமார்களாகவும், சாஸ்திரம், வேதம் கற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
பரிகாரம்: மேலும் சுபப் பலனை அதிகரிக்க வியாழக்கிழமை ராகுகால வேளையில் சித்தர்களை வழிபடவேண்டும். அத்துடன் தங்க ஆபரணங்களை அணிவது சிறப்பாகும்.
மகரம்
இதன் அதிபதி சனி. இருள் கிரகம். கர்மவினை அதிகாரி. உழைப்பே உயர் வென்பதை உணர்த்துபவர். இங்கே உச்சம்பெறும் கிரகம் செவ்வாய் . நீசம்பெறும் கிரகம் குரு. உழைப்பிற்குக் காரக கிரகமான சனியின் வீட்டில் பகை கிரகமான செவ்வாய் உச்சம் பெறுவதால் தான் என்ற அகங்காரம் மேலோங்கும். ஆன்மிகத்தையும் ஆத்மஞானத்தையும் முழுமையாக வழங்கக்கூடிய குரு நீசம்பெறுவதால், உழைப்பை மறந்து அநீதியான சிந்தனையில் ஆன்மா இயங்கும். அநீதியான சிந்தனை மிகுதியால் ஆத்மஞானம் குறைந்து உள்ளுணர்வைப் பயன்படுத்தமுடியாத நிலை உருவாகும்.
பரிகாரம்: சனிக்கிழமை ராகுகால வேளையில் ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வழிபட ஆத்மஞானமும் உள்ளுணர்வும் சீராகும். மேலும் சுபப் பலனை அதிகரிக்க யாரிடமும் இலவசமாக எந்தப் பொருளையும் பெறக் கூடாது.
கும்பம்
இதன் அதிபதி சனி. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்தவர்கள். மனிதர்களுக்கு பாவம் அதிகரிக்க காசு, காமம், சொத்து என்ற மூன்றுமே காரணமாக அமைகின்றன என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவர்கள். சனியாக வந்து யாரையும் துன்புறுத்துவதில்லை. சனி கிரகத்தில் பதிவாகியிருக்கும் வினைகள்தான் துன்பத் திற்குக் காரணமென்பதை அறிந்தவர்கள். உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து உள்ளுணர்வுடன் செயல்படும் திறனுண்டு. கும்பத்தில் எந்த கிரகமும் உச்சம், நீசம் பெறாததால் ஆன்மஞானம் மிகுதியாக உண்டு.
பரிகாரம்: மேலும் சுபப் பலனை அதிகரிக்க சனிக்கிழமை ராகுகால வேளை யில் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட வேண்டும். மேலும் குங்கிலியம், வெண்கடுகு கலந்த சாம்பிராணிப் புகையை வீட்டில் பரவ விட மன அமைதியும் உள்ளுணர்வும் அதிகரிக்கும்.
மீனம்
இதன் அதிபதி குரு. ஜீவாத்மாவைக் குறிப்பவர் .நீதி நேர்மையை, ஆன்மிக நாட்டத்தைக் குறிக்கும் கிரகம் குருவாகும். பொதுவாக பணம், பொருள்மீது பற்றுள்ளவர்களுக்கு ஆன்மிக நாட்டம் இருக்காது. மீனத்தில் உச்சம்பெறும் கிரகம் சுக்கிரன். நீசம்பெறும் கிரகம் புதன். சுக்கிரன் ஆடம்பரத்தையும், சுகத்தையும் குறிக்கும் கிரகம். புதன் புத்தியைக் குறிக்கும் கிரகம். புத்தியை நல்ல வழிக்கும் பயன்படுத்தலாம். தீய வழியிலும் செலுத்தலாம். ஆனால் புத்தியை நல்ல வழியில் செலுத்தும்போது பல உயர்ந்த நன்மைகளை அடைய முடியும். புத்தி தெளிவாக இருக்கும் ஒருவன் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட மாட்டான். உச்சம்பெற்ற சுக்கிரன் ஆடம்பரத்தையும், லௌகீக ஆர்வத்தையும் மிகுதிப்படுத்தும் போது, நீச புதனால் புத்தி தடுமாறி ஆன்மிகம் மற்றும் உள்ளுணர்வு செயலிழக்கும்.
பரிகாரம்: உள்ளுணர்வை அதிகரிக்க வியாழக்கிழமை ராகுகால வேளையில் திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து வழிபடவும். தங்க ஆபரணங்களை உடலில் அணிவதுடன் மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
செல்: 98652 20406