"நடக்குமென்பார் நடக்காது; நடக்கா தென்பார் நடந்துவிடும். கிடைக்குமென்பார் கிடைக்காது; கிடைக்காதென்பார் கிடைத்து விடும்' என்னும் பாடல் வரிகள் புதன் பகவானுக்கு மிகப் பொருந்தும். இரட்டைத் தன்மையான பலன்களை வழங்கி நிலை தடுமாற வைப்பதில் முன்னிலை வகிப்பவர் புதன்.

புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்கு வதால் புத்திக்காரகன் என்று பெயருண்டு. ஒருவரின் புத்திக் கூர்மைமையை புதனின் நிலையை வைத்து அறியமுடியும். ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகமென்பதால் வித்யாகாரகன் என்ற பெயருமுண்டு. அதேபோல் ஒருவருக்கு அனுபவப் பாடத்தைக் கற்றுத்தருவதும் புதன்தான். பிறர் சொல்லும் புத்திமதியைக் கேட்காமல் தானே செயல்பட்டு புத்தி தெளிந்தேன் என்பதும் புதன்தான். புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள். ஜனன ஜாதகத்தில் புதன் பலம்பெற்றவர்கள் இளமைப் பொலிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கியல், மறைமுகமான- நுணுக்கமான பிரச்சிகனைகளைத் தீர்ப்பதில் நிபுணராக இருப்பார்கள். வியாபார தந்திரம் மிக்கவராகவும், மதிநுட்பத்தைப் பயன்படுத்தி, இருந்த இடத்திலேயே தொழில்செய்து வருமானம் ஈட்டுபவராகவும் இருப்பர். வியர்வை சிந்தாமல் வருமா னம் ஈட்ட விரும்புவார்கள்.

பாவ கிரகங்களுடன் சேராமலிருந்தால் புதன் தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறெந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவுக்கு நிகரான சக்தியுண்டு.

புதன் இரட்டைத் தன்மையுள்ள கிரக மென்பதால், தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்குத் தக்கவாறு, பார்க்கும் கிரகத்திற்குத் தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார். புதன் பலம்பெற்றவர்கள் நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், உலகம் போற்றும் நகைச்சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிகைத் துறையினர், அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், மிகச்சிறந்த வியாபாரிகள், ஆலோசகர்கள், கல்வியாளர்கள், ஓவியர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள்.

Advertisment

புதன் சுப வலுப் பெற்றவர்களுக்கு புத்திசாலித்தனம் இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் காரண காரியத்தோடு நன்கு யோசித்துச் செய்யக்கூடிய திறன் பெற்றவராக இருப்பர். யாருடைய உதவியுமின்றி எந்தவொரு நிகழ்வையும் கற்றுக்கொள்ளும் திறமையிருக்கும். பார்ப்பதற்கு இளமையான தோற்றம் இருக்கும். யாராலும் எளிதில் ஏமாற்ற முடியாதவராக இருப்பார்.

லக்னரீதியாக நல்ல ஆதிபத்தியத்தைப் பெற்று புதன் இருக்கும்பொழுது நல்ல பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும். ஜாதகருடைய குணங்களும் மற்றவர்களால் விரும்பக்கூடியதாக, போற்றப்படக்கூடியதாக இருக்கும்.

லக்னத்திற்கு தீய ஆதிபத்திய நிலைபெற்று புதன் இருக்கும் பொழுது ஜாதகரின் தீய குணங்களால் பிறரின் விமர்சனங் களுக்கு உள்ளாகக்கூடிய நிலைமை யையும் தரும்.

Advertisment

புதன் பலம் குறைந்திருப்பவர் கள், நுண்ணறிவுத் திறன் குறையப் பெற்றிருப்பவர்கள். மனக் குழப்பம் அடைவார்கள். நுரை யீரல், சிறுநீரகம், நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு, உடல்நலம் பாதிக்கும். புதன் தனித் திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபரானால், தன்னைச் சுபராகவும், அந்தக் கிரகம் பாவரானால் தன்னை யும் பாவராகவும் மாற்றிக்கொள் வார்.

இனி பன்னிரண்டு லக்னங் களுக்கும் புதன் தோஷம் போக்கும் பரிகாரங்களைக் காணலாம்.

மேஷம்

மேஷ லக்னத்திற்கு புதன் 3, 6-ஆமதிபதி என்பதால், சுய ஜாதகத்தில் புதன் சுப வலுப் பெற்றால் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்யநேரும். உடன்பிறந் தவர்களுடன் ஒத்துப் போகாது. ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் உண்டு. உடன்பிறந் தவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள். அடிக்கடி உத்தியோகத்தை மாற்றுவார்கள். திட்டமிடாத செயல்பாடுகளால் அதிக கடன்சுமை இருக்கும். எளிதில் கடன் தீராது. தன்னுடைய தவறான செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் மூலமாகவே நிறைய எதிரிகளையும் சம்பாதித்துக் கொள்வார்கள். லக்னாதிபதி நல்ல நிலையில் இல்லாதபொழுது ஜாதகருக்கு நரம்பு, தோல், வலிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

பரிகாரம்: புதன்கிழமை ராகு காலத்தில் மகா விஷ்ணுவை வழிபடவேண்டும்.

ரிஷபம்

ரிஷப லக்னத்தினருக்கு புதன் 2, 5-ஆமதிபதி. சுய ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம், சுபவலுப் பெறுவது சிறப்பு. புதன் சுபத் தன்மை பெற்றவர்கள் கல்வியார்வம் நிறைந்தவர்கள். நன்றாகப் படித்து பதக்கங்கள் பெறுவார்கள். உயர்கல்வி யோகமுண்டு. கற்ற கல்விக்குத் தொடர்பான உத்தியோகம், தொழிலில் இருப்பவர்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள் அல்லது பணிபுரிவார்கள் அல்லது ஞான உபதேசம் செய்வார்கள். பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலில் வல்லவர்கள். மூளையை மூலதனமாகக் கொண்ட ஏஜென்ஜி, கன்சல்டிங் நிறுவனங்கள், பங்கு வர்த்தகத்தில் மிகுதியாக சம்பாதிப்பார்கள். பூர்வீகச் சொத்தை சுதந்திரமாக அனுபவிப்பார்கள். வம்சாவளியாக குலத் தொழிலில் ஈடுபடுவார்கள். புதன் அசுபத் தன்மை பெற்றவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்காது. கற்ற கல்வியால் பயனிருக்காது. பூர்வீகம் சிறப்பல்ல.

பரிகாரம்: புதன்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி வழிபாடு செய்யவேண்டும்.

மிதுனம்

மிதுன லக்னத்திற்கு புதன் லக்னாதிபதி, நான்காமதிபதி. சுய ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகும். லக்னம் சுபவலுப் பெற்றால் தலைமைப் பண்பு நிறைந்த வர்கள். திறமைசாலிகள். தவறான வழியில் செல்லமாட்டார். நல்ல சிந்தனையும், புகழும் அடைவர்கள். சுய முயற்சியில் பணக்காரர் ஆவார்கள். சுகவாழ்வு அமையும். லக்னம் அசுப வலிமை பெற்றவர்களுக்கு சொல்புத்தியும் கிடையாது. சுயபுத்தியும் இருக்காது. பொதுவாக மிதுன லக்னத்தினருக்கு புதன் எந்த நிலையில் இருந்தாலும் படிக்காத மேதையாக, படிக்காமலே பரிட்சையில் பாஸாகி விடுவார்கள். படிப்பிற்கும் தொழில், வேலைக்கும் சம்பந்தமிருக்காது. வாகனம், பூமி லாபம், அரசுவகையில் ஆதாயம், உயர்ந்த பதவி அமையும். செல்வச் செழிப்புண்டு. சுய உழைப்பில் சொத்துச் சேர்க்கையுண்டு. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலில் சாதனை படைப்பார்கள். பலவிதமான சுபப் பலன்கள் வாழ்நாள் முழுவதும் மிகுந்துகொண்டே இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை புதன் ஓரையில் தாயாருடன் இணைந்த மகாவிஷ்ணுவை வழிபட வளர்ச்சி அதிகரிக்கும்.

ff

கடகம்

கடக லக்னத்திற்கு புதன் 3, 12-ஆமதிபதி. உபஜெய ஸ்தானமான 3-ஆமிடம் பலம்பெற்றால் முயற்சியால், உழைப்பால் உயர்ந்த, உயர விரும்பும் உத்தமர்கள். ஜாதகர் தைரியமானவர். பலசாலி. வீரியம் உடையவர். இளைய சகோதரமுண்டு. இளைய சகோதரர் பெயர், புகழ் உடையவர். சகோதரர்கள் ஒற்றுமையுள்ளவர்கள். ஈருயிரும், ஓருடலுமாக வாழ்பவர்கள். ஊடகங்கள், தகவல் தொடர்புத் துறையில் நாட்டமுண்டு. ஞாபகசக்தி அதிகமாக இருக்கும். மூன்றாமிடம் அசுபவலுப் பெற்றால் சகோதரர்கள் உதட்டளவில் மட்டும் உறவாடுவார்கள். வீரியம், செவித்திறன் குறைவுண்டு. எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்வார்கள். 12-ஆமிடம் சுபவலுப் பெற்றால் சுப விரயம் மிகுதியாக இருக்கும். நிம்மதியான தூக்கமுள்ளவர். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இன்பமான இல்வாழ்க்கை அமையும். 12-ஆமிடம் அசுபத்தன்மையாக செயல்பட்டால் வாழ்க்கை துக்கம் நிறைந் தாக இருக்கும். தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். முறையான இல்லற இன்பம் கிடைக்காது.

பரிகாரம்: புதன்கிழமை சந்திர ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும்.

சிம்மம்

சிம்ம லக்னத்திற்கு புதன் தன, லாபாதிபதி என்பதால், புதன் எந்த நிலையிலிருந்தாலும் சாதகமான பலனுண்டு. மறைந்த புதன் நிறைந்த பலன்கள் கிடைக்கும். தொட்டது துலங்கும். வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு புதன் தசைக் காலங்களில் சுபப் பலன்கள் இரட்டிப்பாகும். சாதாரண நிலையில் இருப்பவர்கள்கூட உயர்நிர்வாகப் பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவமென அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. செல்வாக்கு, சொல்வாக்கு படைத்தவர்கள். கற்ற கல்விமூலம் நிறைந்த வருமானமும் திரண்ட சொத்துகளும் சேரும். சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். புதனுக்கு அசுப கிரக சம்பந்தமிருந்தாலும் ஓரளவேனும் சுபப் பலன்கள் நடக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை சூரிய ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி லக்னத்திற்கு புதன் 1, 10-ஆமதிபதி. லக்னாதிபதியாக புதன் பலம்பெற்றால் தொழில் தந்திரவாதிகள். மதிநுட்பத்தால் தொழிலில் சாதனை படைப்பார்கள். பல தொழில்துறை பற்றிய அறிவுண்டு. பல அரிய புதிய விஷயங்களைக் கண்டுபிடிப் பார்கள். ஜாதகர் தன் தொழில் ஞானத் தைப் பயன்படுத்திப் பிறருக்கு ஆலோசனை கூறி சம்பாதிப்பார்கள். கற்ற கல்விக்குத் தகுந்த வேலையுண்டு. ஜாதகர் பார்க்கும் தொழில்மூலம் புகழ், அந்தஸ்து, கௌவரவம் கிடைக்கப்பெறுவார். அதிகார பலமிக்க அரசாங்கப் பதவி, அரசியல் செல்வாக்கு, செய்யும் தொழிலில் பெருத்த ஆதாயமுண்டு. நல்ல வருமானமுண்டு. தர்ம ஸ்தாபனம் மற்றும் அறக் கட்டளைகள் நிறுவி அன்னதானம், தானதர்மம் செய்பவர்கள். பெற்றவர்களுக்கு கர்மம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் இவர்களுடைய தொழில் அறிவு பிறருக்கே பயன்படும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. சிந்தனைத் திறன் குறைவுபடும். முன்னேற்றமிருக்காது.

பரிகாரம்: புதன்கிழமை புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும்.

துலாம்

துலா லக்னத்திற்கு புதன் 9, 12-ஆமதிபதி, பாக்கியாதிபதி என்பதால் மிதுனத்தில் ஆட்சிபலம் பெறுவது சிறப்பு. முதுநிலை ஆராய்ச்சிக் கல்விக்கு வெளிநாடு செல்வார் கள். படித்து முடித்தபிறகு வெளிநாட்டில் செட்டிலாவர்கள். முன்னோர்களின் குல மரபை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். எளிமையாக பிறருக்குப்ஸ் புரியம்படி கற்பிப்பதில் வல்லவர்கள். ஏழை, எளியவர் களுக்கு இலவசமாக போதிப்பவர்கள். சிலர் புத்தக ஆசிரியர்களாக இருப்பார்கள். பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என தொழில் வெற்றியும், சிறந்த அந்தஸ்தும் கிட்டும். வம்சாவளியாக கல்வி, நிதி நிறுவனங்கள் நடத்துவார்கள். சிறந்த ஆராய்ச்சியாளர்களாக அனைவராலும் புகழப்படுவர்கள். புகழ்பெற்ற வியாபாரியாகவும். பரம்பரை சுயதொழில் புரிபவர்களாகவும் இருப்பார்கள். கன்னியில் உச்சம்பெறும்போது சுப விரயங்கள் மிகுதியாகும். இவர்களது திறமைகளைப் பிறருக்கு இலவசமாக விரயம் செய்வர். இந்த அமைப்பினர் வெளிநாட்டில் வாழ்ந்தால் கற்ற கல்வியால் பயனுண்டு. புதன் நீசம்பெற்றால் சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு, ஜாதகர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் மனோபலமும் குறைந்தவராக இருப்பார்கள்.

பரிகாரம்: புதன்கிழமை சுக்கிர ஓரையில் மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகத்திற்கு புதன் அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதி. அட்டமாதிபதியாகி புதன் மிதுனத்தில் ஆட்சிபெறுவதால் ஜாதகர் ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு. தெரியாத விஷயத்தைக்கூட தெரியக்கூடியதாக காட்டிக்கொள்வார். எதையும் தன்னால் செய்ய இயலும் என சொல்லக்கூடியவராக இருப்பார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசக்கூடியவர். தன் எண்ணங் களையும் செயல்பாடுகளையும் திடீர் திடீரென்று மாற்றிக்கொள்ளவார். அடிக்கடி அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரி போன்ற அபாயங்களை சந்திப்பவர்கள். கன்னியில் உச்சம்பெற்ற புதன், பதினொன் றாமிடம் என்னும் லாபஸ்தான ஆதிபத்தியம் பெறுவதால், மீனத்தில் நீசம்பெற்ற புதனும் ஐந்தாமிடமெனும் ஆதிபத்தியம் பெறுவதால், பண விஷயங்களில் பெரிய அளவில் பிரச்சினை கள் ஏற்படாது. குறுக்குவழிகளில் ஈடுபட்டா வது தன்னுடைய பணத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வார். இங்குள்ள புதன் குருவின் சம்பந்தம் பெறுவதும் நல்லதாகும்.

பரிகாரம்: புதன்கிழமை செவ்வாய் ஓரையில் சிவன், அம்பிகை, முருகன், விநாயகர் இணைந்த குடும்பப் படம் வைத்து வழிபடவும்.

தனுசு

தனுசு லக்னத்திற்கு புதன் 7, 10-ஆமதிபதி மற்றும் பாதகாதிபதி. மிதுனத்தில் ஆட்சிபலம் பெறும் புதன் திருமண வாழ்க்கையில் பாதகத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. அதேபோல் நண்பர்கள், தொழில் கூட்டாளி களால் ஏமாற்றப்படுவார்கள். கன்னியில் உச்சம்பெறும் புதனும், மீனத்தில் நீசம்பெறும் புதனும் குரு சம்பந்தம் பெறும்போது நல்ல பலனைத் தரும். அறிவுடையவர்கள். அழகாய்ப் பேசுபவர்கள். தீர்க்கமான சிந்தனை யுடையவர்கள். ஜாதகரும் பெற்றோர் களும் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். தொழில், உத்தியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கல்வி, புகழ், அரசியல், லாபங் களும், பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும். வாழ்க்கைத் துணையாலும் ஆதாயமுண்டு. நல்ல படித்த உத்தியோகத்திலுள்ள வாழ்க் கைத் துணை கிடைக்கும். புதனுக்கு கேந்திராதிபதித்திய தோஷம், பாதகாதி பத்திய தோஷம் உள்ளதால் தசை, புக்திக் காலங்களில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பரிகாரம்: புதன்கிழமை குரு ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும்.

மகரம்

மகர லக்னத்திற்கு புதன் 6, 9-ஆமதிபதி. புதனால் சாதகமும் பாதகமும் சேர்ந்த பலனே நடக்கும். மிதுனத்தில் ஆட்சிபலம்பெற்ற புதனைவிட கன்னியில் உச்சம்பெறும் புதனும் மீனத்தில் நீசம்பெறும் புதனும் நல்ல பலனை வழங்கும். தொழிலில் மேன்மையும், அரசியலில் பதவியும். செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும். சூரியனும், புதனும் பெரும்பான்மையாக சேர்ந்தே பயணிக்கும் கிரகங்கள். அஷ்ட மாதிபதி சூரியனுடன் சேரும் புதன் சிலருக்கு சிறப்பான பலனைத்தரும். விபரீத ராஜயோகமாக அமையும். பல மகர லக்னத்தினருக்கு கடுமையான பாதிப்பையும் தருகிறது.

பரிகாரம்: புதன்கிழமை சனி ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும்.

கும்பம்

கும்ப லக்னத்திற்கு புதன் 5, 8-ஆமதிபதி. மீனத்தில் புதன் நீசம்பெறும் போதும், மிதுனத்தில் ஆட்சிபலம் பெறும்போதும் எப்படியாவது படித்து நல்ல வேலைக்குச் சென்றுவிடுவார்கள். சிறப்பான யோகம், உயர்ந்த பதவி, தொழில் அனுக்கிரகம் உண்டு. அரசியலில் பெரிய பதவி, செல்வாக்கு, சட்டசபைத் தலைவர்கள், நீதிபதி பதவி கிட்டும். கன்னியில் உச்சம்பெறும் புதனால் மண வாழ்க்கையில் மனச் சங்கடங்கள் உண்டு. சிலருக்கு வம்பு வழக்கான காதல் திருமணம் நடக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. சிலரது திருமணம் விவாகரத்தில் முடியும். சிலருக்கு குழந்தை பிறக்காது அல்லது குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் மனச் சங்கடம் நீடிக்கும். சிலருக்கு பதவியில் நெருக்கடி இருக்கும். அடிக்கடி மெமோ வாங்குவார்கள். சுபமும், அசுபமும் கலந்தே நடக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை சனி ஓரையில் சிவனும், விஷ்ணும் சேர்ந்துள்ள கோவில் சென்று வழிபடவேண்டும்.

மீனம்

மீன லக்னத்திற்கு புதன் 4, 7-ஆமதிபதி. புதன் எந்த நிலையிலிருந்தாலும் கேந்திராதி பத்திய தோஷம், பாதகாதிபத்திய தோஷம் என்ற அடிப்படையில் பாதிப்பைத் தரும். பள்ளிப் படிப்பையே தடுமாறச் செய்யும். நண்பர்களுடன் இணைந்து தீய பழக்கத்தில் ஈடுபடுவார்கள். நிலையான தொழில், உத்தயோகம் இருக்காது. சுயதொழில் செய்தால் கடன்சுமை மிகுதியாக இருக்கும் அல்லது நோய்த் தொந்தரவிருக்கும். உத்தி யோகத்தை அடிக்கடி மாற்றுவார்கள். தாயாரைப் பிரிந்து வாழ்வார்கள். தாய்வழிச் சொத்தில் தாய்மாமாவுடன் மனபேதம் உண்டாகும். நல்ல சொத்து சுகத்துடன்கூடிய வாழ்க்கைத் துணை அமையும். கிடைத்த வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ளத் தெரியாது. வெகுசிலருக்கு லக்னாதிபதி குரு வலுத்தால் சுயபலத்தின் அடைப்படையில் நற்பலன்கள் உண்டு.

பரிகாரம்: புதன்கிழமை குரு ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும். மனிதன் அனைத்து சூழ்நிலையிலும் சுயமாக இயங்க புத்தி அவசியம். எனவே புத்தி கிரகமான புதனின் அனுக்கிரகம் கிடைக்க உரிய வழிபாட்டு முறைகளை பயன் படுத்திப் பயன்பெற வாழ்த்துகள்.

செல்: 98652 20406