ராகு பகவான் வணக்கம்
"வாகுசேர் நெடுமான் முன்னம்
வானவர்க் கமுதமீயப்
போகுமக் காலையுன்றன்
புணர்ப்பினாற் சிரமேயற்று
பாகுசேர் மொழியாள் பங்கன்
பரன்கையில் மீண்டும்பெற்ற
ராகுவே யுனைத்துதிப்பேன்
தமியனை ரட்சிப்பாயே.'
சாயாகிரகங்களில் ஒருவரான ராகு பகவான் தீயவராக விளங்குபவர். விப்ரசித் என்ற அரசனுக்கும், சிம்ஹிகை என்ற அசுரப்பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர். அசுரனான இவர் தேவர் வடிவோடு சென்று அமிர்தம் பெற்று உண்டுவிட்டார். இதையறிந்த சூரியனும் சந்திரனும் மோகினி வடிவிலிருந்த மகாவிஷ்ணுவிடம் சொல்ல, அவர் சட்டுவத்தால் அசுரனின் தலையில் அடித்தார். அசுரனின் தலைவேறு, உடல்வேறு துண்டிக்கப்பட்டது. தலை ராகு என்னும் வடிவமாக வளர்ந்தது. ராகுவின் மனைவி சிம்மி. புத்திரன் அமுதகடிகன்.
அமிர்தம் உண்டமையால் ராகுவின் தலை அழியாது இருந்தது. பின் தெய்வபலத்தால் அத்தலையோடு பாம்பின் உடல் வந்து இணைந்து கொண்டது.
சூரியனும் சந்திரனும் தன்னைக் காட்டிக்கொடுத்ததால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், ராகு சூரிய-சந்திரரைக் கவ்விப் பிடிப்பவராயினார். அதையே கிரகணம் என்று உலகோர் கூறுவர்.
ராகு திருமாலைத் துதித்து சாயா கிரகப் பதத்தைப் பெற்றார்.
எட்டுக் குதிரைகள் பூட்டிய வெள்ளித்தேரை தனக்கென உடையவர் ராகு.
ராகு ஒரு தலையும், கருணை பொழியும் கண்களும், நான்கு கரங்களும், பாம்புடலும் கொண்டவர். மேல் கைகளில் சூலமும் கேடயமும், கீழ்க்கைகளில் வாளும் வரதமும் கொண்டவர். கரிய நிறத்தவர். கரிய ஆடை, கரிய மலர், கருஞ்சாந்து அணிபவர். ராகு பகவான் தன்னை வணங்குபவர்களுக்கு சகல நோயையும் நீக்குபவர். நஞ்சுள்ள ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பவர். ராகு காலத்தில் துர்க்கா பூஜை செய்வதும், எலுமிச்சம்பழ விளக்கேற்றலும் ப்ரீதியாகும்.
ராகு ஜோதிடம்
சாயா கிரகங்களில் ஒருவராகிய ராகு மற்ற கிரகங்களைப் போலன்றி எதிர்ப்புறமாக இயங்கக்கூடியவர். ஒரு ராசியைக் கடந்துசெல்ல சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இவர் பாவகிரகங்களில் தலையாய கிரகமாக விளங்கி, புத்திர தோஷக் கெடுதலை உண்டாக்குவார். அலி இனத்தைச் சேர்ந்தவர்.
இவருக்கு உரிமையென எந்த ராசியும் இல்லையெனினும், இவர் வாசம்செய்யும் ராசி பலத்தையும், அதற்குரிய குணங்களையும் பெற்று செயலாற்றுபவர். விருச்சிகத்தில் உச்ச பலமும், ரிஷபத்தில் நீசத்தன்மையும் பெறுபவர்.
மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளைப் பகையாகவும்; மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளை நட்பாகவும் கருதுபவர்.
கருங்கல்லையும், உளுந்து தானியத்தையும் உரிமையாகக் கொண்டவர். புனித யாத்திரைக்குப் பொறுப்பேற்பவர். மனித உடலில் கால்கள் இவருடைய பாதுகாப்பில் உள்ளவை. தொற்று நோய், திருட்டு பயம், நெருப்பு பயம், விலங்கு, வெடிவிபத்து, சிறைவாசம், குற்ற தண்டனை போன்ற யாவும் இவருக்குப்பட்டது.
ஞானமார்க்கத்தை போதிக்க வல்லவர். வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி போன்ற மின்னியக்க சக்திக்கும் பொறுப்பேற்பவர்.
சனியின் தன்மைக் கொண்டவர் என்பதால், தான் இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10-ஆம் இடத்தைப் பார்ப்பார்.
தென்மேற்குத் திக்கிலும், இரு காலங்களிலும் வலிமைபெறும் இவர் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களைத் தன் ஆதிக்கத்தில் கொண்டவர்.
சனி, சுக்கிரனை நட்பாகவும்; சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரையும் பகையாகவும் கருதும் ராகு பகவான், புதன், குருவை சமமாக பாவிப்பவர். இவர் தசை நடைபெறும் காலம் 18 ஆண்டுகள். ஜாதகத்தில் ராகு உச்சம் அல்லது 3, 6, 10, 11-ல் இருந்து தசை நடைபெற்றால், அதிகாரப் பதவியும் அன்புள்ள குடும்பமும் உண்டாகும். எடுத்த காரியமெல்லாம் இனிதே நிறைவேறும். நல்லோர் உறவும், உதவியும், நாடிய பொருளும் கிடைக்கப்பெறும்.
ராகுக்குரியவை
பால்- அலி; வடிவம்- நெடிய வடிவம்; நிறம்- கருப்பு; ஆடை- கருப்பு வஸ்திரம்; குணம்- கொடிய குணம்; நாடி- சிலேத்தும நாடி; திக்கு- தென்மேற்கு; ரத்தினம்- கோமேதகம்; தானியம்- உளுந்து; மலர்- மந்தாரை; சமித்து- அறுகு; வாகனம்- ஆடு; சுவை- புளிப்பு; உலோகம்- கருங்கல்; காரகத்துவம்- ஞானம், மின் இயக்கம்; திருத்தலம்- காளஹஸ்தி; உடையவர்- காளஹஸ்தீஸ்வரர்; தேவதை- சுப்ரமணியர்; நைவேத்தியம்- உளுந்து கலந்த அன்னம்.
ராகு பிற கிரகங்களைவிட நன்மையும் தீமையும் அதிகமாகத் தருபவர். "பூமியில் எவர் தவறுகள் செய்தாலும் தண்டிக்காமல் இரேன்' என சபதம் எடுத்து வந்தவர். சூரியனையும் சந்திரனையும் கிரகணத்தால் பழிவாங்கும் சுபாவம் உடையவர். அவர் சீராக அமர்ந்துகொண்டால் சக்கரவர்த்திக்கு சமமாம்.
"பாரப்பா யின்னமொரு புதுமை கேளு
பகருகின்ற பாம்புடனே ஒருவன் சேர
வீரப்பா விருபுறமும் மற்றோர் நிற்க
வேந்தனுக்கு வேந்தனாம் கொடிய வீரன்
கூரப்பா ஜகமதனில் கெஜமுள்ளோன்
கொற்றவனே துரகமது மெத்தவுண்டு
வீரப்பா வேடர்படை கோடியுள்ளோன்
விதமான புலிப்பாணி சொன்னோம் நாமே!'
இவை யாவும் செய்யுள் வடிவிலான பலன்கள்.
அதாவது ராகுவின் பெருமை எவ்வளவு என்று சொல்ல முடியாது. சொந்த வீடற்றவர்.
ஆனால் நுழைந்தவீட்டைத் தன்னுடையதாக்கிக் கொண்டு, அந்த வீட்டுக்குரியவரின் குணநலன்களை அப்படியே பெற்றுவிடுகிறார். எவ்வளவு பெரிய கிரகங்கள் என்றாலும் இவருள் ஐக்கியமாகி விடுகின்றனர். நல்லவை செய்யவல்ல ராகு, கெடுதல்கள் செய்யவும் வல்லவர். பாம்புக்கடிக்கு மருந்துண்டு; மருந்தாலும் அன்றி மந்திரத்தாலும் விஷமிறக்குவார்கள். அதுபோல் ராகு கெடுதல் செய்ய வல்லவர் என்றாலும் அவரை சாஸ்திரங்களால் ஓரளவு சரிக்கட்டலாம்.
முற்கால மனிதர்களுக்கு இரவு வந்ததும் பேய், பிசாசு என பயம் கொள்வதைவிட, அரவம் தீண்டல்- அதுவும் விஷப்பாம்பு தீண்டினால் உயிரையே பறிகொடுக்கும் நிலை இருந்தது. எனவே நாக வணக்கத்துக்கு அன்றும் இன்றும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
மூன்றாம் இடத்தில் ராகு இருக்க, இரண்டாம் இடத்தில் துஷ்டகிரகங்கள் கூட அல்லது நோக்கப் பிறந்த ஜாதகரை விஷப்பாம்பு தீண்டுமென்கிறது ஜோதிடம்.
ஜென்மாதிபதியும் 6-ஆமிடத்தோனும் கருங்கோளும் ஒரு வீட்டிலிருக்க பாம்பினால் கஷ்டமாம்.
சந்திரனும் கரும்பாம்பும் கூடி 7 அல்லது
8-ஆமிடத்தில் இருக்கப் பிறந்த ஜாதகரை அரவம் தீண்டுமாம்; சாஸ்திரம் கூறுகிறது.
இப்படிப்பட்ட நாகபயம் உடையோர் கூறவேண்டிய மந்திரம்:
ஸ்ரீ ஆதிசேஷ காயத்ரீ
ஓம் ஸஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக: ப்ரசோதயாத்.
நவநாக ஸ்தோத்திரம்
அனந்தம் வாஸுகிம் சேஷம்
பத்மநாபம் சகம்பலம்
சங்க பலம் த்ருதராஷ்ட்ரம்
தக்ஷகம் காலியாம் ததா
ஏதானி நவ நாமானி
நாகானாம் சமஹாத்மனாம்
சாயங்காலே படேந்தியம்
ப்ராத: கால விஷேதஹ
நஸ்ய விஷபயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜவூபதேவ்.
விஷக்கடிகளிலிருந்து தப்புவதற்கு
கார்க்கோடகஸ்ய நாகஸ்ய
தமயந்த்பா: நலஸ்யச
ருது பர்ணஸ்ய ராஜர்ஷே
கீர்த்தனம் கலிநாசனம்.
உங்களுடைய உள்ளங்கையில் நடுவிரலின் நேர்கீழ் காணப்படும் சனி மேட்டில் கரும்புள்ளி தோன்றினால் அரவம் தீண்டுதலின் அறிகுறி. புதர்களில் போகும்போது (புல், செடி, கொடி நிறைந்த இடம்) உஷார் நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
துர்மரணம் வராதிருக்க மந்திரம்
அனாயாஸேச மரணம்
வினாதைந்யென ஜீவனம்
தேஹிமே க்ருபயா சம்போ
த்வயி பக்தி மசஞ்சலாம்
புத்ரான் தேஹி யசோதேஹி
ஸப்பதம் தேஹி சாச்வதீம்
த்வயி பக்திஞ்ச மேதேஹி
பரத்ரச பராங்சதிம்
இந்த மந்திரத்தைக் கூறுவது கடினம்.
அத்தகையவர்கள் ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, மந்திரத்தை ஆட்காட்டி விரலால் தண்ணீரில் எழுதி, அந்த நீரை உச்சந்தலையில் தெளித்தல் போதுமானது.
ராகுவும் லக்னப் பலன்களும்
பொதுவில் ராகுவுக்கு சாஸ்திரத்தில் நன்மதிப்பைவிட எச்சரிக்கைகள் மிகையாகும்.
ராகு லக்னத்துக்கு 3, 6, 10, 11-ல் இருந்தாலும் அல்லது உச்ச ராசியிலிருந்தாலும் ராஜ்ய லாபம், சுற்றத்தார் சௌக்கியம், விவசாய முன்னேற்றம், தனலாபம் போன்ற நன்மைகள் கிடைக்கப்பெறும்.
"பிருகு சனி பாம்பிரண்டும் பிற்பலனே தருவார்' என்பதும்; 6, 8, 12-ல் பாவிகள் சுபப்பலனைத் தருவார்கள் என்பதும்; தீய பலனாக விசனத்தையும், ரோகத்தையும் கொடுப்பார்; பாவ கர்மங்களைச் செய்யத் தூண்டுவார்; தரித்திரத்தை உண்டுபண்ணுவார் என்பதும் ஜோதிட மரபு. இனி 12 வீடுகளில் ராகு நிற்கும் பலன்களைக் காண்போம்.
லக்னத்தில் ராகு
தாழ்வு மனப்பான்மையும், தரங்கெட்ட செயலும், அரசாங்க விரோதமும், அக்ஞாத வாசமும் அடைவர் என்று பண்டைய சாஸ்திரம் கூறினாலும், இன்றைய நாட்களில் எதிலும், எல்லாவற்றிலும் போராடி ஜெயிக்கும் வல்லமை காணப்படும். சேற்றில் பிறந்த செந்தாமரையாகப் புகழ்பெறலாம். தொடர்ச்சியாகப் பின்னடைவு வந்தால், ஒரு கிலோ மரக்கரி (பாய்லர் கரி), ஒரு கிலோ பார்லி அரிசி இரண்டையும் திங்கள்கிழமை ராகு காலம் (காலை 7.30 -9.00 மணிக்குள்ளாகக் கலந்து, திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடுவதால் பூர்வக் கெடுதல் அகலும். மூன்று காரட் கோமேதக மோதிரம் வெள்ளியில் அணிவதும் சிறப்பானது. வீட்டுவாசலில் கெட்ட நீர், கழிவு நீர் சேருவதால் கெடுதல் மிகையாகும். கருப்பு நாய் காணாமல் போவதும், இரவில் பூனை ஈனக்குரல் எழுப்புவதும் ராகுவின் தாக்கம் வாஸ்துரீதியாக உள்ளது என்பதன் அறிகுறி. கருநொச்சி இலையை வாசலில் தொங்கவிடலாம். ஒரு செம்புப் பாத்திரத்தில் கோதுமை, ஒரு செம்புத்துண்டு, நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை வைத்து, வீட்டு மாடியில் தென்மேற்கு பாகத்தில் மூன்று நாட்கள் இருக்கச் செய்து, பின் அதனை நீர்நிலையில் வீசிவிட்டு வருதல் நன்று.
இரண்டில் ராகு
செல்வத்தையும் சிறப்பில்லா குடும்ப வாழ்வையும் தருவார். 36 வயதுக்குமேல் 42 வயதுக்குள் இருப்போருக்கு தற்சமயம் ராகு தசையில் சுயபுத்தி நடந்தால் வீட்டில் திருட்டுபோகச் செய்வார் ராகு. அலுவலகப் பணிபுரிவோர், ஸ்டோர் கீப்பர், ஸ்டோர் இன்சார்ச் போன்றோருக்கு ஸ்டாக் இருப்பில் கவனம் தேவை. கோமேதக மோதிரம் அணிவது நல்லது. எப்போதும் வெள்ளி உலோக உருண்டை பர்சில் வைத்திருப்பது நல்லது. இரண்டில் ராகு இருந்தால் காதலர்கள் வரம்பு மீறுதல் கூடாது. திருமணம் ஆகும்வரை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்திப்பதைத் தவிர்க்கவேண்டும். செவ்வாய் சீராக இருக்கப்பெற்றால் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு சுலபமாகும். எலக்ட்ரானிக், மின்சாதன உபகரணங்களை மாமனார் வீட்டிலிருந்து இனாமாகப் பெறுதல் கூடாது. தொழிற்சாலை நடத்தினால் அங்கு மூலப்பொருள் வரும் வாயில் வழியாக, பூர்த்தியடைந்த பொருட்கள் செல்வது கூடாது. இரண்டுக்கும் தனித்தனி வாசல் அமைப்பது லாபத்தைத் தரும்.
மூன்றில் ராகு
ஓரளவு நற்பலனை எதிர்பார்க்கலாம். உடன்பிறந்தோர் உடமைகள்மீது நப்பாசை கூடாது. வாகனம் வைத்திருப்போருக்கு அவை சார்ந்த செலவினங்கள் கூடுதலாகும். சூரியனும் புதனும் ராகுவுடன் காணப்பட்டால், சகோதரி இருந்தால் அவருக்கு வரன் பார்க்கும்போது, வரும் கணவரின் ஆயுள் ஸ்தானத்தை உன்னிப்பாக ஆய்வுசெய்வது நன்று. வீட்டில் யானைத் தந்தத்தாலான பொருட்களை சேமிப்பது கூடாது. அனேகருக்கு 22 வயது கடந்ததும் நல்வாழ்வு உருவாகிவிடும். ரிஷப ராசியினருக்கு ராகு மூன்றில் இருக்கப் பெற்றால், பூர்வீக சொத்து பாகப்பிரிவினையின்போது மனபேதம் ஏற்பட்டு நீங்காப்பகை வரலாம். விட்டுக்கொடுப்பது நன்று. கடக லக்னத்தாரும் பாகப்பிரிவினை காலதாமதமானால் ராகுத்தலம் சென்று ராகு பகவானை வணங்குவது நன்று. 400 கிராம் கொத்தமல்லிக் கீரையும், 400 கிராம் பாதாம் பருப்பையும் பொட்டலமாகக் கட்டி ஒரு வாரம் வடகிழக்கு மூலையில் வைத்து பின் நீர்நிலையில் போடல் நன்று.
நான்கில் ராகு
தலைமையேற்கும் தகுதி, பின்னடைவு இரண்டும் பாடாய்ப்படுத்தும். இளமையில் பெற்ற தாய் புகழும்படி நடந்தாலும், பின்னாளில் புகழ் மங்கும். "சான்றோன் என கேட்ட தாய்' பின்னாளில் ஊழலில் சிக்கிய மகனாக வருவதைக் காண்பார்கள். இல்லையேல் உடல் உபாதையால் தாயாருக்கு வேதனையுறச் செய்வார்கள். அதுவும் இல்லையேல் அரசுக்கு எதிராகப் போராடுவார்கள். உதாரணமாக, 25-8-1962-ல் பிறந்த தஸ்லிமா நஸ்ரீன் வங்கதேசத்தின் புரட்சி எழுத்தாளர். இவரது ஜாதகத்தில் ராகு 4-ல் (ரிஷபத்தில்) காணப்படுகிறார். சனியும் கேதுவும் இணைந்து மறைமுக ஊக்கத்தைத் தருகிறார்கள். நான்கில் ராகு இருக்கப் பெற்றால் எந்தக் கிழமையிலும் ராகு காலங்களில் பணமுதலீடு செய்வது கூடாது. லாகிரி வஸ்துகள் உபயோகிப்பதைத் தவிர்த்தல் நன்று. கூட்டுக்குடும்பம்தான் சிறப்பைத்தரும். தொடர்ச்சியாக ராகுவின் தோஷம் நீடித்தால் பாம்புப் பண்ணைக்கு பணத்தை தானமாகக் கொடுத்தால் கிரக வேதனை குறையும்.
ஐந்தில் ராகு
திருப்தியில்லா பலனைத்தான் எதிர்பார்க்க இயலும். சிறுவயதிலேயே அகந்தை (ஈகோ) வெளிப்படும். குழந்தைகள் கல்வியில் தடையின்றி முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். ஆனால் வேலைவாய்ப்பில் சில பின்னடைவுகள் தெரியவரும். பெண்கள் ஜாதகத்தில் ராகு ஐந்தில் காணப்பட்டால் கர்ப்ப காலத்தில் ஐந்தாவது மாதம் கவனமுடன் இருப்பது நன்று. ஆண்கள் இரு மணம்புரிதல் கூடாது. இந்த ஜாதகரின் தந்தை 21 வயதுமுதல் 42 வயதுவரை கோமேதக ராசிக்கல் அணிதல் நல்லது. வெள்ளியிலான யானை சிலையை, தும்பிக்கையை மேலே தூக்கிய நிலையில் வீட்டில் வைப்பது நன்று. ஜாதகரின் மனைவி தலையணைப்பக்கம் சில சிவப்பு முள்ளங்கியை இரவு முழுக்க வைத்திருந்து, மறுநாள் பசு அல்லது எருமைக்குக் கொடுப்பது நன்று. குடியிருக்கும் வீட்டின் மையப்பகுதியில் குப்பை சேர்ப்பது கூடாது.
ஆறில் ராகு
ஆறாம் இடத்து ராகு சுகபோகமும், சொகுசான வாழ்வும், பகை வெல்லும் பராக்கிரமும் தருவார். இவர்களுக்கு பலவிதத்தில் அதிர்ஷ்டங்களைப் பெறும் பாக்கியம் சுலபமாகக் கிடைக்கப்பெறும். வெளிநாட்டிலும் அபிலாஷைகளை நிறைவேற்றத் துணைபுரிவார். பிற கிரகநாதர்கள் தரும் பின்னடைவால் இடுப்புவலி, உதடு, பல் சார்ந்த வேதனைகள் வரும். நான்குகால் பிராணிகளால் காயங்கள் ஏற்படும். அனேகருக்கு மாமனார், மாமன்வழி நன்மைகள் தடைப்படும். சிலருக்கு அந்நிய நாட்டில் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். நீலநிறப்பூவால் சரஸ்வதியை வணங்குவதால் தீமைகள் அகலும். கருப்புநிற நாய்க்கு உணவூட்டல் நல்லது. அலுவலக ஜன்னல்களில் கருப்புநிறக் கண்ணாடிகள் பொருத்துவது நல்லது. பிளாக் மெட்டல் ஸ்டோன் மோதிரம் அணிதல் நன்று. இரும்பிலான சிறு உருண்டையை பர்சில் வைப்பதும் சிறப்பு.
ஆறாம் இடம் கன்னியாக இருந்தால், அன்னிய நாட்டில் ஈட்டும் பணத்தை உறவுகளுக்கு அனுப்பினால் பெறுபவரின் நம்பிக்கைத் தன்மைக்கு முக்கியத்துவம் தருதல் நன்று. இல்லையேல் நீங்கள் ஏமாற்றப்படலாம்.
ஏழில் ராகு
பண்பற்ற மனைவியையும், பணவிரயத்தையும் தருவார் என்பது ஜோதிடம் தரும் எச்சரிக்கை. அரசு சார்ந்த உதவிகள் பெறத்தடை எதுவும் இருக்காது. அனேகர், அதிக நபர்கள் உள்ள குடும்பச் சூழ்நிலையில் பிறக்க நேரிடும். அதன்காரணமாக இளமையில் வறுமை வரும். அந்நிய நாடு புகலிடம் தரும். பருவத்தே திருமணமும் கைகூடும். ராகு மேஷம், ரிஷபம், சிம்மம் போன்ற இடத்தில் இருந்து அது லக்னமானால், உடம்பு வலி, வாய்வுத் தொல்லை ஏற்படும். இவர்களுடைய மாமனார் திடீர் பணக்காரராக ஆசைப்பட்டு, சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு பொருளைப் பறிகொடுக்கும் வாய்ப்பை ராகு ஏற்படுத்துவார். மனைவிக்கு கருப்பை சார்ந்த பின்னடைவுகள் வரும். சிலருக்கு தந்திரமான, அதிக வாய்பேசும் வாழ்க்கைத் துணை அமைந்து, அதுவே மணமுறிவுக்கு வழிவகுக்கும். தோல் அகற்றப்படாத மூன்று முழுத்தேங்காயுடன், இரு கோமேதக ராசிக்கல்லையும் வைத்து திருஷ்டி சுற்றி, ஒரு கோமேதகக் கல்லை வெள்ளியில் மோதிரமாக அணியவேண்டும். இன்னுமொரு கோமேதகக் கல்லையும் தேங்காயையும் நீர்நிலையில் போடுதல் நன்று. இதனை சனிக்கிழமை செய்யவேண்டும். நாய் வளர்ப்பது கூடாது. வெள்ளிக்கட்டி (பார்) பூஜையறையில் வைப்பது நன்று.
எட்டில் ராகு
ஈன புத்திரரையும், ஊன உடலையும் தருவார்; அற்ப ஆயுளையும் அளவான புத்திரரையும் அளிப்பார் என்று ஒரு நூலும், ஆயுள் பலம் கூடுதல் என வேறொரு சாஸ்திர நூலும் கூறுகிறது. ஆனால் கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொன்றைத் திறப்பார் என்பதும் ஊரறிந்த உண்மை. கமலஹாசன் ஒரு திரைப்படத்தில், "நானாக நானில்லை தாயே- நல்வாழ்வு தந்தாயே நீயே' என்று பாடுவார். அதைப்போல ராகுவைப் பாடுவோம். இவர்களுக்கு நோய்கள் வந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி மிகையாகும். வந்த மனைவியும் எதையும் சமாளிக்கும் வலிமை பெற்றவராக இருப்பார். சிலருக்கு கல்வியில் தடை இருந்துகொண்டேயிருக்கும். அடிவயிற்றில் வேதனைகள் தொடரும். ஓரிடத்தில் நிரந்தரமாகப் பணிபுரிய மாட்டார்கள். பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் மேற்கூறிய கெடுதல்களில் இருந்து தப்பிக்கலாம். ஒரு சமச்சதுர வெள்ளித்துண்டை பர்சில் வைத்தல் நன்று. எட்டு ஒரு ரூபாய் நாணயங்களையும், எட்டு கரித்துண்டுகளையும் 43 நாட்கள் ஓடும் நீரில் போட்டு வந்தால் தீமைகள் படிப்படியாக விடைகொடுக்கும். பழைய செல்லாக்காசுகளை கோவில் உண்டியலில் போடுதலும் நன்று. செவ்வாயன்று ராகுகாலத்தில் (மாலை 3.00-4.30) நீர் அருந்தக்கூடாது.
ஒன்பதில் ராகு
ஏழ்மை வாழ்வையும், தாழ்ந்தோர் உறவையும் உண்டுபண்ணுவார். ஆனால் தலைமையேற்கும் தகுதியும் தருவார் என்கிறது சாஸ்திரம். இவர்கள் பொதுநல வாழ்வில் அல்லது அரசியலில் ஈடுபட்டால் ராகுவின் பூரண உதவி கிடைக்கப்பெறும். உயர்பதவி வகிப்போர் கடைநிலைப் பெண் ஊழியர்களிடம் நேர்மையுடன் செயல்படல் நன்று. வீண்பழியைச் சந்திக்க நேரிடும். குங்குமப்பூவை நீரில் நனைத்து திலகமிடல் நன்று. வீட்டு மாடியில் எரிபொருள் சேகரிப்பது கூடாது. வடகிழக்குப் பகுதியை டெலிபோன் டவருக்கு வாடகைக்கு விடுதல் கூடாது. குடும்பத்தாரில் கருவுற்ற மாது இருக்கும்போது பழைய வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கக்கூடாது. பொதுவில் இவர்களுக்கு 6, 16, 28, 40, 52, 64, 76, 88 ஆகிய வயதுகளில் திருப்புமுனை அமையும். ஐந்து அல்லது பதினொன்றில் குரு இருந்தால் மனநிலை சீர்செய்யும் மருத்துவராகலாம். இவர்களிடம் சாதுக்களுக்கு அதிக உதவிசெய்யும் மனப்போக்கு காணப்படும்.
பத்தில் ராகு
பதவி பங்கமும் பரதேச வாழ்வும் ஏற்படும். பண்பிலா தொழில் புரிவர். லாபமும் ஈட்டலாம் என பண்டைய ஜோதிடக் குறிப்பு பரிந்துரை செய்கிறது. இதற்குப் பரிகாரம் ஒன்றே தப்பிக்கும் வழி. பரிகாரம் என்றால் என்ன? பாதிப்பை ஏற்படுத்தும் கிரகநாதர்களிடம் முறையிடுவதுதான். "இறைவனிடம் கையேந்துங்கள்; அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' "தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்ள் கொடுக்கப்படும்' என்பவை மதம்சார்ந்த அறிவுரைதான். மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் ஏதுமறியா பாஞ்சாலியை பணயம் வைத்துத் தோற்றார்கள். நட்டநடு சபையிலே துயிலுரியப்படுகிறாள்.
அவள் எழுப்பும் அபயக்குரல் கேட்டு கிருஷ்ணபரமாத்மா மேலாடைகளை அள்ளி அள்ளித் தருகிறார். அந்த சூழ்நிலையில் அந்த வேண்டுதல்தான் அவளுக்குப் பரிகாரம்.
அதுபோலவே நாம் முறையிடும் தன்மைக்கேற்ப கிரகநாதர்கள் பரிகாரங்களைத் தர மறுப்பதேயில்லை மருத்துவரீதியாக ராகு உங்களுக்கு எந்தக் குறையும் தரமாட்டார். மருத்துவக் கல்லூரியில் இடம்பெற நீட் தேர்வு எழுதினால் வேண்டிய உதவிபுரிவார். பொதுப்பரிகாரம் போதுமானது.
பதினொன்றில் ராகு
தூரதேசப் பயணமும், துணிவான செயலும் தருவார். எல்லாவிதத்திலும் நன்மைகள் என்பது சாஸ்திர உத்தரவாதம். வேலையாட்கள் புடைசூழ பவனிவரும் யோகத்தைத் தருவார். "எனக்கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப்போலவே இருப்பான்' என பெருமிதம் கொள்ளலாம். பல கலை கற்ற மேதையாகவும் வாழலாம். ஆனால் பகை இடமான மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம் ஆகிய இடங்களில் இருப்பின் ராகு பலனற்றுக் காணப்படுவார். பலர் சூதாட்டத்தில் அதிகம் கவனம் செலுத்தி பொருட்களையும் வருமானத்தையும் பறிகொடுப்பர். ஒரு மஞ்சள் துணியில் நவதானியம், சந்தன உருண்டைகள், ஒரு வெள்ளி உருண்டை ஆகியவற்றைப் பொட்டலமாகக் கட்டி, வீட்டின் வடமேற்கு மூலையில் நின்று திருஷ்டி சுற்றி நீரில் போடுவது நன்று. தந்தையின் பிரிவுக்குப்பின் தங்கத்திலான சிறு சங்கிலியாவது ஒரு வருடம் அணிதல் நல்லது. எலக்ட்ரானிக் பொருட்கள் இனாமாகப் பெறுதல் கூடாது. நீலக்கல் மோதிரம் வேண்டாம். சந்திரகிரகணம் முடிந்தபின் அறுகம்புல்லை நீரில் போட்டுக் குளிக்கவும்.
பன்னிரண்டில் ராகு
இல்லற வாழ்வில் இடர்கள் தருவார். பணவிரயம் மிகையாகும் என்பது சாஸ்திர விதி. பெற்ற மகள் அல்லது சகோதரிகள் சார்ந்த கவலைகள் நிரந்தரமாகும். சிலருக்கு மூலவியாதி, மலச்சிக்கல் இளமையிலேயே வரும். புதன் அல்லது குரு பதினொன்றில் இருந்தால் தடையின்றி வருமானம் வரும். எந்த சூழ்நிலையிலும் வட்டிக்குப் பணம் வாங்குவதைத் தவிர்க்கவும். தென்கிழக்கில்தான் சமையல்கூடம் இருக்கவேண்டும். ராகுவோடு செவ்வாய் இணைந்து காணப்பட்டால், ஓரளவு நிலைமை கட்டுக்குள் அடங்குவதோடு நல்ல பெயரையும் வாங்கலாம்.
மா மஹாதேவ ஸம்ஸ்துத்யா மஹிஷீகண பூஜிதாம்ருஷ்டாந்நதா ச மாஹேந்த்ரீ மஹேந்த்ர பததாயிநீஎன்னும் மந்திரத்தை தினமும் காலையில் 28 முறை ஜபித்து வந்தால் மேன்மேலும் செல்வம் பெருகும். கூறுவது கடினம் எனில் வெள்ளைக் காகிதத்தில் சிவப்பு நிறத்தில் எழுதி வைத்துக் கொள்வது நன்று. சரஸ்வதி கோவிலுக்குச் சென்று வணங்கவும்.
செல்: 93801 73464