18-9-2020 இதழ் தொடர்ச்சி...

16. விசாகம்

ஆன்மிக எண்ணமும் இல்லற ஈடுபாடும் கலந்த இவர்களுடைய எதிரிகள் அழிவர்.

திருமணப் பிரச்சினைகள் அகலும். வீட்டில் யாருக்காவது உடல்நிலை மோசமாகி உயிர்க்கண்டம் ஏற்படும் நிலை இருந்தால், அது நீங்கிவிடும். அரசு தண்டனை நீர்த்து விடும். பணவரவுத் தடைகள் அகலும். வீடு பழுதுபார்க்க வேண்டியிருக்கும். கோவில் வழிபாட்டிற்கும் பரிகாரத்திற்கும் நிறைய செலவு செய்வார்கள். தம்பதிகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருந்த கெடுமதியாளர்கள் அழியும் நிலை ஏற்படு வதால், இல்லறம் காப்பாற்றப்படும். வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகரை வணங்கவும்.

Advertisment

மருத்துவமனையில் நோயுடன் சிரமப்படும் குடும்பத்தினருக்கு உதவி செய்யவும்.

rr

Advertisment

17. அனுஷம்

சண்டையிடவும், ஆயுதம் பயன்படுத்தவும் ஆர்வமுள்ள இவர்களில் சிலருக்கு கலப்புத் திருமணம் நடக்கும். எதிரிகளின் தொந்தரவு குறையும். அதிர்ஷ்டம் புறவாசல் வழியே வரும். சிலர் வேலை, தொழிலில் லஞ்சம் கொடுத்தும் பெற்றும் முதல்நிலை பெறுவார்கள். பூர்வீக நிலத்திலிருந்து வந்த பணம் தடைப்படும். தாயாரின் நிலை கவனிக்கப்பட வேண்டும். சகோதரர் கோபித்துக் கொள்ளும் நிலையுண்டு. கலைத்துறையினர் வாய்ப்பு பெறுவர். ஆனால் பணம் தடைப்படும். அரசியல்வாதிகளில் சிலர் தங்களின் செயல்களால் இகழப்படுவர். கழிவு உறுப்புகள் தொல்லை ஏற்படுத்தும். பைரவரை வணங்கவும். முதிர்ந்த, திருமணமாகாமல் தனியாக இருப்பவர்களுக்குத் தேவையறிந்து உதவி செய்யவும்.

18. கேட்டை

தந்திரமும் புத்திசாலித்தனமும் கொண்ட இவர்கள் திருமண விஷயத்தில் நிறைய குழப்பங்கள் செய்துவிடுவார்கள். நல்ல வசதி யுள்ள மனைவியாக அமைத்துக் கொள்வார்கள். அவரைக் கொண்டு பணம் முதலீடு செய்து, தொழில் ஆரம்பித்து வாழ்வை செட்டில் செய்வார்கள். வாரிசுகளின் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகையைக் கண்டிப்புடன் வாங்கிவிடுவார்கள். லாபத்தில் சிறிது நஷ்டம் உண்டு. நஷ்டத்திலும் லாபம் வரும். அரசியல் வாதிகள் நிறைய சேவை செய்வதுபோல் இனங் காட்டி தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வர். கலைத் துறையினர் தங்கள் குறைகளை நிறையாக்கிவிடுவர். சிலருக்கு கல்வியில் தடை ஏற்படும். நரசிம்மரை வணங்கவும். பிறரை ஏமாற்றாமல் இருப்பது நன்மை தரும்.

19. மூலம்

தர்ம சிந்தனையும், செல்வம் சேர்க்கும் முயற்சியுமுடைய இவர்கள், இதுவரை இருந்து வந்த நோய் பாதிப்பிலிருந்து விடுபடுவர். வேலை விஷயமாக எதிர்பாராத நன்மை நடக்கும். அரசு தொந்தரவு உண்டு. தந்தையின் நிலை கவனிக்கப்பட வேண்டும். வீடு, தொழில் இடத்தை மாற்றுவார்கள். சிலர் வீட்டில் முதலீடு செய்வார்கள். ஆன்மிகச் செலவு நிறைய செய்வார்கள். குலதெய்வக் கோவில் தரிசனம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு சற்று பெயர் கெடும். அரசியல்வாதிகளுக்கு வேலை அதிகமாகும். விவசாய நில முதலீடு உண்டு. தொடையில் வலி வரலாம். சித்தர்களை வணங்கவும். சித்தர் சமாதி, ஆன்மிக மடம், குருகுலப் பயிற்சிப் பள்ளி போன்றவை சார்ந்தவற்றுக்கு நன்கொடை வழங்கவும்.

20. பூராடம்

நேர்மையான வழியில் பொருளும் புகழும் சேர்க்க விரும்பும் இவர்களின் மனைவிக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்படும். காரணம், இவர்கள் தொழிலில் மனைவி அதிகம் உழைப்பதால் இருக்கும். உணவு, கலை, அலங்காரம், அரசியல், விவசாயம் போன்றவற்றில் உழைப்பும் லாபமும் அதிகமாகும். தங்கள் பொழுது போக்குகளையே தொழிலாக, வேலையாக மாற்றிவிடுவார்கள். எப்போதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். சிலர் தந்தையின் தொழிலில் இணைந்து கொள்வார்கள். கல்வி, வீடு, வாகனம் போன்றவை செலவு தரும்.

பணம் கிடைத்தவுடன் அதை முதலீடு செய்து விடுவார்கள். சிலருக்கு வேலை, கல்லூரி, பள்ளி மாற்றம் உண்டு. சிலருக்கு மனைவிமூலம் சொத்து கிடைக்கும். கர்ப்பப்பை தொந்தரவு வரலாம். அருகிலுள்ள மகாலட்சுமியை வணங்கவும். சிறுதொழில் செய்யும் தம்பதிகளுக்கு உதவவும்.

21. உத்திராடம்

நல்லொழுக்கமும் கம்பீர வீரமும் கொண்ட இவர்களுக்கு எதிர்மறை சிந்தனை அதிகரிக்கும். குயுக்தியாக யோசிப்பர். எந்த தொழில் செய்தாலும்- அது அரசியல், கலை, விவசாயம் என எதுவாக இருப்பினும் தங்கள் அரிய பெரிய யோசனையால் பிரமிக்க வைப்பார்கள். சிலசமயம் அடுத்தவர்களை அழ வைத்து விடுவார்கள். சிலசமயம் உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே தைரியசாலிபோல நடிப்பார்கள். செய்து முடிக்கவேண்டிய வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டாலும் திட்டமிட்டு முடித்துவிடுவார்கள். தந்தையால் லாபமும், அவரது நோய்த் தன்மையால் எரிச்சலும் வரும். அரசு விஷயங்களில் கவனம் தேவை. தொடையில் ரத்த நாள வலி, மூட்டுவலி வரக்கூடும். சூரிய வழிபாடு, சாஸ்தா வழிபாடு நன்று. அரசு கீழ்மட்ட ஊழியர்களை இழிவாக நடத்த வேண்டாம். வயதான முதியவருக்கு உதவவும்.

22. திருவோணம்

பழமையும் புதுமையும், வேகமும் மந்தமும் என கலவையான இயல்புடைய இவர்களுக்கு காதல் கைகூடும். மறுமணம் நடைபெறும். கலைத்துறையினர் பிரகாசிப்பர். பெண் அரசியல் தலைவர்கள் யோகம் பெறுவர். பூர்வீக இடத்தில் திருமணம் நடக்கும். வாரிசுகளின் பொழுதுபோக்கு யோசிக்கச் செய்யும். பண விஷயம் தடைகளுடன் லாபம் தரும். வேலையில் அதிர்ஷ்ட நிகழ்வுகள் உண்டு. பயணங்கள் நன்மை தரும். அதீத யோசனைகளால் சிலசமயம் மண்டை குழப்பமடைந்தது போல் இருக்கும். முழங்கால் தேயும். அருகிலுள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று வழிபடவும். அறிவுக் குறைபாடுள்ளவர்களின் குடும்பத்தாருக்கு உதவவும்.

23. அவிட்டம்

எதிர்மறை சிந்தனையும் மிரளவைக்கும் வீரமுடைய இவர்கள் பழைய வீடு, மனை, வாகனம் எல்லாவற்றையும் மாற்றி புதிதாக்கு வர். அலுப்பு தரும் வேலையை விட்டு சொகுசான வேலையைத் தேடுவர். சொந்தத் தொழில் தொடங்கும் முயற்சியில் முனைவர். தற்போதைய வேலையை விட்டுவிட்டு வேறு வேலை, தொழில் தொடங்குவர். சிலசமயம் இவர்கள் யோசனை யால் பின்னடைவு வரும். அரசியலில் உள்ளோருக்கு பணச்செலவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சற்று நெருடல் உண்டு.

கணுக்காலில் வலி ஏற்படும். காளியை வணங்க வும். கல்வி தடைப்பட்ட குழந்தைகளுக்கு உதவவும்.

24. சதயம்

நிலையற்ற மனமும் எதிர்மறை நெஞ்சுரமும் உடைய இவர்களில் பலர் வீடு வாங்கி விற்கும்போது, அனைத்து வேண்டாத விஷயங்களையும் கைக்கொள்வர். சிலர் யாருடைய வீட்டுப் பத்திரத்தையோ கொடுத்து கடன் வாங்கி இவர்கள் அனுபவிப்பர். அரசுவசம் போலிப் பத்திரம் கொடுத்து வேலை, கல்விச் சான்றிதழ் வாங்கி விடுவர். பேச்சினால் தொழிலில் லாபம் கொண்டு வந்துவிடுவர். இவர்களின் சிலரது செயல்கள், தாங்கள் வேலை பார்த்த நிறுவனத்தை மூட வைத்துவிடும். யோசனைகள் எதிர்மறைப் பலனைத்தரும். கூடியமட்டும் சொந்தத் தொழில், வீட்டு விஷயத்தில் கருத்து சொல்லாமலிருப்பது சுற்றியுள்ள வர்களுக்கு நன்மை தரும். பைரவரை வணங்கவும்.

25. பூரட்டாதி

ஆன்மிக எண்ணமும் நியாயமும் உடைய இவர்கள் வேறு இனத்தவரிடமிருந்து வீடு, மனை, வாகனம் வாங்குவார்கள். வீட்டில் தீயினால் சற்று பாதிப்புண்டு. வேலை சம்பந்தமாக வெளியூர், வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி கிடைக்கக்கூடும். வாக்குவண்மையால், தள்ளிப்போன தொழில் மேன்மை கூடிவரும். தொழில் முதலீட்டிற்கு சற்று அலைச்சல் உண்டு. இவர்களது தொழில் தயாரிப்புகள் பற்றிய பொய்ப் பிரச்சாரம் ஒழியும். அரசியல் வாதிகளின் வாக்குவண்மை அறிவோடு அமையும். வராக மூர்த்தியை வணங்கவும். அந்தணர்களுக்கு உதவலாம்.

26. உத்திரட்டாதி

கண்டிப்பும் அரவணைப்பும் கலந்த இவர்களுக்கு அதீத தைரியமும் வீரமும் பொங்கும். கலைத்துறை முயற்சி வெற்றி பெறும். கல்வியில் மேன்மைபெற சற்று செலவு செய்வர். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. முயற்சியுடன் லஞ்சம் கொடுப்பதாலும் சிலருக்கு அரசுப் பதவி கிடைக்கும். ஆன்மிகச் செலவு வரும். தந்தையின்வசம் உள்ள பழமையான, யோகமான பொருள் கிடைக்கும். சிலர் திருமணமாகி, பிறந்த இடம் விட்டு வேறிடம், வேறுநாடு செல்வர். அரசியல்வாதிகள் செலவு செய்தால் யோகம் கிடைக்கும். பிரிவினைமூலம் வீடு, வயல் கிடைக்கும் பெருமாளை வணங்கவும். அந்தணருக்கு உதவவும்.

27. ரேவதி

பயண விருப்பமும், தைரிய சாலியுமான இவர்களுக்கு எண்ணங்கள் கூர்மை பெறும். மனவலிமையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். பணத்தைப் பணத்தால் பெருக்குவர். யூக வர்த்தகம் முன்னேறும். இவர்களின் தைரியம் எதிரிகளை அடக்கும். அரசு பிரச்சினைகளை புத்தி சாதுரியத்தால் வெற்றி கொள் வார்கள். திருமணத் தடை ஏற்பட வாய்ப்புண்டு. ஆராய்ச்சிக் கல்வியில் ஏற்படும் தடைகளை சாதுரியமாக சமாளித்து விடுவார் கள். இவர்களின் இளைய சகோதரம் கல்வித் தடை பெறக்கூடும். மனையில் சில பிரச்சினை அல்லது பிரிவினை ஏற்படக்கூடும். தந்தையின் சொத்தில் பிரிவினை செய்யும் வாய்ப்புண்டு. கடலோரத்தில் குடிகொண்டுள்ள பெருமாளை வணங்கவும். மனபலம், ஞாபகசக்தி குறைந்த வயதானவர்களுக்கு உதவவும்.

செல்: 94449 61845