ராகு ஒரு நிழல் கிரகம். அது எந்த ராசியில் உள்ளதோ அந்த வீட்டு அதிபதியின் பலனைச் செய்யும். ஒரு ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அந்த ஜாதகர் சிறந்த அரசியல்வாதியாக இருப்பார். சிலர் புகழ் பெற்ற மனிதர்களாக இருப்பார்கள். நிறைய பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். சிலர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொள்வார்கள். அறிவியல் அறிஞர்களாகவும், பொருளாதார நிபுணர்களாகவும் பலர் இருப்பார்கள். ராகு பலவீனமாக இருந்தால் மனநோய், மூட்டுவலி, ரத்தக் குறைவு, தோல்நோய், கை- கால் வீக்கம், மாரடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால், அந்த ஜாதகருக்கு சர்ப்பதோஷம் ஏற்படும். அதனால் கணவன்- மனைவி உறவில் பிரச்சினை ஏற்படும். ஆனால் ராகு ரிஷபம், கடகம், கன்னி, மீனம் ஆகியவற்றில் இருந்தால் அவர் திறமைசாலியாக இருப்பார். பலருக்கு வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.
அந்த ராகு குருவால் பார்க்கப்பட்டால் ஜாதகர் வசதியாக வாழ்வார். சிலருக்கு மறுமணம் நடக்கக்கூடும். ராகு, சனி, சூரியன் சேர்ந்திருந் தால் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும்.
2-ஆம் பாவத்தில் ராகு இருந்தால், அந்த ஜாதகருக்கு பேச்சுத்திறமை இருக்கும். சிலர் வழக்கறிஞர்களாக இருப்பார்கள். சிலரோ தேவையற்றதைப் பேசுவார்கள். அதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகும். செவ்வாயுடன் ராகு இருந்தால் குடும்பத்தில் அமைதியற்ற சூழல் நிலவும். சகோதரர்களுக்கிடையே சரியான உறவிருக்காது. பலருக்கு பேசும்போது வாய் திக்கும். ராகு, சனி, சூரியன் சேர்ந்து 2-ல் இருந்தால் ஜாதகர் பொறியியல் நிபுணராக இருப்பார். ஆனால் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது. பலர் வீண் சண்டையிடுவார்கள். ராகு, சந்திரன், சூரியன் சேர்ந்தி ருந்தால் கண்களில் நோய் வரலாம். வயிற்றில் பித்தம் உருவாகும்.
3-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகர் தைரியமுள்ளவராக இருப்பார். பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார். ஆனால் சகோதர உறவு நன்றாக இருக்காது. சனியுடன் ராகு இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களே அவருக்கு எதிரியாக இருப்பார்கள். சுக்கிரனுடன் ராகு இருந்தால் கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சிலர்மீது சூனியம் வைப்பதும் நிகழும்.
4-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகர் வீண்செலவு செல்வார். அவரது வீட்டில் பல பிரச்சினைகளும் இருக்கும். சூரியனுடன் ராகு இருந்தால் இதயத்தில் கோளாறு ஏற்படலாம். சந்திரனுடன் ராகு இருந்தால் மனநிலை சரியாக இருக்காது. தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். செவ்வாய், சூரியனுடன் ராகு இருந்தால் சிலருக்கு மறுமணம் நடக்கலாம். சிலருக்குத் திருமணமே நடக்காமல் போகும்.
அப்படியே நடந்தாலும் அதில் மகிழ்ச்சி இருக்காது. குரு, புதனுடன் ராகு இருந்தால் நிறைய படித்தவர்களாக இருப்பார்கள்.
5-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகரின் படிப்புக்கும் அவர் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது. செவ்வாயுடன் ராகு இருந்தால் அவருக்குப் பிறக்கும் குழந்தையின் உடல்நலம் நன்றாக இருக்காது. பலருக்கு மனநிலையும் சரியாக இருக்காது. வயிற்றில் நோய் ஏற்படும். செவ்வாய், சனியுடன் ராகு இருந்தால் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யும் சூழலும் சிலருக்கு உண்டாகும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்படும். குருவால் ராகு பார்க்கப்பட்டால் சிலர் வெளிநாட்டுக் குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.
6-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகரின் மனதில் குழப்பம் ஏற்படும். சிலருக்கு சரியாக உறக்கம் வராது. செவ்வாயுடன் ராகு இருந்தால் சிலருக்கு விபத்து ஏற்படும். தசா காலங்கள் சரியில்லாதபோது எதிரிகள் அவருக்கு சூனியம் செய்வார்கள். செவ்வாய், சனியுடன் ராகு இருந்தால் சிலருக்கு மறுமணம் நடக்கும். ரத்தக் குறைவு ஏற்படும்.
7-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகரின் சிந்தனை நன்றாக இருக்காது. கணவன்- மனைவி உறவு பாதிக்கப்படும். சிலர் பிடிவாதகுணம் கொண்டவர்களாக இருப்பார்கள். செவ்வாயுடன் ராகு இருந்தால் மறுமணம் நடக்கக்கூடும். செவ்வாய், சனியுடன் அல்லது செவ்வாய், சூரியனுடன் ராகு இருந்தால் கணவனும் மனைவியும் பிரிந்துவாழும் சூழல் உண்டாகும்.
8-ல் ராகு இருந்தால் சிலருக்குத் திருமணத்தடை ஏற்படும். செவ்வாயுடன் ராகு இருந்தால் மறுமணம் நடக்கக்கூடும். ராகு, சுக்கிரன், செவ்வாய் சேர்ந்து 8-ல் இருந்தால் சிலர் விவாகரத்தான பெண்ணை மணம்புரிவார்கள். ராகு, செவ்வாய், சனி, புதன் 8-ல் இருந்தால் சிலர் தூக்கத்தில் பேசுவார்கள். மனநோயும் ஏற்படலாம். ராகு, சந்திரன், புதன் 8-ல் இருந்தால் சிலருக்கு நீரில் கண்டம் ஏற்படலாம். சிலர் போதைக்கு அடிமையாவார்கள்.
9-ல் ராகு இருந்தால் பலர் அடிமைவேலை செய்வார்கள். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும். செவ்வாய், சனியுடன் ராகு இருந்து, 2-ல் சுபகிரகம் இருந்தால் சிலர் மன்னரைப்போல வாழ்வார்கள்.
10-ல் ராகு இருந்தால் சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். பலரை அடிமைப்படுத்தித் தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்வார்கள். செவ்வாய், சனியுடன் ராகு 10-ல் இருந்தால், பல சிரமங்களைக் கடந்து அந்த ஜாதகர் பெரிய மனிதராவார்.
11-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகருக்கு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். செவ்வாய், சூரியனுடன் ராகு இருந்தால் சிலருக்கு வயிற்றில் நோய் ஏற்படும். குரு, சந்திரனுடன் ராகு இருந்தால் சிலர் குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பார்கள்.
12-ல் ராகு இருந்தால் சிலருக்கு சரியாக உறக்கம் வராது. ராகு தசை நடக்கும்போது சூதாட்டத்தில் பணத்தை இழப்பார்கள். செவ்வாயுடன் ராகு இருந்தால் திருமணம் தாமதமாக நடக்கும். சனி, செவ்வாயுடன் ராகு இருந்தால் கணவனும் மனைவியும் பிரிந்துவாழ நேரும்.
பரிகாரங்கள்
தினமும் துர்க்கையம்மனுக்கு இரண்டு சிவப்பு மலர்கள் வைத்து, விளக்கேற்றி வழிபடவேண்டும். ஞாயிற்றுக்கிழமை பைரவர் ஆலயத்திற்குச் சென்று ஒரு தீபமேற்றி வணங்கவேண்டும். இரவில் துணி துவைக்கக்கூடாது. பழுதான மின்சார- மின்னணுப் பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. தென்மேற்கு திசையில் கிணறு இருத்தல் நல்லதல்ல.
செல்: 98401 11534