இயற்கையில், இறைவன் படைப்பில் மரம், செடி, கொடி உட்பட அனைத்திற்கும் உரிய பருவகாலம் உண்டு. தாவரங்கள் குறிப்பிட்ட காலத்தில்தான் பூத்துக் காய்க்கின்றன. மனித குலத்தைப் பொருத்தவரை பெண்கள் சுமார் 14 அல்லது 15 வயதில் பருவமடைகிறார்கள். அதேசமயம் திருமணத்திற்கான முழு உடல் வளர்ச்சியை, வலிமையை 18-20 வயதுகளில் அடைகிறார்கள். ஆண்களும் 22-24 வயதுகளில் முழு வளர்ச்சி பெறுகிறார்கள். மேற்கூறிய வயதுகளிலே முற்காலங்களில் திருமணங்கள் நடைபெற்றுவந்தன. தற்காலங்களில் மேற்படிப்பு, உரிய வேலை காரணமாக திருமண வயதுகள் அதிகரித்துள்ளன. பொதுவாக முப்பது வயதுக்கு மேற்பட்ட திருமணங்களையே தாமதத் திருமணங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி ஏழாம் வீடு பாதிப்பு பெற்றால் திருமணம் தாமதம் ஆகும். அதிலும் குறிப்பாக அசுப கிரகமான சனி 7-ஆம் வீடு மற்றும் 7-ஆம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு (சேர்க்கை- பார்வை)
பெற்றால், தாமதத் திருமணம் என்று நம்பப்படுகிறது. மேலும் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி காலங்களிலும் திருமணம் தடைப்படும் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், திருமணத்திற்கு தாமதமாகும் பலரது ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்ததில் வேறு சில உண்மைகளும் புலப்படுகின்றன. பெரும்பாலும் திருமணத்தை தாமதப்படுத்துவதில் பாதகாதிபதி என்ற அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதை உணரமுடிந்தது.
12 ராசி மண்டல வீடுகளையும் சரம், ஸ்திரம்' உபயம் என்று மூன்றாகப் பிரித்துள்ளனர்.
மேஷம், கடகம், துலாம், மகரம்- சர வீடுகள்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஸ்திர வீடுகள்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்- உபய வீடுகள்.
அவரவர் பிறந்தநாள் மற்றும் சரியான நேரத்தை ஆதாரமாகக்கொண்டே ஒருவரது ஜென்ம (பிறவி) லக்னம் கணிக்கப்படுகிறது. அந்த வீட்டைப் பொருத்து மேற்கண்டவாறு ஜென்ம லக்னம் சரம், ஸ்திரம், உபயம் ஆகிய மூன்றில் எதில் அமைகிறது என்பதைக் குறித்துக்கொள்ளலாம். ஜென்ம லக்னம் சரம் என்று அமைந்தால் லக்னத்திலிருந்து 11-ஆம் அதிபதியே பாதகாதிபதி ஆகும்.
ஜென்ம லக்னம் ஸ்திரம் என்று அமைந்தால் லக்னத்திலிருந்து 9-ஆம் வீட்டு அதிபதி பாதகாதிபதி ஆகும். ஜென்ம லக்னம் உபயம் என்றால் லக்னத்திலிருந்து 7-ஆம் வீட்டு அதிபதி பாதகாதிபதி எனலாம். இங்கே 12 வீடுகளுக்கும் பாதகாதிபதி விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
1. மேஷம்- சனி
2. ரிஷபம்- சனி
3. மிதுனம்- குரு
4. கடகம்- சுக்கிரன்
5. சிம்மம்- செவ்வாய்
6. கன்னி- குரு
7. துலாம்- சூரியன்
8. விருச்சிகம்- சந்திரன்
9. தனுசு- புதன்
10. மகரம்- செவ்வாய்
11. கும்பம்- சுக்கிரன்
12. மீனம்- புதன்
மேற்கூறியவாறு பாதகாதிபதி கிரகங்கள் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் அல்லது ஏழாம் வீட்டு அதிபதி கிரகங்களோடு தொடர்பு பெறும்போது (சேர்க்கை- பார்வை) திருமணங்கள் தாமதமாகின்றன. இவற்றை சில உதாரணங்களுடன் விளக்கலாம்.
உதாரண விளக்கம்-1
நாற்பது வயதைக் கடந்தும் திருமணமாகாத அரசியல் தலைவர் ஜாதகம் இது.
ஜென்ம லக்னம்- மகரம்- சர லக்னம்.
சர லக்னத்திற்கு 11-ஆம் வீட்டு அதிபதி பாதகாதிபதி; 11-ஆம் வீடு விருச்சிகம்; அதிபதி செவ்வாய். ஏழாம் வீடு கடகம் என்றாகி அதன் அதிபதி சந்திரன். இந்த ஜாதகத்தில் பாதகாதிபதி செவ்வாய் எழாம் வீட்டு அதிபதியான சந்திரனை நேரடியாகப் பார்ப்பது திருமணத்தைத் தாமதப்படுத்துகிறது. மேலும் சந்திரன் 12-ஆம் வீட்டில் அமைவதும் நல்லதல்ல.
உதாரண விளக்கம்-2
35 வயதாகியும் திருமணமாகாத பிரபல நடிகையின் ஜாதகம் இது.
லக்னம்- மேஷம்- சர லக்னம்.
பாதகாதிபதி- 11-ஆம் வீட்டு அதிபதி- சனி.
ஏழாம் வீடு துலாம்; அதிபதி சுக்கிரன். பாதகாதிபதி சனி, ஏழாம் அதிபதி சுக்கிரன். பத்தாம் பார்வைமூலம் தொடர்புகொள்வதால் திருமணம் தாமதமடைந்துள்ளது.
இதுபோல பல உதாரண ஜாதகங்களைக் கூறலாம். ஜென்ம லக்னம் தவிர, ஜென்ம ராசியிலிருந்து ஏழாம் வீட்டு அதிபதி பாதகாதிபதி கிரகத்துடன் தொடர்புகொண்டாலும் திருமணம் தாமதப்படும். தவிரவும் பாதகாதிபதி சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்தாலும் திருமணம் தாமதப்படும்.
பாதகாதிபதி கிரகத்திற்குரிய தோஷ நிவர்த்திப் பரிகாரங்களைச் செய்துவருவதே சிறந்த உபாயம். சுமங்கலிபூஜை, அரசமர வலம்வந்து வழிபடுதல் போன்றவையும் தடைகளை அகற்றித் திருமணம் நடைபெற உதவும் என்று நம்பலாம்.
செல்: 74485 89113