/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_5017.jpg)
சுமார் 65 வயதுடைய ஒருவர். ஜீவநாடியில் பலன் அறிந்துகொள்ள வந்தார். "என் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த இரண்டு வருடங்களில், அவனுக்கும் அவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்தப் பெண் என் மகனைவிட்டுப் பிரிந்து, பிறந்த வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மறுபடியும் என் மருமகள், திரும்பவந்து மகனுடன் சேர்ந்து வாழவேண்டுமென்று, நாங்களும், ஜோதிடம் பார்த்து, அவர்கள் கூறியபடி கிரக சாந்திப் பரிகாரங்களையும் கோவில் பிரார்த்தனைகளையும் செய்தோம். ஆனால் எந்தப் பலனுமில்லை. இரு குடும்பத்தாரின் உறவினர்களைக்கொண்டு, பேச்சுவார்த்தையும் நடத்தினோம். ஆனால் அந்தப் பெண் சம்மதிக்காமல் விவாகரத்து கேட்கிறாள்.
என் மகன் அவளை வெறுக்கவில்லை. சேர்ந்து வாழத்தான் ஆசைப்படுகிறான். என் மகனுடன் அவள் சேர்ந்து வாழ்வாளா அல்லது திரும்ப வரவே மாட்டாளா என்பதையும், என் மகனின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் அறிந்துகொள்ளத்தான் வந்துள்ளேன்'' என்றார். ஜீவநாடி ஓலையைப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றிப் பலன்கூறத் தொடங்கினார். “மகனின் குடும்ப வாழ்க்கையில் உண்டான பிரச்சினையைப் பற்றி தெரிந்துகொள்ள வந்த இவன், மகன்- மருமகள் பிரிந்ததற்குக் காரணத்தைக் கூறுகிறேன். முற்பிறவியில், இவன் மகன், கல்வி போதிக்கும் ஆசிரியர் தொழில் செய்துவந்தான். அப்போது அந்தப் பள்ளியில் தன்னைப்போல் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் நெருங்கிப் பழகிவந்தான். இவர்களின் பழக்கம் சுமார் மூன்று வருடங்கள் நீடித்தது. தன்பிறகு இவன் அந்தப் பள்ளியிலிருந்து மாற்றலாகி, வேறு ஊருக்குச் சென்று விட்டான். அதன்பிறகு அவளையும் மறந்துவிட்டான்; அவள் தொடர்பை யும் துண்டித்துக்கொண்டான்.
அந்தப் பெண் இவன் திரும்ப வருவான்; தன்னிடம் வாக்களித்தபடி தன்னை மணந்துகொள்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள். கடிதத் தொடர்புகொண்டபோதும் இவன் அதற்கு பதில் தரவில்லை. அந்தப் பெண்ணுக்குத் தந்தை இல்லை. தாயும், ஒரு தம்பியும் மட்டும்தான். அதனால் இவனைத்தேடி வந்து, அவளுக்காகப் பரிந்துபேச யாருமில்லை. அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதைப் புரிந்துகொண்ட அவள், பல சாபங்களை இவன்மீது வாரிவிட்டாள். இரண்டு வருடங்கள் சென்ற பிறகு அவள் வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாள். இவனும் தன் பெற்றோர்கள் விருப்பப்படி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான்.
முற்பிறவியில், இவனால் ஏமாற்றப்பட்டுக் கைவிடப்பட்ட அந்தப் பெண் விட்ட சாபம், இந்தப் பிறவியில் செயல்பட்டு, இந்தப் பிறவி மனைவியுடன் சேர்ந்து வாழமுடியாமல் தடுத்து, இருவரையும் பிரித்து வைத்தது. முற்பிறவியில் தன்னை விரும்பிய பெண்ணை ஏமாற்றி அவளை ஒதுக்கியதால், இந்தப் பிறவியில் இவனை மணந்தவள் இவனை ஒதுக்குகின்றாள்.
முற்பிறவியில் ஒரு பெண்ணிடம் பழகி ஏமாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பாவச் செயலை, இப்பிறவியிலும் மகன் செய்துவிட்டான். இப்போதும் ஒரு பெண்ணுடன் பழகித்தான் வந்தான். ஆனால் தனது தாய்- தந்தை வார்த்தையைத் தட்டமுடியாமல், அவளை விட்டுவிட்டு பெற்றோர் கூறிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இவ னால் ஏமாற்றப்பட்ட அந்தப் பெண் இன்னும் திருமணம் ஆகாமல்தான் இருக்கிறாள். அவளுக்கு தந்தையும் கிடையாது; தாயும் கிடையாது. ஒரே ஒரு தங்கை மட்டும்தான் இருக்கி றாள். இவன் மனைவி விருப்பப்படி அவளை விவாகரத்து செய்துவிட்டு, இப்போது இவன் பழகிய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும்'' என்று கூறியவர். முற்பிறவியில் ஏமாற்றப்பட்ட பெண்விட்ட சாபம் நிவர்த்தியாக சில வழிமுறைகளைக் கூறிவிட்டு ஓலையிலிருந்து மறைந்தார்.
நாடியில், தன் மகன் வாழ்க்கையைப் பற்றி பலன் கேட்டுவந்தவர், ""அகத்தியர் கூறியபடியே, இப்போதுள்ள மனைவியை அவள் விருப்பப்படி விவாகரத்து செய்துவிட்டு, மகன் விரும்பிப் பழகிய பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறேன்'' என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார். ஒரு பிறவியில் நாம் ஒருவருக்கு என்ன பாவம் செய்கிறோமோ, அந்தப் பாவத்திற்குரிய தண்டனையை அதே பிறவியில் அனுபவிக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த பிறவிகளில் மனிதர்கள் அனுபவித்துதான் தீரவேண்டும். மனிதர்கள் வாழ்க்கையில் உண்டாகும் நன்மை- தீமைகள், தடைகள், தானம், தர்மத்திலும், வழிபாட்டிலுமில்லை.அவரவர் முற்பிறவி வாழ்வின் நடைமுறைச் செயல்களால் உண்டான கர்மவினைகளால்தான் உண்டாகி அனுபவிக்கச் செய்கின்றது என்ற உண்மையை நானும் தெரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-07/th_0.jpg)