தெய்வக்ஞர் எனப்படும் ஜோதிடரின் கடமை, தன்னை நாடிவரும், ஜாதகரின் பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த பரிகார வழிபாட்டு முறைகளைக்கூறி ஜாதகருக்கு காரியசித்தி கிடைக்கச் செய்யவதே. இதை எல்லா ஜோதிடரும் சிறப்பாகச் செய்து மக்களை நல்லமுறையில் வழிநடத்திவந்தாலும், ஒருசில ஜாதகர்கள் பரிகார வழிபாட்டுமுறை தங்களுக்கு வெற்றிதரவில்லை என்று புலம்புகிறார்கள்.

இதற்கு எந்தவிதத்திலும் ஜோதிடர்கள் காரணமல்ல.

Advertisment

பரிகாரமும் வழிபாடும் ஜாதகருக்கு காரியசித்தி தருவதற்கும், பலிதமாகாததற்கும் என்ன காரணமென்று பார்க்கலாம்.

தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள்.

parigaramகுறைகளை சரிசெய்வதே பரிகாரம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்கின்ற சுக துக்கங்கள் அனைத்தும் அவன் செய்கின்ற கர்மவினையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த கர்மவினையை- தெரிந்து செய்த பாவம், தெரியாது செய்த பாவம் என இரண்டாகப் பிரிக்கலாம்.

தெரியாமல் செய்த பாவத்தின்மூலம் உருவாகும் அசுப்பலனை பரிகாரம் மூலம் சரிசெய்ய முடியும். தெரிந்துசெய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தே தீர்க்கவேண்டும்.

Advertisment

ஒருவரின் ஜனன ஜாதகம் மற்றும் பிரசன்னத்தின்மூலம் தெரிந்து மற்றும் தெரியாமல் செய்த பாவங்களை நிர்ணயம் செய்யமுடியும்.

சிறிய தோஷம் மற்றும் தடை, தாமதங்கள் தெரியாமல் செய்த வினைகளால் உருவாகின்றன. பெரிய- கடுமையான தோஷங்கள் அனைத்தும் தெரிந்தே செய்த வினைகளின் அடிப்படையில் உருவாகின்றன.

வேதாகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் பரிகார முறைகள் சக்தி வாய்ந்தவை. அவற்றை முறையாகச் செய்யும்போது பலிதமுண்டு.

Advertisment

பரிகாரம் வேறு; வழிபாடு வேறு. இரண்டும் ஒன்றல்ல. பரிகாரம் என்பது குறிப்பிட்ட ஒரு காரியசித்திக்காக நேரம், பொருள் செலவு செய்து பூஜை முறையில் ஈடுபடுவது. வழிபாடு என்பது காரியசித்திக்காக குல, குடும்ப, உபாசன, இஷ்ட, காவல் தெய்வத்திற்குத் தன் எண்ண அலைகளை அனுப்பி விருப்பத்தை சித்தியாக்கிக் கொள்வது.

பரிகாரத்தின் பலன் குறிப்பிட்ட கால அளவிற்கே இருக்கும். வழிபாட்டின் பலன் நம் ஆயுள் முழுவதும் நம்முடன் காவலாக இருக்கும்.

சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க ஏசி அறை, ஃபேன் பயன்படுத்துவது பரிகாரம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், அறையைவிட்டு வெளியே வந்தாலும் ஏசி, ஃபேன் நம்மைக் காக்காது. சுட்டெரிக்கும் வெயிலுக்கேற்ற உணவு, நீராகாரம் உண்டு, இயற்கைக்கு ஏற்றாற்போல் தன் உடலைத் தயார்செய்வது வழிபாடு.

பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகியவற்றை நன்கு அறிந்து பரிகாரம் செய்யவேண்டும். அவ்வாறு செய்யப்படும் பரிகாரத்திற்குப் பலன்கள் அதிகம். மற்ற வகையில் செய்யப்படும் பரிகாரம் பயன்படாமல் போகும். பரிகார நோக்கத்தை உணர்த்தும் கிரகம், பரிகாரம் செய்யப்பட வேண்டிய கிரகம் குறிகாட்டும் பஞ்சபூதத் தத்துவங்களின் அடிப்படையில் பரிகாரம் செய்யவேண்டும்.

பரிகாரம் செய்யும் முறைகள்

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய நெருப்பு ராசியைச் சேர்ந்தவர்கள் மலை, மலை சார்ந்த இடங்கள், நெருப்பு தத்துவத்தை உணர்த்தும் கோவில்களுக்குச் செல்லவேண்டும்.

தீபம் போடுதல், விளக்கேற்றுதல், ஹோமங்கள், தீச்சட்டி எடுத்தல், அக்னி குண்டம் இறங்குதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய நில ராசியைச் சார்ந்தவர்கள் காடு, காடு சார்ந்த இடங்களிலுள்ள கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லலாம். கோவில் உழவாரப்பணி, பொதுப்பணிகள், மரம் வளர்த்தல், முளைப்பாரி கட்டி வழிபடுதல் போன்வற்றை மேற்கொள்ளலாம்.

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசியைச் சார்ந்தவர்கள் காரிய சித்தி ஸ்தோத்திரப் பாராயணம், ராமநாமப் பாராயணம் அல்லது எழுதுதல் நன்று. வாசனை திரவியங்கள், சாம்பிராணி, ஊதுபத்தி ஆகியவற்றை வழிபாட்டிற்குப் பயன்படுத்துதல் வேண்டும்.

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நீர் ராசியைச் சார்ந்தவர்கள் நீர் நிலைகள், கடல், ஆறு, குளங்களுக்குச் சென்று புனித நீராடலாம். பால், பன்னீர், மஞ்சள் நீர், அபிஷேக நீர் பயன்படுத்துதல் நன்று.

பஞ்சபூதத் தத்துவத்தைக் கடைப்பிடிப்பத்துடன் அறவழி, பொருள்வழி, இன்பவழி, மோட்ச வழிகளில் எந்த முறையான பரிகாரம் நன்மை பயக்கும் என்பதைத் தீர்மானம் செய்வது சிறப்பு.

பரிகாரம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

 தாய்- தந்தை, குல, குடும்ப, இஷ்ட, உபாசன, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்றபின்பே பரிகாரம் செய்யவேண்டும்.

 சந்திராஷ்டம நாளாக இருக்கக்கூடாது.

 நல்ல விஷயத்திற்கான பரிகாரம் வளர்பிறையிலும், மற்ற பரிகாரத்தை தேய்பிறையிலும் செய்யவேண்டும்.

 ஜனன ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்தால்கூட, நீசம், அஸ்தமனம் பெற்ற கிரகத்திற்கான தசா, புக்தி, அந்தர காலங்களைத் தவிர்த்தல் நலம்.

 திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறும் தசா, புக்தி, அந்தர காலமாக இருப்பது சிறப்பு.

 6, 8, 12-ஆம் அதிபதிகளின் தசா, புக்தி, அந்தர காலமாக இருக்கக்கூடாது.

 மிகப்பெரிய யாகங்கள், பரிகார பூஜை செய்யும்போது ஜாதகரின் பட்சி அரசு செய்யும் காலமாக இருப்பது மிகச்சிறப்பு.

 ஜாதகருக்கு தாராபலமுள்ள நாளாக இருப்பது மேலும் பலனை அதிகரிக்கச் செய்யும்.

பரிகாரம் உடனே யாருக்கு பலிதமாகும்?

 லக்னாதிபதி வலிமையுடன் இருக்கவேண்டும்.

 பரிகாரம் செய்யும் கிரகத்திற்கு திரிகோணாதிபதிகளின் தொடர்பிருக்க வேண்டும்.

பரிகாரம் செய்யும் கிரகம் கோட்சாரத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்றிருக்கவேண்டும்.

மிகப்பெரிய பரிகார பூஜை செய்யும்போது, குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, புலால் உண்பதைத் தவிர்த்து, மானசீகமாக காரியசித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரம் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சத்தியமாக பலிதமாகும்.

பரிகாரம் பலிதமாகாததற்கான காரணம்

 சுய பரிகாரம் செய்தல், சுயவிருப்பமில்லாமல் பெற்றோரின் விருப்பத்திற்காகப் பரிகாரம் செய்வது.

வேதவிற்பனர் ஏதோ மந்திரம் சொல்கிறார். தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதுபோல் எண்ண அலைகளைப் பரவவிட்டு பரிகாரத்தில் காட்சியாளராக ஈடுபடுவது.

ஜோதிடர் பரிகாரம் சொல்லும்போதே எனக்கு அந்த கிழமை, தேதி சரிவராது என்று கூறுவது.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அம்மா வீட்டில் கசாயம் செய்து தந்தார்கள். கந்த சஷ்டி கவசம் படித்தார்கள். உடல்நலம் தேறிவிடும். கடுமையான நோய்த்தாக்கம் கண்டவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் முன்பு வயணம் காத்து குணமானதுண்டு.

அதேபோல ஐம்பது வருடத்திற்கு முன்பு 18 வயது ஆணுக்கும் 15 வயது பெண்ணுக்கும் எளிதாகத் திருமணம் நடந்தது. அந்த காலகட்டத்தில் 10,000-ல் ஒருவர் திருமணத்தடையால் பாதிக்கப்பட்டார். இப்பொழுது 100-ல் ஒருவர் பாதிக்கப்படுகிறார். 50 வருடங்களுக்கு முன்பு, திருமணத்தடை நீங்க அதிகபட்சப் பரிகாரம், ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபமேற்றுதல் மட்டுமே.

நவீனகாலத்தில் உலகம் முழுவதிலும் உள்ள மணமகன்- மணமகள் டேட்டாவை வைத்து மாதத்திற்கு பத்து திருமணம்கூட முடிவுசெய்ய முடியாத நிலையில் சில மேட்ரிமோனி சென்டர்கள் உள்ளன.

ஒரு நபர் திருமணத் தகவல் மையத்தில் ஒரு வரனைப் பதிவுசெய்கிறார். அந்த வரனின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஜாதகம் நூறு நகல்கள் எடுக்கப்பட்டு, "இதில் செவ்வாய் தோஷம் உள்ளது' என்று ரெட் மார்க் செய்து நூறு வரன்களுக்கோ தகவல் மையங்களுக்கோ அனுப்பப்படும்.

உண்மையில் அந்த ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? விதிவிலக்கு உள்ளதா? தோஷத்திற்குரிய கிரகத்தின் தசை வருகிறதா என்று எந்த ஆய்வும் செய்யாமல், ஒரு தோஷத்தின் பெயரைச் சொல்லி அந்த ஜாதகம் யாருக்கும் பயன்படாமல் போய்விடுகிறது.

ஒரு ஜாதகத்திலுள்ள தோஷங்களை நாம் ரகசியம் காக்கவேண்டும். அதைவிடுத்து, நாம்தான் செல்லும் இடத்திற்கெல்லாம் தோஷத்தை அழைத்துச் செல்கிறோம்.

முன்பு ஒரு திருமணத்திற்குச் சென்றால் பத்துத் திருமணங்கள் நிச்சயமாகும். நவீன யுகத்தில் ஒரு திருமணத்தில் பத்து மனக்கசப்பு உருவாகிறது.

2018-ல் இந்நிலை என்றால், இன்னும் பத்து வருடங்களில் இது எத்தனை மடங்காகப் பெருகும் என்று யூகம் செய்தாலே மனபாரம் அதிகரிக்கிறது. இட நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என்று பல காரணங்களை இதற்குச் சொல்லலாம். பெரியோருக்குக் கீழ்ப் படியாமையும், பரிகாரத்தை அலட்சியப் படுத்துவதுமே முக்கிய காரணம்.

நமது முன்னோர்கள், பிறந்ததுமுதல் மோட்ச காலம்வரை பல்வேறு சிரமங்கள் வந்தபோதிலும் தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்துகாட்டினார்கள். அதனால் பெரிய பரிகாரங்களை பிரச்சினையின் உச்சகட்டத்திற்குப் பயன்படுத்தி வந்தார்கள். நியாய, தர்மத்தைக் கடைப்பிடித்து செய்துவந்த பரிகாரங்கள் நல்ல பலன்களைத் தந்தன.

ஒரு ஜாதகத்தில் குரு, சனி, செவ்வாய் தொடர்பே ஜாதகருக்குப் பரிகாரம் தேவையா? தேவையில்லையா என்பதை முடிவுசெய்யும் முக்கிய காரணியாகும்.

பிரபஞ்ச சக்தியின் வலிமையை யாராலும் அளவிடமுடியாது என்பதை அனைவரும் அறிவோம். அத்தகைய பிரபஞ்ச சக்தியின்மூலம் நினைத்தை அடைய விரும்பும் அனைவரும், அந்த சக்திகளை மேலே வரவிடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் தன்னுள்ளிருந்து அகற்றவேண்டும்.

1. அவநம்பிக்கை

பிரபஞ்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும். புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதற்குப் போதிய ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம். பிரபஞ்ச அற்புதங்கள் உண்மையிலேயே உள்ளதா என்ற அவநம்பிக்கையை விடவேண்டும்.

நாம் செய்த பரிகாரம் நமக்கு பலிதமாகும் என்ற நம்பிக்கை மிக முக்கியம். பலிக்குமா என்ற அவநம்பிக்கை ஏற்பட்டாலே பலிதமாகாது.

2. அவசரம்

விதையை விதைத்து தண்ணீர் ஊற்றி சூரிய வெளிச்சம் பட்டவுடன் செடி வளராது. நாம் விதைத்த விதையின் தரம், விதைத்த இடம், சுற்றுப்புற சூழ்நிலையைப் பொருத்து செடி வளர குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். இதேபோல்தான் பரிகாரம். காலையில் செய்வுடன் மாலையில் பலன் கிடைக்குமா? அந்தப் பரிகாரம் பிரபஞ்சத்துடன் கலந்து சேரவேண்டிய இடம் சென்றபிறகே நமக்கு காரியசித்தி கிடைக்கும். அதுவரை பொறுமையுடன், பரிகாரம் பலிதமாக பிரபஞ்சத்திடம் நம் எண்ண அலைகளைச் செலுத்தவேண்டும்.அதைவிடுத்து செடி என்னாச்சு என்று மண்ணைத் தோண்டி விதையை சரிசெய்யப்பார்த்தால், துளிர்விட ஆரம்பமாகும் விதையை குழிதோண்டிப் புதைக்க நேரிடும். ஒரு சிறிய விதையைச் செடியாக்கவே கால அவகாசம் தேவைப்படுவதுபோல், சில குறிப்பிட்ட பரிகாரம் பலிதமாக போதிய கால அவகாசம் தேவைப்படும். பொறுமை மிக முக்கியம்.

3. அமைதியின்மை

மனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது எளிதான செயலல்ல என்றாலும், மனதை சிறிது நேரத்திற்காவது அமைதிப்படுத்த முறையான பயிற்சி எடுக்கவேண்டும். அந்த பயிற்சி பிரபஞ்சத்திடமிருந்து வரும் செய்திகளைக் கேட்க உதவும்.நம்முள் நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு இருக்குமானால் பிரபஞ்சம் நமக்கு உணர்த்தும் முக்கிய எச்சரிக்கை செய்தியை நம்மால் உணரமுடியாது.மனதை ஒருநிலைப்படுத்திச் செய்யும் பரிகாரம் எப்பொழுது பலிதமாகும் என்று நிமித்தப் பரிகாரம் செய்துகொண்டிருக்கும்போதே நமக்குத் தெரியவேண்டுமானால், இந்த மூன்று தடைகளை வெளியேற்றி பிரபஞ்ச சக்தியை நம்முள் செலுத்தவேண்டும்.

ஜாதகரின் கர்மாவில், பரிகாரம் செய்து காரியசித்தி பெறவேண்டும் என்ற கர்மாவும் இருக்கவேண்டும். இதை ஜாதகரின் குரு, சனி, செவ்வாய் தொடர்பின்மூலம் அறியலாம்.

பல்வேறு பரிகாரம் செய்தும் பலிதமாகாதவர்கள், சித்தர்கள், மகான்களின் ஜீவசமாதி வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

செல்: 98652 20406