ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்ல பல்வேறு முறைகள் உள்ளது. குறிப்பாக பாரம்பரியம், பிரசன்னம், கிருஷ்ணமூர்த்தி பத்ததி, அட்சய லக்ன பத்ததி, நாடி ஆகியவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு பல்வேறு முறைகள் இருந்தாலும் ஒரு ஜாதகரை அசத்தும்விதத்தில் பலன் கூறக் கூடிய முறை பிரசன்னம் எனில் அது மிகையாகாது. நான் பலமுறை வியந்த பிரசன்ன அனுபவங்கள் பல உள்ளது. ஒருவரின் ஜனனகால ஜாதகத்தின் உதவியின்றி ஜாதகர் ஜாதகம் பார்க்கவந்த நேரத்தை மையப்படுத்தியும், கேள்வி எழுந்த உள்ள கிரக நிலவரத்தை வைத்து பதில் பலன் கூறுவது பிரசன்னமாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prasanna=jothidam.jpg)
ஜனனகால ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் விண்வெளியில் நிலவும் கிரக நிலவரத்தை கணிதம் செய்து கூறுவது பிறப்பு ஜாதகம். ஏதேனும் காரணத்தால் பிறப்பு ஜாதகத்தில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜனனகால கிரக நிலவர பலன்கள் மாறாதவை. ஆனால் பிரசன்னத்தில் கிரக அமைப்புகள் மாறிக் கொண்டேயிருக்கும். ஜாதகரின் பாவ- புண்ணியத்திற்கு ஏற்ப பிரசன்ன பலன்கள் மாறுபடும். உதாரணமாக ஜாதகர் ஒரு பெரிய பரிகார பூஜை செய்தார் எனில் அதற்கான உரிய பலனுக்கு தெய்வ அனுகூலம் உள்ளதா? பூஜையை பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டதா என்பதை அறியமுடியும். அதாவது கர்மா வின் தாக்கம் குறைந்து விட்டதா என்பதை அறியமுடிகிறது. அதே நேரத்தில் சுய ஜாதகரீதியான கிரக நிலவரம் கோட்சாரத்துடன் சம்பந்தம் பெறும் காலங்களில் மட்டுமே கர்மாவின் தாக்கத்தை அறிய பிரசன்னம் பார்க்கவருவார்கள்.
பிரசன்ன ஜாதகத்தின் தத்ரூபமாக ஜாதகரின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால பிரச்சினைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும். நல்ல ஜோதிட ஞானமுள்ள ஒருவர் பிரசன்னமூலம் உரைத்த பலன்கள் எப்பொழுதுமே தவறாது. நல்ல இறைபக்தியும் ஜோதிடத்தின்மேல் தீராத காதலும் கொண்ட ஒருவர் பிரசன்னத்தில் எளிதாக ஒருவருக்கு தீர்வு வழங்கமுடியும். ஜனனகால ஜாதகத்தில் சம்பவங்களை தசாபுக்திகளை வைத்தே நிர்ணயிக்க முடியும். பிரசன்னத் திற்கு தசாபுக்தி எதுவும் தேவையில்லை. ஜோதிடத்தில் எந்த முறையில் பலன் உரைத்தாலும் குறிப்பாக பிரசன்னத்தில் பலன் சொல்ல சகுனமும் நிமித்தமும் மிக முக்கியம். நமது ஜோதிட ஞானிகளும் முன்னோர்களும் நம்மைப்போல் சாப்ட்வேர் வைத்து ஜாதகம் கணித்து பலன் சொல்லவில்லை. ஒருவரின் கேள்வி எழுந்த நேரத்தில் கிடைத்த சகுனம் மற்றும் நிமித்தத்தை வைத்தே பலன் கூறினார்கள். அவர்கள் கூறிய பலன் அப்படியே பலித்தது. கேள்வி கேட்டவரின், குலதெய்வம், பூர்வபுண்ணியம், சகுனம், நிமித்தம், அவர் கொண்டுவரும் பூஜை பொருட்கள் ஆகியவை மிக முக்கியம். பிரசன்னம் கேட்கவந்தவரின் நிகழ்காலம் பற்றிக் கூறுவது சகுனம். எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றிக் கூறுவது நிமித்தம். மிகச் சுருக்கமாக ஒரு கேள்விக்கு விடைகாணும் ஒரு ஜோதிட முறையாகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prasanna=jothidam1.jpg)
பிரசன்னத்தில் பல வகைகள் உள்ளது. சோழி பிரசன்னம், தாம்பூல பிரசன்னம், அஷ்டமங்கள பிரசன்னம், கடிகாரப் பிரசன்னம், வெற்றிலை பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம், தீப பிரசன்னம், ஹோரா பிரசன்னம் என பலமுறைகள் உள்ளது. இதில் சோழி பிரசன்னம், தாம்பூலப் பிரசன்னம், அஷ்டமங்கள பிரசன்னம்மூலம் ஜாதகரின் கர்மாவை அறியமுடியும். என் அனுபவத்தில் நான் சந்தித்த சில முக்கிய வித்தியாசமான பிரசன்ன அனுபவங்களை உங்களுடன் இந்த கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன்.
உத்தியோக இழப்பு ஏன் ஏற்பட்டது
ஒரே குடும்பத்தை சார்ந்த அண்ணன், தம்பி நான்கு பேருக்கு குறிப்பிட்ட கால வித்தியாசத்தில் வேலை இழப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினை எனக்கும் புதியதாக இருந்தது. என்ன வாசகர்களே வியப்பாக உள்ளதா? யாராவது ஒருவருக்கு வேலை போய்விட்டது என்றால் பரவாயில்லை. நான்கு பேருக்கும் உத்தியோகம் இழந்து விட்டார்கள் என்பது நம்ப சிறிது கஷ்டமாக இருந்தது! 26-1-2025 அன்று காலை 10.33-க்கு நமது சேலம் அலுவலகத்தில் 75 வயது ஆணும் 70 மதிக்கதகுந்த பெண்ணும் வந்திருந்தார்கள். வயோதிக காலத்தில் ஏன் இவ்வாறு அலைகிறீர்கள் என்று கேட்டவுடன் பிள்ளைகள் படும் கஷ்டம் தாங்க முடியவில்லை என்று கூறினார்கள்.
பிரசன்ன நாள் : 26-1-2025
பிரசன்ன கிழமை : ஞாயிறு
பிரசன்ன நட்சத்திரம்: மூலம்
பிரசன்னம் துவங்கிய நேரம்:
காலை 10.49
பிரசன்ன திதி : தேய்பிறை துவாதசி
பிரசன்ன உதய லக்னம்: மீனம்
சோழி லக்னம் : விருச்சிகம்
சோழி லக்னத்தை பார்த்த கிரகம்:
7-ஆம் பார்வையாக குருவும், 10-ஆம் பார்வையாக சனியும் பார்த்தார்கள்.
பிரசன்ன கர்த்தாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.
தற்போது பய உணர்வு மிகுதியாக உள்ளது. தொழில், உத்தியோகம், பொருளாதாரம், கர்மா தொடர்பான கேள்விகள் உள்ளதா என கேட்கப்பட்டது. கேள்வி மிகச் சரியாக உள்ளது. எங்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகள். கடந்த ஐந்து மாதங்களில் எங்களின் நான்கு பிள்ளைகளும் வேலை இழந்து விட்டார்கள். சகோதரர்கள் நால்வரும் தமது குடும்பத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சாதாரண உத்தியோகத்தில் இருந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டார்கள்.
உதய லக்னத்தில் ராகு நின்றாலும் லக்ன புள்ளி ராகுவை கடந்து விட்டது என்பது சற்று ஆறுதலான விஷயம். சோழி லக்னமான விருச்சிகத்தை அஷ்டமாதிபதி, பாதகாதிபதி பார்க்கவில்லை. ஆனால் சோழி லக்னாதிபதி செவ்வாய் மாந்தியுடன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து பாதகாதிபதி சந்திரனை சம சப்தமமாக பார்வை செய்ததது. ஒரு ஜாதகத்திலோ, பிரசன்னத்திலோ உத்தியோக ஸ்தானத் தைக் குறிப்பிடுவது ஆறாமிடம் என்றா லும் 10-ஆமிடமான கர்ம ஸ்தானமே ஜீவனத்தைப் பற்றிக் கூறுமிடம். சோழி லக்னமான விருச்சிகத்திற்கு ஆறாம் அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத் தில் மாந்தியுடன் மறைந்துவிட்டார். பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தை சோழி லக்னத்திற்கு 3, 4-ஆம் அதிபதியான சனிபகவானும் 7, 12 அதிபதியான சுக்கிரனும் இணைந்து பார்ப்பது நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையை, உடன் பணிபுரிபவர்களை ஏமாற்றிய பந்த தோஷத்தை காட்டியது. சோழி லக்னத்திற்கு 5-ல் நின்ற ராகு முன்னோர்களால் ஏற்பட்ட இந்த பந்த தோஷம் ஏற்பட்டு இருப்பதை உறுதிசெய்தது.
அந்த பிரஜகர் எனக்கும் எனது தந்தைக்கும் ஒரு தீய பழக்கம் உண்டு என்பதை உறுதிசெய்தார். தான் வேலைக்கு செல்லும் காலத்தில் முதலாளியுடன் யாரும் நெருக்கமாக பழகக்கூடாது மற்றும் முதலாளியின் அன்பை பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒருவர் புதியதாக வேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்திற்குள் முதலாளியிடம் ஏதாவது குறைகூறி சக பணியாளர்களை பணியில் இருந்து நிறுத்திவிட்டு புதிய நபர்களை பணிக்கு அமர்த்த செய்வேன். இதேபோல் என் அனுபவத்தில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை இழக்க காரணமாக இருந்து இருக்கிறேன் என்று கூறினார். இதை தன் தந்தை தனக்கு கற்றுக்கொடுத்தார் என்று கூறினார். கேட்கவே மனது வலித்தது. இதேபோல் எனக்கு தெரிந்த பணக்கார குடும்பத்தின் கார் டிரைவர் ஒருவர் யாரையும் முதலாளியுடன் ஒட்ட அனுமதிக்க மாட்டார். தான் கார் ஓட்டியாக இருந்தால்கூட முதலாளிக்கு சகலவிதத்திலும் கைத்தடியாக இருந்தார். இது அனைத்து தொழில் நிறுவனத் திலும் இருக்கக்கூடிய தவறு. ஒருவரின் வாழ்வாதாரத்தை அசைக்கக்கூடிய இந்த தவறு தனது சந்ததிகளை பாதிக்கும் என்பதை உணர்வதில்லை. பெரிய லட்சக்கணக்கான சம்பளம் வாங்கும் உத்தியோகம் என்றாலும் பரவாயில்லை. அன்றாட அடிப்படைத் தேவைகளை மட்டுமே நிறைவு செய்யக்கூடிய சிறிய நிறுவனங்களிலும் இதுபோன்ற லோக்கல் பாலிடிக்ஸ் உள்ளது.
பரிகாரம்
ஜாதகரின் குடும்பம் பெரிய பரிகாரம் செய்ய வசதியில்லை. எனவே 48 நாட்கள் தினமும் மாலை பிரதோஷ காலத்தில் நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபட கூறப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று கூறியுள்ளார்கள்.
இனி அடுத்த வாரத்தில் ஒருநாள் எனக்கு போன் வந்தது. அது ஒரு இளம் பெண்ணின் குரலாக ஒலித்தது. அந்தப் பெண் உங்களுக்கு பிரசன்னம் பார்க்கத் தெரியும் என்பது உண்மை என்றால் நான் என்ன கேள்வி கேட்கப் போகிறேன் என்று கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு உங்களுக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகாமல் கர்ப்பமாக உள்ளீர்கள். அது பற்றிக் பேசப் போகிறீர்கள் என்று கூறினேன்.
உடனே மீண்டும் அந்தப் பெண் போன் இணைப்பை துண்டித்தார். மீண்டும் இரண்டு நிமிடத்தில் போன் செய்தார்.
தொடரும்...
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/prasanna=jothidam-t.jpg)