அம்பிகை, அந்தரி, அமலை, உருத்திரை மற்றும் நவசக்திகளையும் பணிந்து தங்களுடன் பகிர்கிறேன் சில சூட்சும ஜோதிட நியதிகளை. ஜோதிட சாகரத்தில் பல்லாயிரம் விதிகளும் விதிவிலக்குகளும் இருந்தபோதும், என்றும் மாறாத சில ஜோதிடப் பலன்களும் உண்டு.
அவற்றில் சிலவற்றை நமது வாசக நெஞ்சங்களுக்கு விளக்கவே இந்தக் கட்டுரை.
கடகத்தில் குருவும், ரிஷபத்தில் சந்திரனும், துலாமில் சனியும் உச்சபலன் தருவார்கள் (இஹற்ற்ங்ழ்ஹ் டர்ஜ்ங்ழ் என்ப்ப்) என்பது அரிச்சுவடி. இந்தவகையில் உங்களின் ஜாதகங்களில் பாக்கிய ஸ்தானமான 9-ஆமிடத்திலோ பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆமிடத்திலோ ஒரு உச்ச (பலம்பெற்ற) கிரகம் நின்றுவிட்டால் வாழ்வில் வெற்றி, அதிர்ஷ்டம், புகழ்மாலை நிச்சயம் பெற்று உயர்வீர்கள். ஆசைகள், எண்ணங்கள் சிரமமின்றி அனுபவத்திற்கு வர உறுதுணை இந்த 9, 5-ஆமிடங்கள். பழங்கால ரிஷி, முனிவர்கள் வகுத்தபடி சதுர்த்தி நாயகன் விநாயகருக்கு 5-ஆம் அதிபதியான குரு (கடக) 9-ல் உச்ச நிலையும், தசரத புத்திரர் ஸ்ரீராமருக்கு சுக்கிரன் 9-ல் உச்சமும், 5-ஆம் அதிபதி செவ்வாய் மிக வலுத்து ராஜயோகம் தந்தது.
நாமறிந்த முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு 5-ல் 9-க்குடைய சனி உச்சம். குருவும் செவ்வாயும் உச்சமாகி நாடாளும் அதிர்ஷ்டம் தந்தன. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சென்னாரெட்டி ஜாதகத்தில் 9-ல் சந்திரன் உச்சமும், 5-ல் செவ்வாய் உச்சமும் பெற்றிருந்ததை அறிவீர்கள்.
யாருக்கெல்லாம் புதன், சுக்கிரன், சூரியன் (முக்கூட்டு கிரகங்கள்) மூவரும் சேர்ந்து 5-ஆமிடத்தில் நின்று, இதை 11-ல் இருந்து குருவும் காண, இவர்களின் புதன் தசையில் திடீர் அதிர்ஷ்டத்தால் வியாபாரம், செய்தொழில் வழிகளில் அதிக செல்வச் சேர்க்கையை அடைகிறார்கள். மாறாத ஜோதிட விதிப்படி 5-ல் சுக்கிரன் இருந்தால் நவநாகரிக ஆடம்பர வகையில் சகல சௌபாக்கியங்களைத் தருவார். 11-ல் குரு இருந்தால் சிறந்த புத்திர பாக்கியம், அரசுவழி ஆதாய அனுகூலம், மேடைகளில் புகழ்மாலை பெற்று உயர்வடையச் செய்வார்.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், கும்ப ராசிகள் ஒருவருக்கு 12-ஆம் வீடாக அமைந்தால் நன்மைகள் அதிகமாக நடக்கும். ஒருவரின் 9-ஆம் அதிபதி, 7-ஆம் அதிபதி, 4-ஆம் வீட்டுகிரகம் மூவரும் கூடி 11-ல் அல்லது 9-ல் நின்று சனி சேர அல்லது பார்த்தால் அவரது சனி தசை புத்திக் காலங்களில் தந்தையின் மூலதனத்தால், தொழில்வழி சம்பாத்திய சாதனையால் திடீர் பணக்காரர் ஆவார். உதாரணமாக தனுசு லக்ன 11-ல் புதன், சனி கூட்டு, கும்ப லக்ன 11-ல் சுக்கிரன், சனி இணைவு தந்தையால் அதிர்ஷ்டம்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் 3, 6, 10, 11-ல் உச்சம் பெற்றிருந்தால் வேத சாஸ்திர ஞானம், சம்பாதிப்பதில் முழு கவனம், பூமி யோகம் அமையும். 11-ல் சூரியன் நின்றால் தைரியலட்சுமி துணையுண்டு. பல வேலையாட்களுக்கு எஜமானர்தான். முன்னாள் மந்திரி ஜெயில்சிங் இளமையில் கல் உடைக்கும் தொழிலாளியாக, தச்சுத் தொழிலாளியாக இருந்து, இந்திய நாட்டிற்கே ஜனாதிபதியாக உயர்ந்தது நாடறியும். அன்னார்க்கு மிதுன லக்னம்.
11-ல் சூரியன் உச்சநிலை. கடக லக்ன ஸ்ரீஆதிசங்கரருக்கும் 10-ல் சூரியன் உச்சம். 3-ஆமிட சூரியன் நல்ல புத்தி, சிந்தனை உள்ளவராக்குவார். சூரியன் 6-ல் நின்றால் புகழ் சேரும். எதிரிகளை சுலபமாக ஜெயிக்கலாம். அரசு உயரதிகாரிகளின் ஆதரவு பல வழிகளில் உயர்த்தும்.
வாய்வீச்சு வாலிபனானாலும், தாய்ப்பேச்சு தட்டாத தங்க மங்கையானாலும், தனுசு லக்னத்தில் பிறந்திருந்தால் தந்தையின் சொத்து சுகம் முழுவதும் அனுபவிப்பார்கள். 9-ஆம் அதிபதியும் 10-ஆம் அதிபதியும் சேர்ந்து 10-ல் (சூரியன், புதன்) அமர, தந்தை பார்த்த தொழிலை ஜாதகர் விருத்திசெய்து உயர்வார். "தந்தி' பத்திரிகை நிர்வாகி சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு தனுசு ராசி, லக்னமாகி 10-ல் (கன்னி) புதன், சூரிய சேர்க்கை நாடறிய உயர்த்தியதை தமிழர்கள் அறிவர்.
முடிவுரையாக, 7-ஆம் வீட்டில் 9-க்குரியவரும், 9-ஆம் பாவத்தில் 7-ஆம் அதிபதியும் பரிவர்த்தனைப் பெற்று நின்றால், உங்களின் திருமணத் துணைவர்மூலம் அதிர்ஷ்டம் பல பெற்று, சுய சம்பாத்தியத்தாலும் விருத்தியடைவீர்கள். 7-க்குரியவர் தசாபுக்திகளில் குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்ட தேவதை உங்களை அரவணைக்கட்டும். இனி உயர்வாழ்வே! ஜோதிட சொந்தங்கள் வாழ்க வளமுடன்.
செல்: 94431 33565